ஹஜ்ஜின் தாத்பரியங்கள்

ஹஜ்ஜின் தாத்பரியங்கள்
 Al-Usthaz Dheenul Hasan

ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகிய உன்னதமான மகத்தான ஒரு வணக்கமாகும். உடல், பணம், ஆன்மா, நம்பிக்கை ஆகிய சகலதுடனும் ஒன்று சேர சம்பந்தப்படுவது அதன் தனித்துவங்களில் ஒன்று, இது ஏனைய வணக்கங்களைப் போலன்றி கூடுதலான சிரமமும் செலவும் உள்ள ஒன்று என்பதனால் கருணைமிக்க அல்லாஹ் வாழ்நாளில் ஒருமுறை மாத்திரமே அதிலும் வசதியுள்ள-வர்களுக்கு மாத்திரமே கடமை என இதனை மட்டுப்படுத்தியுள்ளான்.

இஸ்லாம் ஓர் அர்த்தமுள்ள அறிவுபூர்வமான மார்க்கம், அது மட்டுப்படுத்தப்பட்ட குறுகிய அறிவைக் கொண்ட ஆசாபாசங்களுக்கு உட்பட்ட மனிதனால் மனிதனுக்கு உருவாக்கப்பட்டதல்ல, மாறாக, எல்லையில்லா ஆழமான நுண்ணறிவு கொண்ட, எம்மீது அன்பும் பரிவுமுள்ள வல்ல அல்லாஹ்வினால் அருளப்பட்டது. அறிவும் பரிவும் உள்ளவன் என்பதால் அவன் எமக்கு வகுத்த அனைத்தும் சரியானதும் பயனள்ளதுமாவே இருக்கும் என்பதில்  ஐயமில்லை.

நபி இப்ராஹீம் (அலை) மூலம் ஹஜ்வணக்கத்தைப் புரியும்படி பகிரங்க அறிவிப்பு விடுத்ததைப் பற்றி அல்லாஹ் கூறும்போது பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்: ليشهدوا منافع لهم   அவர்களுக்கான சில பயன்களை அவர்கள் அடைந்துகொள்வதற்காக 'இதில் குறிப்பிடப்-பட்டுள்ள 'பயன்கள்' என்பது ஹஜ் வணக்கத்திற்குக் கிடைக்கும் கூலிகள், பாவமன்னிப்பு என்பன மட்டுமல்லாது ஹஜ்ஜை முறையாக நிறைவேற்றும் ஒருவர் பெற்றுக் கொள்ளும் ஆன்மீக ரீதியிலான ஈமானிய புத்துணர்ச்சி, இறைவழிபாட்டிற்கான தியாக உணர்வு, மேலும் உடல் உள ரீதியிலான பக்குவங்கள், நன்னடைத்தைக்கான அரிய பாடங்கள் பயிற்சிகள், அத்துடன் வாழ்க்கைக்குத் தேவையான அருமையான தத்துவங்கள் என பற்பல வடிவங்களிலான பயன்களைக் குறிப்பதை ஆழமாக சிந்திக்கும் போது உணரமுடிகின்றது.

ஹஜ் வணக்கம் நிறைவேறுவதற்கு வித்தியாசமான பல இடங்களில் பல வடிவங்களிலான அமல்களை கட்டாயமாக நிறைவேற்றுவதுடன் குறிப்பிட்ட சில அம்சங்களை விட்டும் கட்டாயமாகத் தவிர்ந்து தன்னை ஒருவர் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியுமுள்ளது,

ஹஜ் என்ற  வணக்கம்; அருமையான பயனுள்ள பல அமல்கள் ஒருசேர அமைந்துள்ள ஓர் அழகான கலவையாகும். அதற்காக நிய்யத் வைத்தல், அதனை 'மீகாத்' எனும் குறித்த இடத்தைத் தாண்டுமுன் வைத்தல், இஹ்ராம் உடையணிதல், தல்பியா சொல்லல், தவாப் செய்தல், 'ஸஈ' எனும் தொங்கோட்டம் ஓடுதல், அறபாவில் தரித்தல், மினா முஸ்தலிபா ஆகிய இடங்களில் இரவில் தங்குதல், 'ஜம்ரா'க்களுக்கு கல்லெறிதல், தலைமுடியைக் கலைதல் , குர்பானியை அறுத்துப் பலியிடல் ஆகிய பலஅம்சங்கள் ஹஜ்ஜின் அமல்களில் அடங்கி-யிருப்பதைக் காணலாம். அவற்றில் பலவற்றின் தத்துவங்களையும் அவை தரும் படிப்பினைகளையும் கீழ்க்;காணும் வரிகளில் விளங்க முயற்சிப்போம்:

இஹ்ராம் உடை :

ஹஜ்ஜுக்காக இஹ்ராம் நிய்யத் வைத்ததும் இயல்பான சாதாரண நிலையில் அனுமதிக்கப்-பட்டிருந்த சில விடயங்களை அவசியம் தவிர்க்கவேண்டும், இதனடிப்படையில் குறிப்பாக ஆண்கள் வெள்ளை நிறத்திலான இரண்டு துணிகளை அணிந்துகொள்வர், இது பின் வரும் சில தாற்பரியங்களை உணர்த்துவதாகக் கொள்ளலாம் :

  • சாதாரண வெள்ளை உடையுடன் இறுதிக்கடமைக்காக புறப்பட்டுச் செல்வது  இறுதிப்பயணமான மரணத்தை நினைவூட்டுகின்றது, 'ஒருவன் திருந்துவதற்கு மரணத்தின் நினைவொன்றே போதும்' என்பதால் இது ஒருவனை வெகுதூரம் கட்டுப்படுத்தி சீர்செய்ய உதவும். 
  • பொதுவாக பணவசதி உள்ளவர்களே ஹஜ்ஜை நிறைவேற்றுவர், தமது அன்றாட வாழ்வில் விதவிதமான அழகிய ஆடம்பர உடைகளை மனம் விரும்பிய விதங்களில் உடுத்துப் பழகிய அவர்கள்  இறைவழிபாட்டில் அல்லாஹ்வின் திருப்தியை பெறவேண்டும் என்ற ஒரேநோக்கில் தமது ஆசைகளைக் கட்டுப்படுத்தி இறைதிருப்திக்காக எதனையும் துறக்கும் மனப்பக்குவத்தை இது அளிக்கின்றது . 
  • கண்ணியப்படுத்துவதற்காக விருப்பத்துடன் ஒருவன் தன்னைத் தாழ்மைப் படுத்துவதின் உச்சக்கட்டமே வணக்கமாகும், மிகச் சாதாரண உடையில் கலைந்த கேசத்துடன் முடியை சிரைக்காமல் நகங்களைக் களையாமல் ஒருவர் ஹஜ்ஜுடைய நேரத்தில் இருப்பது இறை-வணக்கத்தில் உயரிய ஈடுபாடாகவும் எளிமையான அலங்காரமற்ற வாழ்க்கைமுறைக்கு ஒரு; பயிற்சியாகவும் அமையும்.
  • மேலும், இஹ்ராமுடைய நிலையில் தனது மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல்; விலகியிருப்பதும் நறுமணங்களைத் தவிர்ப்பதும் உடல் உள ஆசைகளை அல்லாஹ்விற்காகத் துறந்து அதன் மூலம் அடையும் திருப்தியை உணரவைக்கின்றது, இறைவனுக்குக் கட்டுப்பட்டு அவனது மார்க்கத்தை அமுல்படுத்த பெரும்பாலும் தடையாயிருப்பது மனிதனின் மனோ இச்சையே, அதனாலேயே அல்குர்ஆனில் மார்க்கத்தை பின்பற்றும் படி ஏவும் பல இடங்களில் அல்லாஹ் மனோ இச்சைக்கு மாறுசெய்யும்படி கூறியுள்ளதைக் காணலாம்.

தல்பியாக் கூறல்:

இஹ்ராம் நிய்யத்தின் பின் தல்பியாக் கூறுவர், கேட்கக் கேட்கத் தெவிட்டாத அற்புத நாதம் அது, புனிதத் தலங்களில் ஹாஜ்ஜிகள் ஆனந்தமாக ஆரவாரத்துடன் தல்பியாச் சொல்வதைப் பார்க்கும் போது உடல் சிலிர்த்து உள்ளம் பூரிக்கும், இந்தத் தல்பியா ஏதோ சடங்கிற்காக உச்சரிக்கப்படும் மந்திரமல்ல, மாறாக, ஹஜ்ஜு செய்வதற்கான இறைஅழைப்பை ஏற்று அதை நிறைவேற்ற இதோ நான் வந்துள்ளேன் என ஒரு ஹாஜ்ஜு உறுதிபட பகிரங்கமாகச் சொல்லும் பிரகடனமாகும், அத்துடன், ஒரு இறைவிசுவாசியின் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிந்திருக்கும் ஏகஇறைவன் அல்லாஹ்வே, அவனுக்கே சகல அதிகாரங்ளும் உண்டு, அவனுக்கு இணைகிடையாது, அனைத்துப் பாக்கியங்களும் அவன் தருவதே என்ற ஈமானிய அம்சங்களை சப்தமிட்டு உலகிற்கு ஒருவன் சொல்லும் திக்ராகும்.

தவாபு செய்தல்: 

பூமியிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மிகவும் சிறந்த பள்ளியாகிய மக்காவிலுள்ள அல் மஸ்ஜிதுல் ஹராமில் புனித கஃபா அமைந்துள்ளது, ஏக இறைவணக்கத்திற்காக அமைக்கப்பட்ட முதல் இறையில்லம் அது, சரியாக இப்பூமியின் மையப்புள்ளியிலேயே அது அமைந்துள்ளதாக புவியியலாளர்களின் ஆய்வுகள் உறுதிப்-படுத்துகின்றன, புழுடுனுநுN சுயுவுஐழு PழுஐNவு எனும் துல்லியமான கணிதவியல் தத்துவத்தின்டியும் கஃபா மிகச்சரியாகவே இப்புவியின் மையத்திலேயே அமைந்துள்ளது என்பதை மிக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரு முஃமின் தனது வாழ்வில் ஒவ்வொரு நாளும் கஃபாவுடன் தொடர்புடையவனாக உள்ளான், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதனை முன்னோக்கியே அவன் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

சுமார் 14 மீட்டர் உயரமான ஏறக்கறைய நாற்சதுர வடிவிலான அந்தக் கஃபாவில் பெரிதாக அலங்கார வேலைப்பாடுகள் ஒன்றும் கிடையாது, ஆனாலும், வல்ல அல்லாஹ் அதில் வசீகரமான அதிசய அழகை வைத்துள்ளான், அதனைப் பார்த்தால் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும், அதனைப் பற்றிய பெரும் மகத்துவமும் பற்றும் இயல்பாகவே உள்ளத்தில் இருப்பதை உணரலாம்.

ஹஜ்ஜுடைய அமல்களில் தவாப் மாத்திரமே ஹஜ்ஜு, உம்ராவிற்கன்றி பிரத்தியேகமாக செய்ய முடியுமான ஒன்று என்பதும், அந்தக் கஃபாவிலன்றி உலகில் வேறு எங்கும் அதனை செய்ய முடியாது என்பதும் தவாபின் சிறப்பம்சங்களாகும், தவாபின் தத்துவங்களைப் பின் வரும் சில அம்சங்களில் உணரலாம் :

  • ஏழு வானங்களுக்கு மேல் அர்ஷைசுற்றி மலக்குமார்கள் வலம் வந்து துதிப்பதைப் போல பூமியில் மனிதர்கள் இதனை வலம் வந்து வணக்கம் புரிகின்றனர்
  • புனித கஃபாவை மையமாக வைத்து அதைவிட்டும் தூரமாகிவிடாமல் சீரான ஓர் ஒழுங்கில் தொடராக அதனையே சுற்றிவருவது மனிதனின் செயல்பாடுகள் சீராகவும் ஒழுங்காகவும் அமைய வேண்டும் என்ற தத்துவத்தையும் ஒருவனது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய அவன் தனது செயல்பாடுகளை சிதறிய விதத்தில் கண்டபடி அமைத்துக் கொள்ளாமல் இஸ்லாம் என்ற அல்லாஹ்வின் மார்க்கத்தை மையமாக வைத்து அதனை ஒட்டியதாக அதனையே சுற்றிச் சுற்றி அதை விட்டும் தூரமாகாமல் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றது .
  • தவாபை ஆரம்பிக்கும்போது ஓதப்பட வேண்டிய சுன்னத்தான துஆவின் அர்த்தத்தை நோக்கும் போது ஒரு இறைவிசுவாசியின் முக்கியமான நம்பிக்கைகளையும் ஒரு முஸ்லிமின் நடைமுறை வாழ்க்கை அமையவேண்டிய முறையையும் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தி உறுதிப்படுத்துதாக உள்ளதைக் காணலாம், அந்த துஆவும் அதன் அர்த்தமும் இதோ:اللهم إيمانا بك وتصديقا بكتابك و وفاء بعهدك و اتباعا لسنة نبيك  யா அல்லாஹ் உன்னை நம்பியதற்காகவும் உனது வேதத்தை உண்மையென ஏற்றுக் கொண்டதற்காகவும் உன்னிடம் அளித்த வாக்கை நிறைவேற்றுவதற்காகவும் உனது நபியின் சுன்னாவை பின்பற்றியதற்காகவும் (இந்த அமலை செய்கின்றேன்)
  • தவாபை முடித்ததும் 'மகாமு இப்றாஹீம்' எனுமிடத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுவது சுன்னத்தாகும், கஃபாவில் இருப்பதாக அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள தெளிவான அத்தாட்சிகளில் இந்த மகாமு இப்றாஹீம் என்ற இடமும் ஒன்றாகும், இது நபி இப்றாஹீம் (அலை) புனித கஃபாவைக் கட்டும்போது உபயோகித்த கல்லாகும், கட்டடப்பணியின் போது தேவைக்கேற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் அசைந்தும் இந்தக் கல் இயங்கியது இதன் அதிசயத் தன்மையாகும், 'மகாமு இப்றாஹீம் 'என்ற அல் குர்ஆனின் பதத்திற்கு இந்தக்கல்லைக் குறிக்கும் விதத்தில் இப்றாஹீம் நபி ஏறி நின்ற இடம்' என பல குர்ஆன் விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர், சிலர் இப்பதம் இப்றாஹீம் நபியவர்கள் மக்காவில் தங்கியிருந்த அதன் சூழலில் அவர்கள் சஞ்சரித்த இடங்ளைக் குறிப்பதாகவும் கூறியுள்ளனர்.
  • நாற் சதுர வடிவைக்கொண்ட புனித கஃபாவின் விட்டம் அரைவட்ட வடிவிலான ஹிஜ்ரு இஸ்மாயீலுடன் சுமார் 60 மீட்டர்களாகும், தவாபை நிறைவேற்ற கஃபாவை நெருங்கி ஏழுமுறை சுற்றி சுற்றிவருவதற்கான தூரம் ஏறக்குறைய அரை கிலோமீட்டராகும், ஒருவர் நடந்து தவாபு செய்யும்போது இவ்வளவுதூரத்தைத் தொடராகக் கடப்பதனால் அவரது தேகஆரோக்கியத்திற்கு நல்ல பலன்களை இது ஏற்படுத்தும் என சில அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .

'ஸஈ ' எனும் தொங்கோட்டம் :

கஃபாவின் அருகில் அதன் தென்கிழக்கில் ஸபா மலையும் அதன் வடகிழக்கில் மர்வா மலையும் அமைந்துள்ளன, அவ்விரண்டிற்கும் இடையிலான தூரம் 394 மீட்டர்களாகும், இவ்விரு மலைகளுக்கும் இடையிலேயே 'ஸஈ' எனும் தொங்கோட்டம் ஓடப்படும், இந்த அமல் உணர்த்தும் சில பாடங்களையும் இதன் படிப்பினைகளையும் பின்வரும் வரிகளில் நோக்குவோம் :

  • 'வல்ல அல்லாஹ்வை நம்பியோர் கெடுவதில்லை, அவனை நம்பியவர்களை அவன் கைவிடவே மாட்டான், நாம் அவனையே நம்பி அவனிடமே எமது சகல காரியங்களையும் ஒப்படைத்து செயல்பட வேண்டும்' என்ற ஒரு இறைவிசுவாசியிடம் இருக்கவேண்டிய 'தவக்குல்' என்ற  முக்கிய பண்பை இந்த அமல் மனதில் ஆழப்பதிக்கின்றது. 
  • பச்சிளம் குழந்தை இஸ்மாஈலுடன் மனித சஞ்சாரமற்ற வரண்ட பாலைவனத்தில் தனியாக விடப்பட்ட ஹாஜர் நாயகி தனது பிஞ்சுக் குழந்தை பசியில் அழுதபோது தம்மை இங்கு விடும்படி ஏவிய அல்லாஹ் தம்மைக் கைவிட மாட்டான், அவன் குழந்தைக்கான உணவைத் தருவான் என்ற நம்பிக்கையுடன் அந்த இரண்டு மலைகளுக்கு-மிடையில் மாறிமாறி ஓடியதை இந்த ஸஈ ஞாபகமூட்டுகின்றது, ஸஈ என்ற அரபுப் பதத்திற்கு 'முயற்சித்தல்' என்றும் ஓர் அர்த்தம் உண்டு , இந்த ஈமானியப் பெண்னுடைய தவக்குல் முயற்சியுடன் கூடியதாக இருந்ததைக் காணலாம், தவக்குல் இல்லாத முயற்சியும் முயற்சி இல்லாத தவக்குலும் இரண்டுமே தவறான வழிகள் என இஸ்லாம் கூறியுள்ளதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அந்தத் தாயின் தவக்குலிற்குப் பரிசாக வல்ல அல்;லாஹ் இன்றும் அறிவியலை மிஞ்சி விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தி நிற்கும் வற்றாத ஜீவ ஊற்றாகிய 'ஸம்ஸம்' நீரைக் கொடுத்தான் .
  • ஸஈ செய்துமுடிப்பதற்காக சபா மர்வாவுக்-கிடையில் ஏழுமுறை தொங்கோட்டம் ஓடும் ஒருவர் சுமார் இரண்டேமுக்கால் கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கின்றார், இதனடிப்படையில் இந்த அமல் ஆன்மாவிற்கும் இறை நம்பிக்கைக்கும் பலம் சேர்ப்பதைப் போல் உடலுக்கும் பலம் சேர்ப்பதைக் காணலாம். 

அறபாவில் தரித்தல்:

மினாவிலிருந்து 15 கி.மீ. தூரத்திலுள்ள 10.4 சதுர கி.மீ. பரப்பளவுகொண்ட திறந்தவெளி மைதானமே அறபாவாகும், ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லும் அனைவரும் குறிப்பிட்ட ஒரு நேரத்திற்குள் இவ்விடத்தில் தங்குவது கடமையாகும், இலட்சோப லட்ச ஹாஜ்ஜிகள் வெள்ளை உடையணிந்து கலைந்த கேசத்துடன் பார்ப்போர் மனமிறங்கி இரக்கம் கொள்ளும் தோற்றத்தில் அழுதுபுலம்பி மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். அவ்விடத்தில் கலங்காத கண்களும் உருகாத உள்ளமும் இருக்க முடியாது. வல்ல அல்லாஹ் சந்தோஷத்துடன் பெருமையாக தனது மலக்குகளிடம் அறபாவில் கூடியிருப்போரைப் பற்றிக் கூறுவான், அதேநேரம் ஷைத்தான் இக்காட்சியைக் கண்டு கடும் சினத்துடன் சஞ்சலமாயிருப்பபான், அறபா தினம் வருடத்தில் சிறந்த தினமாகும்.

உலகமுஸ்லிம்களின் ஒற்றுமையையும் பலத்தiயும் பிரபஞ்சத்திற்கு எடுத்தியம்பும் முஸ்லிம் உம்மத்தின் அகிலஉலக மாநாடு என்று கூட ஹஜ்ஜு வணக்கத்தை எடுத்துக் கொள்ளலாம், ஒரே உடை, ஒரே அசைவுகளுடைய அமல், ஒரே கோஷம், ஒரே இலக்கு என முஸ்லிம்கள் நிற, மொழி. எல்லை, நாடு, வர்க்கம் என்ற பேதங்களின்றி ஒன்றாக ஒரே இடத்தில் கூடி சமத்துவத்துடன் செயலாற்றுவது இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவம் ஒற்றுமை என்பனவற்றின் வெளிப்பாடாகும்.

ஜம்ராக்களில் கல்லெறிதல்:

ஜம்ராக்களில் கல்லெறிவது மனிதகுலத்தின் தெளிவான நிரந்தர எதிரியாகிய ஷைத்தானுக்கு எதிரான போராட்ட உணர்வை ஒரு மனிதனின் உள்ளத்தில் வலுப்பெறச் செய்கின்றது. நபி இப்ராஹீம் (அலை) தனது அருமை மகனை அல்லாஹ்விற்காக அறுத்துப் பலியிட அழைத்துச் சென்றபோது அவர்களது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்த முனைந்த ஷைத்தானை அவர்கள் கல்லால் அடித்துத் தூரப்படுத்திய காட்சியை இந்த அமல் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது.

குர்பானியை அறுத்துப் பலியிடல்: 

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் 80 வயதையும் தாண்டியபின் நீண்டகாலம் ஏக்கத்துடன் எதிர்பார்த்து நிறைய பிரார்த்தனைகளில் ஈடுபட்டுத் தனக்குக் கிடைத்த அருமையான அன்பு மகனை அல்லாஹ்விற்காக அறுத்துப்பலியிட முன்வந்த தியாகத்தின் உச்சக்கட்ட நிகழ்வை இந்த அமல் பிரதிபலிக்கின்றது. 

மனிதவாழ்க்கையின் வெற்றிக்கான அடிப்படையே தியாகங்கள்தான், மனம் ஆசைப்படும் பல விடயங்களைத் துறக்காமல் இழக்காமல் ஒருபோதும் உயரிய இலட்சியங்களை அடையமுடியாது. இறைவனின் திருப்தியைப்பெற மனதில் ஆழமாக இடம்பிடித்துள்ள ஆசைகளை அவை எதுவாயினும் அறுத்து அப்புறப்டுத்தியே ஆகவேண்டும், இந்த உணர்வையும் அதற்கான பயிற்சியையும் மேற்கூறப்பட்ட அமல் அளிக்கின்றது . குர்பானியின் கழுத்தை அறுக்கின்ற ஒருவர் அறுப்பது அதன் கழுத்தை மட்டுமல்ல, தனது மனதிலுள்ள இறைகட்டுப்பாட்டிற்கும் அவனது திருப்திக்கும் தடையாக உள்ள ஆசைகளையும் மனோ இச்சைகளையும்தான். 

முழுமையான அடிமைத்தனத்தின் வெளிப்பாடு:

ஹஜ்ஜுடைய அமல்களில் பலவற்றிக்கு சில அல்லது பல காரணங்களையும் தத்துவங்களையும் நாம் கூறினாலும், எமக்குப் புரிந்தாலும் அவைகளில் சில அமல்களுக்கான தாற்பரியங்களை ஆழமாக அறிந்து சொல்வது சிலபோது சிரமமாகவும் இன்னும் சிலபோது முடியாமலுமுள்ளதைக் காணலாம், இங்குதான் முக்கியமான ஒரு விடயத்தை நாம் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, அதாவது வல்ல அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அவனது அடியார்களாகிய நாம் முழுமனதுடன் தயக்கமின்றி கட்டுப்படுவது எமது கடமை என்பதாகும்.

தன்மீது அன்புள்ள எஜமான் தனக்கு நல்லதையே ஏவுவார் என நம்பும் ஓர் அடிமை ஏன் எதற்கு என்ற கேள்வியில்லாமல் அவரது கட்டளைகளுக்கு கட்டுப்படுவான், ஒரு எஜமான் தனது அடிமை தனக்கு இப்படிக் கட்டுப்படுவதை விரும்புவதும் இயல்பு, பொதுவாக ஒரு அடிமைக்கு எல்லாவற்றையும் விளங்கி ஆழமாக அறியும் ஆற்றலும் இருக்காது. இதுபோன்றே எம்மீது அன்பும் எல்லையில்லா அறிவும் கொண்ட அல்லாஹ் எமக்கு நல்லதையே கட்டளையிடுவான் என்ற நம்பிக்கையில் நாம் அவனுக்குக் கட்டுப்பட்டுவிட வேண்டும். மனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட குறுகிய அறிவால் சிலவற்றைப்புரிந்துகொள்ள முடியாமல் போகும். இந்த வடிவிலான அடிமைத்தனத்தின் முழுமையான வெளிப்பாடாக ஹஜ்ஜுடைய அமல்கள் பொதுவாகக் காணப்படுகின்றன, பின்வருமாறு நபியவர்கள் தல்பியா சொன்னது இக்கருத்தை வலியுறுத்துவதாகவே உள்ளது: اللهم لبيك حجا حقا تعبدا ورقا  அதன் கருத்தாவது 'யா அல்லாஹ் நீ சொன்னதைச் செய்யும் அடிமை என்பதற்காக இதோ நான் உண்மையாகவே உன் அழைப்பை ஏற்று ஹஜ்ஜுசெய்ய வந்துள்ளேன்'

அறிவுத்தறையில் இன்று மனிதன் அசுர வளர்ச்சிகண்டுள்ளான் என்பது உண்மையே, ஆனாலும், மகா பிரமாண்டமான இப்பிரபஞ்சத்தில் மிகத்தூர இருக்கும் விடயங்களைப்பற்றி மட்டுமல்ல தனது உடம்பிற்குள்ளேயே உள்ள சில விடயங்கள் கூட விஞ்ஞானிக்கு இன்றும் புரியாமலுள்ளது என்பதே உண்மை, வஹியின் மூலம் வரும் சட்டங்கள் என்றும் மாறாத நிலையான உறுதியானவை, பல சந்தர்ப்பங்களில் விஞ்ஞானிகளால் கூறப்பட்ட கருத்துக்கள் அடுத்த சந்ததியில் வந்த விஞ்ஞானிகளால் நிராகரிக்கப்பட்டு பிழையென நிரூபிக்கப்பட்டுள்ளன.

அல்லாஹ்வின் சட்டங்களில் உள்ள தத்துவங்களையும் அவற்றிற்கான காரணங்களையும் ஆராய்ந்துஅறிய முயற்சிப்பது பிழையல்ல, மாறாக அது தேவையான ஒரு நல்ல முயற்சியே, அவற்றைத் தெரிந்துகொள்வதன் மூலம் அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றிய ஈமான் அதிகரிப்பதுடன் அந்த அமலை செய்வதற்கான ஆர்வமும் அதிகரிக்கும், அத்துடன் தூய இஸ்லாம் அறிவுபூர்வமான மார்க்கம், விஞ்ஞானமும் அதனை உறுதிப்படுத்துகின்றது என்பதை மாற்று-மதத்தினருக்கு தர்க்க ரீதியாக நிரூபிக்கவும் அது உதவும், ஆனால் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள ஆதாரபூர்வமான ஒரு சட்டத்தின் காரணமும் தத்துவமும் தனக்குப் புரியவில்லை அல்லது விஞ்ஞானக் கருத்து அதற்கு மாற்றமாக உள்ளது அல்லது அறிவுபூர்வமாக அது நிரூபிக்கப்படவில்லை என்பதால் அதனை ஏற்கமறுப்பதும், அதனை செயல்படுத்தும்போது ஜயமும் தயக்கமும் மனதில் இருப்பதும் முற்றிலும் பிழையாகும், இன்று சிலர் விஞ்ஞானிகள் சொல்லும் கருத்தை நம்பும் அளவிற்கு வஹியின் மூலம் உறுதியான சட்டங்களை நம்புவதற்குத் தயாரில்லாமல் இருப்பது கவலைக்குரிய அம்சமாகும். 

இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள இபாதத்து-களாகிய வணக்க அனுஷ்டானங்களில் எண்ணிலடங்கா தத்துவங்களும் பௌதீகப் பயன்பாடுகளும் அடங்கியிருந்தாலும் ஓர் இபாதத்தை  நிறைவேற்றும் ஒருவர் அதனை ஒரு பயிற்சி அல்லது லௌகீக இலாபங்களை அடைவதற்கான முயற்சி என்ற எண்ணத்தில் செய்யாமல்; தூய எண்ணத்துடன் வல்ல அல்லாஹ்விற்காக செய்யப்படும் வணக்கம் என்ற உணர்வுடனேயே நிறைவேற்ற வேண்டும்,  

புனித பாதங்கள் நடமாடிய புண்ணிய பூமியைத் தரிசித்து உள்ளமும் உடலும் இணைந்து தூய எண்ணத்துடன் நிறைவேற்றப்படும் ஹஜ்ஜுவணக்கம்  ஒரு மனிதனை அன்று பிறந்த பாலகனைப் போல் பாவக்கறைகளற்றவனாக மாற்றிவிடும் என்பது நபிவாக்காகும். வல்ல அல்லாஹ் அப்பாக்கியத்தை நம் அனைவருக்கும் அருள்வானாக.