பலவீனமான ஹதீஸ்களை ஆதாரம் பிடிக்கலாமா ?

Al-Usthaz Lafar (Bahji, B.A. Madheena)

இன்று மக்களிடையில் பல்வேறுபட்ட மார்க்க விவகாரங்களில் கருத்து வேற்றுமைகள் இருப்பதைக் காணமுடிகின்றது. இவ்வாறு முரண்பட்ட கருத்துக்கள் பறிமாறப்படக்கூடிய ஒரு விடயமே பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாமா? என்ற விடயம். இன்று பொதுவாக பெரும்பாலான உலமாக்களும், பொதுமக்களும் பலவீனமான ஹதீஸ்களை அமல்களின் சிறப்புகள் விடயத்தில் ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற கருத்தே பரவலாகக் காணப்பட்டாலும் இது துல்லியமாக ஆராயப்பட வேண்டிய ஒரு தலைப்பாகும். 

முன்னைய உலமாக்களின் நூல்களில் பலவீனமான ஹதீஸ்கள் அதிகமாக இடம் பெற்றிருப்பதினாலும், இன்னும் சிலர் அவற்றை பலவீனமான ஹதீஸ் என ஆராய்ந்து முடிவெடுக்காமல் புத்தகங்களில் பதிந்ததையும் சிறப்புகள் விடயத்தில் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுக்கலாம் என்ற கருத்து பரவுவதற்கு காரணியாக இருந்தது.

இதனையடுத்து எழுத்தாளர்களும், மேடைப் பிரசங்கிகளும், உபதேசிகளும் இவ்வாறான ஹதீஸ்களைத் தரம் பிரிக்காது சமூகத்தின் முன் வைத்ததும் இவ்வாறான ஹதீஸ்கள் பரவுவதற்கும், அதனை ஆதாரமாகக் கொண்டு செயற்படுவதற்கும் மக்களைத் தூண்டியது எனலாம். பலவீனமான ஹதீஸ் என்றால் யாது எனப் பார்த்து விட்டு அதனை ஆதாரத்துக்கு எடுக்கலாமா என்பதைப் பார்ப்போம். 

ஒரு ஹதீஸ் (ஸஹீஹ்) சரியானது எனப்படுவதற்கு ஐந்து நிபந்தனைகளை அது உள்ளடக்கியிருக்க வேண்டும். அவையாவன : 

1- அறிவிப்பாளர் நம்பகத்தன்மை உள்ளவராக இருத்தல். 
2- அறிவிப்பாளர்கள் அனைவரும் மனன சக்தியுள்ளவர்களாயிருத்தல். 
3- அறிவிப்பாளர் வரிசையின் சங்கிலித் தொடர் அறுபடாமல் தொடர்சியாக இருத்தல்.
4- அறிவிப்பாளர்கள் ஏனைய அறிவிப்பாளர்களுக்கு மாற்றமில்லாமல் அறிவித்தல். 
5- ஹதீஸை எற்றுக் கொள்வதில் பிரச்சினையை உண்டாக்கும் மறைமுகமான குறைகளை விட்டும் நீங்கியிருத்தல். 

ஒரு ஹதீஸ் ஸஹீஹ் எனப்படுவதற்கு முன் கூறிய நிபந்தனைகள் இருக்க வேண்டும் என்பதை உலமாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ளார்கள். முன் கூறப்பட்ட நிபந்தனைகளில் ஏதாவது ஒரு விடயத்தில் கோளாறுகள் இடம் பெறுமிடத்து ஹதீஸ் பலவீனமான ஹதீஸாக மாறிவிடும்.

ஹதீஸ்களை தரம் பிரித்து ஸஹீஹ் லஈப் என தீர்ப்புச் சொல்வது மிகக் கடினமான முயற்சியாகும். இத்துறையில் ஆழமான அறிவுள்ளவர்களும், இத்துறையிலேயே தம்மை ஈடுபத்திக் கொண்டவர்களுமே இப்படியான முடிவுகளைச் செய்ய முடியுமேயன்றி இத்துறையில் நுனிப்புல் மேயந்து விட்டு ஹதீஸ்களுக்கு தீர்ப்புச் செல்லக்கூடியவர்கள் இவ்விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒரு ஹதீஸ் லஈப் எனத் தீர்மானிப்பதில் முன் கூறப்பட்ட நிபந்தனைகள் அடிப்படையில் தீர்ப்புச் சொன்ன உலமாக்கள் கூட ஒரு ஹதீஸை ஸஹீஹ் / லஈப் எனத் தீர்மானிப்பதில் வித்தியாசப்பட்டுள்ளனர். ஓவ்வொரு ஹதீஸைப் பற்றியும் தீர்மானிக்கும் போது அவர்கள் அனுகிய அனுகு முறை வித்தியாசங்கள் காரணமாக ஓரே ஹதீஸ் விடயத்தில் சிலவேளை இருவர் இரு வேறுபட்ட தீர்ப்புக்களைக் கூறியுள்ள சந்தர்பங்களும் நிறையவே இறுக்கின்றன.

எது எவ்வாறாயினும் ஒரு ஹதீஸ் பலவீனமானது என தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அதனை ஆதாரமாக எடுக்கலாமா? எனும் விடயத்தில் முன்னைய உலமாக்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். அவற்றில் முக்கியமான மூன்று கருத்துக்களை இங்கே தருகின்றோம்.

1)   முதலாவது கருத்து

பலவீனமான ஹதீஸ்களை ஹராம், ஹலால் போன்ற சட்டங்களுக்கும், சிறப்புக்கள், ஆர்வமூட்டுதல், எச்சரிக்கை போன்ற விடயங்களுக்கும் பொதுவாகவே ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். இக்கருத்தை இமாம் அபூஹனீபா, இமாம் மாலிக் போன்றோர் வலுப்படுத்தியதாக உலமாக்கள் குறிப்பிட்டுள்ளனர். 

எனினும் இக்கருத்தைக் கூறியோர் மூன்று நிபந்தனைகளை இட்டுள்ளனர். :

  • முதலாவது நிபந்தனை : கடுமையான பலவீனமாக இருக்கக் கூடாது.
  • இரண்டாவது நிபந்தனை : அவ்விடயத்தில் வேறு ஹதீஸ்கள் இல்லாமலிருப்பது.
  • மூன்றாவது நிபந்தனை : அதற்கு முரணான ஹதீஸ்கள் இல்லாதிருத்தல். 

 

2) இரண்டாவது கருத்து

ஹராம், ஹலால் விடயங்களிலோ, கொள்கை சார்ந்த விடயங்களிலோ பலவீனமான ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளமுடியாது. ஆனால் அமல்களின் சிறப்புக்கள் மற்றும் மெல்களை ஆர்வமூட்டல், பாவங்களை எச்சரிக்கை விடுக்கும் விடயங்களில் ஆதாரத்துக்கு எடுக்கலாம் என்பதாகும். இக்கருத்து இமாம்களாகிய இப்னு ஹஜர், நவவி, இராகி போன்றோரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இக்கருத்தைக் கூறியோர் 4 நிபந்தனைகளை இட்டுள்ளனர். அவையாவன. 

  • முதலாவது நிபந்தனை : பலவீனம் கடுமையாக இருக்கக் கூடாது.
  • இரண்டாவது நிபந்தனை : ஆதாரமுள்ள ஒரு அடிப்படையின் கீழ் அமைந்திருக்க வேண்டும்.
  • மூன்றாவது நிபந்தனை : அதனை கொண்டு அமல் செய்யும் போது அது உறுதியானது என நம்பிக்கை கொள்ளாமல் இருத்தல்.
  • நான்காவது நிபந்தனை : அதைக் கொண்டு அமல் செய்யுமு; போது ஸுன்னத் எனக் கருதக் கூடாது.

 

3) மூன்றாவது கருத்து : 

ஹலால், ஹராம் போன்ற சட்டங்களிலோ, அமல்களின் சிறப்புக்களிலோ எதிலும் பலவீனமான ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது. இக்கருத்தையே பெரும்பாலான முஹத்திஸீன்கள் வலியுறித்திக் கூறியுள்ளனர். இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், யஹ்யா பின் மஈன், அபூஹாதம் அர்ராஸி, இப்னு ஹஸ்ம், இப்னு தைய்மியா, அலிவுங்கானி போன்றோர் இதனை உறுதிபடக் கூறியுள்ளனர்.

இமாம் இப்னு தைமிய்யா பின்வருமாறு கூறுகின்றார் : "ஸஹீஹ் அல்லாத பலவீனமான ஹதீஸ்களை மார்க்க விடயங்களில் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது."

முஹத்திஸ் அஹ்மத் ஷாகிர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "பலவீனமான ஹதீஸில் வரும் பலவீனத்தைத் தெளிவுபடுத்துவது கடமையாகும். ஏனெனில் இவ்வாறு தெளிவுபடுத்தாமல் விடுவது அதனை வாசிப்பவருக்கு அது ஸஹீஹ் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும். விஷேடமாக அதனைக் கூறுபவர் ஹதீஸ் கலையில் ஈடுபாடுள்ள ஓர் ஆலிமாக இருக்கும் பட்சத்தில் அதனை ஸஹீஹ் என்றே நினைப்பர். பவலீனமான அறிவுப்புக்களை ஆதாரமாக எடுக்கக் கூடாது எனும் விடயத்தில் சட்டம் சார்ந்த ஹதீஸ்களுக்கும், சிறப்புகள் சார்ந்த ஹதீஸ்களுக்குமிடையில் வேறுபாடு கிடையாது. நபிகளாரைத் தொட்டும் வரும் செய்திகளில் பலமான செய்திகளைக் கொண்டே தவிர வேறெதிலும் ஆதாரம் கிடையாது". (الباعث الحثيث ص : 76)

அச்செய்க் நாஸுருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"நான் கொண்டிருக்கும் கொள்கையும், மக்களை அதன்பால் நான் அழைக்கும் கருத்து யாதெனில் பலவீனமான ஹதீஸ்களின் மூலம் சிறப்பம்சங்களிலோ, முஸ்தஹப்பான நல்ல விடயங்களிலோ அமல் செய்யப்பட மாட்டாது."

மேற்கூறப்பட்ட கருத்துக்களை நோக்குமிடத்து பலவீனமான ஹதீஸ்களை மார்க்கத்தின் எவ்விடயத்திலும் ஆதாரமாகக் கொள்ள முடியாது என்ற கருத்தே பலமான ஒரு கருத்தாக எடுக்க முடிகின்றது.

இக்கருத்து பலம் பெறுவதற்கான காரணங்களை தொடர்ந்து பார்ப்போம்.

1-பலவீனமான ஹதீஸ் நிராகரிக்கப்படும் ஹதீஸ் வகையைச் சேர்ந்ததாகும்.
2-பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற கருத்து ஸஹீஹான பல ஹதீஸ்களைப் புறக்கணிப்பதற்கு காரணமாக அமைகின்றது.
3-பலவீனமான ஹதீஸ் மூலம் வலுவற்ற ஒரு ஊகம் கருத்தைப் பெறமுடியாது.
4-பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டதனால் பல நூதனங்களும், ஆதாரமற்ற அம்சங்களும் உருவாகியுள்ளன. 

அச்செய்க் உஸைமீன் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது "அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். ஏனெனில் குர்ஆனிலும் தூய்மையான உறுதியான ஹதீஸ்களிலும் இது போன்ற பலவீனமான ஹதீஸ்களை விட்டும் தேவையற்றுவைக்கின்றது".

அச்செய்க் முக்பில் பின் ஹாதி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "பலவீனமான ஹதீஸ்களின் பால் எவ்விதத் தேவையும் கிடையாது. ஏனெனில் போதுமானளவு உறுதியான ஹதீஸ்கள் உள்ளன".(المقترح في أجوبة أسئلة المصطلح : 213) 

5-சிறப்புகள் விடயத்தில் ஆதாரமாகக் கொள்ளலாம். சட்டங்களில் ஆதாரமாகக் கொள்ளக்கூடாது என்பது மார்கத்தில் ஒன்று போல் உள்ள விடயங்களில் வேறு பிரிப்பதாக உள்ளது. 

ஏனெனில் மார்க்கம் முழுவதும் ஒரு சமமானதாகும். மேலும் சிறப்புகளில் ஆதாரமாகக் கொள்ளலாம் என்பதன் அர்த்தம் பலவீனமான ஹதீஸ்மூலம் ஸுன்னா என்பதை நிறுவலாம் என்பதாயின் ஸுன்னத் என்பது சட்டம் சொல்வதாகும். மார்க்க சட்டங்கள் பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு நிறுவ முடியாது. இல்லை அதன் அர்த்தம் ஸஹீஹான ஹதீஸ் மூலம் உறுதியானதை இதன் மூலம் உறுதிப்படுத்துவதாக இருந்தால் அங்கே பலவீனமான ஹதீஸ் இருப்பதும் இல்லாமலிருப்பதும் சமமாகும். 

எனவே பலவீனமான ஹதீஸ்களை சிறப்புகளில் எடுக்கலாம், அறிவிக்கலாம் என்பதை பலரும் அதனைக் கொண்டு ஸுன்னத்தான அமல்களை நிறுவலாம் என்றே விலங்கியுள்ளனர். அது தவறாகும். ஏனெனில் ஸுன்னத் என்பது மார்க்க சட்டங்களில் ஒன்றாகும். பலவீனமான ஹதீஸ் மூலம் சட்டம் கூற முடியாது.

பலவீனமான ஹதீஸ்களை சிறப்புகளில் அறிவிக்கலாம் என்பதன் சரியான அர்த்தமாவது ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் உறுதியான ஒரு அமல் விடயத்தில் சொல்லப்படும் சிறப்புகள் விடயத்தில் அதனை அறிவிக்கலாம் என்பதாகும். இது போன்ற ஹதீஸ்கள் மூலம் ஆர்வமூட்டப்பட்ட அனுகூலங்களை ஒருவர் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கலாம் என்பதும் அல்லது எச்சரிக்கை செய்யப்பட்ட விளைவுகளை ஒருவர் பயந்து நடக்கலாம் என்பதுமே அதன் அர்த்தமாகும்.  

உதாரணமாக நபிகளார் (ஸல்) அவர்கள் உம்மு குல்ஸும் (ரழி) அவர்களை கப்ரில் வைத்த போது منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى என ஓதியதாக ஒரு ஹதீஸ் முஸ்னத் அஹ்மதில் பதிவாகியுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே இந்த ஹதீஸ் பலவீனமான ஹதீஸாகும். இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு கப்ரில் மையித்தை வைக்கும் போதும் மண் போடும் போதும் இதனை ஓதுவது ஸுன்னத் எனக் கூறுவது தவறாகும். இது فضائل சிறப்புகள் சம்பந்தப்பட்ட ஹதீஸ் என சிலர் விளக்கம் கூற முட்படலாம். ஸுன்னத் என்ற சட்டத்தை நிறுவ ஸஹீஹான ஹதீஸ் வர வேண்டும். இல்லாவிட்டால் இது மார்க்கத்தில் இல்லாத நூதனத்தை உறுவாக்குவதாக அமைந்து விடும். 

மாறாக ஒரு விடயம் பலமான ஆதாரம் மூலம் உறுதியாகும் பட்சத்தில் அது சம்பந்தப்பட்ட பலவீனமான ஹதீஸ்களை அறிவிப்பதில் உலமாக்கள் மென்மையான போக்கை கடைபிடித்துள்ளார்கள். உதாரணமாக அல்ஹாபிழ் இப்னு கஸீர் பின்வருமாறு கூறுகிறார். பார்வையைத் தாழ்த்துவதின் சிறப்புகள் சம்பந்தப்பட்ட ஹதீஸ்களைக் கூறிய பின் இப்னு உமர், ஹுதைபா, ஆயிஷா (ரழி) ஆகியோரைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனம் இருக்கின்றது. எனினும் அது ஆர்வமூட்டும் விடயத்திலாகும். இது போன்ற விடயங்கள் விட்டுக் கொடுக்கப்படும் விடயங்களாகும். 

இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இமாம்கள் பலவீனமான ஹதீஸைக் கொண்டு அமல் செய்யலாம் என்று கூறியதன் அர்த்தம் ஆதாரம் எடுக்க முடியாத பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு முஸ்தஹப்பு என்பதை நிறுவுவதல்ல. ஏனெனில் முஸ்தஹப்பு (ஸுன்னத்) என்பது மார்க்க சட்டமாகும். அது மார்க்க ரீதியாக ஏற்கப்பட்ட ஆதாரத்தின் மூலமே நிறுவப்பட வேண்டும். அதன் உண்மையான அர்த்தம் சரியான ஆதாரத்தினூடாக உறுதியான அல்லாஹ் விரும்பும் அல்லது அல்லாஹ் வெறுக்கும் ஒரு செயல். உதாரணமாக குர்ஆன் ஓதுவது, தஸ்பீஹ் செய்தல், துஆக் கேட்டல், நன்கொடை, உரிமையிடல், உபகாரம் புரிதல் போன்ற அல்லாஹ் விரும்பும் அமல்கள், பொய், சதி, அது போன்ற அல்லாஹ் வெறுக்கும் செயல்கள் இவ்விடயங்களின் சிறப்புக்களில் அல்லது எச்சரிக்கைகளில் அவைகளின் நன்மைகளிலும், தண்டனைகளிலும் அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டவை என அறியப்படாவிட்டால் அதனை ரிவாயத் செய்வதும், அதனை அமல் செய்வதும் ஆகுமானதாகும். அதாவது உள்ளம் அதில் கூறப்பட்ட தண்டனையைப் பயப்படுகின்றது. ஒரு மனிதனிடத்தில் ஒரு வியாபாரம் மிக நன்மை பயக்கும் அதிக இலாபம் இட்டும் என நம்புகிறான். இமு உண்மையாக இருப்பின் கூறப்படுகின்றது. 

அவனுக்கு அது நன்மை பயக்கும். அது பொய்யாக இருப்பின் அவனுக்கு எத்தீங்கையும் செய்யாது. 

பலவீனமான ஹதீஸ்கள் அளவுகளை மட்டிட்டு சொல்லக்கூடியவையாக இருப்பின் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஒன்றை ஆதுவது போன்று அல்லது குறிப்பிட்ட விதத்தில் செய்யப்படுவது போன்று இருப்பின் அது ஆகமாட்டாது. ஏனெனில் குறிப்பிட்ட இந்த முறை சரியான ஆதாரம் மூலம் உறுதி செய்யப்படவில்லை. (فتاوى ابن تيمية 18ஃ66) 

முன் கூறப்பட்ட விடயத்திற்கு எமது அன்றாட வாழ்க்கையில் காணக் கூடிய பல உதாரணங்களை எடுத்துக் கொள்ளலாம்.

உதாரணம் : 1

மலசல கூடத்திலிருந்து வெளியேறும் போது நபிகளார் (ஸல்) அவர்கள் الحمد لله الذي أذهب عني الأذى وعافاني எனக் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். ஆதாரம் : இப்னு மாஜஹ். அறிவிப்பாளர் : அனஸ் (ரழி) இதே நேரத்தில் ஆயிஷா நாயகி அறிவிக்கும் ஹதீஸில் غفرانك என மாத்திரமே இடம் பெற்றுள்ளது. இமாம் நவவி குறிப்பிடும் போது மலசல கூடத்திலிருந்து வெளியேறும் போது ஓதப்படக்கூடிய பல ஹதீஸ்கள் வந்திருந்தாலும் ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஹதீஸைத் தவிர மற்ற அனைத்தும் உறுதியற்றதாகும் என شرح المهذب எனும் நுஸலில் விமர்சித்துள்ளார்கள்.

செய்க் அல்பானி (ரஹ்) அவர்களும் الإرواء எனும் நூலில் அனஸ் (ரழி) அவர்களின் அறிவிப்பில் إسماعيل بن مسلم என்ற ஒருவர் இடம் பெற்றிருப்பதனால் இது பலவீனமான அறிவிப்பாகும் எனக் கூறியுள்ளார்கள். 

முன் கூறப்பட்ட ஹதீஸ் பலவீனமானது எனத் தீர்ப்பு செய்த பின் غفرانك தவிர்ந்த மற்றைய பகுதியை ஓதுவது ஸுன்னத் என்றும் அது சிறப்பு சம்பந்தப்பட்ட ஹதீஸ் என்றும் விளங்கக் கூடாது. மாறாக அதன் மூலம் ஸுன்னத் என்ற ஒரு சட்டத்தைநாம் சொல்ல முனைகின்றோம். எனவே ஸுன்னத் என்று சட்டம் கூற ஹதீஸ் ஸஹீஹாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். 

உதாரணம் : 2

யார் ஓவ்வொரு இரவிலும் ஸுரதுல் வாகிஆ ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் ஏழ்மை ஏற்படமாட்டாது. ஆதாரம் : இப்னு அஸாகிர் இறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் இந்த ஹதீஸ் பலவீனமானது என இமாம் அஹ்மத், அபூ ஹாதம், தாரகுத்னி போன்ற ஹதீஸ் துறை வல்லுனர்கள் தீர்ப்புக் கூறியுள்ளார்கள். இமாம் ஸைலஈ இதில் 4 குறைகள் இருப்பதாகக் கூறியுள்ளார். அதன் அறிவிப்பாளர்கள் பலவீனமாக இருப்பது மட்டுமல்லாமல் அதன் அறிவிப்பாளர் வரிசையில் தொடர்ச்சியின்மை காணப்படுவதாகவும், அதன் அறிவிப்பாளர் வரிசை ஒன்றுக்கொன்று மோதுவதாகவும், அதில் இடம் பெறும் விடயம் மணணமுள்ள அறிவிப்பாளர்கள் அறிவித்ததற்கு மாற்றமாக இருப்பதாகவும் குறை கூறியுள்ளார். 

இது போன்ற ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஸுரதுல் வாகிஆ ஒவ்வொரு இரவும் ஓதுவது ஸுன்னத் என்று சட்டம் கூற முடியாது. மாறாக ஏற்கனவே கூறியது போன்று அதனை ஓதும் சந்தர்பங்களில் இது போன்ற பிரதிபலன்களை ஒருவர் ஆதரவு வைக்கலாம். இது போன்ற ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு இந்த அத்தியாயத்தைக் குறித்து ஓதுவதற்கோ, ஓவ்வொரு இரவும் என நேரம் குறிப்பிடுவதற்கோ சான்றாக கொள்ள முடியாது.

இன்று சமூகத்தில் பல நூற்றுக்கணக்கான பித்அத்கள் காணப்படுகின்றன. அவைகளில் பெரும்பாலானவை மிகப் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டே செய்யப்படுகின்றன. பலவீனமான ஹதீஸ்களை அமல்களின் சிறப்புகளில் எடுக்கலாம் என்ற கருத்தை தவறாக மேலோட்டமாகப் புரிந்ததன் விளைவாக இவ்வாறான அனுஷ்டானங்கள் நிரம்பிக் காணப்படுகின்றன. மிஃராஜ் தின இரவில் அன்னதானம் வழங்குவதற்கும், ஓவ்வொரு இரவிலும் யாஸீன் ஸுரா ஓதுவதற்கும், தொழுகையை முடித்த பின் நெற்றியில் கையை வைத்து குறிப்பிட்ட துஆவை ஓதுவதற்கும், ஆசூரா தினத்தில் சுறுமா போடுவதற்கும், அஸ்ருக்குப் பின் தூங்கினால் பைத்தியம் ஏற்படும் என்பதற்கும் இது போன்ற இன்னோரன்ன பல விடயங்களுக்கும் ஒன்றோ பலவீனமான அல்லது மிகப் பலவீனமான அல்லது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் இருக்கவே செய்கின்றன. பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யலாம் என்று கூறியோர் இட்ட நிபந்தனைகளில் பலவீனம் கடுமையாக இருக்கக் கூடாது என்பதாகும். எனினும் இன்று பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுப்போர் மிகப் பலவீனமான ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு செயல்படுகின்றனர். 

இது ஒரு புறமிருக்க பலவீனமான ஆதாரமில்லாத தொழுகைக்கு பின் கூட்டு துஆ, மவ்லித், மீலாத் போன்றவற்றையும் இன்று இபாத்காளக மக்கள் செய்துவருகின்றனர். இவைகளுக்கும் ஆதரம் என்ன எனக் கேட்டால் அங்குமிங்கும் வந்த பல ஆதாரங்களை ஒன்று சேர்த்து நபிகளார் காலத்தில் இல்லாத பல நூதனமான வணக்கங்களுக்கு ஆதாரம் காட்டுவதில் இன்றைய சில உலமாக்கள் மிஞ்சியவர்களாக காணப்படுகின்றார்கள்.

இன்று ஸஹீஹாக வந்துள்ள பல நூறு அமல்களைச் செய்வதற்கே அவகாசம் இல்லாத கால கட்டத்தில் பலவீனமான ஹதீஸ்களை வைத்து அமல் செய்ய வேண்டும் என்ற எந்த தேவையும் நமக்கு இல்லை. எனவே ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் உறுதியான அமல்களை மக்களுக்குத் தூண்டுவோம். இதே நேரத்தில் பலவீனமான ஹதீஸ்கள் என்பது நபிகாளர் சொன்னார்களா? இல்லையா? செய்தார்களா? இல்லையா? என்ற விடயத்தில் வந்த சந்தேகமே தவிர நபிகளார் செய்யவில்லை, சொல்லவில்லை என உறுதியாக கூறுவதாகவும் இல்லை. அதனடிப்படையில் ஆதாரம் பிடிக்கும் துறையில்லாது ஹதீஸில் இடம் பெறும் கருத்து வேற்றுமைகளின் போது ஒரு அர்த்தத்தைக் காண இன்னொரு அர்த்தத்தை வலப்படுத்த இது போன்ற பலவீனமான ஹதீஸ்கள் உதவலாம். 
 

from Zikra 2016