இமாம் சன்கீதி (ரஹ்)

20ம் நூற்றாண்டின் மாமேதைகள்-  தொடர்:11
சகல கலா சமுத்திரம் இமாம் சன்கீதி (ரஹ்)
M.H.M. Haseem

இஸ்லாமிய மார்க்கத்தை எத்தி வைக்கின்ற பொறுப்பை சுமந்தவர்கள் நபிமார்களுக்குப் பின்னால் உலமாக்களே என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. இஸ்லாத்தை சீர்குலைப்பதற்காக விசமிகளால் பூசப்பட்ட அழுக்குத் துருக்களைத் துடைத்தெறிந்து அதன் தூய்மையைப் பாதுகாத்து தீன் சுடரைப் பரப்பியவர்கள் அவர்கள். மார்க்கத்திற்கு கலங்கம் விளைவிக்க நாட்டிய வித்துக்களை அவர்கள் முளையிலே கில்லியெறிந்து இஸ்லாம் எனும் பசுமையான பூந்தோட்டத்தை உருவாக்கியவர்கள் அவர்கள். ஆகவே அவர்களது வாழ்க்கை வரலாற்றைப் படித்து அவர்கள் செய்த சேவைகளைப் புரிந்து செயற்பட வேண்டியது முக்கிய அம்சமாகக் காணப்படுகின்றது. அந்தப் பின்னணியில் இத்தொகுப்பினூடாக 20ம் நூற்றாண்டு ஈன்றெடுத்த பொக்கிசங்களில் ஒருவராகிய இமாம் முஹம்மது அமீன் அஷ்ஷன்கீதி(ரஹ்) அவர்களைப் பற்றிய சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

அறிமுகம்:

இமாமவர்களின் முழுப் பெயர் முஹம்மத் அமீன் இப்னு முஹம்மத் முஹ்தார் அச்சன்கீதி என்பதாகும். இவர் தப்ஸீர் கலை உலமாக்களில் ஒருவராக பிரபல்யம் அடைந்துள்ள அதே வேளை ஏனைய கலைகளிலும் பாண்டித்தியம் உடையவராக் காணப்படுகின்றார். குறிப்பாக கவிதை புனைவது இவரது கைவந்த கலையாகக் காணப்பட்டது. இவர் மதீனா பல்கலைக்கழகத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகவும் அதன் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பிறப்பும், வளர்ப்பும்:

இமாம் சன்கீதி(ரஹ்) அவர்கள் கி.பி.1905 ஹிஜ்ரி 1325 இல் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மொரித்தானியா எனும் நாட்டின் ஷன்கீத் எனும் நகரில் பிறக்கின்றார். இவர் வாழ்ந்த சூழலில் இரு வகையினர் காணப்பட்டனர். ஒரு பிரிவினர் அரேபியர்கள். மற்றைய பிரிவினர் அஜமிகள் எனப்படும் அரபி அல்லாதவர்கள். அரபிகளில் ஒரு சாரார் வியாபாரத்தில் ஈடுபடக் கூடியவர்களாகவும் மற்றுமொரு சாரார் அறிவுத் துறையில் ஆர்வம் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். இமாம் சன்கீதி அவர்களின் கோத்திரமான ஜக்னீன் எனப்படக் கூடியவர்கள் இவ்விரண்டிலும் பாண்டித்தியம் பெற்றிருந்த அதே வேளையில் யுத்த தந்திரங்களை அறிந்தவர்களாகவும் காணப்பட்டனர்.

அதே போன்று உயரிய அழகிய குணம் படைத்தவர்களாகவும் குறிப்பாக விருந்தோம்பலில் முன்மாதிரி மிக்கவர்களாகவும் காணப்பட்டனர். இப்படி பல சிறப்புக்களைப் பெற்ற உயரிய கோத்திரத்தில் பிறந்த இமாமவர்களும் சிறந்தவராகவே காணப்பட்டார். 

இவருடைய குடும்பம் செல்வச் செழிப்பு மிகுந்த ஒரு குடும்பமாக் காணப்பட்டாலும் தன்னுடைய சிறுபராயத்திலே மிகப் பெரும் இழப்பொன்றை இவர் சந்திக்கின்றார். ஆம் சிறுவயதிலேயே தந்தையை இழந்து அநாதையாகி விடுகின்றார். அதைப் பற்றி இமாமவர்கள் கூறும் போது 'என்னுடைய தந்தை நான் சிறு வயதிலே 'அம்ம' ஜூஸ்உவை ஓதிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலே மரணித்தார்' எனக் கூறியுள்ளார்கள். பின்பு தந்தையுடைய சகோதரர்களின் வீட்டிலேயே தனது வாழ்க்கையைக் கழிக்கின்றார்.

அறிவுத் தாகம்:

பிற்காலத்தில் தலைசிறந்த உலமாக்களில் ஒருவராகத் திகழ்ந்த இமாமவர்கள் தனது அறிவைத் தேடிய பயணத்தைச் சிறு வயதிலேயே ஆரம்பித்து விடுகின்றார். தனது 10வது வயதிலேயே புனித அல்குர்ஆனைத் தனது தந்தையின் சகோதரர்களில் ஒருவரான அப்துல்லாஹ் என்பவரிடம் மனனமிட்டு விடுகின்றார். 

தொடர்ந்து மாலிக் மத்ஹப் சம்பந்தப்பட்ட சில நூற்களையும், பல கவிதைத் தொகுப்புகளையும் மனனம் செய்ததுடன் பல கலைகளையும் படிக்க ஆரம்பிக்கின்றார். இலக்கியத்துறை, இலக்கணத்துறை, நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கை வரலாறு போன்ற இன்னும் பல துறைகளைத் தனது தந்தையின் சகோதரனின் மனைவியிடமிருந்தே கற்கின்றார். அரேபிய வம்சாவழி பற்றிய 500க்கும் மேற்பட்ட கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பை இமாம் அஹ்மத் ஷன்கீதி அவர்களிடம் கற்கின்றார்.

குர்ஆனை மனனம் செய்ததுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல் 'அல் முஸ்ஹபுல்உம்மு' எனப்படும் உஸ்மானிய முஸ்ஹபின் எழுத்து வடிவத்தையும், எழுத்துமுறையையும், தஜ்வீத் கலையையும் முஹம்மத் இப்னு அஹ்மத் இப்னு முஹம்மத் முஹ்தார் என்பவரிடம் கற்றுக்கொள்கின்றார். இவ்வளவு அறிவுகளையும்  கற்று முடிக்கும் போது இமாமவர்கள் 16 வயதைத் தாண்டியிருக்கவில்லை.

இவர்pன் அறிவாற்றலை மேலும் வளர்க்கு முகமாக தனது மகனை வெளி நாடொன்றுக்கு அவரது தாய் முடிவுசெய்கின்றார். இதற்காக ஸவூதி அரேபியாவைத் தெரிவு செய்கின்றார். அங்கு சென்ற இமாமவர்கள் நஹ்வு, ஸர்ப், அல்உஸூல், தப்ஸீர், ஹதீஸ் போன்ற கலைகளைத் துறைபோகக் கற்கின்றார்.

இமாம் ஷன்கீதி(ரஹ்) பாண்டித்தியம் பெற்ற கலைகளில் ஒன்றுதான் கவிதைத் துறையாகும். தனது அதிகமான தொகுப்புக்களை கவிதை வடிவிலே தொகுத்துள்ள இமாமவர்கள் பிற்காலத்தில் அதைவிட்டு விலகிச் சென்றார். எந்தளவுக்கெனில் தான் தொகுத்த தொகுப்பொன்றை தனது கரத்தினாலேயே புதைத்தும் விட்டார். இவ்வாறு தூரமாகுவதற்கான காரணத்தைக் கேட்டபொழுது 'கவிதை பாடுவதை சிறப்புக்குறியவர்களின் பண்புகளில் ஒன்றாக தான் கருதவில்லை' என்று கூறிவிட்டு இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களின் 'கவிதை பாடுவது உலமாக்களுக்கு இழிவை ஏற்படுத்தாது என்றிருந்தால் லபீத் என்பவரை விட அதிகம் கவிதைகளைப் பாடியிருப்பேன்' எனும் கவிதையை கூறிக் காட்டினார். 

இமாமவர்களின் அறிவுத் தாகத்தை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை இமாமவர்களே இவ்வாறு கூறுகின்றார். 'என்னுடைய ஆசிரியரிடத்திலே ஒரு விடயத்தைக் கற்றேன். அதில் எனக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. எனவே நான் வீட்டுக்கு வந்ததன் பின் அதைப் பற்றி தேட ஆரம்பித்தேன். அப்போது லுஹர் நேரமாகக் காணப்பட்டது. அஸர் வரைக்கும் தேடினேன். அப்பொழுதும் கிடைக்கவில்லை பின்பு மக்ரிப் வரை தேடினேன். அப்போதும் திருப்தி ஏற்படவில்லை. 

பிறகு எனது பணிவிடையாளர் நான் வாசிப்பதற்காக நெருப்பை மூட்டினார். அவ்வாறே நான் சுபஹ் நேரம் வரை தேடி திருப்தியான விடையைப் பெற்றுக் கொண்டேன். அது வரைக்கும் அந்த இடத்தைவிட்டு உண்ணுவதற்கும், தொழுவதற்குமே தவிர நான் எழவில்லை. சுபஹூக்குப் பின்னால் இன்றைய தினம் கற்றது போதும் என்னை எழுப்ப வேண்டாம் எனக் கூறிவிட்டு தூங்கச் சென்றேன்' எனக் கூறினார்கள். இச்சம்பவத்தின் மூலம் இமாமவர்கள் எந்தளவு ஆர்வமுள்ளவரராக இருந்துள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

சமூகப் பணியில் இமாமவர்கள்.

அறிவுத் துறையில் ஆழ்கடலாகத் திகழ்ந்த இமாமவர்கள் அதை தனக்குள் மாத்திரம் சேமித்து வைக்கவில்லை. மாறாக அந்த நீரின் ஊடாக பல கடல்களையும், ஆறுகளையும் உருவாக்க வேண்டும் என்பதற்காக தன்னை பல கிளைகளாக மாற்றி செயற்பட ஆரம்பிக்கின்றார். அந்த வகையில் ஆரம்பத்தில் தனது ஊரிலேயே அறிவைப் பரப்பக்கூடிய ஆசானாகவும், தீர்ப்பு வழங்கும் நீதிபதியாகவும் செயற்பட்டார். ஊருக்கென்று நியமிக்கப்பட்ட நீதிபதி நியமிக்கப்பட்டிருந்தும் பல இடங்களில் இருந்தும் மக்கள் இமாமவர்களேயே நாடி வந்தனர்.

தீர்ப்பு வழங்கிய விதம்.

இமாமவர்களிடத்தில் ஏதாவது வழக்குகள் கொண்டு வரப்பட்டால் வழக்கு சம்பந்தப்பட்ட இருவரையும் அழைத்து தத்தமது வாதங்களை எழுதித் தருமாறு கேட்பார். பின்னர் அவர்களின் வாதங்களுக்குக் கீழாகவே தீர்ப்பை எழுதிவிட்டு இதை கொண்டுபோய் யாரிடமாவது தீர்ப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். என அனுப்பிவிடுவார். அத்தீர்ப்பைப் பார்க்கும் நீதிபதிகள் எந்தவொரு மறுப்பும் கூறாமல் அதே தீர்ப்பை வழங்கி விடுவார்கள். கொலை சம்பந்தமான வழக்குகளில் தீர்ப்பு வழங்குவதை இமாமவர்கள் தவிர்ந்து கொண்டிருந்தார்.

வெளியூர்ப் பயணம்.

பல வருடங்கள் இவ்வாற ஊரிலேயே மார்க்கத்தைப் பரப்பிக் கொண்டிருந்த இமாமவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றும் நோக்கில் மக்காவை நோக்கிப் பயணிக்கின்றார். வரும்போது திரும்பி செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலே தான் வருகின்றார். தரை மார்க்கமாக பயணத்தை மேற்கொண்ட இமாமவர்கள் பயணத்திலேயே பல ஆய்வுகளை மேற்கொள்கிறார். 

அவற்றில் முக்கியமாக சூடான் நாட்டு உலமாக்களுடன் சேர்ந்து நீதி சம்பந்தமாக மேற்கொண்ட ஆய்வு மிக முக்கியமானதாகும். இவ்வாறு மீண்டும் தன் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலே வந்த இமாமவர்களுக்கு சஊதி அரேபியாவிலே வஹ்ஹாபிய்யத் எனும் புதிய சிந்தனை ஒன்று பரப்பப்படுவதாக கேள்விப்படுகின்றது. எனவே அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென ஆசைப்பட்ட இமாமவர்களுக்கு அல்லாஹ் ஒரு சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுக்கிறான். 

அதாவது ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற சந்தர்ப்பத்தில் இவருடைய கூடாரம் இளவரசர் காலித் உடைய கூடாரத்திற்கு பக்கத்தில் அமைந்து விடுகின்றது ஆனாலும் இருவரும் அறிமுகமற்றவர்கள். காலிதைப் பொருத்தமட்டில் இலக்கியத் துறையில் ஆர்வமுள்ளவராகக் காணப்பட்டார். எனவே அவர் தன்னுடைய சகாக்களுடன் சேர்ந்து இலக்கியத்துறை சம்பந்தமான கவிதைகளைத் தேடுகின்றார். 

அவர்கள் அவ்வாறு தங்களுக்குள் தேடிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலே பக்கத்துக் கூடாரத்தில் இருந்த இந்த அறிமுகமற்ற இமாமவர்களிடமும் கேட்கின்றனர். அந்நேரத்தில் தான் கரையே இல்லாத ஆழ்கடலாகத் திகழ்ந்த இமாமவர்களைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்கின்றனர். அதன் பின்பு இமாமவர்களுக்கும் இளவரசருக்கும் இடையேயான சந்திப்புக்கள் அதிகமாகி நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. 

இதன் போது இளவரசர் காலித் மதீனாவிற்கு வந்தால் அப்துஸ் ஸாஹிம் மற்றும் அப்துல் அஸீஸ் இப்னு ஸாலிஹ் (ரஹ்) போன்ற உலமாக்களை சந்திக்குமாறு உபதேசம் செய்கின்றார். அதன்படி மதீனாவிற்கு சென்று இந்த உலமாக்களை சந்தித்து தான் செவிமடுத்த குற்றச்சாட்டைப் பற்றிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்கிறார். அதற்காக அதிகமான நேரங்களை இமாம் அப்துல் அஸீஸ் இப்னு ஸாலிஹ் (ரஹ்) அவர்களுடன் செலவிட்டார். 

அதன் பின் மத்ஹப் சம்பந்தமாக المغني எனும் நூலையும் அகீதா சம்பந்தமாக இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களுடைய பல நூற்களையும் இவருக்கு கற்றுக் கொடுக்கின்றார். பின்புதான் தான் இமாமவர்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவரகளுடைய மத்ஹபைப் பற்றி அறிந்து கொள்கின்றார். அதே போன்று தூய்மையான குர்ஆன் ஸுன்னா மீது அமையப் பெற்ற அகீதாவையும் நல்ல முறையில் விளங்கிக் கொள்கின்றார். எனவே தான் செவிமடுத்த குற்றச்சாட்டு பொய்யானது என்பதை விளங்கி தன்னுடைய முடிவை மாற்றி நாட்டுக்குச் செல்லாமல் அங்கேயே தங்கி விடுகின்றார்.

இவ்வாறு மதீனாவில் தங்கிவிட்ட இமாமவர்கள் தப்ஸீர் கலையை படித்துக் கொடுக்க வேண்டுமென ஆசைப்படுகின்றார். அவருடைய அந்த ஆசையும் மன்னர் அப்துல் அஸீஸ் மூலமாக நிறைவேறுகின்றது. மஸ்ஜித் நபவியிலே பாடம் நடத்துவதற்கு தயாரான இமாமவர்கள் தாம் முன்பிருந்த சூழலும் தற்போதைய சூழலும் வித்தியாசமானவை என்பதை உணர்கின்றார். 

தனது நாட்டில் மாலிக் மத்ஹபை மாத்திரம் அறிந்திருந்தால் மாத்திரம் போதுமானதாக இருந்தது. ஆனால் இங்கு 4 மத்ஹபுகளைப் பற்றிய அறிவு மக்களிடம் இருந்தது. அது மட்டுமன்றி ஹதீஸ் துறையிலும் ஆழமான அறிவு தேவைப்பட்டது. எனவே இமாமவர்கள் கற்பிக்கும் அதே சமயத்தில் தானும் கற்க ஆரம்பிக்கின்றார். அவற்றில் ஆழமான அறிவையும் பெறுகின்றார். 

அதே போன்று அகீதாவிலும் தெளிவான வழியை இமாமவர்கள் அடைந்து கொண்டார்கள். எந்தளவுக்கெனில் இவருடைய அகீதா சம்பந்தமான உரையைக் கேட்ட இமாம் அப்துல் லதீப் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் 'அல்லாஹ் இமாம் முஹம்மத் அமீன் அவர்களுக்கு நற்கூலியை வழங்குவானாக! அவருடைய இந்த உரையின் மூலம் அகீதாவை அறியாதவன் அறிந்து கொண்டான்,' என புகழ்ந்து கூறினார்.

அறிவைப் பரப்பிய இடங்கள் 

மஸ்ஜித் நபவி இமாமவர்கள் தனது அறிவுக் கடலில் உள்ள பொக்கிசங்களைப்  பரப்புவதற்காக தேர்வு செய்த மிக முக்கிய இடமாகும். ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்து இன்று வரை மக்கள் மத்தியில் அறிவைப்பரப்பும் பெரும் தளமாகத் திகழும் அந்த இடத்தையே ஆரம்பத்தில் தேர்வு செய்கின்றார்.  அறிவைப்பரப்புவதிலே உலகில் காணப்படும் அனைத்து கல்வி நியைங்களை விடவும் பயன்மிக்கது இந்தப் பள்ளிவாசலாகும். இமாமவர்கள் அவ்விடத்திற்கு வருவதற்கு முன்னால் இமாம் தய்யிப் (ரஹ்) என்பவர் அவ்விடத்திலே பாடங்களை நடாத்தக் கூடியவராக இருந்தார். ஹிஜ்ரி 1363ம் ஆண்டு அவர் மரணிக்கவே அவ்விடத்திற்கு இமாமவர்கள் தேர்வு செய்யப்படுகின்றார். இமாம் தய்யிப் (ரஹ்) அவர்களின் மரணத்தால் கவலையடைந்த மாணவர்கள் இமாம் ஷன்கீதியின் வருகையின் மூலம் இரட்டிப்பு சந்தோசத்தை அடைந்தனர். 

இமாமவர்களின் ஆசைப்படி தப்ஸீர் பாடம் நடாத்துகின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. 2 விடுத்தங்கள்; முழுக்  குர்ஆனுக்கும் விளக்கம் சொல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. விளக்குவதில் தனியான ஒரு முறையைக் கையாண்டார். அழகிய முறையில் உதாணங்களுடன் அதில் வந்துள்ள மொழிரீதியான நுணுக்கங்களையும் நுட்பங்களையும் அழகிய முறையில் விளக்குவார். பிக்ஹ் சம்பந்தமான வசனங்கள் வரும் போது அதிலுள்ள சட்டங்கள், கருத்து வேறுபாடுகள், உலமாக்களின் கூற்றுக்கள் அதிலே அவர் ஏற்றமாகக் கருதக்கூடிய கருத்து ஆகிய அனைத்தையும் ஆதாரபூர்வமாக விளங்கப்படுத்துவார். இவ்வாறு குர்ஆனை பூரணமான முறையிலே விளக்குவார்கள்.

ரியாத் கல்வி நிலையம்

ஹிஜ்ரி 1371ம் ஆண்டு ரியாத் நகரிலே மிகப் பெரும் கல்வி நிலையம் (மஃஹத்) உருவாக்கப்படுகிறது. அங்கு பாடங்களை நடாத்துவதற்கு உலகிலுள்ள தலை சிறந்த அறிவுமேதைகள் தேர்வு செய்யப்பட்டனர். எனவே இமாமவர்களும் அவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்படுகின்றார். இமாம் அவர்கள் தப்ஸீர் கலையையும் அல்-உஸூல் கலையையும் மதீனா பல்கலைக்கழகம் திறக்கப்படும் வரை 10வருடங்களாக சிறப்பான முறையிலே கற்றுக் கொடுத்தார்கள்.

மதீனா பல்கலைக்கழகம்.

மதீனா பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு காரணமாக இருந்த உலமாக்களுள் இவரும் ஒருவராகக் காணப்படுகின்றார். 10 வருடங்களாக ரியாத் நகரில் இயங்கிக் கொண்டிருக்கும் கல்வி நிலையத்தின் பிரதிபலிப்பாகவே இது உருவாகுகின்றது. இதை ஒழுங்கான முறையிலே இயக்குவதற்காக சிரமப்பட்ட இமாம்களுள் இமாம் சன்கீதியும் ஒருவராவார். இப்பல்கலைக்கழகத்தினால் அனுப்பப்பட்ட குழுக்களில் இமாமவர்கள் 10க்கும் மேற்பட்ட ஆபிரிக்க நாடுகளுக்கு குழுத்தலைவராக சென்றுள்ளார்.

இது மாத்திரமில்லாமல் இமாமவர்கள் இன்னும் பல அமைப்புக்களின் உறுப்பினராக இருந்துள்ளார். குறிப்பாக هيئة كبار العلماء வின் அங்கத்தவராகவும், தலைவராகவும் இருந்துள்ளார். இவ்வாறாக எந்த விதத்திலெல்லாம் தான் பெற்ற அறிவைப் பரப்ப முடியுமோ அவ்வாரெல்லாம் பரப்பினார்.

மாணவர்கள்.

அறிவுக் கடலாக விளங்கிய இமாமவர்களின் அறிவூற்றிந் மூலமாக உருவாகி விருட்சகமாக விளங்கிய  மாணவர்களோ எண்ணிலடக்க முடியாதவர்கள். அவர்களில் பெரும் விருட்சகமாக உருவாகி கிளைவிட்ட சில மாணவர்களைப் பார்க்கலாம்.

    அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்), முஹம்மத் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்), ஹம்மாத் அல்-அன்ஸாரி (ரஹ்),ஸாலிஹ் அல்-லஹைதான் (ரஹ்),அப்துல் முஹ்ஸின் அல்-அப்பாத் (ரஹ்), அபூ ஸைத் பக்ர் இப்னு அப்தில்லாஹ் (ரஹ்) (10வருடங்கள்), ஹமூத் அல்-அக்லா (ரஹ்), அதிய்யா முஹம்மத் ஸாலிம், ஸாலிஹ் இப்னு பவ்ஸான் (ரஹ்), அப்துல்லாஹ் அல்-கத்யான் (ரஹ்), அப்துல் அஸீஸ் அல்-காரி (ரஹ்) (8வருடங்கள்), அப்துல்லாஹ் காதிரி (ரஹ்), அஹ்மத் இப்னு அஹ்மத் அச்சன்கீதி (ரஹ்)

அறிவுப் பொக்கிசங்கள்

இமாமவர்களின் அறிவின் ஆழத்தைக் காட்டும் முக்கிய சின்னமாக விளங்குவது அவரது أضواء البيان في إيضاح القرآن بالقرآن  நூலே. அதிகமான நூற்கள் கவிதைத் தொகுப்பாகவே காணப்பட்டன. இவை தவிர வேறு நூற்களும் காணப்படுகின்றன. அவற்றுள் சில :

نَظمٌ فِي نَسَبِ بَنِي عَدنَان  இرَجزٌ فِي البُيُوعِ عَلَى مَذهَبِ الإِمَامِ مَالِك ، أَلفِيَةٌ فِي المَنطِق ، نَظمٌ فِي الفَرَائِض ،مَنعُ جَوَازِ المَجَاز عَلَى المَنزِل لِلتَّعَبُّدِ والإِعجَاز ، دَفعُ إِيهامِ الإِضطِراب عَن آياتِ الكِتاب ،مُذَكِّرَةٌ فِي الأُصُولِ عَلَى رَوضَةِ الناظِر ، أَدَبُ البَحثِ والمُناظَرَةِ ، أَضوَاءُ البَيان ، الرِحلَةُ إِلَى أَفريقا

இருவட்டுக்களிலும் சிறுதொகுப்புகளாகவும் வந்தவை

العَذبُ النَمِير مِن مَجالِسِ الشَّنقِيطِي فِي التَّفسِير، آياتُ الصِّفات ، حِكمَةُ التَّشرِيع ، المُثُلُ العُليا

உலகம் இழந்த ஆழ் கடல்

பல துறைகளிலும் ஆழ்கடலாக விளங்கிய பல பெறுமதிமிக்க பொக்கிசங்களை உருவாக்கிய இமாமவர்களின் அலை ஹிஜ்ரி 1393-12-13ம் திகதி வியாழக்கிழமை மக்காவிலே காலைப் பொழுதில் அடங்குகின்றது. ஆம் இமாமவர்கள் மரணித்துவிட்டார். அவருடைய ஜனாஸாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இமாம் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) ஜனாஸாத் தொழுகை நடாத்தப்ட்டது. 

M.H.M. ஹஸீம் - விடுகை வருடம் (2018)