றமழானே வருக!
நன்மைகளை அருவடை செய்யும்
றமழானே வருக!
காலம் எவ்வளவு வேகமாக சுழல்கின்றது. சென்ற ரமளான் நம்மை புடம் போட்டுத் தந்த நினைவுகள் மறக்க முன் மீண்டும் அடுத்த ரமளான் எம்மை எதிர் நோக்கிவிட்டது. 11 மாதங்களிலும் எம்மால் ஏற்பட்ட தப்புகளுக்கும் தவறுகளுக்கும் பிராயச் சித்தம் தேடும் மாதம் வந்துவிட்டது. எம்மை தூய முஸ்லிம்களாக, இறைநேசர்களாக, ரய்யானின் சொந்தக்காரர்களாக மாற்றும் ரமளான் இதோ வந்துவிட்டது.
சென்ற வருடம் ரமளானில் நம்முடன் நோன்பை நோற்ற நம் உறவுகள், நண்பர்கள் இவ்வருடம் மண்ணறை வாழ்க்கையை அநுபவிப்பதைக் காண்கின்றோம். எனவே இம்முறையும் எங்களுக்கு ரமளானைத் தந்த வல்லவனைப் புகழ்ந்தவர்களாக நற்கருமங்களில் ஈடுபட கங்கணம் கட்டிக் கொள்வோம்.
பாவங்களைச் சுட்டெறித்து நன்மைகளை அள்ளித் தரும் மாதம் ரமளான். நரக வாயில்கள் மூடப்பட்டு சுவன வாயில்கள் திறக்கப்படும் மாதம். ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு 'லைலதுல் கத்ர்' எனும் மகத்துவமிக்க இரவை எமக்குத் தரும் மாதம்.
ரமளான் அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். ரமளானின் சிறப்புக்கான காரணமே அதில் அல்குர்ஆன் இறக்கப்பட்டது தான். ரமளானில் நமக்கு ஓய்வு அதிகம். அவ்வோய்வுகளை அல்குர்ஆனை ஓதுவதிலும் அதன் கருத்துக்களை விளங்குவதிலும் செலவுசெய்வோம்.
மேலும், ரமளான் பாவமன்னிப்புக்குரிய மாதம். அதில் அதிகமதிகம் பாவமன்னிப்புக் கோருவோம். அது ஸதகாவின் மாதம். அதிகமதிகம் ஸதகாக்கள் செய்வோம். ரமளான் இரவு வணக்கத்தின் மாதம். இரவு வணக்கங்களில் பூரணமாக ஈடுபடுவோம். இப்படி இன்னும் பல.
ஆக, ரமளானை இறைவழியில் கழிக்க ஒரு திட்டம் தீட்டி அதனை முழுமையாக அமுல்படுத்துவோம். அதன் மூலம் ரமளான் அள்ளித் தரும் அரும் பாக்கியங்களை அடைந்து கொள்வோம். அதற்கு வல்ல ரஹ்மான் அருள்பாலிப்பானாக. ஆமீன்
(From Zikra Magazine)