தொழுகையில் சந்தேகம் ஏற்படும் பொழுது நிகழும் சட்டங்கள்

தொழுகையில் சந்தேகம் ஏற்படும் பொழுது

நிகழும் சட்டங்கள்

இத்தலைப்புடன்; சம்பந்தப்பட்ட சட்டங்களை பின்வரும் உப தலைப்புக்களாகப் பிரித்து நோக்கலாம்

  1. சந்தேகம் ஏற்படல்.
  2. சந்தேகத்தின் அடிப்படையில் செய்த விடயம் சரியானதே என உறுதியாகுதல்.
  3. தொழுகை முடிந்ததன் பின் சந்தேகம் ஏற்படல்.

1.    சந்தேகம் ஏற்படல் 

ஒருவர் தொழும் பொழுது அவருக்கு சந்தேகம் ஏற்படின், அவர் சரியானது எது என்பதை உறுதி கொள்ள முயற்சி செய்யவேண்டும் . அம்முயற்சியால் அவருடைய சந்தேகம் நீங்கிவிட்டால் அவர் தொழுது முடிந்ததும் மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்களை நிறை வேற்றவேண்டும். இதற்கு பின்வரக்கூடிய ஹதீஸை ஆதாரமாக உலமாக்கள் முன்வைக்கின்றனர்.

'உங்களில் ஒருவருக்கு  அவருடைய தொழுகையில் ஏதும் சந்தேகம் ஏற்பட்டால் அவர் எது சரியானது என்பதை  சிந்தித்து செயற்பட்டு , தொழுகை முடிந்ததும் (மறதிக்கான) இரண்டு  ஸுஜுதுகளையும் செய்யட்டும்'  ஆதாரம் : புஹாரி (401) 

அவருடைய சந்தேகம் தொடர்ந்து இருக்குமானால் அதாவது முயற்சி செய்தும் சந்தேகம் நீங்கவில்லையானால் உதாரணமாக ஒருவர் தொழும் பொழுது அவருக்கு எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு தான் தொழுதது முதலாவது ரக்ஆத்தா அல்லது இரண்டாவது ரக்ஆத்தா என்ற சந்தேகம் ஏற்படின் அவர் தாம் தொழுது முடித்தது முதலாவது ரக்அத்தே என்று உறுதி கொண்டு  இரண்டாவது ரக்ஆத்தை நிறை வேற்றுவதற்காக எழவேண்டும்.இறுதியில் மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்களை செய்து கொள்ள வேண்டும்  . அதே போன்று தாம் செய்வது முதலாவது ஸுஜுதா அல்லது இரண்டாவது ஸுஜுதா? போன்ற சந்தேகங்கள் ஏற்பட்டாலும் நாம் மேற் கூறியவாரே செய்து கொள்ளல் வேண்டும்.

இதற்கு பின்வரக்கூடிய ஹதீஸை ஆதாரமாக உலமாக்கள் முன்வைக்கின்றனர் :

'உங்களில் ஒருவர் தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு அவர் தாம் நிறைவேற்றியது மூன்றாவது ரக்ஆத்தா அல்லது நான்காவது ரக்ஆத்தா என அறியவில்லையானால் அவர் சந்தேகத்தை விட்டுவிட்டு (நிறைவேற்றியது மூன்றாவது ரக்ஆத்தே) என உறுதி கொண்டு , பிறகு ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்களை நிறைவேற்றிக் கொள்ளட்டும்'   என நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 571)

2. சந்தேகம் நீங்கி உறுதி ஏற்படல்

உதாரணமாக ஒருவர்  தொழும் பொழுது இந்த ரகஆத் எனது முதலாவது ரக்ஆத்தா அல்லது இரண்டாவது ரக்அத்தா ? என சந்தேகம் கொண்டு அது தன்னுடைய முதலாவது ரக்ஆத்தே என உறுதி  யெடுத்து, இரண்டாவது ரக்ஆத்தை தொழ எழும் பொழுது அவருக்கு தாம் சந்தேகம் கொண்டது சரியே என உறுதியாகிவிட்டால் அதாவது தாம் இரண்டாவது ரக்ஆத்தையே தொழவேண்டும் என அவருக்கு உறுதியானால் அவர் ஸஜ்தா ஸஹ்வு செய்யவேண்டுமா? இல்லையா ? என்பதில் உலமாக்கள் கருத்துவேறுபாடு கொள்கின்றனர். சில உலமாக்கள் கூறுகையில் அவர் தம் தொழுகையில் ஏதும் அதிகரிக்கவுமில்லை , குறைக்கவுமில்லை எனவே அவருக்கு ஸஜ்தா ஸஹ்வு செய்வது அவசியம் கிடையாது . இன்னும் சிலர் '; சந்தேககத்தை ஏற்படுத்திய அந்த iஷத்தானை இழிவு படுத்துவதே ஸஜ்தா ஸஹ்வின் பிரதான நோக்கம் எனவே ஸஜ்தா ஸஹ்வு செய்வது சிறந்தது ' எனக் கூறுகின்றனர்.

3. தொழுகை முடிந்ததன் பின் சந்தேகம் ஏற்படல்

ஸஜ்தா ஸஹ்வு செய்வதற்கான காரணங்களில் சந்தேகம் ஏற்படுவதும் ஒரு பிரதான காரணமாகும். ஒருவர் தொழுகையை நிறைவு செய்ததன் பின் அவருடைய தொழுகையில் ஏதும் சந்தேகப்பட்டால் அவர் மீது ஏதும் கடமையாகமாட்டாது . ஆயினும் தாம் தொழுததில் பிழை ஏற்பட்டிருக்கின்றது என அவருக்கு உறுதியாகிவிட்டால் அவர் உடனே அப்பிழையை திருத்தம் செய்து மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்களையும் நிறைவேற்ற வேண்டும். 

உதாரணமாக: ஒருவர் ளுஹர் தொழுகையை மூன்று ரக்ஆத்தாக நிறைவேற்றி முடிந்தவுடன் அவருக்கு சந்தேகம் ஏற்படுகின்றது, பிறகு அவருக்கு தாம் தொழுதது மூன்று ரக்ஆத்துக்களே என உறுதியாகிவிட்டால், அவர் மீதியுள்ள ரக்அத்தை தொழுது விட்டு மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்களையும் நிறைவேற்ற வேண்டும். ஆனால் பல நிமிடங்களின் பின் சந்தேகம் உறுதியாகிவிட்டால் அவர் அனைத்து ரக்ஆத்துக்களையும் தொழவேண்டும்.

ஜமாஅத் தொழுகை சம்பந்தப்பட்ட  

ஸஜ்தா ஸஹ்வின் சட்ட திட்டங்கள்

இத்தலைப்புடன்; சம்பந்தப்பட்ட சட்டங்களை பின்வரும் உப தலைப்புக்களாக பிரித்து நோக்கலாம்

  1. இமாமுடைய மறதிக்கான ஸஜ்தாவின் காரணியை அடைந்த மஃமூமின் சட்டம்
  2. இமாமுடைய மறதிக்கான ஸஜ்தாவின் காரணியை அடையாத மஃமூடைய சட்டம்
  3. மஃமூம் இமாமுடன் தொழும் பொழுது ஸஜ்தா சஹ்வுடைய காரணிகளை செய்தல்.

 

1.இமாமுடைய மறதிக்கான ஸஜ்தாவின் காரணியை அடைந்த மஃமூமின் சட்டம்

இமாமுடைய மறதிக்கான ஸஜ்தாவின் காரணியை அடைந்த மஃமூம் (இமாமை முதலாவது தக்பீரிலிருந்து பின்பற்றிய மஃமூம்) இமாம் மறதிக்கான ஸஜ்தாவை நிறைவேற்றும் பொழுது மஃமூமும் நிறைவேற்றவேண்டும் . இமாம் ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான ஸுஜுதை நிறைவேற்றினாலும் அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பின் நிறைவேற்றினாலும் மஃமூமாகிய அவர் அந்த இமாமை பின்பற்றவேண்டும் .இதற்கு பின்வரக்கூடிய ஹதீஸ் ஆதாரமாகும்.

(தொழுகையில்) இமாமை பின்பற்றுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளது எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறவும் . இந்த ஹதீஸின் இடையில் 'இமாம் ஸுஜுத் செய்தால் நீங்களும்  ஸுஜுது செய்யுங்கள்' என நபியவர்கள் கூறினார்கள் . (புஹாரி -378)

மேற் கூறப்பட்டுள்ள ஹதீஸில் நபியவர்கள் இமாம் ஸுஜுத் செய்தால் நீங்களும் ஸுஜுத் செய்யுங்கள் எனக் கூறியுள்ளார்கள் . எனவே மறதிக்கான ஸுஜுதை இமாம் செய்தால் மஃமூம்களும் பின்பற்றவேண்டும் என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து விளங்க முடியும் என்பதாக உலமாக்கள் கூறுகின்றனர்.

2.இமாமுடைய மறதிக்கான ஸஜ்தாவின் காரணியை அடையாத மஃமூடைய சட்டம்

இமாமுடைய ஆரம்ப ரக்ஆத்தில் மறதிக்கான ஸஜ்தாவின் காரணம் ஏற்பட்டு அவர் மறதிக்கான ஸஜ்தாவை நிறைவேற்றும் பொழுது அந்த (இமாமின் மறதியேற்பட்ட) ரக்ஆத்தை அடையாத  ஒரு மஃமூம் அந்த இமாமை பின்பற்றி மறதிக்கான ஸஜ்தாவை நிறைவேற்றும் பொழுது ,

 இமாம் ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான ஸஜ்தாவை நிறைவேற்றினால் அந்த மஃமூமும் (மறதிக்கான) ஸுஜுதை இமாமுடன் நிறைவேற்ற வேண்டும்

 இமாம் ஸலாம் கொடுத்ததற்கு பின் மறதிக்கான ஸஜ்தாவை நிறைவேற்றினால் அந்த மஃமூம் எழுந்து தமக்கு எஞ்சியிருக்கின்ற ரக்ஆத்துக்களை பூர்த்தி செய்து கொள்வார். ஏனெனில் இமாம் ஸலாம் கூறிவிட்டாராயின் இமாமினதும் மஃமூமினதும் தொடர்பு முடிந்துவிடும் . மஃமூம் அவ் இமாமை பின்பற்றி ஸலாம் கொடுத்தால் அவரின் தொழுகை முறிந்து விடும் ஏனெனில் தொழுகையில் ஸலாம் என்பது தொழுகை முடிந்து விட்டது என்பதற்கு அடையாளமாகும் . எனவே இம் மஃமூமிற்கு இன்னும் ரக்ஆத்துக்கள் எஞ்சியிருப்பதனால் அவர் ஸலாம் கூறாமல் அந்த ரக்ஆத்துக்களை பூர்த்தி செய்யவேண்டும்.

அதே போன்று இமாமின் மறதிக்கான ஸஜ்தாவின் காரணத்தை அடைந்த ஒரு மஃமூம் அவருக்கு (மஃமூமிற்கு)  இன்னும் ரக்ஆத்துக்கள் மீதியிருந்தால்   இமாம் ஸலாம் கூறியதன் பின் மறதிக்கான ஸஜ்தாவை நிறைவேற்றினால் மஃமூமாகிய அவர் இமாமை பின்பற்றாமல் எழுந்து அவருக்கு மீதியுள்ள ரக்ஆத்துக்களை நிறைவேற்றி விட்டு மறதிக்கான ஸஜ்தாவையும் நிறைவேற்ற வேண்டும் .  (பார்க்க அஸ்ஸரஹுல் மும்திஃ 1பாகம் 390 பக்கம்)

3.மஃமூம் இமாமுடன் தொழும் பொழுது ஸஜ்தா சஹ்வுடைய காரணிகளை செய்தல்.

இமாமை ஆரம்ப ரக்ஆத்திலிருந்து பின்பற்றிய மஃமூமாக இருப்பாராயின் அம் மஃமூம் ஸஜ்தா ஸஹ்விற்கான காரணியை மேற் கொண்டால் அவர் மறதிக்கான ஸுஜுதை நிறை வேற்ற அவசியமில்லை என்பதே அதிகமான உலமாக்களின் கருத்தாகும்.

இமாம் அல்பானி (ரஹ்) கூறுகின்றார்கள்:

நபியவர்ளை பின்பற்றி தொழுத ஸஹாபாக்கள் தனித்து தொழுதிருந்தால் மறதிக்கான ஸஜ்தாக்களை நிறைவேற்றியிருப்பார்கள்;. அப்படியான காரணிகளை நபியவர்களுக்கு பின் அவர்கள் செய்தார்கள் என்பதை மறுக்க முடியாது. இவ்வாறிருந்தும் ஸஹாபாக்களில் ஒருவர் கூட நபியவர்கள் ஸலாம் கூறி தொழுகை முடித்ததும் மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்களையும் நிறைவேற்றியதாக ஏதும் அறிவிக்கப்படவில்லை . அவ்வாறு செய்வது அணுமதியளிக்கப்பட்டிருந்தால் ஸஹாபாக்கள் செய்திருப்பார்கள் . அவர்கள் அதை செய்யவில்லை என்பது அவ்வாறு செய்வது அவசியமில்லை என்பதையே காட்டுகின்றது . (பார்க்க அல் இர்வாஃ 2 பாகம் 132 பக்கம்)

ஆயினும் இமாமின் சில ரக்ஆத்துக்களை அடையாத ஒருவர் அவ் இமாமை பின்பற்றித் தொழும் பொழுது இமாம் ஸலாம் கொடுத்தவுடன்  தனக்கு சில ரக்ஆத்துக்கள் மீதியுள்ளன என்பதை மறந்து அவரும் ஸலாம் கூறினால, அவர் எழுந்து மீதியுள்ள ரக்ஆத்துக்களை பூர்த்தியாக்கிவிட்டு மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்களையும் நிறைவேற்றவேண்டும்.

மறதிக்கான இரண்டு ஸுஜுதுகளையும்

எப்பொழுது நிறை வேற்ற வேண்டும்?

மறதிக்கான இரண்டு  ஸஜ்தாக்களையும் எப்பொழுது நிறைவேற்ற வேண்டும் என்பதில் உலமாக்கள் மத்தியில் பல விதமான கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன . ஷhபி மத்ஹபுடைய உலமாக்கள் ஸலாம் கொடுப்பதற்கு முன் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் ஹனபி மத்ஹபுடைய உலமாக்கள் தொழுகை நிறைவேற்றியதற்குப் பின்( ஸலாம் கொடுத்ததற்குப் பின்) நிறைவேற்றவேண்டும் என்றும் இன்னும் சிலர் தொழுகையில் ஏவப்பட்ட விடயங்களை மறதியாக விட்டால் ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான ஸுஜுதை நிறைவேற்ற வேண்டும் மறதியாக அதிகரித்தால் ஸலாம் கொடுத்ததன் பின் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளனர். இக்கருத்தை இமாம் மாலிக் அவர்கள் கூறியுள்ளார்கள் இன்னும் சிலர் தொழுபவரின் விருப்பமாகும் எனக்கூறியுள்ளனர், எனவே அவர் விரும்பினால் ஸலாம் கொடுப்பதற்கு முன்; அல்லது ஸலாம் கொடுத்ததன் பின் மறதிக்கான ஸுஜுதை நிறைவேற்றுவார்.

இவைகளில் வலுவான கருத்து தொழுபவரின் விருப்பப்படியே நிறைவேற்றவேண்டும் என்பதே . இந்த கருத்தை இமாம் ஸன்ஆனி அவர்கள் கூறியுள்ளார்கள் . (பார்க்க : சுபுலுஸ்ஸலாம் 1 ஃ 308) ஆயினும் நபியவர்கள் மறதிக்கான ஸஜ்தாவை செய்த இடங்களில் எவ்வாறு நிறைவேற்றினார்களோ அவ்வாறே நாமும் நிறைவேற்றுவதே அதிகம் சிறப்புமிக்கதாகும் . ஏனைய (நபியவர்களின்  சொல் மற்றும் செயல் ரீதியாக அறிவிக்கப்படாத) இடங்களில் மறதிக்கான ஸஜ்தாவை நிறை வேற்றும் பொழுது அது தொழக்கூடியவரின் விருப்பத்தில் உள்ளதாகும். விரும்பினால் ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதிக்கான இரண்டு ஸஜ்தாவையும் நிறைவேற்றுவார் அல்லது ஸலாம் கொடுத்ததன் பின் நிறைவேற்றுவார். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

ஸலாம் கொடுத்தன் பின் ஸஜ்தா ஸஹ்வை நிறை வேற்றும் பொழுது

ஸலாம் கொடுத்ததன் பின் மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்களையும் செய்யும் பொழுது நிறைவேற்ற வேண்டிய அம்சங்களை பொருத்தவரையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்

1- நிறைவேற்றவேண்டிய விடயங்கள்

2- நிறைவேற்ற அவசியமில்லாத விடயங்கள்.

நிறைவேற்றவேண்டிய விடயங்கள்

1-தக்பீர் சொல்லல்

மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்களையும் நிறைவேற்றும் பொழுது தகபீர் கூறவேண்டும்

இதற்கு ஆதாரமாக  துல்யதைன் என்ற புனைப் பெயரைக் கொண்ட ஸஹாபியின் ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கலாம். அதில் நபியவர்கள். ஸலாம் கூறி தொழுகையைப் பூர்த்தியாக்கியதன் பின் தக்பீர் கூறி மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்களை நிறைவேற்றினார்கள் என இடம் பெற்றுள்ளது . (புஹாரி7250)

2-ஸலாம் கூறல்

ஸலாம் கொடுத்ததன் பின் மறதிக்கான ஸஜ்தாவை செய்யும் பொழுது இறுதியில் மீண்டும் ஸலாம் கொடுக்கவேண்டும். இதற்கு ஆதாரமாக  இப்னு மாஜாவில் ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது (1214)

நிறைவேற்ற தேவையற்ற விடயங்கள் 

ஸலாம் கொடுத்ததன் பின் மறதிக்கான ஸஜ்தாவை நிறைவேற்றும் பொழுது மீண்டும் அத்தஹிய்யாத் ஓதவேண்டுமா ? அல்லது ஓதுவது அவசியமில்லையா? என்பதில் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.இமாம்களான சவ்ரி , லைஸ் ,ஷhபி ,அபூ ஹனீபா போன்றோர்  ஓதவேண்டும் எனக் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக பின்வரக்கூடிய ஹதீஸை முன்வைக்கின்றனர்.

இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபியவர்கள் எங்களுக்கு தொழுகை நடாத்திய பொழுது அவர்களுக்கு மறதி ஏற்பட்டது அப்பொழுது மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்களையும் நிறைவேற்றிவிட்டு பின்பு அத்தஹிய்யாத்தை ஓதி ஸலாம் கொடுத்தார்கள். (திர்மிதி 395)

அத்தஹிய்யாத்தை ஓதத்தேவையில்லை என்று கூறுபவர்களில் மிக முக்கியமாக ஹஸன், கதாதா போன்ற உலமாக்கள் காணப்படுகின்றனர். இக் கருத்தே இமாம் புஹாரியினதுமாக இருக்கலாம் .ஏனெனில் அவர் அவருடைய புஹாரி கிரந்தத்தில் பின்வருமாறு தலைப்பிட்டுள்ளார் 'மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்களை நிறைவேற்றும் பொழுது அத்தஹிய்யாத்தை ஓதுவது அவசியமில்லை எனக் கருதுபவர்கள்' 

இம்ரான் இப்னு ஹுசைன் அவர்களின் ஹதீஸில் 'நபியவர்கள் அத்தஹிய்யாத் ஓதினார்கள்' என்பதாக வரும் அச் சொற்றொடர் ஷhத் எனும் பலவீனமான வகையைச் சார்ந்ததாகும் எனப் அதிகமான உலமாக்கள் கூறுகின்றனர் . (பார்க்க : பத்ஹுல் பாரி 3 ஃ 98)

எனவே அத்தஹிய்யாத் ஓதுவது அவசியம் கிடையாது என்பதே மிக வலுவான கருத்தாகும் .

ஸஜ்தா ஸஹ்வில் ஓதப்பட வேண்டிய திக்ர்.

ஹதீஸ்களை பார்க்கும் பொழுதுஸஜ்தா ஸஹ்வுக்கு என்று பிரத்தியேகமான ஒரு திக்ரை நபியவர்கள் காட்டித்தரவில்லை என்பதே தெளிவாகின்றது . எனவே வழமையாக தொழுகையின் ஸஜ்தாக்களில் ஓதப்படக் கூடிய அவ்ராதுகளையே ஓதிக்கொள்ளவேண்டும். அதே போன்று(மறதிக்கான)   இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையிலும் (நடு இருப்பில்) வழமையான தொழுகையில் ஓதவேண்டிய அவ்ராதுகளையே ஓதிக்கொள்ளவேண்டும்.

சில உலமாக்கள் பின்வரக்கூடிய திக்ரை ஓதுவது சிறந்தது எனக் கூறுகின்றனர்:

سبحان من لا ينام ولا يسهو   

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இச் செய்திக்கு ஒரு அடிப்படையை நான் காணவில்லை எனக் கூறுகின்றார் (பார்க்க அத்தல்ஹீஸுல் ஹபீர்  1பாகம் 12 பக்கம்)

ஸுஜுத் என்பது ஓர் இபாதத் ஆகும். இபாதத் எப்படி நிறைவேற்றவேண்டும் என்பதை அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நமக்கு வழிகாட்டவேண்டும். மேற் கூறப்பட்ட திக்ர் என்பது நபியவர்களால் வழிகாட்டப்படாத ஒரு திக்ராகும் . எனவே அந்த திக்ரை ஓதுவது பித்அத்தாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.