கர்பலாவில் நிகழ்ந்ததென்ன?
கர்பலாவில் நிகழ்ந்ததென்ன?
Al-Usthaz M.O.FowzurRahman (Bahji)
இஸ்லாமிய வரலாற்றில் இடம் பெற்ற சோகமான நிகழ்வுகளில் கர்பலா நிகழ்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். வருடா வருடம் முஹர்ரம் மாதம் ஆரம்பிக்கும் சந்தர்ப்பம் முதல் அம்மாதம் முடிவடையும் வரை உலகின் நாலா பாகங்களிலும் இந்நிகழ்வு நினைவுகூரப்படுவதை நாம் காணலாம். குறிப்பாக அகீதா ரீதியாக வழிதவறிய பிரிவுகளில் ஒன்றாகிய சீஆப் பிரிவினர்கள் இக்காலப் பகுதியில் துக்கம் அனுஷடித்தும் மார்க்கம் அனுமதிக்காத தடுக்கப்பட்ட பல காரியங்களைச் செய்தும் இந்நிகழ்வை ஞாபகிக்கின்றனர்.
நபி(ஸல்) அவர்களைத் தொடர்ந்து ஆட்சி செய்த குலபாஉர் ராசிதூன்களில் மூன்றாமவராகிய உஸ்மான் (ரழி) அவர்களின் கொலையைத் தொடர்ந்து அரசியல் ரீதியான பல பிரச்சினைகள் உருவானதைப் போன்று அகீதா ரீதியான பல பிரிவுகளும் தோன்றின. இதன் பின்னணியில் அலி(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஜமல்(ஒட்டகை) யுத்தம், ஸிப்பீன் யுத்தம், நஹ்ரவானில் கவாரிஜ் பிரிவினர்களுக்கு எதிரான யுத்தம் என்பன நடைபெற்றன.
நஹ்ரவான் யுத்தத்தில் கடும் தோல்வியைச் சந்தித்த கவாரிஜ்களால் அலி(ரழி) அவர்கள் ஹி. 40ம் வருடம் கொலை செய்யப்பட்டார்கள். இதன் பின் இராக் மக்கள் ஹஸன்(ரழி) அவர்களுக்கும் சிரியாவையும் அதைச் சார்ந்த பகுதிகளையும் சேர்ந்த மக்கள் முஆவியா(ரழி) அவர்களுக்கும் பைஅத் செய்தார்கள்.
ஹி 41ம் வருடம் ஹஸன் (ரழி) அவர்கள் இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமையை நோக்காகக் கொண்டு சில நிபந்தனைகளின் அடிப்படையில் முஆவியா(ரழி) அவர்களுக்கு தமது ஆட்சியை விட்டுக் கொடுத்தார்கள். இதனைத் தொடர்ந்து முழு முஸ்லிம் சமூகமும் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள்.
முஆவியா(ரழி) அவர்கள் ஹி. 60ம் வருடம் மரணிக்கும் வரை தொடர்ந்து ஆட்சி செய்தார்கள். தனது ஆட்சியின் அரைவாசிப் பகுதியை அவர்கள் தாண்டும் வேளையில் தனது மரணத்தின் பின் அடுத்த ஆட்சித் தலைவராக தனது மகன் யஸீத் என்பவரை நியமித்து அவருக்காக மக்களிடம் பைஅத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியே கர்பலாப் போருக்கு அடிப்டைக் காரணமாக அமைந்நது எனலாம். அச்சந்தர்ப்பத்தில் மதீனாவில் காணப்பட்ட நபித் தோழர்களில் மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்ட அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி), ஹுஸைன்(ரழி), அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர்(ரழி), அப்துல்லாஹ் பின் ஸுபைர்(ரழி) ஆகியோர் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஏனெனில் இது ஒரு புதிய நடைமுறையாகும்.
ஒரு கலீபா தனது மரண தருவாய் நெருங்க முன் அடுத்த கலீபாவைத் தெரிவு செய்யும் முறை இதற்கு முன் அறியப்பட்டிருக்கவில்லை. அதிலும் குறிப்பாக தனது மகனைத் தெரிவு செய்யும் நடைமுறை காணப்படவில்லை. இவ்வாறான ஒரு தெரிவிற்குச் செல்வதில் முஆவியா(ரழி) அவர்களுக்கு சில நியாயங்கள் இருந்த போதும் இது மன்னராட்சி முறையின் பண்பு என்பதனால் அந்நபித் தோழர்கள் ஐவரும் இதை ஏற்கத் தயாராகவில்லை.
முஆவியா(ரழி) அவர்கள் ஹி.60ம் வருடம் மரணித்ததும் அன்று இஸ்லாமிய அரசின் தலைநகராகக் காணப்பட்ட டமஸ்கஸ் உட்பட எல்லா நகரங்களிலும் வசித்த மக்கள் யஸீதை கலீபாவாக ஏற்று பைஅத் செய்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் மதீனாவில் கவர்னராகவிருந்த வலீத் பின் உக்பா இந்நபித் தோழர்களை அழைத்து அவர்களிடமிருந்து யஸீதுக்காக பைஅத் பெற முயன்றார்.
இப்னு உமர்(ரழி), இப்னு அப்பாஸ்(ரழி) ஆகிய இருவரும் பெரும்பான்மையான மக்கள் பைஅத் செய்து யஸீதை கலீபாவாக ஏற்றுக் கொண்டதனால் பைஅத் செய்துவிட்டார்கள். தொடர்ந்தும் மதீனாவில் இருந்தால் பலவந்தமாக பைஅத் வாங்கப்படலாம் என எதிர்பார்த்த அப்துல்லாஹ் பின் ஸுபைர்(ரழி) அவர்கள் அங்கிருந்து வெளியேறி மக்கா சென்றடைந்தார்கள்.
இந்நிலையில் ஹுஸைன்(ரழி) அவர்களும் தனது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரயும் அழைத்துக் கொண்டு மக்கா சென்றடைந்தார்கள். அவர்களின் சகோதரர்களில் ஒருவரான முஹம்மத் பின் அல்ஹனபிய்யா என்பவர் மாத்திரம் ஹுஸைன்(ரழி) அவர்களுடன் மக்கா செல்லவில்லை. அவர் ஹுஸைனுக்கும் போக வேண்டாமென உபதேசித்தார். ஆனால் ஹுஸைன்(ரழி) அவர்கள் அதற்கு இணங்கவில்லை.
மக்கா வந்து சேர்ந்த ஹுஸைன்(ரழி) அவர்களை அங்கு உம்ராவிற்காக வரும் கூபாவாசிகள் சந்திக்க ஆரம்பித்தார்கள். ஹுஸைன்(ரழி) அவர்கள் கூபாவிற்கு வரவேண்டும எனவும் அவ்வாறு வரும் பட்சத்தில் அவர்களை கலீபாவாக ஏற்று பைஅத் செய்து அவர்களுடன் இணைந்து யஸீதுக்கு விரோதமாகப் போராடவும் சித்தமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதே கருத்தை;தாங்கி அவர்களுக்கு ஈராக் பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்களும் வந்துசேர்ந்தன. இவ்வாறு தொடர்ந்தும் வந்து கொண்டிருந்த வேண்டுகோள்கள் ஹுஸைன்(ரழி) அவர்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தின. இவர்களின் வேண்டுகோள்களை ஏற்று உடனே ஈராக்கிற்குச் சென்றுவிடாமல் இவர்களின் உண்மை நிலையை அறியமுற்பட்டார்கள்.
இதற்கமைய தனது விசுவாசத்திற்குரியவரும் தனது பெரிய தந்தையின் மகனுமாகிய முஸ்லிம் பின் அகீல் என்பவரை அங்கு அனுப்பி வைத்தார்கள். கூபா நகருக்குச் சென்று அங்குள்ள கள நிலவரங்களை நேரடியாக அவதானித்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவரிடம் ஹுஸைன்(ரழி) அவர்கள் வேண்டினார்கள். இவரின் வருகையப் பற்றிய செய்தியை கூபா மக்களுக்கு கடிதம் மூலம. அறிவித்தார்கள்.
கூபா சென்றடைந்த முஸ்லிம் பின் அகீலை ஹுஸைன்(ரழி) அவர்களின் ஆதராவளர்கள் அடிக்கடி சந்தித்து பல விடயங்களைப் பற்றியும் கலந்துரையாட ஆரம்பித்தனர். குறிப்பாக ஹுஸைன்(ரழி) அவர்களின் வருகையைப் பற்றியும் அதற்குரிய ஏற்பாடுகளைப் பற்றியும் பேசினர்.
இவர்களின் நடவடிக்கைகளில் திருப்தி அடைந்த முஸ்லிம் பின் அகீல் ஹுஸைன்(ரழி) அவர்களுக்கு அது பற்றி அறிவித்தார். அன்று கூபாவின் கவர்ணராக இருந்த நுஃமான் பின் பசீர்(ரழி) அவர்கள் இதைப்பற்றி அறிந்த பொழுது ஆட்சியாளருக்கு விரோதமான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என பொதுவான ஓர் எச்சரிக்கையை விடுத்தார்கள்.
இவரின் இந்நடவடிக்கையில் திருப்தி காணாத யஸீதின் ஆதரவாளர்களில் சிலர் கூபாவிற்கு கடும்போக்குடைய ஒரு கவர்ணரை நியமிக்கும்படி யஸீதை வேண்டினர். அதற்கமைய கூபாவின் புதிய கவர்ணராக உபைதுல்லாஹ் பின் ஸியாத் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கூபாவை வந்தடைந்ததும் ஹுஸைன்(ரழி) அவர்களின் ஆதரவாளர்களுக்கு விரோதமாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஈற்றில் முஸ்லிம் பின் அகீலைக் கைது செய்து அவரைக் கொலை செய்தார்.
கூபாவில் நிலைமை சாதகமாகவிருக்கின்றது என்ற செய்தியை அறிந்த ஹுஸைன்(ரழி) அவர்கள் கூபாவிற்குச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். யஸீத் சட்டரீதியான முறையில் தெரிவு செய்யப்படவில்லை; அவரிடம் ஆட்சி செய்யும் தமைகமையும் இல்லை; அவரின் ஆட்சியில் அநியாயங்களும் இடம் பெறுகின்றன என்பன போன்ற நியாயங்கைள அடிப்படையாக வைத்தே யஸீதின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான தனது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முற்பட்டார்கள்.
ஹுஸைன்(ரழி) அவர்கள் கூபா செல்லத் தயாராவதை அறிந்த பல நபித் தோழர்கள் அவர்களைச் சந்தித்து தமது திட்டத்தைக் கைவிடுமாறு கோரினர். இவர்களில் இப்னு உமர், இப்னு அப்பாஸ், ஜாபிர், அபூ ஸஈத் அல்குத்ரி (ரழி) ஆகியோர் முக்கியமானவர்கள். அபூ ஸஈத் அல்குத்ரி (ரழி) அவர்கள் மக்களால் பைஅத் செய்யப்பட்ட ஒரு கலீபாவுக்கு விரோதமாகப் போரிட உங்களுக்கு அனுமதியில்லை என்றும் கூறினார்கள்.
ஆனாலும் ஹுஸைன்(ரழி) கூபாவிக்குச் செல்வதென்ற தனது முடிவிலேயே தொடர்ந்தும் இருந்தார்கள். இப்னு அப்பாஸ், இப்னு உமர்(ரழி) ஆகியோர் இதனால் ஏற்படப் போகும் பாதகமான விளைவுகளையும் கூபா மக்கள் தனது தகப்பன் அலி;(ரழி), சகோதரர் ஹஸன்(ரழி) ஆகியோருக்கு துரோகம் இழைத்ததைப் பற்றியும் எடுத்துக் கூறினர். எனினும் இவை எதுவும் அவர்களின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை.
ஹுஸைன்(pரழி) அவர்கள் தனது குடும்ப அங்கத்தவர்கள் அனைவருடன் ஹி.60 துல்ஹஜ் மாதம் பிறை 6ல் மக்காவிலிருந்து வெளியேறி கூபா நோக்கிச் சென்றார்கள். அவர்கள் கூபா மக்களின் வாக்குறுதிகளை மாத்திரமே நம்பிச் சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்திலோ அல்லது கூபா சென்றடைவதற்கு முன் இடையில் யஸீத்; சார்பானவர்களின் படைகளைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்படும் போதோ தன்னுடன் இணைந்து போரிடுவதற்குரிய படையொன்று அவர்களிடம் காணப்படவில்லை. மொத்தமாக 100 பேர்களுக்கும் குறைவான ஒரு தொகையினரே அவர்களுடன் காணப்பட்டனர்.
ஹுஸைன்(ரழி) அவர்கள் மக்காவிலிருந்து வெளியேறியதை அறிந்த கூபாவின் கவர்னர் உபைதுல்லாஹ் பின் ஸியாத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார். ஹுஸைன்(ரழி) அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு கடும் தண்டணைகளையும் ஆதரவளிக்காதவர்களுக்கு வெகுமதிகளையும் அறிவித்தார், மேலும் கூபாவைச் சூழால் பாதுகாப்பையம் பலப்படுத்தினார். இடைநடுவிலேயே ஹுஸைன்(ரழி) அவர்களை மறித்துச் சண்டையிடுவதற்கான படைகளையும் தயார் செய்தார்,
கூபாவை நோக்கி வந்து கொண்டிருந்த ஹுஸைன்(ரழி) அவர்கள் ஸஃலபிய்யா என்ற இடத்தை அடைந்த போது தனது தூதுவராகச் சென்ற முஸ்லிம் என்பவர் கொலை செய்யப்பட்ட செய்தி அவர்களுக்கு எட்டியது. அச்சந்தர்ப்பத்தில் அவர்களுடன் இருந்தவர்களில் சிலர் 'கூபாவில் உங்களுக்கு உதவுவதற்கு யாருமில்லை; எனவே நீங்கள் திரும்பி விடுங்கள்,' எனக்கூறினர்.
ஆனாலும் முஸ்லிம் பின் அகீலின் சகோதரர்கள் தமத சசோதரருக்காக நாம் பழிக்குப்பழி எடுக்கவேண்டும், அல்லது அவர் அனுபவித்த மரணத்தை நாமும் அனுபவிக்க வேண்டும் எனக் கூறி திரும்ப மறுத்துவிட்டனர். தற்போது ஹுஸைன்(ரழி) அவர்களுக்கு அவர்கள் விரும்பினாலும் கூட திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து சென்ற ஹுஸைன்(ரழி) அவர்கள் சர்ராப் என்ற இடத்தை அண்மித்த போது ஹுர்ரு பின் யஸீத் என்பவரின் தலைமையில் வந்த 1000 பேர்களைக் கொண்ட ஒரு குதிரைப் படை அவர்களை எதிர்கொண்டது. கூபாவைச் சேர்ந்தவர்களே அதில் காணப்பட்டனர். அவர்களைப் பார்த்து ஹுஸைன்(ரழி) அவர்கள் 'நீங்கள் அழைப்பு விடுத்ததனால் நாம் வந்தோம், நீங்கள் எங்கள் வருகைகைய விரும்பவில்லையாயின் நாங்கள் திரும்பி விடுகின்றோம்,' எனக் கூறினார்கள்.அதற்கு அவர்கள் உங்களை உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் அழைத்து வரும்படி நாங்கள் பணிக்கப்பட்டுள்ளோம் எனக் கூறி மறுத்துவிட்டார்கள்.
எனவே அவர்கள் வடக்கு நோக்கி தொடர்ந்து சென்றார்கள். அப்படையும் அவர்களைத் தொடர்ந்து வநது கொண்டிருந்தது. மேலும் சற்று தூரம் செல்லும் போது உமர் பின் ஸஃத் பின் அபீ வக்காஸ் என்பவரின் தலைமையின் கீழ் மேலும் ஒரு படை வந்து சேர்ந்தது. அதில் சுமார் 4000 பேர் காணப்பட்டனர். அப்படையின் தளபதி உமர் பின் ஸஃத் ஹுஸைன்(ரழி) அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
பேச்சுவார்த்தையின் முடிவில் தான் டமஸ்கஸ் சென்று நேரடியாக கலீபா யஸீதிடம் பைஅத் செய்யத் தயார் என அறிவித்தார்கள். இச்செய்தியுடன் கூபாவின் கவர்னர் உபைதுல்லாஹ் பின் ஸியாதைச் சந்திக்கச் சென்றார் அப்படையின் தளபதி உமர் பின் ளஃத்.
உபைதில்லாஹ்வின் வீட்டில் ஹுஸைன்(ரழி) அவர்களின் புதிய நிலைப்பாடு பற்றி ஆராயப்பட்டது. ஆரம்பத்தில் உபைதுல்லாஹ் ஹுஸைன்(ரழி) அவர்களின் புதிய நிலைப்பாட்டை ஏற்று அவர்களை சிரியாவுக்கு அனுப்ப விரும்பினார்.
இச்சந்தர்ப்த்தில் அச்சபையில் இருந்த சிம்ர் பின் தில்ஜௌசன் என்பவன் இவ்வாரான முடிவு எட்டப்படுவதை விரும்பவில்லை. உபைதுல்லாஹ் பின் ஸியாதிடமே ஹுஸைன் சரணடைந்து யஸீதுக்கு பைஅத் செய்ய வேண்டும்; இதைத் தவிh வேறு எந்த நிலைப்பாட்டையும் எடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தான்.
இவனின் இந்நிலைப்பாட்டுக்கு உடன்பட்ட உபைதுல்லாஹ் ஹுஸைன் எம்மிடம் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை அதற்கு உடன்படாவிட்டால் போருக்கு முகம் கொடுக்க வேண்டிவரும் என உறுதியாகத் தெரிவித்துவிட்டார். ஆனால் ஹுஸைன்(ரழி) அவர்கள் இக்கோரிக்கைக்கு அடிபணிய மறுத்து விட்டார்கள். எனவே அங்கு யுத்தத்தைத் தவிர வேறு தீர்வு காணப்படவில்லை.
உபைதில்லாஹ்விடம் சரணடைய மறுத்த ஹுஸைன்(ரழி) அவர்கள் தன்னுடன் இருந்த 80 பேருக்கும் குறைவான தனது குடும்ப உறிவனர்களுடன் சேர்ந்து போரிட ஆரம்பித்தார்கள். அவர்களை எதிர்த்துப் போராடிய உபைதுல்லா ஹ்வின் படையிலோ 4000ற்கும் அதிகமானோர் காணப்பட்டனர். அப்படையில் யஸீதின் ஆட்சி பீடம் அமைந்திருக்கும் சிரியாவிலிருந்து வந்த போர்வீரர்கள் எவரும் காணப்படவில்லை. மாற்றமாக தன்னை வரும்படி அழைத்த கூபா மக்களே அதில் முழுமையாக இடம்பெற்றிருந்தனர்.
ஹுஸைன்(ரழி) அவர்கள் வீராவேசத்துடன் போராடி எதிரிகளில் பலரைக் கொலை செய்தாலும் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்பட்டதால் நீண்ட நேரம் போராட முடியவில்லை. போர் ஆரம்பித்து சில நிமிட நேரத்துக்குள் அவர்கள் கொல்லப்பட யுத்தம் முடிவடைந்தது.
இவ்யுத்தத்தில் ஹுஸைன்(ரழி) அவர்கள் தரப்பில் 72 பேர்களும் எதிரிகளின் தரப்பில் 86 பேர்களும் கொல்லப்பட்டனர். சிம்ர் பின் தில் ஜௌசன் என்பவனே ஹுஸைன்(ரழி) அவர்களைத் தனது கையினால் கொலை செய்தான்.
இச்சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் நோயுற்றிருந்த ஹுஸைன்(ரழி) அவர்களின் மகன் அலி என்பவரும் சிறுவர்களும் பெண்களும் மாத்திரமே கொலை செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டனர்.
இச்சம்பவம் நடைபெற்ற தினம் ஹி. 61ம் வருடம் முஹர்ரம் பிறை 10 ஆகும். இச்சம்பவம் நடைபெற்ற இடம் கர்பலா என்ற இடமாகும். இவ்விடம் இராக்கில் கூபாவின் வடமேற்கு எல்லையில்; காணப்படுகின்றது. இராக்கின் பெரும் நதிகளில் ஒன்றான புராத் நதியும் இதற்கு சமீபத்தில் காணப்படுகின்றது.
இங்கு கொலை செய்யப்பட்ட ஹுஸைன்(ரழி) அவர்களின் தலை துண்டாக்கப்பட்டு உபைதுல்லாஹ்விடம் அனுப்பிவைக்கப்பட்டது. அத்துடன் அவர்களின் குடும்பத்தவர்களில் எஞ்சியிருந்த அவர்களது மகன் அலி மற்றும் சிறுவர்கள், பெண்களும் யஸீதிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஹுஸைன்(ரழி) அவர்களின் தலை துண்டாடப்பட்ட நிகழ்வு இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களுக்கிடையில் கருத்து வேற்றுமைக்கு அப்பாற்பட்ட விடயமாகும். அவர்களின் தலையை சிரியாவுக்கு அனுப்பிவைத்ததில் கருத்து முரண்பாடு காணப்படுகின்றது. பல்துறையிலும் தேர்ச்சி பெற்ற பிரபல அறிஞர்களில் ஒருவராகிய இமாம் இப்னு கஸீர் அவர்கள் ஹுஸைன்(ரழி) அவர்களுடைய தலை சிரியாவிற்கு அனுப்பப்பட்டதற்கு நிறைய சான்றுகள் இருப்பதாக தனது அல்பிதாயா வந்நிஹாயா என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த யுத்தம் நிகழ்ந்ததற்கும் ஹுஸைன்(ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டதற்குமான பாரிய பொறுப்பு சிம்ரு பின் தில்ஜௌசன் என்பவரையும் பின்பு உபைதுல்லாஹ் பின் ஸியாதையுமே சாரும். இதில் யஸீத் பின் முஆவியாவின் பங்களிப்பு மிகக் குறைவானதாகும்.;
முழுப் பழியையும் யஸீதின் மேல் போடுவதும் அதற்காக அவரைச் சபிப்பதும் பிழையாகும். ஏனெனில் ஹுஸைன்(ரழி) அவர்கள் கர்பலாவை அடைந்ததும் நிலைமையைப் புரிந்து நேரடியாக யஸீதிடம் சென்று பைஅத் செய்யத் தாம் தயார் என்ற தமது எண்ணத்தை வெளிப்படுத்திய போது அதை உபைதில்லாஹ்விடமே செய்ய வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்து யுத்தத்துக்கு வழிகோலியவன் சிம்ரு பின் தில்ஜௌசன் ஆவான். அவனின் கோரிக்கைக்கு அடிபணிந்து யுத்தத்துக்குக் கட்டளையிட்டவர் உபைதுல்லாஹ் ஆவார்.
இச்சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட எந்த நடவடிக்கைக்கும் யஸீதிடம் எந்த ஆலோசனையும் பெறப்படவில்லை. அதற்குக் கால அவகாசமும் இருக்கவுமில்லை. ஏனெனில் யஸீதுக்கும் கர்பலாவுக்கும் இடையில் சுமார் 1300 கிலோ மீற்றர் தூர இடைவெளி காணப்படுகின்றது. அக்காலத்தில் காணப்பட்ட ஒட்டகப் பயணத்தின் ;மூலம் இத்தூரத்தைக் கடப்பதற்கு சுமார் ஒரு மாதகால அவகாசம் தேவைப்படும்.
அத்துடன் ஹுஸைன்(ரழி) அவர்களின் குடும்பமும் அவர்களுடைய தலையும் சிhயாவுக்கு வந்து சேர்ந்த நேரத்தில் அவர் நடந்து கொண்ட முறையும் அவரின் செயற்பாடுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. ஏனெனில் அவர்கள் அங்கு வந்து சேர்ந்த நேரத்தில் 'ஸுமையாவின் மகனை(உபைதுல்லாஹ் பின் ஸயாத்) அல்லாஹ் சபிப்பானாக. அவருக்கும் ஹுஸைனுக்கும் இடையில் நெருங்கிய உறவுமுறை காணப்பட்டிருப்பின் இவ்வாறு கொலை செய்திருக்கமாட்டார்.' என யஸீத் கூறி கண்ணீர் வடித்தார்.
மேலும் அவரின் குடும்பத்தவர்களைப் பார்த்து 'நான் ஹுஸைனைக் கொலை செய்து பைஅத் பெற நினைக்கவில்லை, அதைவிடக் குறைந்த தண்டனைகளைக் கொடுத்துத் தான் பைஅத் பெற நினைத்தேன்.' என்றார்;. அத்துடன் அவர்களுக்கு சிரியாவில் முழுமையான கண்ணியத்தை வழங்கி, அவர்களுக்குப் பூரண பாதுகாப்பையும் கொடுத்து மதீனாவிற்கு அனுப்பிவைத்தார்.
அத்துடன் மதீனாவில் தனக்கு விரேதமான ஒரு புரட்சி ஏற்பட்ட போது அதை அடக்குவதற்காக ஒஐ படையை அனுப்பி வைத்தார். அச்சந்தர்ப்பத்தில் மதீனாவில் இருந்த ஹுஸைன்(ரழி) அவர்களின் மகன் அலி என்பவருக்கு எந்தக் கெடுதியும் நேர்ந்திடாமல் பார்த்துக் கொள்ளவேண்டுமென அப்படையின் தளபதிக்குக் கடுமையாகக் கட்டளையிட்டிருந்தார்,
ஹுஸைன்(ரழி) அவர்களின் இக்கொலை பற்றி நபி(ஸல்) அவர்களின் முன்னறவிப்புக்கள் சில ஹதீஸ்ளில் இடம்பெற்றுள்ளன. அந்த ஹதீஸ்கள் உம்மு ஸலமா(ரழி), ஆயிசா(ரழி), அனஸ்(ரழி) ஆகியோரைத் தொட்டும் அல்முஃஜம் அத்தபரானி, இமாம் அஹ்மத் அவர்களின் பழாஇலுஸ் ஸஹபா, இமாம் பைஹகி அவர்களின் தலாஇலுந் நுபுவ்வா போன்ற நூல்களில் ஏற்றுக் கொள்ளப்படத் தக்க அறிவிப்பாளர் வரிசைகளைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் சில அறிவிப்புக்களில் ஒரு வானவர் நபியவர்களிடம் வந்து உங்களது இந்த மகனை உங்களது உம்மத்தினர்கள் கொலை செய்வார்கள் என்றும் வேறு சில அறிவிப்புக்களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஹுஸைன்(ரழி) அவர்களின் கொலை பற்றிய செய்தியைச் சொல்லிவிட்டு அவர்கள் கொலை செய்யப்படும் பூமியின் மண்ணையும் காண்பித்ததாகவும் பதிவு செய்யுப்பட்டுள்ளது.
அதே போன்று நபி(ஸல்) அவர்கள் கர்பலாப் பூமியைப் பற்றிக் குறிப்பிம் போது أرض كرب وبلاء – அது கச்டமும் சோதனைகளும் நிறைந்த பூமி என்று குறிப்பிட்டதாகவும் சில அறிவிப்புக்களில் காணப்படுகின்றன.
அதே போன்று கர்பலாவில் ஹுஸைன்(ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்ட தினத்தில் நடந்தததாக சில சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில :
ஹுஸைன்(ரழி) அவர்கள் கொல்லப்பட்ட தினத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இது ஹதீஸுக்கும் அறிவியலுக்கும் முரணானதாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக சூரியன், சந்திரன் ஆகிய இரண்டும் அல்லாஹ்வின் இரு அத்தாட்சிகளாகும். யாரும் பிறந்ததற்காகவோ அல்லது இறந்ததற்காகவோ சூரிய, சந்திர கிரகணங்கள் உண்டாகமாட்டாது. (புகாரி). கர்பலா நிகழ்வு இடம்பெற்றது முஹர்ரம் பிறை 10ல் ஆகும.; சூரிய கிரகணம் அமாவசை தினங்களிலேயே நிகழும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியல் உண்மையாகும். மேலும் தொடர்ந்து 6 மாதங்கள் சிவந்து காணப்பட்டது, உலகம் 6 நாட்கள் இயங்காமல் ஸ்தம்பித்திருந்தது, நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று முட்டி மோதிக் கொண்டன, பைதுல் முகத்தஸ் பகுதியில் காணப்பட்ட கற்களைப் புரட்டிய போது அவற்றின் கீழால் இரத்தம் காணப்பட்டது இவ்வாறு பல சம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆதாரமற்றவையாகும்.