பெண்கள் சுத்தம் (தொடர்) - மாதவிடாய்ப் பெண் அல்குர்ஆன் ஓதுதல்
பெண்கள் சுத்தம் ( தொடர் )
Al-Usthaz M.O. Fowzur Rahman (Bahji)
பெண்கள் சுத்தம் என்ற எமது தொடர் கட்டுரையில் மாதவிடாய் பறறி; சட்டங்கள் எழுதப்பட்டு வருகின்றன. சென்ற இதழில் மாதவிடாய்ப் பெண்களுக்கு தடுக்கப்பட்ட விடயங்களில் கருத்துவேற்றுமைக்குட்பட்ட விடயங்களில் ஒன்றாகிய பள்ளியில் தரித்தல் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டது. இவ்விதழில் அவ்வாறே கருத்துவேற்றுமை உள்ள விடயங்களில் ஒன்றாகிய அல்குர்ஆன் ஓதுவது பற்றி விரிவாக ஆராயப்படும்.
அல்குர்ஆன் ஓதுதல்:
மாதவிடாய் கண்ட பெண் அல்குர்ஆன் ஓதுவது தடுக்கப்பட்டதா அல்லது அனுமதிக்கப்பட்டதா என்கிற விடயத்தில் அறிஞர்கள் கருத்து வேற்றுமைப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மையான அறிஞர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண் அல்குர்ஆன் வசனங்கள் எதையும் ஓதக்கூடாது, அவ்வாறு ஓதுவது ஹராம் எனக் குறிப்பிட்டுளனர். இவர்களுள் இமாம் அபூஹனீபா, இமாம் சாபிஈ ஆகிய மத்ஹபின் அறிஞர்களும் தாபிஈன்களாகிய அல்ஹஸன் அல்பஸரி, இப்ராஹீம் அந்நகஈ, கதாதா, அஸ்ஸுஹ்ரி, ஸஈத் இப்னு ஜுபைர்(ரஹ்) போன்றோர் முக்கியமானவர்கள்.
இமாம் மாலிக், இமாம் அஹ்மத் ஆகியோரைத் தொட்டும் இரு அறிவிப்புக்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஓர் அறிவிப்பில் ஹராம் என்ற கருத்து பதிவாகியுள்ளது. சந்தர்ப்ப திக்ர்களாக நபியவர்களைத் தொட்டும் அறிவிக்கப்பட்டுள்ள அல்குர்ஆன் வசனங்களையும் ஸூராக்களையும் இவர்கள் விதிவிலக்காகக் கூறுவர். தூங்கும் போது நாம் ஓதும் அல்குர்ஆன் வசனங்களையும் ஸூராக்களையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
இவர்கள் தமது கருத்தை (ஹராம் என) நிறுவுவதற்காக பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
1. மாதவிடாய் ஏற்பட்டவர்களும் குளிப்பு கடமையானவர்களும் குர்ஆனில் எதையும் ஓதலாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு உமர் (ரலி) மூலம் அறிவிக்கப்படும் இந்நபிமொழி திர்மிதி, இப்னுமாஜா, பைஹகி, ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நபிமொழியின் எல்லா அறிவிப்பாளர் வரிசையிலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளதால் இது பலவீனமான நபிமொழியாகும். இமாம் இப்னுதைமிய்யா(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'இது பலவீனமானது என்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார். (மஜ்மூஉல் பதாவா)
2. நபி (ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையானவராக இல்லாத வரை எல்லா நிலையிலும் எங்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். அலீ (ரலி)வாயிலாக அறிவிக்கப்படும் இச்செய்தி திர்மிதீ, பைஹகீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு மாஜஹ், நஸாஈ ஆகிய நூல்களிலும் வித்தியாசமான சொற்பிரயோகங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹதீஸுக்கு இமாம் திர்மிதி அவர்கள் ஆதாரபூர்வமானது எனத் தீர்ப்பு வழங்கியிருந்தாலும் இது பலவீனமானது என்பது தான் இதன் உண்மை நிலையாகும். ஏனெனில் இதன்; அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் ஸலிமா என்ற அறிவிப்பாளர் இவர் பலவீனமானவராவார். இவர் தனது முதுமைப் பருவத்தில் தனது புத்தியில் கோளாறு உள்ளவராகக் காணப்பட்டுள்ளார். இது இவரது முதுமைப் பருவத்தில் இவர் அறிவித்த நபி மொழிகளில் ஒன்றாகும்.
மேலும் நபி(ஸல்) அவர்களது செயலாகவே இது பதிவு செய்யப்பட்டுள்ளது. நபியவர்களின் தடை எதுவும் இல்லாத நிலையில் நபியவர்கள் ஒன்றைச் செய்யவில்லை என்பதை மாத்திரம் வைத்து அது ஹராம் என்ற முடிவுக்கு வர முடியாது என்பது பொதுவிதியாகும்.
3. நபி(ஸல்) அவர்கள் வுழூச் செய்வதைக் கண்டேன். பின்பு அல்குர்ஆனில் ஒரு பகுதியை ஒதிவிட்டு இவ்வாறு குளிப்புக் கடமையாகாதவர்களுக்கு முடியும். குளிப்புக் கடமையானவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு (இவ்வாறு ஓத) முடியாது. ஒரு வசனம் கூட (முடியாது). எனக் கூறினார்கள். இச்செய்தி அலி(ரழி) அவர்கள் வாயிலாக முஸ்னத் அஹ்மதில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நபி மொழி குளிப்புக் கடமையானவர் அல்குர்ஆனை ஓதக் கூடாது என்பதற்கு ஒரு தெளிவான ஆதாரமாக இருந்தாலும் இது ஆதாரபூர்வமானதா என்பதில் சர்ச்சை காணப்படுகின்றது. ஏனெனில் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அபுல் அரீப் என்ற அறிவிப்பாளரை இப்னுஹிப்பான்(ரஹ்) அவர்களைத் தவிர வேறெந்த அறிஞரும் நம்பகமானவராகத் தீர்மானிக்கவில்லை. அத்துடன் இது நபி(ஸல்) அவர்களின் கூற்றா? அல்லது அலி(ரழி) அவர்களின் கூற்றா என்பதிலும் சர்ச்சை இருக்கின்றது. இது அலி(ரழி) அவர்களின் கூற்றென்பது தான் மிகச் சரியான கூற்றாகும். இது ஆதாரபூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இங்கு குளிப்புக் கடமையானவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றதே தவிர மாதவிடாய்ப் பெண் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
இவை தவிர இன்னும் சில நபிமொழிகளையும் இக்கருத்துக்கு ஆதாரமாக முன்வைத்துள்ளனர். அவையும் பலவீனமானவையே.
இன்னும் சில அறிஞர்கள் மாதவிடாய்ப் பெண்கள் அல்குர்ஆன் ஓதுவதில் எந்தத் தடையுமில்லை, அது அனுமதிக்கப்பட்டது என்கின்றனர். இமாம் ஸஈத் இப்னுல் முஸய்யப், இப்னுல் முன்திர், மாலிக் மத்ஹபின் பெரும்பான்மையான அறிஞர்கள், ளாஹிரிய்யாக்கள் இக்கருத்தைக் கூறும் அறிஞர்களில் அடங்குவர். இமாம் மாலிக் அவர்களின் பிரபல்யமான அறிவிப்பும் இதுவாகும். இமாம் அஹ்மத்; அவர்களைத் தொட்டும் இவ்வாறான அறிவிப்பு பதிவாகியுள்ளது. சைகுல் இஸ்லாம் இப்னுதைமிய்யா அவர்கள் இக்கருத்தையே மிகச்சரியானதெனக் கூறியுள்ளார்கள்.
(மாதவிடாய்ப் பெண்கள் அல்குர்ஆன் ஓதுவதில் எந்தத் தடையுமில்லை) என்பதற்கு இவர்கள் இதற்காக முன்வைக்கும் ஆதாரங்கள்:
1. நபி(ஸல்) அவர்கள் ஹிரக்ல் மன்னனுக்கு எழுதிய கடிதத்தில் ஸூரா ஆல இம்ரானில் இடம்பெறும் ஓர் இறைவசனத்தையும் எழுதி அனுப்பினார்கள். காபிர்கள் ஜுனுபாளிகள். ஜுனுபாளி குளிப்புக் கடமையானவர்கள் குர்ஆன் வசனங்களை ஓத முடியுமென்பதால் தான் நபியவர்கள் எழுதி அனுப்பினார்கள்.
ஆனால் இங்கு இதை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. நபியவர்கள் கடிதத்தில் ஒரு பகுதியாகவே இதை எழுதினார்கள். அது அனுமதிக்கப்பட்டதாகும்.
2. நபி(ஸல்) அவர்கள் தமது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வை திக்ர் செய்பவர்களாக இருந்தார்கள். ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கும் இந்நபி மொழி முஸ்லிமில் பதிவாகியுள்ளது. திக்ர் என்ற பரந்த கருத்தைக் கொண்டது, அல்குர்ஆன் ஓதலும் இதில் அடங்கும். எனவே நபி(ஸல்) அவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் குர்ஆன் ஓதியிருக்கின்றார்கள். எல்லாச் சந்தர்ப்பங்கள் என்ற வார்த்தைக்கு விதிவிலக்குகள் எதுவும் தெளிவான, ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் வரவில்லை என்பதனால் எச்சந்தர்ப்பத்தையும் விதிவிலக்காகக் கொள்ளமுடியாது.
முதற்பிரிவினர் இங்கு அல்லாஹ்வை ஞாபகித்தல் என்பது குர்ஆன் ஓதுவதைக் குறிக்காது, இறைவசனங்களிலும் நபிமொழிகளிலும் 'திக்ர்' என்ற வார்த்தை பிரயோகிக்கப்படும் போது அது அல்குர்ஆன் ஓதுவதைக் குறிக்காது, குர்ஆனையும் உள்ளடக்குவதற்கு வேறு ஆதாரம் தேவை எனக்கூறுவர்.
3. இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் அல்குர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள். இச்செய்தி புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு நபித்தோழரின் செயலாகும். வேறு நபித்தோழர்களைத் தொட்டும் இதற்கு மாற்றமான கருத்து பதிவாகியுள்ளதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
4. அல்குர்ஆன் ஓதல் நபியவர்களால் சந்தர்ப்பங்கள் வித்தியாசமின்றி செய்யும் படி தூண்டப்பட்ட ஓர் அமல். ஒரு சந்தர்ப்பத்தில் அதை அனுமதித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் அதை தடை செய்வதற்குத் தெளிவான ஏற்றுக் கொள்ளத் தக்க ஆதாரம் தேவை. அப்படி எந்தவோர் ஆதாரமும் வரவில்லை.
இது போன்று இன்னும் சில ஆதாரங்களை முன்வைத்து மாதவிடாய்ப் பெண் அல்குர்ஆன் ஓதுவதில் எந்தத் தடையும் இல்லை என இவர்கள் கூறுகின்றனர்.
இவ்விரு கருத்துக்களிலும் மாதவிடாய் கண்ட பெண் அல்குர்ஆன் ஓத அனுமதி உண்டு கருத்தே மிகச் சரியானது. ஏனெனில் மாதவிடாய் ஏற்பட்ட பெண் அல்குர்ஆன் ஓதுவதைத் தடுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் எதுவுமில்லை. சந்தர்ப்பங்கள் வித்தியாசமின்றி தூண்டப்பட்ட ஓர் அமல், அதைத் தடுக்கும் தெளிவான, ஏற்றுக் கொள்ளத்தக்க ஓர் ஆதாரம் வராத வரை அது கூடும் என்பதே அடிப்படையாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.