வளரும் போதே வளர்ப்போம் (மூளை வளர்ச்சி) - மருத்துவத் தொடர்

மருத்துவத் தொடர்
வளரும் போதே வளர்ப்போம்

Dr. P. M. M. Arshath Ahmed MBBS

Registrer in pediatrics

Colombo North Teaching Hospital

 

வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தமானது. அவன் தான் நாடியதை படைக்கிறான். தான் நாடியவர்களுக்கு பெண் குழந்தைப் பாக்கியத்தையும், தான் நாடியவர்களுக்கு ஆண் குழந்தைப் பாக்கியத்தையும், இன்னும் தான் நாடியவர்களுக்கு ஆண், பெண் குழந்தைகளையும் கொடுக்கிறான். சிலருக்கு குழந்தைகளை கொடுக்காமலும் இருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், செய்யக்கூடியவனாகவும் இருக்கிறான். (அல்-குர்ஆன் 49 : 50)

கடந்த இதழில் நாம் தாய்ப்பால் ஊட்டலின் முக்கியத்தவத்தையும் அதன் நன்மைகளையும் பார்த்தோம். இன்றைய இதழில் குழந்தை வளர்ப்பில் நாம் கவனிக்க வேண்டிய சில கட்டாய அம்சங்களையும், அதன் முக்கியத்துவத்தையும் பார்க்க இருக்கின்றோம். 

ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் இந்த உலகத்துடனான தொடர்புகள் ஆரம்பமாகின்றன. இந்த ஆரம்பத்தை செம்மையாக செய்ய வேண்டியது பெற்றோரின் மிக முக்கிய பொறுப்பாக இருக்கின்றது.

ஓவ்வொரு குழந்தையின் மூளையின் வளர்ச்சி முதல் 1000 நாட்களில் முற்றுப் பெறுகிறது. அதாவது கருவில் உள்ள 10 மாதங்களும், பின்னரான இரண்டு வயது வரையான காலப்பகுதியிலும் ஒவ்வொருவரினதும் மூளை முற்றாக விருத்தியடைந்துவிடுகின்றது. வளர்ச்சி பல புறக்காரணிகளால் பாதிக்கப்படக்கூடியதாகவும் உள்ளது. அது போலவே இக்காலப் பகுதியில் அந்த மூளை வளர்ச்சிக்கான போசனைப் பதார்த்தங்கள், தூண்டல்கள் என்பன அவசியமாக வழங்கப்பட வேண்டியவையாகவும் உள்ளன.

ஒரு மனித மூளை ஏனைய மிருகங்களின் மூளையைவிட வித்தியாசமாக இருப்பதற்கு இந்த வளர்ச்சி நிலைப்படிகள் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. இதற்கு தேவையான போசனைப் பதார்த்தங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்ட ஒரே ஒரு உணவாக தாய்ப் பால் மட்டுமே காணப்படுகின்றது.

இந்த தொழிற்பாட்டிற்கு தேவையான மூளை வளர்ச்சிக்கு உதவியான மூலக்கூறுகள் வேறு எந்த பொட்டிப்பாலிலும் இல்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இதனால் அல்குர்ஆன் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் சம்பூரணமாக தாய்ப்பால் ஊட்டலை பேசுகின்றது. அதற்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறு தகப்பனை வற்புருத்துகின்றது.

போசனைப் பதார்த்தங்களை பெற்றுக் கொள்ளும் மூளை அதற்கு ஏதுவான தூண்டல்களையும் பெற்றுக்கொள்ள வேண்டி உள்ளது. இத்தூண்டல்களை வழங்கும் ஊடகங்களாக தாயின் அரவணைப்பு, செவிப்புலன்களின் கேட்கும் திறன், கண்களின் பார்வைப் பரப்பு என்பன அமைகின்றன. இதனால் உள்வாங்கப்படும் தூண்டல்கள் ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சியின் அதிக தாக்கம் செலுத்துகின்றன.

ஒரு தாய் தாய்ப்பால் ஊட்டலின் போது தனது முழுக்கவனத்தையும் குழந்தையின் மீது செலுத்துவதும், அக்குழந்தையை (Kissing, Hugging) வருடி விடுவதும், அதனுடன் பேசுவதும் மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இல்லாதவிடத்தில் தாய் சேய் பிணைப்பு அற்றுப்போகும் நிலை உருவாகுவதுடன் குழந்தையின் மூளை மற்றும் மன வளர்ச்சியில் பாதகத்தன்மை ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார் TV பார்ப்பதையோ, பிறருடன் உரையாடுவதையோ, Mobile Phone, laptop, tab போன்றவற்றை உபயோகிப்பதையோ முற்றாக தவிர்த்தல் மிகவும் இன்றியமையாததாகும். ஏனெனில் இவ்வாரான கவனச் சிதைவுகள் தாய் சேய் பிணைப்பை அற்றுப்போகச் செய்வதோடு, பால் பிள்ளையின் சுவாசத்தொகுதியை சென்று சிக்கி மரணம் நிகழும் வாய்ப்புகளையும் அதிகப்படுத்துகின்றன.

ஆக ஒரு தாய் பால் ஊட்டலின் போது முழுக் கவனத்தையும் தனது குழந்தையில் செலுத்துவதும், தாலாட்டுப் பாடுவது, குழந்தையுடன் உரையாடுவது, குழந்தைக்கு கேட்கும் வண்ணமாக குர்ஆன் ஓதுவது அதன் வசனங்களை நல்ல ராகமாக ஓதக்கூடிய கிராஅத்களை ஒலிக்கச் செய்வது போன்றவை மிகச் சிறந்த தூண்டல்களாக இறுக்கின்றன. 

ஒரு குழந்தை வளரும் போது அதன் விருத்திப்படிகள் அனைத்தும் வளர்ச்சி அடைய வேண்டியவையாக உள்ளன. செவிப்புலன்களினால் மூளைக்கு உட்செலுத்தப்படுகின்றவை நல்ல விடயங்களாக இருக்க வேண்டியவைகயாக இருக்கின்றன.

ஆகையினால் பெற்றோர் அமைதியாக பேசுவதும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இருப்பதும், ஹராமான இசையினை ஒலிக்கச் செய்யாதிருத்தலும் இன்றியமையாதவையாக உள்ளன. இல்லையெனில் இவை யாவும் ஒரு நேர்மறைத் தாக்கத்தை வளர்கின்ற மூளையில் செலுத்தி பிற்காலத்தில் அக்குழந்தையின் நன் நடத்தையினை கேள்விக்குறியாக்கிவிடக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாக உள்ளன.

தாயின் குரலுக்கோ அல்லது சப்தங்களுக்கு ஒரு குழந்தை எந்தவிதமான துலங்களையும் (உதாரணமாக சிரித்தல், திரும்பிப் பார்த்தல், உற்றுப் பார்த்தல் போன்றவற்றை) காட்டாதவிடத்து மிக அவசரமாக வைத்திய ஆலோசனையையப் பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.

ஏனெனில் அதிகமான குழந்தைகள் அவர்கள் 2,3 வயதாகியும் பேசாமல் இருக்கின்ற போது தான் அதிகமான பெற்றோர்கள் அங்கலாய்த்து வைத்திய ஆலோசனையை பெற முனைகின்றனர். அப்போது தான் அவர்களது குழந்தைகள் பேசாமல் உள்ளதற்கு காரணம் அவர்களின் காதுகள் கேளாமல் உள்ளது என்று தெரியவருகின்றது. இதன்படி செய்யப்படும் சிகிச்சைகள் பூரண வெற்றியளிக்ககூடியவையாக இல்லை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையினால் மிக ஆரம்ப நிலைகளில் ஒர குழந்தையின் செவிப்புலனின் ஆற்றலை நாம் கவனமாக பரிசீலிப்பதும் அது பற்றி அக்கறை கொள்வதும் பெற்றோரின் மிக முக்கிய பொறுப்புக்களில் நின்றும் உள்ளனவாக இருக்கின்றன. 

ஊமைத்தன்மைக்கு காது கேளாமையே முக்கிய காரணம் என்ற இந்த நவீன விஞ்ஞான உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே அல்குர்ஆன் தெளிவாக சொல்லியுள்ளதை நோக்கும் போது அது இறைவனிடம் இருந்து வந்த வேதம் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

சூறா அல்-அன்ஆம் 35 வசனம், மற்றும் அன்பால் 22 வசனம் என்பன ஊமையாளிகளைப் பற்றி சொல்லும் முதலில் அவர்களை செவிடர்களாகவும் பின்னரே அவர்களை ஊமைகளாகவும் சித்தரிக்கின்றது. 'யார் அல்லாஹ்வின் கட்டளையை புறக்கணிக்கின்றார்களோ அவர்கள் செவிடர்களும், ஊமைகளும் தான் என்ற இந்த வசனங்கள் மூலம் செவிப்புலனின் முக்கியத்துவத்தை நம்மால் விளங்க முடிகின்றது. 

பார்வைப் புலன்களின் பரப்பும், பார்க்கும் திறனும் அவைகளை உரிய முறையில் தூண்டல்களை மேற்கொள்வதும் மிக ஆரம்பகாலங்களில் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்காக குழந்தைகளின் முகம் பார்த்து சிரிப்பது, அவர்களின் படுக்கைக்கு பக்கத்தில் வௌ;வேறு நிறங்களில் அமைந்த விரிப்புகளை, தலையனைகளை, படங்களை வைப்பது போன்றன மிகவும் உசிதமானவையாக உள்ளன. பிறந்து சில வாரங்களில் கறுப்பு, வெள்ளை நிறங்களில் அமைந்த பொருட்களை, படங்களை குழந்தைகளுக்கு பார்க்கும் படியாக வைப்பதும், சிறு காலம் செல்லச் செல்ல ஒரிரு மாதங்களில் சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற வர்ணத்தில் அமைந்த பொருட்களையும், படங்களையும் குழந்தைகளுக்கு காணப்பிப்பது அவர்களின் பார்வைத் தூண்டல்களை அதிகம் மேம்படுத்தும்.

அது போன்று குழந்தைகளை காலைவேளையில் வெளிச் சூழலில் வைத்து சூரிய ஒளி அவர்களின் உடம்பில் படும் படியாக அவர்களை தூக்கி உலாவருவதும் இயற்கையின் மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள் போன்றவற்றைக் காட்டுவதும் மிகவும் உசிதமானவையாக காணப்படுகின்றன.

இவற்றின் மூலம் குழந்தையின் மூளையின் வளர்ச்சி பல்வேறு படித்தரங்களில் முன்னேறவும், அவர்களது சிந்தனைத் திறன் மேம்படவும் ஏதுவான நிலைகளை தோற்றுவிக்க முடியும். எனவே பெற்றோர்கள் சிறு குழந்தைகளின் தேவைகள் பால் அருந்துவதும், தூங்குவதும் தான் என்ன எண்ணத்தை மாற்றிக் கொள்வதும், அவர்களுக்கு உரிய தூண்டல்களை வழங்குவதும் தங்களின் கடமைகளில் ஒன்றாக சிரத்தை எடுத்துக்கொள்வதும் அவசியமாகின்றது. 

அடுத்த தூண்டல்படிகளில் முக்கியமாக குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடுவதும், அவர்களோடு சேர்ந்து பெற்றோர்கள் தங்கள் நேரங்களை செலவு செய்வதும் அடங்குகின்றது. இதுவே ஒரு குழந்தையின் மனோதிடத்தை, எதிர் காலத்தில் அக்குழந்தையின் நடத்தைக் கோலத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்குகின்றது. எனவே பெற்றோர்கள் இதில் கூடிய கவனம் செலுத்துவது மிக மிக இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது.

ஓவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுடன் தினமும் மனம் விட்டு பேசுவதற்கும் அவர்களோடு விளையாடுவதற்கும், அவர்களை வெளியில் அழைத்துச் சென்று இயற்கையின் வனப்புக்களை, அல்லாஹ்வின் அற்புதங்களை, அவன் படைப்பின் செம்மை நிலைகளை விளங்கப்படுத்துவதற்கும் பழகிக் கொள்ள வேண்டும். 

ஒரு குழந்தை வளர்ந்தது முதல் அதன் வளரச்சிப் படிகள் பல்வேறு நியமங்களை கொண்டு அளவீடு செய்யப்படுகின்றது. முதலாவது உடல் நிலை வளரச்சி படிகள், இது குழந்தையின் நிறை, நீளம், உயரம், தலையின் சுற்றளவு போன்ற காரணிகளில் அளவிடு செய்யப்படுகின்றன. பாலுட்டுகின்ற குழந்தையில் பிறந்த நிறையில் இருந்து படிப்படியாக நிறை அதிகரித்து செல்வதும், அது ஒரு சீரான வேகத்தில் அதிகரித்துச் செல்வதும் அவசியமாக உள்ளன.

இதற்காக குழந்தைகளை உரிய கால அளவுகளில் நிறுத்துக் கொள்வதும், கிளினிக்களுக்கு அழைத்துச் செல்வதும் கட்டாயமாகும். இது பற்றி விபரங்கள் யாவும், ஒரு குழந்தை பிறந்ததும் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படுகின்ற சுகாதார வளர்ச்சிப் பதிவேட்டில் (CHDR) மிகவும் தெளிவாக கூறப்பட்டுள்ளன. ஆகவே இவற்றை ஒவ்வொரு தாயும், தகப்பனும் வாசித்து விளங்கிக்கொள்வதும் அது பற்றிய மேலதிக விளக்கங்களை குடும்ப சுகாதார உத்தியோகத்தரிடம் கேட்டு தெரிந்து கொள்வதும் அத்தியவசியமாகும். 

அதுபோல ஒவ்வொரு குழந்தையின் மூளையின் தொழிற்பாடு வளர்ச்சிப்பதிவும் அதன் செயல்களைக் கொண்டு அளவீடு செய்யப்படுகின்றன. இவ்வாறான வளர்;ச்சி நிலைப் படிகளை ஒவ்வொரு குழந்தையும் அந்த அந்த காலப்பகுதியில் அடைந்து கொள்வதை பெற்றோர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக முகம் பார்த்து சிரித்தல், குழந்தை தலையை உயர்த்துதல், சப்தமிட்டு சிரித்தல், கைகளால் பொருட்களை பற்றிப் பிடித்தல், குப்புற விழுதல், இப்படி ஒவ்வொரு மாதங்களிலும் ஒவ்வொரு புதிய (அடைவு மட்டங்களை) தத்தமது குழந்தைகள் அடைந்துள்ளனவா என்பதை பெற்றோர்கள் கவனிப்பதும், அது பற்றிய அறிவை விருத்தி செய்து கொள்வதும் காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது. ஏனெனில் நமது வருங்கால சந்ததிகளை நல்ல நிலையில் வளர்த்தெடுப்பது நமது கைகளிலே தங்கியுள்ளது என்பதை நாம் மறந்துவிடலாகாது. 

யார் சிறுவர்களுக்கு இரக்கம் காட்டவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல என்ற இந்த நபி மொழி நமக்கு சொல்லும் செய்தியும் இதுவாகத்தான் இருக்கின்றது. ஒரு நாள் நபியவர்கள் தங்களது பேரக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்ட ஒரு மனிதன் யாரஸுலுல்லாஹ் நீங்கள் குழந்தைகளுடன் விளையாடுவதா? இவர்கள் சிறுவர்கள் ஆயிற்றே இவர்கள் எப்படி உங்கள் சபையில் பிரசன்னமாக முடியும் என்று ஆச்சரியம் கலந்த தொனியின் கேட்டபோது நபியவர்கள் அந்த மனிதரிடம் கேட்டார்கள். உனக்கு குழந்தைகள் உள்ளனவா? அதற்கு அவர் சொன்ன பதில் ஆம் எனக்கு குழந்தைகள் உள்ளன. ஆனால் நான் அவர்களை கொஞ்சவோ, அவர்களுடன் விளையாடுவதோ கிடையாது என்று சொன்ன போது அதை நபியவர்கள் கண்டித்து, குழந்தைகளுக்கு இரக்கம் காட்டுமாறு சொன்ன செய்திகளையும் அதற்கு உதாரணமாக நபியவர்களே வாழ்ந்து காட்டிய பல்வேறுபட்ட செய்திகளும் நாம் பரவலாக காணக்கூடியதாக உள்ளது. 

அலி (ரழி) அவர்களின் ஓர் பிரபல்யமான செய்தி நம்மில் பலர் அறிந்த செய்திதான். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் கற்ற தற்கால கல்வியைமட்டுமின்றி எதிர்காலத்துக்கான கல்விகளையும் கற்றுக்கொடுங்கள். ஏனெனில் எதிர் காலத்தில் வாழ வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். என்ற செய்தி ஒன்றே நமக்கு இரத்தினச் சுருக்கமாக எல்லா விடயங்களையும் சொல்லிவிடுகின்றது.

நமது முயற்சியும், இலக்கும் இதுவாகத் தான் இருக்கவேண்டும். இதற்கான ஆரம்பம் மிகச் சரியாக அமைகின்ற போதுதான் நமது குழந்தைகள் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கான சிறந்த அறிவுகளை கல்வி ஞானங்களை பூரணமாக பெற்றுக்கொள்ளக்கூடியவர்களாக மாறுவார்கள். இந்த ஆரம்ப படித்தரங்கள் யாவும் ஒரு குழந்தை கருவுற்றதில் இருந்து ஆரம்பித்து அதன் பாலூட்டல், பார்வைத் திறன் விருத்தி, கேள்விப் புலன் விருத்தி என விரிந்து செல்கின்றது. இவை யாவும் சரியாக அமைகின்ற போதே மூளையின் விருத்தியும் சரியாக அமைந்து விடுகின்றது. 

ஓவ்வொரு குழந்தையும் உங்கள் ஓவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அமானிதமாகும். அந்த அமானிதம் பற்றி நாம் ஓவ்வொருவரும் நாளை மறுமையில் விசாரிக்கப்படவிருக்கிறோம். அதனால் நமது குழந்தைகளில் ஆரம்ப கால வளர்ச்சி நிலையை மிக உன்னிப்பாக அவதானிப்பதும் அவற்றிக்கான தூண்டல்களை உரிய முறையில் வழங்குவதும் பெற்றோரினதும், ஏனைய உறவுகளினதும் அமானிதமாகும்.

இதற்காக நமக்கு நமது மார்க்கம் முன்னோர்கள் வழங்கியுள்ள அறிவுரைகள், நமது மூத்தோர்களின் ஆலோசனைகள் என்பன அதிகம் நன்மை பயப்பனவைகளாக உள்ளன. நவீன கால தொலைத் தொடர்பு சாதனங்களில் மூழ்கிவிடாமலும், பொட்டிப் பால், பொலித்தீனில் அடைக்கப்பட்ட குழந்தை உணவுகளை நமது குழந்தைகளுக்கு பழக்கிவிடாமல் அவர்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதும், 6 மாதங்களின் பின் நமது பாரம்பரிய உணவுகளுக்கு அவர்களை பழக்கப்படுத்துவதும் நமது கைகளிளே தங்கியுள்ளன.

அதிகமாக பழங்களை, மரக்கறிகளை, இறைச்சி, மீன், முட்டைகளை தாய்ப்பபால் ஊட்டும் தாய்மார்கள் தங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமானது. உடனடி உணவுகள், பொதியாக்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் முற்றாகவோ இயலுமான அளவிலோ தவிர்ந்து கொள்வதும் நமது சூழலில் கிடைகின்ற உணவுகளை நமது அன்றாட உணவுகளாக உட்கொள்வது நீண்ட கால தேகாரோக்கியத்திற்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிப்படிகளுக்கும், குழந்தையின் எதிர்கால பழக்க வழக்கங்களுக்கும் உந்து சக்தியாக அமையும். 

ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை வளர்ப்பு சம்பந்தமான நமது மாரக்கத்தின் போதனைகளை பேணி நடப்பதோடு அது பற்றிய தெளிவுகளை தேடிப் பெற்றுக்கொள்வதும் ஓவ்வொரு குழந்தைகளையும் நல்ல குழந்தைகளாக எதிர்கால தலைவர்களாக சமுதாயத்திற்கு விட்டுச் செல்வதும் பெற்றோர்களின் எதிர்காலத்திற்கும் நாளைய எதிர்கால சமூகத்தின் நல் வாழ்க்கைக்கும் உசிதமான அத்தியவசியமான ஓர் அம்சமாகும் என்பதை விளங்கி நடத்தல் அவசியமாகும்.

(Zikra 2016)