ஹிஜ்ரி வருடக் கணிப்பீடு: எப்போது? எதற்காக?

ஹிஜ்ரி வருடக் கணிப்பீடு: எப்போது? எதற்காக?

Al-Usthaz W. Dheenul Hasan (Bahji)

இரண்டாம் கலீபா உமர் (றழி) அவர்களது ஆட்சிக் காலத்திலேயே முஸ்லிம்களுக்கென தனியான ஒருவருடக் கணிப்பீடு இருக்கவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது, இதன் அவசியத்தை உணர்த்திய சம்பவம் எது என்பதைக் குறிப்பிடும் போது வரலாற்று ஆசிரியர்களில் பலர் வெவ்வேறு வித்தியாசமான சம்பவங்களைக் கூறியுள்ளதாக இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) தனது பத்ஹுல் பாரீ எனும் நூலில் பதிவுசெய்துள்ளார்கள்.

அவைகளில் சில பின்வருமாறு :

  • வரலாற்றாசிரியர் அபூநுஐம் அவர்கள் தனது நூலில் கலீபா உமர் (றழி) அவர்களின் பிராந்திய கவர்ணர்களில் ஒருவராகிய அபூ மூஸா (றழி) அவர்கள் அரச தலைiமையகத்தில் இருந்து முழுமையான திகதி குறிப்பிடப்படாத கடிதங்கள் வருவதாக முறையிடவே உமர் (றழி) இஸ்லாமிய வருடக் கணிப்பை ஏற்படுத்தினார்கள் என எழுதியுள்ளார்கள்.
  •  
  • இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் தனது அல் அதபுல் முப்ரத் என்ற நூலில் கலீபா உமர் (றழி) அவர்களின் சமூகத்திற்கு மாதம் மாத்திரம் குறிப்பிடப்பட்டு வருடம் குறிப்பிடப்படாத ஒரு பணவிடயம் பற்றிய ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதனையடுத்து வருடத்தைக் குறிப்பிட வேண்டிய தேவை உணரப்பட்டதாகவும் கூறியுள்ளார்கள்.

இஸ்லாமிய உம்மத்தின் தனித்துவத்தை அடையாளப்படுத்தல்

உலகின் பலநாடுகளைச் சேர்ந்த பல சமூகத்தினர் தம்மிடையே வருடங்களின் மாதங்களையும் அவற்றின் எண்ணிக்கைகளையும் கணிப்பபதற்கு தமது மதகலாச்சார பின்னணிகளைக் கொண்டவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதைக் காணலாம்.

அன்றைய நபித்தோழர்கள் அன்று ரோமர்கள் எகிப்தியர்கள் போன்றவர்களிடம் பழக்கத்திலிருந்த வருடக் கணிப்பீடுளைப் பயன்படுத்தாமல் இஸ்லாமிய உம்மத்தின் அடையாளத்துடன் வருடங்களைக் கணிக்க விரும்பினார்கள், வருடக் கணிப்பீட்டின் அடிப்படைகள் ஒரு சமூகத்தின் வரலாற்று மேம்பாட்டையும் அதன் கொள்கைப் பற்றையும் பிரதிபலிப்பது கண்கூடு. வருடம், மாதம் என்பன வரலாற்று நிழ்வுகளையும் அன்றாடவாழ்வின் நடப்புகளையும் பதிவதற்கு அவசியமானதும் அடிக்கொருமுறை பாவிக்கவும் ஞாபகப்படுத்தவும் தேவைப்படுபவையாகும்.

ஹிஜ்ரி 17 அல்லது 16 வது ஆண்டில் முஸ்லிம்களுக்கான ஒரு வருடக் கணிப்பை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது சம்பந்தமாக கலீபா உமர் (றழி) அவர்கள் நபித்தோழர்களுடன் ஆலோசனை நடாத்தினார்கள், அதன்போது அருமை நபியவர்கள் பிறந்தது, அவர்கள் இறைத் தூதராக அனுப்பப்பட்டது, அவர்கள் மரணமானது, அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தது என முக்கிய வரலாற்று நிகழ்வுகள் வருடக்கணிப்பீட்டின் அடிப்படையாகக் கொள்வதற்கு முன் மொழியப்பட்டன,

அவற்றில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபிரித்து தெளிவு படுத்தியதும், இறைநிராகரிப்பின் ஆதிக்கத்-திலிருந்த ஊரைத்துறந்து ஓரிறைக் கொள்கையைப் பாதுகாக்க முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த தியாகத்தை பிரதிபலிக்கக்கூடியதும், இஸலாமிய பிரச்சாரப் பாதையில் மட்டுமல்ல உலக வரலாற்றுப் பாதையிலேயே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததுமான ஹிஜ்ராப் பயணமே மிகவும் பொருத்தமானது என முடிவுசெய்யப்பட்டது.

நபித்தோழர்கள் எங்கும் எதிலும் இஸ்லாம் என சகலவற்றையும் இஸ்லாமிய மயப்படுத்துவதில் எவ்வளவு தூரம் கவனமாக இருந்துள்ளார்கள் என்பது வருடக் கணிப்பீட்டில் எமது இஸ்லாத்தின் வரலாற்றை மையப்படுத்தி தூரநோக்குடன் அவர்கள் செயற்பட்டிருப்பதன் மூலம் புலப்படுகின்றது.

வருடங்களின் எண்ணிக்கையை கணக்கிடு-வதற்கு ஹிஜ்ரா சம்பவத்தை மையமாகத் தெரிவுசெய்த அவர்கள் வருடத்தின் முதல் மாதமாக அரேபியர்களிடம் தொடர்ந்துவந்த வழக்கின்படி முஹர்ரம் மாதத்தையே அமைத்துக்கொண்டார்கள். மக்கள் புனித ஹஜ்கடமையை நிறைவேற்றி பாவக்கரைகளை நீக்கி வாழ்க்கையில் ஒருபுதிய அத்தியாயத்தை துவங்குவதற்காக தமது ஊர்களுக்குத் திரும்பிச் செல்வது முஹர்ரம் மாதத்தில் என்பதாலும் நுபவ்வத்தின்பின் 13 ம் ஆண்டின் இறுதியாகிய துல்ஹிஜ்ஜா மாதத்தில் மதீனாவாசிகளுடன் அகபா உடன்படிக்கை செய்துமுடிக்கப்பட்டபின் அடுத்த மாதமாகிய முஹர்ரத்திலேயே ஹிஜ்ராப் பயணம் முழுவீச்சாக இடம்பெறத்தொடங்கியது என்பதாலும் முதல் மாதமாக இம்மாதம் அமைக்கப்பட்டது.

சந்திரவருடக் கணிப்பின் சிறப்புகள்

சந்திரன் பூமியைச் சுற்றிவருவதை அடிப்படையாகக் கொண்டு மாதங்களை அளவிட்டு வருடத்தைக் கணிப்பது சந்திர (பிறை) வருடக் கணிப்பு என்றும் பூமி சூரியனைச் சுற்றிவருவதை அடிப்படையாகக் கொண்டு வருடத்தைக் கணிப்பது சூரியவருடக் கணிப்பு என்றும் அழைக்கப்படும். இவ்விரண்டும் முறையே இஸ்லாமியவருடம், ஆங்கிலவருடம் எனவும் குறிக்கப்படும். இவற்றில் பிறைமாதக் கணிப்பு மற்றதைவிட பல காரணங்களால் சிறப்பும் முக்கியத்துவமும் கொண்டதாகும், அவற்றில் சிலவற்றை பின்வரும் வரிகளில் நோக்கலாம் :

  • வல்ல அல்லாஹ் பிறைகளை மாதங்களைக் கணிப்பதற்காக ஆக்கியுள்ளான் என்பதை புனித அல்-குர்ஆன் பின்வரும் வசனத்தில் எடுத்தியம்புகின்றது. (நபியே) பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள் (அதற்கு) அவை மனிதர்களுக்கும் ஹஜ் (வணக்கத்து)க்கும் நேரங்களைக் குறிப்பிடுபவை என நீர் கூறுவீராக. (அத்தியாயம் 02 வசனம் 189).
  •  
  • பிறைமாதக் கணிப்பு சூரியமாதக் கணிப்பைவிட நேர்த்தியான அளவில் மட்டுப்படுத்தப்பட்டதும் மாறாத இயற்கைக் கோள்களின் அசைவு-களுடன் முழுமையாக சம்பந்தப்பட்டதாவும் உள்ளது. பிறைகளின் தோற்றம் மறைவிற்கு மாத்திரம் ஏற்ப சந்திர மாதம் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதாகக ணிக்கப்படுகின்றது. ஆங்கில மாதமாகிய சூரிய மாதம் சூரியனின் சுழற்சியை வைத்துக் கணிக்கப்படுவதாக சொல்லப் பட்டாலும் இம்மாதங்ளுக்கான நாட்களின் அளவுகள் முழுமையாக இயற்கையுடன் சம்பந்தப்படாமல் வித்தியாசமான எப்போதும் ஓரே நிலையிலான கணக்குகளுடன் அமைக்கப்பட்டுள்தைக் காணலாம். ஆங்கில மாதங்களில் ஒன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை 28 நாட்களாகவும் வேறு இறு மாதங்கள் அடுத்தடுத்ததாக 31 நாட்களைக் கொண்டதாவும் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஆங்கில மாதங்களின் பெயர்கள் முற்காலத்து அரசர்கள் பலரது பெயரைக் கொண்டவையாகும். அவர்களில் சிலரை சிறப்புப்படுத்துவதற்காக அவர்களது பெயர்களைக் கொண்ட மாதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாகவே வரலாற்று ஆய்வாரள்கள் கருதுகின்றனர்.
  •  
  • சந்திரமாதக் கணிப்பை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பாமரர்கள் உட்பட எல்லோராலும் அறிந்து கொள்ள முடியும். சூரியன் சில காலங்களில் உதிக்காத துருவப்பகுதிகளிலும் சந்திரன் எப்போதும் போல் தோற்றமளிக்கும். முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் பிறைமாதக் கணிப்பை அவர்கள் தெரிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், அவர்களது மார்க்க அனுஷ்டானங்களுக்கும் வேறு பல விடயங்களுக்கும் பிறைமாதக் கணிப்பின் படியே மாதங்களும் வருடங்களும் கணிக்கப்-படுவது கட்டாயமானதாகும். நோன்பு ஹஜ்' போன்ற வணக்கங்களின் காலமும் பெருநாள் தினங்களும், ஸகாத் கொடுப்பதற்கான வருட அளவும், இத்தாகால அளவும் ஆண் பெண் பருவமடைவதற்கான வயதின் அளவும் இன்னோரன்ன பல அம்சங்களும் பிறைமாதக் கணக்கின்படியே அமைய வேண்டும்.

இவ்வளவு சிறப்பும் முக்கியத்துவமும் உள்ளடங்கிய இஸ்லாமிய பிறை மாதங்களையும் வருடங்களையும் அறிந்து வைப்பதிருப்பதிலும் அவற்றை நடைமுறை வாழ்க்கையில் பழக்கப்படுத்திக் கொள்வதிலும்  நமது இலங்கை நாட்டு முஸ்லிம்கள் மிகவும் கவனயீனமாகவே இருக்கின்றனர். வருடப்பிறப்புகளைப் பெருநாளாகக் கொண்டாடுவது அடிப்படையில் மாற்றுமதத்தைச் சார்ந்தோர்களது பழக்கமாகும்.

அவர்களில் பலரது பெருநாட்கள் இதனையொட்டியே கொண்டாடப்படவதைக் காணலாம். முஹர்ரம் மாதம் ஆரம்பமாகும்போது இஸ்லாமியப் புதுவருடத்தை ஆரவாரமாகக் கொண்டாடும் எம்மில் பலருக்கு பிறைமாதங்களின் அரபுப் பெயர்களும்; சிலநேரங்களில் தற்போது ஹிஜ்ரி எத்தனையாம் வருடம் என்பதும் தெரியாமலிருப்பது ஆச்சரியமே. 

பொதுவாக நமது நாட்டிலும் சர்வதேச அளவிலும் பிறைமாதத் திகதிகளை மாத்திரம் பயன் படுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாது என்பது உண்மையே. எனினும் எமது இஸ்லாத்தின் வரலாற்றுப் பின்னணியுடனும் மார்க்கவிடயங்களுடனும் தொடர்புடைய எமது தனித்துவத்தைப் பிரதிபலிக்கின்ற ஹிஜ்ரி வருடங்களையும் பிறை மாதங்களையும் அவற்றின் திகதிகளையும் நாம் அறிந்திருக்க வேண்டும். பரவலாக நாம் பயன்படுத்தும் ஆங்கிலவருடமுறை கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கை-யினைத் தழுவியதாகும். ஈஸா (அலை) அவர்களைக் கடவுள் என நம்பியிருக்கும் அம்மக்கள் அந்த நபியினது பிறப்பை மையப்படுத்தியே வருடங்களைக் கணிக்கின்றனர்.

அதனை ஆங்கிலத்தில் சுருக்கமாக் குறிக்கும் போது A.D. என எழுதுவர். இதனை நாமும் எழுதுகின்றோம், இது Anno Domini என்ற லத்தீன் சொற்களின் சுருக்க வடிவமே இதன் அர்த்தம் எங்கள் கடவுளின் வருடம் என்பதாகும். இக்கருத்து எமது ஈமானிய நம்பிக்கைக்கு எதிரானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.;. இதனாலேயே சில இஸ்லாமிய அறிஞர்கள் ஆங்கில வருடத்தை சுருக்கமாக குறிக்கும் போது கிறிஸ்த்துவுக்குப் பின் என்ற கருத்தைக் கொண்ட  A.C. (After chirist) என்பதைப் பயன்படுத்துவது பொருத்தம் என்பதை முன்மொழிகின்றனர்.

    எமது அன்றாட வாழ்வில் இஸ்லாமிய பிறைத் திகதிகள் பற்றிய அறிமுகமும் பாவனையும் வழக்கில் வருவதற்கு பின்வரும்; வழிகளைக் கையாள்வது பெரிதும் உதவியாயிருக்கும்:

  • எம் மத்தியில் பாவனையிலுள்ள இஸ்லாமிய நாட்காட்டிகளில் பிறைக் கணக்குகள் குறிக்கப்பட்டிருந்தாலும் நாம் அதனைப் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக் கொள்-வதில்லை, எனவே பெரிய எழுத்துக்களிலான அல்லது பிரத்தியேகமான பிறைக் கலண்டர்களை வீடுகளில் பார்வைக்குத் தெரியும் படி தொங்கவிட்டு காலந்தவறாமல் அதன் மாதங்களையும் பிறைகளையும் சரியான முறையில் மாற்றிவைப்பது.
  •  
  • பரஸ்பரம் எம்மத்தியில் எழுதப்படும் கடிதங்களிலும் எமதுநாட்குறிப்புகளிலும் பிள்ளைகளின் பிறந்ததினங்களைக் குறிக்கும் போதும் மற்றும் விழாக்கள் விஷேட வைபவங்களின் அழைப்பிதழ்கள் பதாதைகள் போன்றவற்றிலும் பிறை வருடப்படியிலான திகதிகளையும்  பயன்படுத்துவது.
  •  
  • அல்-குர்ஆன் மத்ரஸாக்களிலும், முஸ்லிம் பாடசாலைகளிலும் எமது இளம் பிள்ளைகள் பழக்கப்படுத்திக் கொற்வதற்காக ஆசிரியர்கள் நாளாந்தம் ஆங்கிலத் திகதிகளுடன்  இஸ்லாமியத் திகதியையும் எழுதவும் பாவிக்கவும் மாணவர்களை ஊக்கப்-படுத்துவது.

​​​​​​

(​​​​​​From Zikra Magazine 2014)