நுபுவ்வத்திற்கு முன்பு நபியவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் (إِرْهَاصَات)

நுபுவ்வத்திற்கு முன்பு

நபியவர்களுக்கு வழங்கப்பட்ட

அற்புதங்கள் ( إِرْهَاصَات)

Al-Usthaz F.R. Hamid (Abbasi, B.A. Qaseem University)

 

இறுதி உம்மத்தாகிய நமது சமுதாயத்திற்கு நேரான பாதையை காட்டுவதற்காக அல்லாஹ் தஆலா முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக அனுப்பி வைத்தான். அவன் கொடுத்தனுப்பிய ரிஸாலத்தை (தூதுத்துவத்தை) உண்மைப்படுத்துவதற்காக பல முஃஜிزதாத் (அற்புதங்கள்) களை கொடுத்து சிறப்பித்தான்.

நபியவர்களுக்கு நுபுவ்வத் கொடுக்கப்படுவதற்கு முன்பிருந்த காலப்பகுதியிலும் சில அற்புதங்கள் அவர்களிடமிருந்து வெளிப்பட்டன. இவை மக்களுடைய வழமைக்கு மாற்றமானதாகவும் தனிப்பட்ட ரீதியில் நபியவர்களுக்கு சிறப்பை வெளிக்காட்டக்கூடியவையாகவும் காணப்பட்டன. இவற்றுக்கு إِرْهَاصَات துக்கள் என்று கூறப்படும். அல்லாஹூத்தஆலா அவற்றைக் கொண்டு நபியவர்களுடைய மகத்துவத்தையும் கண்ணியத்தையும் அதிகப்படுத்திய அதே வேலை نُبُوَّة த்திற்கு முன்னேற்பாடுகளாகவும் அமைத்தான்.

நுபுவ்வத்திற்கு முன்பு நபியவர்களுக்கு வழங்கப்பட்ட إرهاصات க்கள் (அற்புதங்கள்) பல ஏற்பட்டதாக பல அறிவுப்புக்களில் வந்துள்ளன. என்றாலும் அவற்றில் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட பல விடயங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமானiவாக காணப்படுகின்றன.

ஏனெனில் நபியவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்புக்கள், அற்புதங்கள் என்ற வருகின்ற சந்தர்ப்பத்தில் இட்டுக்கட்டப்பட்டவை மற்றும் பலவீனமான செய்திகளையெல்லாம் நிச்சயமாக அவ்வாறு நடந்திருக்கக்கூடும் என்பதாக கருதுகின்றனர். இது மக்களிடம் காணப்படும் பெரும் ஒரு தவறாக காணப்படுகின்றது. எனவே إرهاصات த்துக்கள் விடயத்தில் நபியவர்களிடமிருந்து வெளிப்பட்டவற்றையும் அவ்வாறு நிகழாதவற்றையும் பிரித்தறிவது கட்டாயம்.
 

1) பிறப்பிற்கு முற்பட்ட பகுதியில் ஏற்பட்டவை
 

குறிப்பாக நபியவர்களுடைய பிறப்பை மாத்திரம் அடிப்படையாக வைத்து அற்புதங்கள் பல நடைபெற்றதாக மக்கள் மத்தியில் பரவியிருந்தாலும் ஒன்றை மாத்திரம் தவிர ஏனையவை அனைத்தும் பலவீனமான மற்றும் அடிப்படையே அற்ற இட்டுக்கட்டப்பட்ட அறிவுப்புக்களாகவே இருக்கின்றன.

நபியவர்களுடைய பிறப்பின் போது

  • தாயுடைய வயிற்றிலிருந்து ஒளி வெளிப்பட்டதை

அறிவிக்கக்கூடிய ஹதீஸ்கள் ஒன்றையொன்று பலப்படுத்தி حَسَن என்ற அந்தஸ்துக்கு வந்திருப்பதைக் காணமுடிகின்றது. البداية والنهاية என்ற கிரந்தத்திலே பலமான அறிவுப்புக்களுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதாவது தனது தாய் தன்னை பெற்றெடுத்த போது அவளிடமிருந்து ஒரு ஒளி வெளியாகி الشام பூமயிலுள்ள بُصْرى வின் மாளிகைகள் பிரகாசிப்பதை கண்டாள் என்பதாக நபியவர்கள் கூறினார்கள். இது நபியவர்கள் இறைவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்ட தனிச் சிறப்பாகும்.

அடுத்ததாக நபியவர்கள் கத்னா செய்யப்பட்ட நிலையில்தான் பிறந்தார்கள் என்பது பொதுமக்கள் முதல் உலமாக்கள் வரை பலரும் பேசக்கூடிய ஒன்றாகும். காரணம் என்னவெனில் நபியவர்கள் இந்நிலையில் பிறந்தார்கள் என்பது பல வழிகளில் வந்திருப்பதால் அதிகமானோர் அவற்றை ஸஹீஹாக அறிவுப்புக்கள் போன்று கருதிவிட்டனர்.

ஆனால் முதலில் அப்பாஸ் அவர்களைத் தொட்டும் வந்துள்ள ஹதீஸைப் பார்ப்போம். அப்பாஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் 'நபி (ஸல்) அவர்கள்

  • கத்னா பகுதி வெட்டப்பட்டவராகவும்
  • தொப்புல் பகுதி வெட்டப்பட்டவராகவும் பிறந்தார்கள்.'

இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் வரிசையில் يونس بن عطاء என்பவர் வருகிறார். இவர் இட்டுக்கட்டப்பட்ட விடயங்களை அறிவிப்பவராக இருக்கின்றார். எனவே இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று சந்தேகிக்கின்ற அளவிற்கு பலவீனமானதாக இருக்கின்றது.

அதே போன்று நபியவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் 'நான் கத்னா எடுக்கப்பட்டவராக பிறந்ததும் எனது உறுப்பை எவரும் காணாததும் அல்லாஹ் எனக்கு செய்துள்ள சங்கையாகும்.' இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் வரும் سفيان بن محمد மற்றும் ابن عرفة போன்றோர் மூலம் பலவீனமடைகின்றது.

மேலும் ابن عباس ، ابن عمر ، أبو هريرة போன்ற ஸஹாபாக்களைத் தொட்டும் நபியவர்கள் கத்னாவுடன் பிறந்தது சம்பந்தமாக அறிவுப்புச் செய்யட்டடுள்ளது. இருப்பினும் அவற்றின் அறிவிப்பாளர் வரிசையிலே மிக பலவீனமானவர்கள் இடம் பெற்றிருப்பதால் இவை பலவீமடைகின்றன.

பொதுவாக கத்னாவுடைய விடயத்திலே வரும் ஹதீஸ்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை அல்லது சந்தேகிக்கப்படக்கூடியவையாக இருப்பதால் இவை மூலம் ஆதாரம் பிடிப்பது முடியாது.

மேற்கூறப்பட்ட إرهاصات க்களை தவிர நபியவர்களின் பிறப்பின் போது அப்பிறப்பிற்கு நன்மாறாயமாக

  • مكة விலுள்ள சில சிலைகள் விழுந்ததாகவும்
  • கிஸ்ராவுடைய மாளிகை நடுங்கி அங்குள்ள மேல் மாடங்கள் உடைந்து விழுந்ததாகவும்
  • மஜூஸிகளின் (நெருப்பு வணங்கிகளின்) தீ அணைந்து சென்றதாகவும்
  • ஸாவா என்று சொல்லப்படக்கூடிய ஒரு குளம் வற்றிப்போனதாகவும்

நபியவர்களின் வரலாறை பதிவு செய்யும் பல வரலாற்றாசிரியர்கள் கூறியுள்ளனர். இவையனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட அல்லது منكر ரான அறிவுப்புக்களாகவே வந்துள்ளன.

அதே போன்று நபியவர்கள்

  • தொட்டிலில் இருக்கும் போது மழலை மொழியில் சந்திரனுடன் கதைத்ததை عباس கண்டதாக

வரும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஹ்மத் இப்னு இப்ராஹீம் எனும் பொய்யர் மூலம் இட்டுக்கட்டப்பட்டதாக இருக்கின்றது. எனவே இவற்றில் நாம் மிகுந்த தெளிவுடன் இருப்பது கட்டாயமாகும்.
 

2) பிறப்பிற்கும் நுபுவ்வத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்டவை

நபியவர்களுடைய பிறப்பிலே எவ்வாறு அற்புதங்கள் நிகழ்ந்ததோ அதே போன்று பிறப்பிற்கும் நுபுவ்வத்திற்கும் இடைப்பட்ட காலப்பிரிவில் இறைவன் ஏராளமான அற்புதங்களை நிகழ வைத்தான்.

நபியவர்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போதே ஹலீமா என்ற பெயருடைய கிராமப்புரத்தைச் சேர்;ந்த ஒரு பெண் நபியவர்களுக்கு பாலூட்டி வளர்க்கின்றாள். அப்பெண்ணிடம் நபியவர்கள் தனது நான்காவது அல்லது ஐந்தாவது வயதை அடைந்திருந்த போது ஒரு நாள் சிறுவர்களுடன் இணைந்து விளையாடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த நேரத்தில்

  • ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களின் நெஞ்சைப் பிளந்து இதயத்தை வெளியெடுக்கிறார்கள். இவ்விதயத்திலே சைத்தானின் ஒரு பங்காக காணப்பட்ட இரத்தக்கட்டியை வெளியேற்றி செம்பிலானாலான ஒரு குவலையில் அவ்விதயத்தை இடுகின்றனர். ஸம்ஸம் நீரினால் அதைக் கீழுவிய பின்னர் பிளக்கப்பட்ட உள்ளத்தை அவ்வாறே இணைத்து இருந்த இடத்திலே மீட்டி வைத்தார்கள்.

இந்த சம்பவம் ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்திலே பதிவு செய்யப்பட்டுள்ள ஸஹீஹான ஹதீஸாகும். இந்த நிகழ்வை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் 'நபியவர்களுடைய நெஞ்சிலே தைக்கப்பட்ட அடையாளத்தை நான் காணக்கூடியவனாக இருந்தேன்.' இந்த ஹதீஸூம் அதே முஸ்லிம் கிரந்தத்திலே இடம்பெற்றுள்ளது.

உண்மையிலே இந்த நிகழ்வு நபியவர்களுக்குக் கிடைத்த பெரும் ஒரு அற்புதமாகவே காணப்படுகின்றது. ஏனெனில் சைத்தானுடைய பங்கை விட்டும் தூய்மைப்படுத்தப்பட்டதன் மூலம் சைத்தானின் ஊசலாட்டங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள். அத்துடன் நபியவர்களை தூதராக இறைவன் தேர்ந்தெடுப்பதற்கு முன் ஏற்பாடாகவும் காணப்படுகின்றது.

சில அறிவுப்புக்கள் நபியவர்களுடைய நெஞ்சு இவ்வாறு பல தடவை பிளக்கப்பட்டதை கூறியிருப்பினும் அவை பலவீனமான அறிவுப்புக்களாகும். இதற்கு மாறாக மேலே கூறப்பட்ட ஒரே ஒரு தடவை மாத்திரம் தான் நுபுவ்வத்திற்கு முன் ஏற்பட்டிருப்பதை ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் அறிய முடிகின்றது. நபியவர்களுக்கு நுபுவ்வத் கிடைத்து 12 வது வருடத்தில் மிஃராஜ் பயணத்தை மேற்கொண்ட போது இரண்டாவது முறையாக நெஞ்சு பிளக்கப்பட்டதை ஸஹீஹுல் புஹாரி; கிரந்தத்திலே இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம்.

நபியவர்களுடைய பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களுடைய பராமரிப்பிலே கட்டளமைப் பருவத்தை அடைந்த நபியவர்களை அபூ தாலிப் வியாபார நோக்கில் சாம் பிரதேசத்திற்கு கூட்டிச் சென்ற நேரத்தில் பஹீரா என்ற ஒரு கிறிஸ்தவ மார்க்க அறிஞரை சந்தித்தார்கள். நபியவர்களுடைய பண்புகளை வைத்து இறுதிநபியென்பதை அறிந்துகொண்ட அந்த மார்க்க அறிஞர் நுபுவ்வத்திற்கான பல அத்தாட்சிகளை கூறுகிறார்.

அதாவது நபியவர்கள் அபூ தாலிப் அவர்களுடன் ஒரு பள்ளத்தாக்கினூடாக அங்கு சென்றபோது

  • மரங்களும் கற்களும் ஸூஜூது செய்ததை வைத்தும்
  • நபியவர்களின் தோல் புயத்தில் உள்ள மடிப்புப் பகுதியில அப்பிள் பழத்தில் வடிவில் நுபுவ்வத்தின் அடையாளத்தை வைத்தும்

நபியவர்களை அறிந்து கொண்டதாக கூறினார்.

அந்த நேரத்திலே நபியவர்களுக்கென நிகழ்ந்த மேலும் பல அற்புதங்களையும் அந்த மார்க்க அறிஞர் கூறிக்காட்டினார். பஹீராவிடம் நபியவர்கள் இருந்த சந்தர்ப்பத்தில்

  • மேகம் அவர்களுக்கு நிழல் கொடுத்துக்கொண்டிருந்ததையும் நபியவர்கள் அங்கு உட்காரும் போது
  • மரமொன்றின் நிழல் அவர்கள் மீது சாய்ந்ததையும்

நுபுவ்வத்தின் அத்தாட்சிகளென பஹீரா கூறிக்காட்டினார்.

மேற்கூறப்பட்ட முக்கியமான நிகழ்வு திர்மிதியில் அபூ மூஸா அல் அச்அரீ என்ற ஸஹாபியைய் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்த ஹதீஸ் ஸஹீஹானதா அல்லது பலவீனமானதா என்பதில் உலமாக்களுக்கு மத்தியில் கருத்து வேற்றுமை இருக்கின்றது. ஹதீஸ் கலையிலே பிரசித்தி பெற்ற நவீன உலமாக்களில் ஒருவரான இமாம் அல்பானி அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹான ஹதீஸ் என குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டதைப் போன்று நபியவர்களுக்கு இறைவன் எவ்வாறு உயிரற்ற வஸ்துக்கள் மூலம் அற்புதங்களை அத்தாட்சிகளை ஏற்படுத்தி வைத்தானோ அதே போன்று உயிரற்ற சடப்பொருளாக காணப்படுகின்ற கல்லும் நபியவர்கள் மீது ஸலாம் கூறியிருக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : 'நான் தூதுவராக அனுப்பப்படுவதற்கு முன்பு மக்காவிலுள்ள ஒரு கல் என் மீது ஸலாம் கூறியதை தற்பொழுது நான் அறிகின்றேன்' என்பதாக கூறினார்கள்.

உண்மையிலே அல்லாஹுத்தஆலா இவ்வாறு நபியவர்களுக்கென்று குறிப்பாக பல அற்புதங்களை வழங்கி நுபுவ்வத்திற்கு முன்பே சிறப்பித்து வைத்தான். அவ்வாறான அற்புதங்களை நாமும் அறிந்து நமது நபியவர்களைத் தூய்மைப்படுத்துவோம்.

அதே வேலை நபியவர்களுடைய வரலாறுகளை கற்கின்றபோது நாம் அறிகின்ற உறுதியற்ற மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் தரிபடாதவற்றை வேறுபிரித்தறிவதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்பாளிப்பானாக!

(from Zikra)