அரபு மொழியின் அருமை

அரபு மொழியின் அருமை

அரபு மூலம்: அல்-ராபிதா சஞ்சிகை (இதழ்: 532)

தமிழில்: M.I.M. Rifkan 
 

சமகால மொழிகள் யாவற்றையும் விட அரபு மொழி முதன்மை வகிக்கக்கூடியது என்பதை நிரூபிக்கும் நவீன மொழியியல் ஆய்வு.

அரபுமொழியில் ஆறு மில்லியன் சொற்கள்,

ஆங்கிலத்தில் ஆறு இலட்சம் சொற்கள் மாத்திரமே.

சூடான் நாட்டு; ஹுர்தூம் பல்கலைக் கழகத்தின் ஆங்கில மொழிப் பிரிவின் முன்னாள் தலைவரும், மக்கா, உம்முல் குரா சர்வகலாசாலையின் ஆங்கில மொழி விரிவுரையாளருமான கலாநிதி அப்துல் மஜீத் தய்யிப் அவர்கள் அரபுமொழி பற்றிய ஆய்வொன்றைச் சமர்ப்பித்து, உம்மு தர்மான் பல்கலைக் கழகத்தில் மேலும் ஒரு கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

'தற்கால மொழிகளுக்கிடையில் அரபு மொழியின் சிறப்பு' எனும் தொணிப் பொருளில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆய்வில் இன்றைய உலகில் பாவனையிலுள்ள மொழிகளில் ஏனையவற்றை விட அரபுமொழி பல கோணங்களில் சிறப்புற்றிருப்பதை நிரூபித்துள்ளார்.

ஓசைநயம், சொற்பிறப்பியல் விதிகள், சொற்றொடரிலக்கணம், சொற்செறிவு, அரிச்சுவடிகளின் அமைப்புகள், மனதில் எழும் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கான ஆற்றல், பலவிதமான கருத்துக்களை தனித்துவத்துடன் கூடிய நுட்பம் நிறைந்த வித்தியாசமான சொல்லாடல்கள் மூலம் தெரிவிப்பது என பல துறைகளில் அரபு மொழி முதன்மைச் சிறப்புகளைப் பெற்றுள்ளது.  

மேலும் இந்த ஆய்வு, அரபு முதல்தர ரீதியிலான ஓர் ஒப்பீட்டு முறையிலான மொழி எனவும் ஏனைய மொழிகளில் அதிகமானவை இலக்கண, மொழி ரீதியிலான அடிப்படையின்றி மரபு ரீதியிலான உச்சரிப்பு, செவியுறுதல் மூலமான மொழிகள் என்பதை நிரூபித்துள்ளது.

அதுமட்டுமன்றி, அரபு மொழியானது அரபுலக மக்களுக்கானது மட்டுமன்றி உலகளாவிய மனிதகுல மொழியாகும். இம்மொழியில் பாண்டித்தியம் பெற்று அதன் மூலம் சிறந்த பல கலைகளை உருவாக்கியவர்களில் அநேகமானோர் அரேபியர்கள் அல்லாத அறிஞர்களாக இருப்பது இதற்கான தக்க சான்றாகும்.

அரபுமொழியானது தற்கால மொழிகளில் மிகவும் தொன்மையான மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழியைப் பாதுகாப்பதற்கான மனிதகுல முயற்சிகள் ஏனைய மொழிகளுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பினும், அவற்றிற்கு ஏற்பட்ட வழக்கொழிந்து போகுதல், விதிகள் மாற்றமடைதல் போன்ற ஆபத்துகள் அரபுமொழிக்கு ஏற்படவில்லை என்ற உண்மை இந்த ஆய்வின் மூலம் எட்டப்பட்ட முக்கிய அடைவுகளில் ஒன்றாகும்.

ஜாஹிலிய்யாக் கால கவிதைகள், அரேபியர்களின் முதுமொழிகள் போன்ற அம்மொழியின் அடையாளங்களில் சில கிறிஸ்துவுக்கு முந்திய பல நூற்றாண்டுகள் பழமையானதாக இருப்பதைக் காணலாம். ஏனைய மொழிகள் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்குள்ளேயே மாற்றமடைவது மட்டுமின்றி, வழக்கொழிந்தும் போய்விடுகின்றன. அவை நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் பழமையான மொழியாயிருப்பின் அதனை நூதனசாலைகளிலேயே காணலாம், அதன் அர்த்தங்களைப் புரிய பழங்கால அரிச்சுவடிகளையே தேட வேண்டியிருக்கும். 16 ம் நூற்றாண்டைத் தாண்டாத வரலாறுகொண்ட நவீன ஆங்கில மொழியின் நிலையும் இதுவே, அதற்கு முந்திய கால ஆங்கிலத்தை யாரும் விளங்கவும் மாட்டர்கள், அதனை பாவிப்போரும் யாரும் கிடையாது. 

அரபுமொழி துல்லியமான சொற்பிறப்பியல் ஒழுங்கைக் கொண்டிருப்பது அதன் சிறப்பம்சமாகும் என மேலும் அவ்வாய்வு சுட்டிக்காட்டியுள்ளது. அதன் மூலம் எல்லையில்லாத அளவு தனிச்சொற்களை உருவாக்கமுடியும், ஏனைய மொழிகளைப் பொறுத்தமட்டில் இதுபோன்ற நுட்பமான ஒழுங்கு விதிகள் அவற்றிற்குத் தேவைப்படுகின்றன, அம்மொழிகளை வேகமாகக் கற்கவும், ஒருவர் தான் நினைத்தவற்றை இலகுவாக விபரிப்பதற்கும், அகராதிகளின் துணையின்றி புதிய சொற்களை உருவாக்கவும் அது உதவியாயிருக்கும்.

ஒரு மூலச்சொல்லிலிருந்து வித்தியாசமான அர்த்தங்களைக் கொடுக்கும் பல்வேறு வடிவங்களை அமைக்கும் 'اشتقاق'  எனும் சொல்லிலக்கணம், பலசொற்களைக் கொண்ட தொடரைக் குறிக்கும் மூல வினைச்சொல்லை உருவாக்கும் 'نحت' எனும் சொற்செதுக்கல் முறை போன்ற நுட்பமான ஒழுங்கு விதிகளை அரபுமொழி தன்னகத்தே கொண்டிருப்பதால் அறிவுத்துறை முன்னேற்றத்திற்கு ஈடுகொடுத்து காலத்தால் அழியாத மொழியாக அது திகழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

மேலும், அரபுமொழி எழுத்துக்களின் தெளிவான ஓசை நயத்தையும், கிட்டத்தட்ட முழுமையாகவே எழுத்தும் அதன் உச்சரிப்பும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படாததாகவும் உள்ளதைக் காணலாம். ஆனால், பொதுவாக மேற்கத்திய மொழிகளில் அதிலும் குறிப்பாக ஆங்கிலம், பிரான்சு மொழிகளில் எழுத்துக்களின் ஓசை ஒழுங்குகள் சிக்கலானதாகவே உள்ளன. அவற்றில் நிசப்த எழுத்துக்கள், எழுத்துகளின்றியே சப்தம் உச்சரிக்கப்படுவது, ஒரே எழுத்திற்கு பல ஓசை வடிவங்கள் இருப்பது என பல விடயங்கள் நுணுக்கமான ஒழுங்கு விதிகளும் கட்டுப்பாடுகளுமின்றி இருப்பதைக் காணலாம். 

மனிதன் உபயோகித்த மொழிகளில் மிகவும் செறிவான சொல்வளம் மிக்க மொழியாக அரபு மொழி திகழ்கின்றது. 60 இலட்சத்திற்கும் அதிகமான சொற்களைக் கொண்டதாக அம்மொழி இருக்கும் அதேவேளை ஏனைய மொழிகளின் சொற்கள் வழக்கில் உள்ளவை, வழக்கொழிந்துபோனவை என எல்லாமாகவே 6 இலட்சத்தைத் தாண்டியதாக இல்லை.

அரபுமொழியை கணனி மயப்படுத்துவதன் மூலம் இம்மொழி பற்றிய ஆச்சரியமான மேலும் பல இரகசியங்களையும் அதன் ஆளுமைகளையும் வெளிக்கொணர முடியும் எனவும்,  இம்முயற்சி அரபை முதல்நிலை சர்வதேச மொழியாக எதிர்காலத்தில் மாற்றவதற்கு உதவும் எனவும் தெரிவித்துள்ள ஆய்வாளர்;, தனது ஆய்வின் இறுதியில் அரபுமொழி பற்றிய அக்கறையை மேம்படுத்தவும், அரபுமொழியினதும் இஸ்லாத்தினதும் மனிதகுலத்தினதும் எதிரிகள் திரும்பத் திரும்ப அதுபற்றிக் கூறிவரும் போலிக் குற்றச்சாட்டுகளைக் துடைத்தெறியவும் உதவும் பல ஆலோசனைகளையும் முன் மொழிந்துள்ளார்.

 ஆண்டு: 6 (2016)