பெண்கள் சுத்தம் - மாதவிடாய் (தொடர்-1)

பெண்கள் சுத்தம்
Al-Usthaz M.O. Fowzur Rahman (Bahji)

அல்லாஹ் பெண்களை பல அமைப்புக்கனில் ஆண்கனை விட்டும் வேறுபடுத்தி படைத்திருக்கின்றான். அவர்களின் உடல் தோற்றங்களை ஆண்களை விட்டும் அல்லாஹ் வேறுபடுத்தியது போன்று அவர்களின் பண்புகள், இயல்புகள் போன்றவற்றையும் வேறுபடுத்தியுள்ளான். அவர்களின் இயல்புகளுக்கும் உடலமபை;புக்களுக்கும் ஏற்றவாறு சில மார்க்கச் சட்டங்களிலும் கடமைகளிலும் அவர்கள் ஆண்களை விட்டும் பிரிந்திருக்கின்றனர். 

மாதவிடாய், பிரசவ இரத்தம், தொடர் இரத்தப் போக்கு என்பன பெண்களுக்கு மாத்திரம் உள்ள சில பிரச்சினைகளாகும்.  இவற்றைப் பற்றிய சரியான விளக்கமின்மையின் காரணமாக எமது இஸ்லாமிய சகோதரிகள் பலர் வணக்க வழிபாடுகளில்  பல தவறுகளைச் செய்துவிடுகின்றனர். சில சகோதரிகள்  கடமையான வணக்கங்களைக் கூட விட்டு விடுகிறார்கள். 

உடம்பினால் செய்யப்படும் முக்கிய வணக்கங்களாகிய தொழுகை, நோன்பு, ஹஜ், உம்ரா ஆகிய வணக்கங்ளுடன் நேரடியாகவே இவற்றினட சட்டங்கள் சம்பந்தப்படுகின்றன. மட்டுமல்லாமல் இல்லற வாழ்கை, தலாக், இத்தா போன்ற சட்டங்களுடன் இவை தொடர்புருகின்றன. 

எனவே, இவற்றின் சட்டங்களை அறிவதில் பெண்கள் எந்த வகையிலும் பராமுகமாக இருக்க முடியாது. இதைப் பற்றிய தெளிவைப் பெற்றுக் கொள்வதற்கு வெட்கம் தடையாக அமைந்து விடவும் கூடாது. பெண்களுக்கு இவை பற்றிய அறிவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனால் தான் ஸஹாபாப் பெண்மணிகள் பலர் பல சந்தர்ப்பங்களில் வெட்கப்படாமல் நபி(ஸல்) அவர்களிடம் நேரடியாகவே கேட்டு தெளிவு பெற்றுள்ளார்கள்.  

இந்த வகையில் முக்கியத்துவம் பெறும் இவை ஒவ்வொன்றைப் பற்றியும் அவற்றுடன் தொடர்புபடும் சட்டங்களைப் பற்றியும் குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் விளக்குவதே இத் தொடர் கட்டுரையின் நோக்கமாகும்.  

மாதவிடாய் : 

மாதவிடாய் என்பது ஒரு பெண் ஆரோக்கியமாக இருக்கும் வேளையில் அப்பெண்ணின் கருவறையின் கடைசிப் பகுதியிலிருந்து வெளிப்படும் இரத்தமாகும். இது ஒரு பெண் பருவமடைந்துவிட்டாள் என்பதற்கும்  கருத்தரித்து குழந்தையைச் சுமப்பதற்குத் தயாராகி விட்டாள் என்பதற்கும்  ஓர் அடையாளமாகும்.  ஆரோக்கியமான பெண்களில் பெரும்பான் மையானோருக்கும் மாதந்தோறும் ஒழுங்கான ஓர் இடைவெளியில்  வெளிப்படும் இம்மாதவிடாய் இரத்தம்  அரபு மொழிவழக்கில்  ஹைழ் என்ற  பெயரைக் கொண்டு அறியப்படுகின்றது.  

மாதவிடாய் குறித்து அல்குர்ஆன்: 

'மாதவிடாய் (குறித்த சட்டம்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்:-'அது ஒரு நோவினை. ஆகவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நீங்கள் நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மை அடைந்து விட்டால், அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்! தீமையில் இருந்து விலகி இருப்பவர்களையும் தூய்மையை மேற்கொள்பவர்களையுமே அல்லாஹ் நேசிக்கிறான்,' 

இவ்வசனத்தில்  அல்லாஹ்  'அ:தா'  என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றான். 'தூய்மையற்ற நிலை' என்ற பொருளோடு 'நோயுற்ற நிலை' என்ற பொருளையும் அச்சொல் தருகின்றது. மாதவிலக்கு காலங்களில் ஒரு பெண் தூய்மை யற்று இருப்பதோடு உடல்நலமற்றும் இருக்கிறாள். நோய் எதிர்ப்புச் சக்தி பெண்களிடம் அக்காலங்களில் மிகவும் குறைந்து காணப்படுகின்றது.

அதுமட்டுமல்லாமல், மனோரீதியாகவும் அவர்கள் மிகவும் ஊக்கங் குறைந்து காணப்படுகிறார்கள். உடலியல் அடிப்படையில் மட்டுமல்லாது உளவியல் அடிப்படைலும் பெண்கள் மிகவும் தளர்ந்து போய் காணப்படுகிறார்கள். கோபம், இயலாமை, எரிச்சல், சோர்வு போன்றவை அக்காலங்களில் மிகைத்து காணப்படுகின்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இஸ்லாமிய மார்க்கம் நோன்பு, தொழுகை போன்ற முக்கிய கடமைகளில் அவர்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது.  

நபிமொழிகளில் மாதவிடாய்:

மாதவிடாய் சம்பந்தப்பட்ட பல நபிமொழிகள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவ செய்யப்பட்டுள்ளன. மாதவிடாயின் இயல்புகள், சட்டங்கள், சலுகைகள் என பல தலைப்புக்களில் காணப்படுகின்றன.

இது பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது 'இது அல்லாஹ் பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் ஒரு விடயமாகும்' எனக் கூறினார்கள். இதே போன்று மாதவிடாய் பற்றிக் குறிப்பிடும் பல ஹதீஸ்கள் காணப்படுகின்றன. 

மாதவிடாய் ஆரம்பம்:

ஒரு பெண் முதன் முறையாக தனது எத்தனையாம் வயதில் மாதவிடாயைக் காண்பாள் என்பதற்கான வரையறை அல்குர்ஆனிலோ அல்லது நபி மொழிகளிலோ குறிப்பிடப்படவில்லை. 

ஆனாலும் பெரும்பான்மையான இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் ஒரு பெண் பூப்பெய்த முடியுமான ஆகக் குறைந்த வயதெல்லை ஒன்பது சந்திராண்டுகளாகும் எனக் குறிப்பிட்டுள்ளனர். அவன் ஒன்பது சந்திராண்டுகள் பூர்த்தியாவதற்கு 15 நாட்களுக்கோ அதற்கு மேற்பட்ட நாட்களுக்கோ முன்பு இரத்தத்தைக் கண்டால் அது மாதவிடாயாகக் கருதப்படமாட்டாது எனவும் ஒன்பது சந்திராண்டுகள் பூர்த்தியாவதற்கு 15 நாட்களை விட குறைந்த காலப் பகுதிக்கு முன் இரத்தத்தைக் கண்டால் அது மாதவிடாயாகக் கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்;.

இதற்கான ஆதாரமாக பரீட்சார்தத்தையே முன்வைக்கின்றனர். அதாவது இஸ்லாமிய சட்டக் கலை அறிஞர்களால் தமது காலப் பகுதியில் காணப்பட்ட பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்தத்தின் மூலமாகவே இம்முடிவுக்கு வந்துள்ளனர். மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு குறைந்த பட்ச வயதெல்லை ஒன்று உண்டு என்று சொல்லும் அறிஞர்களிடத்திலே இதன் வயதெல்லை விடயத்தில் ஒருமித்த கருத்து இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

சில மார்க்க அறிஞர்கள் மாதவிடாய் ஆரம்பிக்க முடியுமான காலப்பகுதிக்கு ஒரு வரையறை கூற முடியாது எனக் குறிப்பிடுகின்றனர். அது 9 ஆண்டுகள் பூர்த்தியாக முன்பும் உண்டாகலாம்.  'அல்லாஹ்வோ நபி(ஸல்) அவர்களோ அதற்கு ஒரு வரையறை கூறவில்லை. இதில் பரீடசார்த்தங்களை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

ஏனெனில் குறிப்பிட்ட சில காலப்பகுதியில், சில குறிப்பிடப்பட்ட பெண்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக வைத்து முழு உலகிலும் காணப்படக் கூடிய எல்லாப் பெண்களுக்குமான ஒரு வரையறையை ஏற்படுத்த முடியாது. ஒரு பெண் வசிக்கும் பிரதேசம், அவளின் பரம்பரை பாரம்பரியம்,  உணவுப் பழக்க வழக்கம், காலநிலை, போன்றவற்றைப் பொறுத்து அவள் பருவ மெய்தும் வயது வித்தியாசப்படலாம். . சில நிலப்பகுதிகளில் சில இனப் பெண்கள் ஏழு எட்டு வயதிலேயே பருவமெய்தி விடுகிறார்கள்.' என்பதே இதற்காக இவர்கள் முன்வைக்கும் வாதமாகும். 

ஒரு வயதெல்லையை ஏற்படுத்த முடியாது என்ற கருத்தை முன்வைத்தவர்களில் இமாம் அத்தாரிமி முக்கியமானவர். இவரின் கூற்றை இமாம் நவவி அவர்கள் தனது மஜ்மூஉ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். இவரின் கருத்தை சைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்களும் சமீப கால அறிஞர்களான அப்துல் அஸீஸ் பின் பாஸ், முஹம்மத் பின் ஸாலிஹ் அல் உஸைமீன் உள்ளிட்ட பலரும் ஆதரித்துள்ளனர். இதுவே ஆதாரத்தின் அடிப்படையில் பலமான கருத்தாகும். 

வஹி ஒரு வரையறையை ஏற்படுத்தவில்லை என்பதையும் அது பெண்களின் உடல் நிலைகளுக்கேற்ப வித்தியாசப்படும் தன்மையைக் கொண்டது என்பதையும் ஆதாரமாக வைத்து மாதவிடாய் நின்றுவிடுவதற்கு வயதெல்லை குறிப்பிட முடியாது என்று அறிஞர்கள் கருத்தொருமைப்பட்டுள்ளார்கள். மாதவிடாய் ஆரம்பிக்கும் வயதெல்லை இவ்வணுகு முறையே பின்பற்றப்பட வேண்டும் என்பது தெளிவாகும்.

ஆனாலும் பெண்களுக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் சராசரி வயது 12 ஆகும். அவ்வாறே மாதவிடாய் நின்று விடும் சராசரி வயது 50 ஆகும்.  

மாதவிடாய் கால அளவு

சராசரிப் பெண்களில் பெரும்பான்மையானவர்களும் ஆறு அல்லது ஏழு நாட்கள் மாதவிடாய் காலப் பகுதியைக் கொண்டிருப்பர் என்பதில் அறிஞர்களுக்கிடையில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும்  மாதவிடாய் வெளியானதன் பின் அது மாதவிடாய் எனத் தீர்மானிக்கப்படுவதற்கு அது நீடித்திருக்க வேண்டிய  குறைந்த பட்ச கால எல்லை எவ்வளவு? கூடின பட்ச கால எல்லை எவ்வளவு? அவ்வாறே இரு மாதவிடாய்களுக்கிடையில் இருக்கும் சுத்தமான காலப்பகுதியின் குறைந்த பட்ச காலம் எவ்வளவு? போன்ற விடயங்களில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை காணப்படுகின்றது. 

இவ்விடயத்திலும் பரீட்சார்தத்தை அடிப்படையாக வைத்து  பெரும்பான்மையான அறிஞர்கள் இவற்றிற்கு வரையறைகளை ஏற்படுத்தியிருக்கின்றனர். அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு இவற்றிற்கு வரையரையை ஏற்படுத்தவில்லை என்பதனால் இவற்றிற்கு வரையரைகளை குறிப்பிட முடியாது என்பதே மிகச் சரியான கருத்தாகும்.

மாதவிடாய்ப் பெண்களுக்கு தடுக்கப்பட்டவை:

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களுக்கு பல விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இக்காரியங்களை மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகே அவர்கள் செய்ய வேண்டும். இவற்றில் சிலவிடயங்களில் கருத்தொருமைப்பாடும் மேலும் சில விடயங்களில் கருத்து வேற்றுமையும்  காணப்படுகின்றன.

1. தொழுகை: 

மாதவிடாயை விட்டும் தூய்மையாக இருப்பது தொழுகை நிறைவேறுவதற்கான முக்கிய நிபந்தனையாகும். மதாவிடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டுவிடு. மாதவிடாய் நின்ற பின்பு குளித்து விட்டுத் தொழுது கொள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புகாரி (228)

ஒரு ஹதீஸின் தொடரில் 'எமது மார்க்கத்திலும் புத்தியிலும்  எங்ஙனம்  குறைவாக உள்ளோம்? அல்லாஹ்வின் தூதரே' என்று பெண்கள் கேட்ட பொழது 'பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?' என்று  நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், ஆம்  என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அது அவளது புத்தியின் குறைபாடாகும், என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?'' என்று கேட்க, மீண்டும் அப்பெண்கள் ஆம் என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தின் குறைபாடாகும் என்றார்கள். புகாரி (304)

மாதவிடாயின் போது விட்டத் தொழுகைகளை திரும்பத் தொழ வேண்டியதில்லை. எங்களுக்கு அது (மாதவிடாய்) ஏற்பட்டது. அப்போது விடுபட்ட நோன்பை (மாதவிடாய்நின்ற பிறகு) மீண்டும் நோற்குமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். விடுபட்டத்தொழுகைகளை தொழுமாறு கட்டளையிடப்படவில்லை. -முஸ்லிம் (508)

2. நோன்பு 

மாதவிடாயை விட்டும் தூய்மையாக இருப்பது தொழுகை தொழுகை நிறைவேறுவதற்கு எவ்வாறு நிபந்தனையோ அவ்வாறே நோன்பு நிறைவேறுவதற்கும் அது நிப்நதனையாகும். இதற்கு முன் கூறப்பட்ட ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாம்.

இவ்வாறு மாதவிடாயின் போது விடப்படும் நோன்புகளை தூய்மையானதன் பின் ஈடு செய்வது கடiயாகும். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும். 

எங்களுக்கு அது (மாதவிடாய்) ஏற்பட்டது. அப்போது விடுபட்ட நோன்பை (மாதவிடாய் நின்ற பிறகு) மீண்டும் நோற்குமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். விடுபட்டத் தொழுகைகளை தொழுமாறு கட்டளையிடப்படவில்லை. -முஸ்லிம் (508)

3. தவாப் செய்வது கூடாது

நாங்கள் ஹஜ் செய்வதற்காக புறப்பட்டுச் சென்றோம். ஸரிஃப் என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்து .அழுதுகொண்டிருந்த என்னிடம் உமக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்று சொன்னேன். இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண்மக்கள் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபதுல்லாவைத் தவாப் செய்வதைத் தவிர ஹஜ்கட்மையை நிறைவேற்றுபவர் செய்கின்ற மற்ற எல்லா கிரியைகளையும் நீர் செய்வீராக. எனக் கூறினார்கள். புகாரி (294) 

4. உடலுறவு கொள்வது கூடாது

'மாதவிடாய் (குறித்த சட்டம்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்:-'அது ஒரு நோவினை. ஆகவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நீங்கள் நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! –பகரா:222 

மேலும் முஸ்னத் அஹ்மதில் (9779)பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு நபி மொழியில் ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணிடத்தில் உடலுறவு கொள்பவன் முஹம்மதின் மீது அல்லாஹ் அருளிய(வேதத்)தை மறுத்துவிட்டவனாவான்.