இறை திருப்தியா? மக்கள் திருப்தியா?

இறை திருப்தியா? மக்கள் திருப்தியா?
Al-Usthaz M.S.M. Muaaz (Bahji)

இப்பூமியில் மனித இனத்தைப் படைத்த இறைவன் ஒவ்வொருவரும் மற்றவனை சார்ந்து வாழும் நிலையை இயல்பிலேயே அமைத்து வைத்துள்ளான். ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன், அரசன், குடிமகன் என்று யாரைத் தான் எடுத்துக்கொண்டாலும் தனது ஏராளமான தேவைகள் நிறைவேறுவதற்காக பிறரை நாட வேண்டிய நிலையிலேயே மனிதனின் வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது.  

யார் மீது தேவை, அன்பு, பாசம், நேசம் அதிகமாகக் காணப்படுமோ, அவரைத் திருப்திப்படுத்த முயல்வது மனித இயல்பே.

குழந்தைகள் பெற்றோரினதும், மனைவி கணவனினதும்;, தொழிலாளிகள் முதலாளியினதும், மாணவர்கள் ஆசிரியர்களினதும் திருப்தியைப் பெற்றுக்கொள்வதில் போட்டிபோடுவதை அவதானிக்கலாம். 

இவர்கள் விடயத்தில் அளவு கடந்த அன்புடனும் திருப்தியுடனும் நடந்தாலும்  அது நிரந்தரமற்றதே. சிலவேளை வெறுப்பும், அதிருப்தியும் ஏற்படுவதும், வேறு சில சமயங்களில் விரோதிகளாகவோ, பகைவர்களாகவோ மாறிவிடுவதுமுண்டு. இதுவே மனிதனின் நிலை. 

நிரந்தரமற்ற படைப்பினங்களின் திருப்தியைவிட என்றுமே நிலைத்து நிற்கும் எம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் ஏக வல்லவன் அல்லாஹ்வின் திருப்தியே மேலானது. அல்குர்ஆனில் இறைவன் 'அல்லாஹ்வின் திருப்தியே அனைத்தையும் விடச் சிறந்தது' எனக் குறிப்பிட்டுள்ளான். அவனது திருப்தியை இலகுவாகப் பெற்றிட முடியாது. 

மக்கள் திருப்தி, இறைவனின் திருப்தி இரண்டையும் ஒன்றாக முழுமையாகப் பெறவே முடியாது. ஏனெனில், அவ்விரண்டும் இரு வேறு திசைகளில் பயணிக்கும் இரு வாகனங்களைப் போன்றதே. ஒன்றை தேர்ந்தெடுக்கும்போது மற்றதை இழக்கவேண்டி ஏற்படும்.
 
ஒன்றோ மக்கள் வெறுத்தபோதும் இறைத் திருப்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது இறைவன் வெறுத்த போதும் மக்கள் திருப்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அன்னை ஆஇஷா (ரழி) அவர்களின் உபதேசம்:

அன்னை ஆஇஷா (ரழி) அவர்களிடம் முஆவியா (ரழி) அவர்கள் தமக்கு ஓர் சுருக்கமான (வஸிய்யத்) நல்லுபதேசத்தை எழுதித்தருமாறு வேண்டினார்கள். அதற்கு அன்னை அவர்கள் பின்வருமாறு எழுதிக் கொடுத்தார்கள்: 'மக்கள் வெறுத்தபோதும் யார் அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவாரோ, மக்கள் மீது தேவை காணாது அவரது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றிவிடுவான். மேலும் யார் அல்லாஹ் வெறுத்தபோதும் மக்கள் திருப்தியைத் தேடுவாரோ அல்லாஹ் மக்கள் மீதே அவனைச் சாட்டிவிடுவான்' (திர்மிதி) 
 
ஸுஜுதில் நபியவர்கள் வேண்டியது:

அன்னை ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்: ஒரு நாள் இரவில் படுக்கையில் (என்னுடன்) இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. அப்போது அவர்களை நான் தேடினேன். அவர்கள் பள்ளிவாசலில் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை, நட்டப்பட்ட நிலையிலிருந்த அவர்களது உள்ளங்காலில் பட்டது. அப்போது அவர்கள்
اللّهُمَّ إِنِّيْ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ
என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

(பொருள்: இறைவா, உன் திருப்தியின் மூலம் உனது கோபத்தை விட்டும், உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், உன் (கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னை விட்டும் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னை நீ புகழ்ந்துகொண்டதைப் போன்று உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. 

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட, இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களே, நடு நிசியில் ஸுஜுதில் இருந்தவாறு அல்லாஹ்விடம் அவன் திருப்தியை வேண்டிப் பிரார்த்திப்பவர்களாக இருந்துள்ளார்களென்றால், எமது நிலை என்ன? 

தான் செய்யும் உதவி, உபகாரத்தை மக்கள் புகழ்ந்துரைக்கும்போது பேரானந்தம் கொள்ளும் பலர் இறைத் திருப்தியை மாத்திரம் நாடி அதனைச் செய்வதால் கிடைக்கும் அளப் பெரிய நன்மை பற்றி சிந்திப்பதில்லை.

யாருக்கு முன்னுரிமை:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது, கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான்' (புகாரி, முஸ்லிம்) 

பிறிதொரு சந்தர்ப்பத்தில்: 'அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் படைப்பினர் எவருக்கும் கீழ்ப்படலாகாது' எனக் கூறினார்கள். (அத்தபரானீ)

எத்தனையோ செயல்களை எமது சமூகத்துக்காக, குடும்பத்துக்காக, உறவினர்களுக்காக, ஊருக்காக என்று நிறைவேற்றும் நாம் எம் நிலை பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இறைவனின் திருப்தியையோ, மார்க்கத்தையோ பற்றி சிறிதும் சிந்திக்காது, கணவனின் திருப்தியைப் பெறுவதற்காக கணவன் கூறும் விதத்தில் ஆடும் மனைவிமாரைப் பார்க்கலாம். மறுபுறம், மனைவியின் திருப்தியைப் பெறுவதற்காக மனைவி சொல்லும் எதையும் கட்டுப்பாடுகளின்றி தாராளமாகச் செய்திடும் கணவன்மார்களைக் காணலாம். இவ்வாறே பெற்றோரைத் திருப்திப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு மார்க்கம் தடை விதித்திருப்பதைப் பற்றிய சிந்தனைக்கு அப்பால் அவர்களின் பற்றுக்கும் பாசத்துக்குமே முன்னுரிமை வழங்கும் பிள்ளைகளைப் பார்க்கலாம். திருமண வைபவங்களில் உற்றார், உறவினர்களின் திருப்திக்காக அனாச்சாரங்களிலும், வீண் விரயங்களிலும் கண்டபடி ஈடுபடும் திருமண வீட்டினர்களை அவதானிக்கலாம். வியாபாரத்தளங்களில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காகவும், அவர்களின் திருப்தியைப் பெறுவதற்காகவும் வியாபாரிகள் பல்வேறு மார்க்கம் தடைசெய்துள்ள முறைகளைக் கையாள்கின்றதைப் பார்க்கலாம். அதிபரின் திருப்தியைப் பெறும் நோக்கில் ஆசிரியர்களும், ஊர் மக்களின் திருப்தியைக் கருதி ஊர் தலைவர்களும் அனுமதியற்ற பல நிகழ்ச்சிகளை ஏற்படுத்துவதைப் பார்க்கலாம்.  இவற்றின் மூலம் மக்கள் திருப்தியை வென்றாலும், இறைவனின் அதிருப்தியைப் பற்றியோ, கோபம் பற்றியோ எள்ளளவும் சிந்திப்பதில்லை.

எனவே, மக்கள் திருப்தியைப் பெறுவதற்காக அனுமதிக்கப்படாதவற்றை செய்யலாகாது என்பதைப் போன்றே இறைவன் அனுமதித்தவைகளைத் தடை செய்துகொள்ளும் உரிமையும் எமக்குக் கிடையாது.

அண்ணலார் (ஸல்) அவர்கள் தமது மனைவியரில் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களிடம் சென்று தேன் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். பின்பு, வேறு சில மனைவிமார்களின் திருப்திக்காக தேன் குடிப்பதைத் தாமே தடை செய்துகொண்டார்கள். அச்சமயம் அல்லாஹ் ஓர் வசனத்தையே இறக்கி பின்வருமாறு நபியவர்களை அறிவுறுத்தினான்.

يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
நபியே! உங்கள்; மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ளதை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்கள்? மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனும், மிக்க கிருபையுடையவனுமாவான். (66:01) 
 
இறைத் திருப்தியை விட மக்கள் திருப்தியை நாடுவது நயவஞ்சகர்களின் நிலையே:
நயவஞ்சகர்களின் இழிச் செயல் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.

يَحْلِفُونَ بِاللَّهِ لَكُمْ لِيُرْضُوكُمْ وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ إِنْ كَانُوا مُؤْمِنِينَ
(முஃமின்களே!) உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையோர் அல்லாஹ்வும், அவனுடைய ரஸூலுமே. (09:62)

பௌத்த மக்களுடன் வாழும் நாம்:

நாம் வாழும் இலங்கை நாடு பௌத்தர்களை பெரும்பான்மை இனமாகக் கொண்ட ஒரு நாடு. இங்கு சில இன வெறியர்கள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பற்றி தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். வளர்ச்சிப் பாதை நோக்கி நகரும் முஸ்லிம்களின் வியாபாரம், முஸ்லிம் இனத்தவர்களுக்காக மாத்திரம் முஸ்லிம்கள் அளிக்கும் உதவிகள், விகாரமாக காட்சிதரும் பள்ளிவாசல்கள், ஹிஜாப் விவகாரம் ஹலால் அத்தாட்சிப் பத்திரம் போன்றவற்றை இவர்களின் பிரச்சாரத்துக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். இது உண்மையிலேயே முஸ்லிம்கள் எதிர்நோக்;கும் பிரதானமான சவால்களில் ஒன்று தான். ஆனால் இவ்வாறான நிலையில் இஸ்லாமிய கடிவாளத்தை உதறித் தள்ளிவிட்டு அவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக எதை எதையோ செய்கின்றனர். தான் சுமந்திருக்கும் ஈமானைப் பற்றியோ, இறைவனின் அதிருப்தியால் தனக்கு நேர இருக்கும் நிரந்தர நஷ்டத்தைப் பற்றியோ சிந்திக்கத் தவறிவிட்டனர். 

இதற்காக சில தனவந்தர்களும், அரசியல்வாதிகளும் பௌத்த மதஸ்தானங்களுக்கும், பாடசாலைகளுக்கும் அவர்களின் கலாச்சார, வணக்க விடயங்களில் கைகொடுக்கின்றனர். அவற்றில் தாமும் நேரில் சென்று பங்கெடுக்கின்றனர். சிலைகள் கட்டுவதற்காக, மதஸ்தாபனங்களை நிர்மாணிப்பதற்காக என பண உதவிகளை வழங்குகின்றனர். இவற்றின் மூலம் அவர்களின் திருப்தியையும், முஸ்லிம்கள் மீது நல்லெண்ணத்தையும் வளர்க்கலாம் எனக் கருதுகின்றனர். எதிர்பார்ப்பு நிறைவேறும் என வைத்துக்கொண்டாலும், இதனை மார்க்கம் அனுமதிக்குமா? இதன் மூலம் இறைத் திருப்தியைப் பெறலாமா? என்பதைப் பற்றி சிந்திக்கவேண்டும்.

இன்றைய அரசியல் உட்பட கொள்கை, கட்சி சார்ந்த பல்வேறு விடயங்களில் இதனை அவதானிக்கலாம். 

இன்னொன்றையும் நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டும். பல்லின சமூகத்தோடு வாழும் எங்கும் மற்ற இனத்தினரை முழுமையாக யாராலும் திருப்திப்படுத்த முடியாது என்பதே யதார்த்தம். இதற்கு அல்குர்ஆனே சான்று பகர்கின்றது. 

وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى
'(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையில் உம்மைப்பற்றி திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) 'நிச்சயமாக அல்லாஹ்வின் வழி (இஸ்லாம்) அதுவே நேரான வழி' என்று கூறுவீராக' (02:120)

ஆனாலும், மனிதாபிமான உதவிகளை மத சார்ப்பின்றி யாருக்குச் செய்வதையும் இஸ்லாம் தடுக்கவில்லை. எனவே மாற்று மதத்தினரின் திருப்தியைப் பெற வேண்டிய நிர்ப்பந்த நிலைகளில் அவர்களின் கல்வித்துறைக்கு உதவுதல், மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழிலற்றோருக்கு தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற வழிகளில் உதவுவதில் தவறேதும் கிடையாது. 

இறைத் திருப்தியைப் பெறுவதற்கான சில முக்கிய வழிமுறைகள்.

1.    அல்லாஹ் எதனை எமக்கென்று எழுதி வைத்துள்ளானோ அதனை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளல், பொருந்திக்கொள்ளல்.
ஸஹாபாக்களின் நிலை இவ்வாறுதான் இருந்தது. அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டதாகவும், அவர்கள் அவனைப் பொருந்திக்கொண்டதாகவும் இறைவன் சான்று பகர்கின்றான்.

அந்த ஸஹாபாக்களில் அநேகர் நாம் வாழும் இந்த வாழ்க்கை வாழவில்லை. ஒரு நாள் உண்ண மறு நாள் பட்டினி இருப்பார்கள். கண்ணயர்ந்து தூங்குவதற்கென்று பஞ்சு மெத்தைகள் அவர்களிடம் காணப்படவில்லை. அவர்கள் இவ்வுலக வாழ்வை ஒரு பொருட்டாக எடுக்கவே இல்லை. கிடைத்ததை வைத்து சமாளித்து காலத்தைக் கடத்தினார்கள். ஆனாலும், இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும் வணக்க வழிபாடுகளில் போட்டிபோட்டார்கள். 

2.    அல்லாஹ் ஏவியவற்றை மனவிருப்பத்தோடு உணர்வுபூர்வமாக நிறை வேற்றுதல், அவன் விலக்கியவற்றை மன வெறுப்புடன் தவிர்த்து கொள்ளல், எந்தக் கஷ்டமோ, துன்பமோ வரும்போது குறை கூறாது பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளல்.

ரஸுலுள்ளாஹ்வின் அன்புக் குழந்தை இப்றாஹீம் மரணித்த வேளை ரஸுலுள்ளாஹ்வின் கண்களால் கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. அதனைப் பார்த்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி) 'நீங்களுமா! இப்படி அழுகிறீர்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று வியந்தார்கள். அப்போது நபியவர்கள்: 'அவ்பின் மகனே! அது இரக்க சுபாவத்தினால் வடியும் கண்ணீர், கண்களால் கண்ணீர் வடிகின்றன, உள்ளம் சஞ்சலப்படுகிறது, அல்லாஹ் திருப்திப்படாத எந்தொரு வார்த்தையையும் நாம் பேசப்போவதில்லை, இப்றாஹீமே! உங்கள் பிரிவால் நாங்கள் துயரில் இருக்கின்றோம்' என்றார்கள். (புகாரி)

நாமோ எமது மன விருப்பத்துக்கு முரணான நிகழ்வுகள் எம்மை எதிர் நோக்கும்போது தடுமாறிவிடுகின்றோம். நாவுக்கு வந்ததையெல்லாம் பேசுகின்றோம். இறைவன் விதித்த விதி என்பதை மறந்துவிடுகின்றோம். பொறுமை செய்யத் தவறிவிடுகின்றோம்.

3.    பெற்றோர்களின் திருப்தியுடன் வாழ்வதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தல். அவர்களின் திருப்தியில் இறைவனின் திருப்தியுண்டு என்பதை உணர்தல்.

4.    உண்ண உணவோ பருகுவதற்கு பானமோ இன்றி வாழும் பலருக்கு மத்தியில் எமக்கு உணவளிக்கும் இறைவனை நாம் உண்ணும், பருகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புகழ வேண்டும். 
'நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ் சாப்பிட்டுவிட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழக்கூடிய அல்லது பருகிவிட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழக்கூடிய ஓர் அடியானைப் பொருந்திக்கொள்கின்றான்.'

5.    இறைவனுக்கு அதிகமாக நன்றி செலுத்துதல்.
'நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின் உங்களை அவன் திருப்தி கொள்வான்' (39:07)
 
மக்களின் திருப்தியைப் பெறுவதற்காக பாவமான காரியங்களில் கூட ஈடுபடும் பலரைக் காணலாம். அதனையும் தாண்டி சிலர் இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிடும் இணை கற்பிக்கும் செயல்களைக்கூட செய்வதைப் பார்க்கலாம். அதன் விளைவு தான் மறுமையில் நிரந்தர நரகில் விழ வேண்டிய நிலை ஏற்படுமே எனச் சிந்திப்பதில்லை. 

மக்களின் திருப்தியைப் பெறும் நோக்கில் செய்யப்படுகின்ற பாவங்களை இரு வகைகளாக நோக்கலாம்.

1.    குப்ரை ஏற்படுத்தும் செயல்:
மாற்று மதத்தினரைத் திருப்திப்படுத்துவதற்காக அவர்களின் கலாச்சாரங்களைப் பின்பற்றுவதை, அவர்களின் வணக்க வழிபாடுகளில் பங்குகொள்வதை, வணக்க வழிபாடுகளுக்காக உதவுவதை உதாரணமாகக் குறிப்பிடலாம். 

2.    குப்ரை ஏற்படுத்தாத பாவமான செயல்:
இதற்கு உதாரணமாக நிறைய விடயங்களைக் குறிப்படலாம். 
•    பிறந்த நாள் கொண்டாட்டங்கள் டீசைவானயல ஊநடநடிசயவழைளெ. 
•    பெண்கள் அணியும் கவர்ச்சியான டுயவநளவ ஆடை அலங்காரங்கள்.
•    திருமண வைபவங்களில் பின்பற்றப்படும் கலாச்சார சீர்கேடுகள்.
•    கரண்டைக்குக் கீழால் தொங்கும் ஆண்களின் ஆடைகள்.
•    உடை நடை பாவனைகளில் பேணப்படும் மாற்று மத வழக்கங்கள்.

இவற்றின் மூலம் யாரைத் திருப்திப்படுத்துகின்றனர்? இன்னொரு புறம் இவற்றின் மூலம் பெருமைப்படுவதையும் பார்க்கலாம். 

இன்னும் சில விடயங்கள் மார்க்கத்துக்கு சம்பந்தமே இல்லாதவை என்று அறிந்தும் ஊர் வழமை என்பதற்காகவும், அதைச் செய்யா விட்டால் மக்கள் குறை சொல்லிவிடுவார்கள் என்பதற்காகவுமே செய்கின்றனர். 

இறைத் திருப்தியால் அசைந்த கற்பாறை:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூவர் பாதையில் நடந்து சென்றனர். இரவைக் கழிப்பதற்காக குகையொன்றில் புகுந்தனர். அச்சமயம் மலையிலிருந்து பெரும் கற்பாறையொன்று உருண்டு வந்து குகை வாசலை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள் 'நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தாலே அன்றி இதிலிருந்து தப்ப முடியாது' என்று தமக்குள் கூறிக்கொண்டனர்.
 
அவர்களில் ஒருவர் 'இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்கு பால் புகட்ட முன்பு என் மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை ஒரு நாள் எதையோ தேடிச் சென்றதால் தாமதமாக வந்தேன். என்னுடைய தாயையும், தந்தையையும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கக் கண்டேன். பாலை அவர்களுக்குக் கொடுக்க முன்பு, என் மனைவிக்கோ, என் குழந்தைகளுக்கோ கொடுப்பதை நான் விரும்புவதில்லை. எனவே, அவர்கள் விழிக்கும் வரை என் கைகளில் பாத்திரத்தை வைத்துக் கொண்டு காத்திருந்தேன். ஃபஜ்ர் நேரம் வந்ததும் அவ்விருவரும் விழித்து பாலை அருந்தினர். இறைவா! உனது திருப்தியை நாடியே நான் இவ்வாறு செய்திருந்தால் நாம் அகப்பட்டு சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டும் அகற்றிவிடுவாயாக' எனப் பிரார்த்தித்தார். உடனே, கற்பாறை அவர்களால் வெளியேற முடியாதளவு சற்று விலகியது.

மற்றொருவர், 'இறைவா! எனது சிறிய தந்தையின் மகள் ஒருத்தி எனக்கு மிக விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்;, அவள் மறுத்துவிட்டாள். சில காலம் கழிந்து, அவளை ஏழ்மை வாட்டி எடுத்தது. வேறு வழியின்றி அவள் என்னிடம் வந்தாள்;, நான் அவளை அடைந்திட எனக்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 120 தங்கக் காசுகளை அவளுக்குக் கொடுத்துவிட்டு, அவளுடன் தகாத முறையில் நடக்க முற்பட்டபோது 'முத்திரையை அதற்கான உரிமையின்றி உடைப்பதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்' என்று அவள் கூறியபோது, நான் தடுமாற்றமடைந்தவனாக அப்பாவத்தைச் செய்யாது விலகிக் கொண்டேன்;. அவள் எனக்கு மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளை விட்டுத் திரும்பிவிட்டேன்;. உனது திருப்தியை நாடியே நான் இவ்வாறு நடந்திருந்தால் நாம் அகப்பட்டு சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டும் அகற்றிவிடுவாயாக' எனப் பிரார்த்தித்தார். உடனே, கற்பாறை மேலும் சிறிதளவு விலகியது. ஆனாலும் அவர்களால் வெளியேற முடியாது.

மூன்றாமவர், 'இறைவா! நான் சில பணியாட்களை கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியை எடுக்காமல் விட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். 'அல்லாஹ்வின் அடியாரே! என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்' என்று கூறினார். 'அதோ நீர் காணும் அந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியின் மூலம் பெறப்பட்டவையே.' என்று கூறினேன். அதற்கவர் 'அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்' என்றார். 'நான் உம்மை கேலி செய்யவில்லை!' என்று கூறினேன். அவர் எதனையும் விட்டுவிடாமல் அனைத்தையும் எடுத்துச் சென்றார். உனது திருப்தியை நாடியே நான் இவ்வாறு நடந்திருந்தால் நாம் அகப்பட்டு சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக' எனப் பிரார்த்தித்தார். கற்பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் மூவரும் வெளியேறிச் சென்றுவிட்டனர்' (புகாரி)

இறைத் திருப்தியும் ஸஹாபாக்களும்: 

•    பத்ர் யுத்த களத்தில் அபூ உபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரழி) அவர்கள் இறைத் திருப்தியை மாத்திரம் நாடி முஷ்ரிக்காக இருந்த தன்னை ஈன்றெடுத்த தன் தந்தையையே கொன்றுவிட்டார்கள். அப்போது இறைவன் பின்வரும் வசனத்தை இறக்கி வைத்தான்.
'அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீங்கள் காணமாட்டீர்கள். அவர்கள் தங்கள் பெற்றோராயினும், தங்கள் புதல்வர்களாயினும், தங்கள் சகோதரர்களாயினும், தங்கள் குடும்பத்தினராயினும் சரியே. (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்;. மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்;. சுவனச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களை நுழையச் செய்வான்;. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர். அறிந்துகொள்வீராக, நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவோராவர்.' (58:22) 

•    ஹன்லலா இப்னு அபூ ஆமிர் (ரழி) அவர்களுக்கு இரவு திருமணம் நடைபெறுகிறது. மணப்பெண்ணுடன் அன்றிரவு இல்லறத்தில் ஈடுபடுகின்றார். பஜ்ர் ஆவதற்கு முன்பே ஜிஹாத் செய்வதற்கான அழைப்பைச் செவியுறுகிறார். குளிக்காமலேயே முதலிரவிலேயே மனைவியை விட்டுவிட்டு யுத்த களம் நோக்கி ஓடோடுகிறார். களத்தில் குதித்து காபிர்களுடன் போராடிய அவர் ஷஹீதாகிவிட்டார். ரஸுல் (ஸல்) அவர்கள் அவரை அடக்கம் செய்துவிட்டு 'உங்கள் தோழரை வானவர்கள் குளிப்பாட்டுகின்றனர்' எனக் கூறினார்கள். 
இறைத் திருப்தியை மாத்திரம் கருதி தன் மனைவியைப் பற்றியோ, தம் வாழ்க்கையைப் பற்றியோ எள்ளலவும் சிந்திக்காது இஸ்லாத்துக்காகப் போராடி தன் உயிரையே தியாகம் செய்தமையாலே இப்பாக்கியத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

•    நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கினங்க ஸஹாபாக்கள் சொந்த மண்ணை விட்டுவிட்டு ஹிஜ்ரத் சென்றமை இறை திருப்தியைப் பெறுவதற்காகவே. வீடு, வாசல், தோட்டம், விவசாயம் எதைப் பற்றியும் சிந்திக்காது இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக எடுத்து வாழ்ந்தாலே இறைத் திருப்தியைப் பெறலாம் என்பதைப் புரிந்தே அனைத்தையும் விட்டுச் சென்றார்கள்.

நபித்தோழர், தோழியர் வரலாற்றில் இப்படியான இன்னும் ஏராளமான சம்பவங்களைப் பார்க்கலாம்.

எனவே இறைத்திருப்தியை அடைந்து கொள்ளத் தவறி மக்கள் திருப்தியையே நோக்கமாகக் கருதி வாழ்வதை விட்டும் எம்மைப் பாதுகாத்துக்கொள்வோம். மக்கள் திருப்தி நிரந்தரமற்றது என்பதையும் இறை திருப்தியே உலகிலும் மறுமையிலும் எமக்குப் பயனளிக்கக்கூடியது என்பதை உணர்வோம்.