இஸ்லாமும் பகுத்தறிவும்

இஸ்லாமும் பகுத்தறிவும்

Ashshaikh M.F.M.Fahdh (Abbasi)

'நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்'.   (அல்குர்ஆன்   17:70)
 

'உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான்'.  (அல்குர்ஆன்  16:78)
 

இறைவன் மனிதனை ஏனைய படைப்பினங்களிலிருந்து பகுத்தறிவைக் கொண்டே வேறுபடுத்தி சிறப்பித்திருக்கிறான்.உலகில் மனிதன் அனுபவிக்கும் உச்ச கட்ட சௌபாக்கியங்களும் , நவீன மாற்றங்களும் பகுத்தறிவின் பிரதிபலன்களே . இப்பகுத்தறிவானது புத்தம் புது மாற்றங்களை உலகினில் பதித்து வரும் அதே வேலை, பல சமய சடங்குகளுடன் மோதி வருகின்றது. அதிலும் குறிப்பாக நம்மை படைத்த இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கமான இஸ்லாமிய மார்க்கத்தின் சில செய்திகளுடன் மோதி வருகின்றது என்பது கவலையுடன் தெரிவிக்க வேண்டிய உண்மைச் செய்தியே . அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளில் ஒன்றான பகுத்தறிவை, நாம் அவனுக்கெதிராகவே பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக நாம் அதனை வீனாக்கிய சமூகமாகவே மாறுவோம். ஆகவே இதனைப் பயன்படுத்துவதில் நடுநிலையை கையாளுவதற்காக பகுத்தறிவு என்றால் என்ன? அதன் முக்கியத்துவமும் வகிபாகமும், அதனை பயன்படுத்துவதில் பேண வேண்டிய வரையரைகளும் ஒழுங்குகளும் , அவ்வரையரைகளை மீறினால் ஏற்படும் விபரீதங்கள் போன்ற உட்பிரிவுகளை இக்கட்டுரையில் ஆய்வு செய்யலாம் என்று நினைக்கின்றேன்.
 

1) பகுத்தறிவு என்றால் என்ன?
 

'عقل' (அக்ல்) என்ற அரபிப்பதமே பகுத்தறிவு மற்றும் புத்தி போன்றதற்கு பயன்படுத்தப்படுகின்றது.இதற்கு பாதுகாத்தல், பற்றிப்பிடித்தல், கட்டிவைத்தல் போன்ற கருத்துக்களும் உள்ளன. அதாவது பகுத்தறிவு மனிதனை தீய விடயங்களிலிருந்து தடுத்து பாதுகாக்கும் பணியை செய்வதோடு எது சரியானது? எது தவறானது? எனும் பிரித்தறியும் ஆற்றலையும் உள்ளடக்கியுள்ளது.
 

பகுத்தறிவு என்றால் என்ன? என்பதற்கு பல அறிஞர்கள் கூறிய வரைவிலக்கணங்களை உற்று நோக்கும் பொழுது ' பகுத்தறிவு என்பது பொருட்கள் மற்றும் விடயங்களின் நண்மை,தீமை ,பூரணத்துவம்,குறைபாடு மற்றும் சுத்தம், அசுத்தம் போன்ற வர்னனைகள் பற்றிய வித்தியாசம் காணும் அறிவே ஆகும்' என்று இலகுவடிவில் வரைவிலக்கணப்படுத்தலாம்.
 

2) முக்கியத்துவமும் வகிபாகமும் 
 

இறைவன் எந்தவொரு படைப்பையும் வீனாக படைக்க மாட்டான் என்று உறுதியாக நம்பி வாழுகின்ற எமக்கு பகுத்தறிவின் முக்கியத்துவம், அதன் பெறுமதி மற்றும் அது மனிதனிடத்தில் செல்வாக்குச் செலுத்தும் விதம் போன்றவற்றை அறிந்திருக்கின்றோமா? என்பது குறித்துக்காட்டப்பட வேண்டிய கேள்வியாகும். ஆகவே அதற்கு விடைகாணும் பொருட்டு அதன் முக்கியத்துவத்தையும் வகிபாகத்தையும் சுருக்கமாக நோக்குவோம்.
 

•    புகழ்ச்சியும் இகழ்ச்சியும் 

இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள்' (அல்குர்ஆன்  29:43)

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை' (அல்குர்ஆன் 2:269)

அல்லாஹ் குர்ஆனில் சில மனிதர்களைப்பற்றி அல்லது சமூகத்தைப்பற்றி புகழ்ந்தும் இகழ்ந்தும் கூறுவதன் மூலம் அவர்களிடத்திலிருந்து நாம் படிப்பினைகள் பெற வேண்டும் என்பதனை உணரச்செய்திருக்கின்றான். அதனடிப்படையில் மேலே குறித்துக்காட்டப்பட்ட வசனங்களில் பகுத்தறிவு கொடுக்கப்பட்டவர்களுக்கு அதிக நலவுகள் கொடுக்கப்படுவதாகவும் , அவர்களே இறைவன் கூறும் உதாரணங்களின் எதார்த்தத்தை புரிவார்கள் என்றும் புகழ்ந்துரைப்பதன் மூலமாக பகுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றான்.

•    பாதுகாப்பின் உறுதித்தன்மை.

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்' (அல்குர்ஆன்  5:90).

இஸ்லாமிய மார்க்கம் அதன் போதனைகள் மூலமாக பகுத்தறிவின் பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்தி முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துகிறது .அதனை ஏவல் மற்றும் விளக்கல் என இரண்டு விதமாக நோக்கலாம். அதாவது பகுத்தறிவினை வளர்ச்சி செய்வதற்குரிய சிறப்பினைக் கூறி, சில போதனைகளை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் இன்னும் சிலதை சமூகத்தில் ஒரு சிலர் அறிந்து கொண்டால் போதும் என்றும் ஏவல்கள் மற்றும் கட்டளைகள் மூலம் பகுத்தறிவின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வித்திடுகின்றது. அடுத்தது எவைகளெல்லாம் பகுத்தறிவை பாழ்படுத்தி சீர்குலைக்கும் காரணிகளாக இருக்கின்றதோ அவைகளை தடை செய்வதன் மூலமும் பாதுகாக்கின்றது.உதாரணமாக மனிதனின் பகுத்தறிவை சீர்குலைத்து பண்பாடு மற்றும் கலாசார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் மதுபானம் , புகைத்தல் போன்ற போதைவஸ்த்துப் பாவனையை இஸ்லாம் தடை செய்திருக்கின்றதை எடுத்துக்காட்டலாம்.அதே போல் இயற்கை புத்தியுடன் ஒட்டிப்பிறக்கும் தூய இறைக்கோட்பாட்டை பாதிக்கும் மூடநம்பிக்கைகள், பழைமை சிந்தனைகள் மற்றும் தந்திரக் கோட்பாடுகள் போன்றனவற்றை எதிர்ப்பதன் மூலமும் இதன் முக்கியத்துவம் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.

•    நண்மை,தீமையை பிரித்தரிவது பகுத்தறிவே.

இஸ்லாத்தின் கட்டளைகளையும் விலக்கல்களையும் பின்பற்றுவது நேர்த்தியான பகுத்தறிவு உடையவனுக்கே கடமை எனும் நிபந்தனையை இட்டு, இப்பகுதறிவு இல்லாவிட்டால் மார்க்கச் சட்டங்களும் கடமையில்லை எனும் கோட்பாடு இஸ்லாம் எந்தளவுக்கு பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பது தெளிவாகிறது.

•    இஜ்திஹாத் செய்வதில் பகுத்தறிவின் பங்கு.

'தீர்ப்புச் சொல்பவர் (ஹாகிம்), இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக அமைந்தால் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவரது முடிவு தவறாக அமைந்து விட்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு'  என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் மார்க்க கருத்து வேற்றுமைகளின் போது சிலவற்றில் இஸ்லாம் இஜ்திஹாத் எனும் வாயிலை திறக்கிறது. இதனை மேற்கூறப்பட்ட ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது.இத்தீர்ப்புக்கள் அடிப்படை மூலாதாரங்களிலிருந்து ஆராய்ந்து அதற்கு நேர்பாடானதாக அமைய வேண்டும். பகுத்தறிவுடன் தொடர்புபடும் இஜ்திஹாதை ஒரு துணை மூலாதாரமாக கருதுவதால் அதன் முக்கியத்துவம் மேலும் வலுப்பெறுகிறது.

3) பகுத்தறிவும் அதனை பயன்படுத்தலும்

இறைவன் மனிதனை ஏனைய படைப்பினங்களிலிருந்து பகுத்தறிவைக் கொண்டு கண்ணியப்படுத்தி, அதனை இஸ்லாமிய மட்டத்தில் முக்கியத்துவப்படுத்தினது மாத்திரமின்றி அதனை பயண்படுத்தும் வழிகளை திறந்து , அதன் பக்கம் விரைந்து செல்லும் படி வஹியின் மூலம் கட்டாயப்படுத்தியிருக்கின்றான். ஆண்மீக மற்றும் லௌகீக விடயங்களை ஆராய்ந்து பயனுள்ள அறிவுப் புரட்சியை ஏற்படுத்துவதே இஸ்லாத்தின் நோக்காகும்.ஆகவே இதனை பயனுள்ள முறையில் பயன்படுத்தாவிட்டால் நிச்சயமாக இறைவனின் சாபத்துக்கும் தண்டனைக்கும் உறித்தானவர்களாக நாம் மாறுவோம் என்பதில் சந்தேகமில்லை. இதை மையப்படுத்தியே  திருமறைக்குர்ஆனில் - அவர்கள் சிந்திக்க மாட்டார்களா..? அலசிப் பார்க்க மாட்டார்களா..? பகுத்துணர மாட்டார்களா..? அவர்களின் அறிவு விழித்துக் கொள்ளாதா..? உள்ளத்தின் மீதும் அறிவின் மீதும் பூட்டுக்கள் தொங்குகின்றதா..? என்று நிறைய இடங்களில் கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளன.இக்கேள்விகள் மூலம் பகுத்தறிவை பயன்படுத்துவதின் கட்டாயத்தன்மையை புரிந்து கொள்ள முடிகிறது.அதே போன்று இஸ்லாம் எப்பகுதிகளிலெல்லாம் பகுத்தறிவின் பயன்படுத்தலை தூண்டியுள்ளது என்பதனை பின்வருமாறு பாகுபடுத்தி அறியலாம்.

•    பகுத்தறிவும் இறைக் கோட்பாடும்

' நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன'              (அல்குர்ஆன் 3:190).

அல்லது, அவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?, அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள் ' (அல்குர்ஆன்  52:35).

'(நபியே!) நீர் சொல்வீராக: அவர்கள் கூறுவதுபோல் அவனுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அப்போது அவை அர்{டையவன் (அல்லாஹ் தஆலாவின்) அளவில் ஒரு வழியைத் தேடிக்கண்டு பிடித்துச் (சென்று) இருக்கும் என்று, அவன் மிகவும் பரிசுத்தமானவுன்; இன்னும் அவர்கள் கூறும் கூற்றுக்களை விட்டு அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்'  (அல்குர்ஆன்  17:42).

அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை; அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்'           (அல்குர்ஆன் 23:91).
மேற்கூறப்பட்ட வசனங்களை உற்று நோக்கிப்பார்க்கும் பொழுது இறைவனின் இருப்பையும், ஒருமைத்தன்மையையும் பகுத்தறிவுரீதியாக ஆராய வைக்கின்றான் என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது. தூய இறைக்கோட்பாட்டை இயற்கையான பகுத்தறிவின் மூலம் ஆய்வு செய்ய தூண்டுகிறது இஸ்லாமிய மார்க்கம்.

•    பகுத்தறிவும் பண்பாடும்

'ஹலாலும் தெளிவானது, ஹராமும் தெளிவானது. இந்த இரண்டுக்கும் இடையில் தெளிவில்லாத சில விடயங்களும் இருக்கின்றன. அவற்றை அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள். யார் சந்தேகத்துக்கு இடமானவற்றை விட்டு விடுகிறாரோ அவர் தனது மானத்தையும் மார்க்கத்தையும் பாதுகாத்துக்கொண்டார். யார் அதனை பேண வில்லையோ அவர் ஹராத்தில் விழுந்து விட்டார். அவருக்குரிய உதாரணம் வேலியோரத்தில் மந்தை மேய்ப்பவர் போல! மந்தை சில வேளை வேலியை தாண்டவும் முடியும். அறிந்துகொள்ளுங்கள் ஒவ்வொரு அரசனுக்கும் வேலிகள் இருக்கின்றன. அல்லாஹ்வுடைய வேலி அவன் ஹராமாக்கியவைகளே!' என நபிகளார் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.   (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
 

இஸ்லாம் பண்பாடுகள், பழக்கங்களில் சிலதை ஹராம் என்றும், சிலதை ஹலால் என்றும் தெளிவாகக் கூறி விட்டு , இன்னும் சிலதை சந்தேகத்திற்குரியதாக வைத்து அவற்றில் நல்லது எது? கெட்டது எது? என்பதனை பகுத்தறிவின் மூலம் ஆராய்ந்து முடிவுகான வேண்டும் என்று விட்டு வைத்து பகுத்தறிவின் பயன்படுத்தலின் கட்டாயத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.சில பாவங்களையும் தவறுகளையும் உங்கள் உள்ளங்கள் தான் உணர்ந்து கொள்ளும் என்றும் மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் பகுத்தறிவின் பயன்படுத்தலின்  அவசியத்தன்மையை உணர்த்துகின்றன.

•    பகுத்தறிவும் இறைவனின் அத்தாட்சிகளும்.

'அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான், (தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான், (இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்' (அல்குர்ஆன்  14:32-34)
 

'அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன'     (அல்குர்ஆன் 22:46)
 

'உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன் ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்'         (அல்குர்ஆன்  3:137).
 

இறைவன் பல அத்தாட்சிகளை படைத்து விட்டும், முன்னோர்களின் சம்பவங்களை கூறி விட்டும் அவற்றிலிருந்து படிப்பினைகள் பகுத்துணரப்பட வேண்டும் என்று பகுத்தறிவின் பயன்படுத்தலை தூண்டியிருக்கின்றான்.இவ்வாறு இஸ்லாத்தின் பல பகுதிகளிலும் பகுத்தறிவின் அவசியத்தன்மையை எடுத்துக் காட்டி, அதனை பயன்படுத்துவதில் அக்கறையற்று இருக்க வேண்டாம் என்றே எச்சரிக்கப்பட்டிருக்கின்றது.
 

4) வரையரைகளும், ஒழுங்குகளும் 
 

மனிதனின் ஈருலக வெற்றிற்கு காரணியாக பகுத்தறிவு அமைய வேண்டுமானால் அதனை பயன்படுத்தும் போது சில வரையரைகளையும் ஒழுங்குகளையும் பேண வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கிறது. இதனை பின்வருமாறு பாகுபடுத்தி சுருக்கமாக அறிந்து கொள்ளலாம்.
 

• இறைத்தன்மைகள், மறைவான விடயங்களில் பகுத்தறிவை உட்செலுத்தாதிருத்தல். 
 

'(நபியே!) 'உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூ{ஹ' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை' எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் 17 : 85)
 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, 'இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், 'உன் இறைவனைப் படைத்தவர் யார்?' என்று கேட்கிறான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும்'  (ஆதாரம் :  புகாரி)
 

படைப்பினங்களை ஆராய்ந்து படிப்பினை பெற பயன்படுத்தப்படும் பகுத்தறிவினை, படைத்தவனையும் அவனின் பண்புகள், செயற்பாடுகள் பற்றி அதிகம் ஆய்வு செய்ய பயன்படுத்தக் கூடாது என்று இஸ்லாம் கட்டுப்படுத்தியிருக்கிறது. அதே போன்று மன்னறை, மறுமை, சுவர்க்கம், நரகம் போன்ற மறைவான விடயங்களை பகுத்தறிவு ஏற்காவிட்டாலும் நம்ப வேண்டும் என கட்டளையும் இட்டிருக்கிறது. இதனையே 'ரூஹ்' பற்றி நபிகளாரிடத்தில் கேற்க்கப்பட்ட போது , அவர் அழித்த பதில் சொல்லித்தருகிறது.
 

•    வஹிக்கு முன் கட்டுப்படல்
 

வஹியின் பல போதனைகளை எம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். சிலதை பகுத்தறிவு ஏற்காது.ஆனாலும் அதற்கு கட்டுப்பட வேண்டும் என்பது இறைவன் விதித்த வரையரையே.இதனை நூஹ் நபியின் பின்வரும் சம்பவத்திலிருந்து படிப்பினையாக உணர முடிகின்றது.
 

'நூஹ் தன் இறைவனிடம் 'என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்' எனக் கூறினார், அ(தற்கு இறை)வன் கூறினான்: 'நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன், என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்' என்று கூறினார்' 
(அல்குர்ஆன் 11: 45-47)

நூஹ் (அலை) அவர்களின் குடும்பத்தை பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்குறுதி அழித்தான். ஈமான் கொண்டவர்களையே நூஹ் (அலை) அவ்களின் குடும்பம் என அல்லாஹ் கூறினான்.ஆனால் இதை அறியாத நூஹ் (அலை) அல்லாஹ் நம் குடும்பத்தில் ஒருவனான நம் மகனை அழித்துவிட்டானே என்று அல்லாஹ்விடம் அவன் அளித்த வாக்குறுதியை நினைவூட்டி கேள்வி கேற்கிறார். நூஹ் (அலை) இவ்வாறு கேட்டதை அல்லாஹ் கண்டித்தவுடன், அவர் இறைவனை கடிந்து கொள்ளவில்லை . மாறாக தன் தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் மண்ணிப்பு கேட்டார்கள். அதே போன்று இன்னுமொன்றை உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.

'அல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன் (இதைப் பார்த்த அவர்) 'இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?' என்று (வியந்து) கூறினார்; ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழும்படிச் செய்து, 'எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்?' என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், 'ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்' என்று கூறினார்; 'இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர்! இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை; ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்; இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்' எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது: அவர், 'நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்' என்று கூறினார்'     (அல்குர்ஆன் 2:259 )

மேற்கூறப்பட்ட வசனத்தை பகுத்தறிவு ரீதியாக சிந்திக்கும் பொழுது, 100 வருடங்கள் கடந்தும் உணவு, குடிபானம் பழுதடையவில்லையா..? கழுதை அவ்வாறே இருந்ததா? எவ்வாறு சாத்தியமாகும்..? போன்ற கேள்விகள் உருவெடுக்கும்.ஆனாலும் இது வஹி என்பதால் பகுத்தறிவை ஓரந்தள்ளிவிட்டு கட்டுப்பட்டு ஏற்றுக் கொள்வதே வெற்றிக்கு வழி என இஸ்லாம் உணர்த்துகிறது.

•    மனிதன் குறைமதி உள்ளவனே..!

'(நபியே!) 'உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூ{ஹ' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை' எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் 17 : 85)

உலகம் நவீன வளர்ச்சியை நோக்கி புத்தம் புது மாற்றங்களுடன் நகர்ந்தாலும் ஒவ்வொரு மனிதனும் குறைமதி உள்ளவர் என்பதை ஏற்று வாழ்வது பகுத்தறிவால் வழிகெட்டுச் செல்லாமல் இருப்பதற்கு இஸ்லாம் விதித்த மிக முக்கிய வரையரையாகும். சூரிய ஓட்டத்தைப் பற்றிய வசனத்தை ஸஹாபாக்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்ட போது அதனை ஆராய்ந்து அறிய அவர்களால் முடியவில்லை.ஆனாலும் நம்பினார்கள். தற்காலத்தில் அதன் முறைமை கண்டுபிடிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்படுவதை நாம் அறிவோம். இதை போன்றே ஒரு சமூகம் அறியாததை  இன்னொரு சமூகம் அறியும் என்பதை உணர்ந்து வாழ்ந்தால் அதுவே இம்மை, மறுமை வெற்றிக்கு ஏதுவாக அமையும்.

5) விபரீதங்களும், பின் விளைவுகளும்.

மனிதர்களுகென்று வரமாக வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவை , அதன் வரையரைகள், ஒழுங்குகளை மீறி பயன்படுத்தினால் ஏற்படும் விபரீதங்களைப் பற்றி வஹியின் பல செய்திகள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன.அவைகளில் சிலதை பகுத்துணர்வோம்.

•    அழிவு என்பது உறுதி.

நபி நூஹ் (அலை) அவர்கள் தம் சமூகத்திற்கு இறைக்கோட்பாட்டை போதிக்கும் பொழுதெல்லாம் , அம்மக்கள் அவருக்கு எதிராக முன்வைத்த வாதத்தை அல்லாஹ்  குர்ஆனில் குறிப்பிடுகின்றான். 

'ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்: 'இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை' என்று கூறினார்கள்'.   (அல்குர்ஆன்  23: 24)

'மேலும் அவர்கள்: 'உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்' என்றும் சொல்கின்றனர், நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர்; ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே , ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை'            (அல்குர்ஆன் 71: 23-25)

இறைப்போதனைக்கு எதிரானதுதான் முன்னோர்கள் பற்றிய பிழையான வாதமாகும். இப்பகுதறிவு ரீதியான வாதத்தையே ஒவ்வொரு நபிமார்களுக்கு எதிராக செயற்பட்ட மக்களும் முன்வைத்தனர்.இவ்வாறான வாதத்தை முன்வைத்த, முன்வைக்க கூடியவர்களுக்கு நாளை மறுமையில் இறைவனின் கோபமும் சாபமும் உண்டாகும் என பல வசனங்ளின் மூலம் இறைவன் உபதேசிக்கின்றான்.

•    சைத்தானின் செயலே..!

'பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, 'ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்' என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்'.   (அல்குர்ஆன்  2:34)
 

பகுத்தறிவு ரீதியான காரணிகளை வைத்து வஹியை மறுப்பதும், புறக்கனிப்பதும் ஷைத்தானின் செயல் என்பதனை மேற்கூறப்பட்ட வசனம் எடுத்துக்காட்டுகிறது.அதாவது ஆதம் (அலை) அவர்களுக்கு ஸுஜூத் செய்யுமாறு இறைவன் கட்டளையிட்ட போது , இப்லீஸ் என்பவன் ' நெருப்பினால் படைக்கப்பட்ட நான், எவ்வாறு மன்னினால் படைக்கப்பட்டவனுக்கு ஸுஜூத் செய்வேன்? என் அந்தஸ்த்து என்ன? ' என்ற வாதத்தை முன்னிறுத்தி அக்கட்டளைக்கு மாறு செய்தான். ஆகவே வஹியின் சில பகுதிகளை பகுத்தறிவு ஏற்காவிட்டால் அதனை புறக்கணிப்பது ஷைத்தானின் செயலே.

•    காபிர்களின் பண்பே..!

'அப்படியல்ல் அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக' (அல்குர்ஆன் 10:39)
 

வஹியின் சிலவற்றிற்கு விளக்கங்கள் தெரியாவிட்டால் பிறரிடம் விளக்கம் கேட்டு புரிந்து கொள்ளாமல், தத்தமது பகுத்தறிவை வைத்து அவற்றை புறக்கணிப்பதும், பொய்ப்பிப்பதும் காபிர்களின் பண்பு என இறைவன் மேலே உள்ள வசனத்தில் குறித்துக் காட்டுகின்றான். இவ்வாறாக பகுத்தறிவை அதன் வரையரைகளை மீறி பயன்படுத்துவதன் மூலம் பாரிய விபரீதங்கள் எம்மை வந்தடையும் என்பதனை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
 

ஆகவே இவ்வுலகத்தில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் தம் பகுத்தறிவை, ஆய்வுக்கும் அமுலாக்கத்திற்கும் பயன்படுத்தும் பொழுதெல்லாம் 'நாம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட ஆண்மீக நம்பிக்கையுடன் வாழ்கிறோம்' என்ற ஈமானிய கோட்பாட்டை உள்ளத்தில் ஆளமாக பதிய வைத்துக் கொண்டு அறிவுப்புரட்சியை மேற்கொள்ள முயற்சிப்போமாக.
 

தொகுப்பு - MFM பஹத் (அப்பாஸி)