உம்மு ஹபீபா (رضي الله عنها)

முன்மாதி நபித்தோழர்கள் தொடர்:14
பொறுமையின் உறைவிடம்
உம்மு ஹபீபா (ரழி)
அல்-உஸ்தாத் M.W.M. உமர் (பஹ்ஜி)

முஃமின்களின் தாய்மார் என இஸ்லாமிய வரலாற்றில் போற்றப்படும் எமது அன்னையர்களாகிய நபி (ஸல்) அவர்களின் அன்புத் துணைவியர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு துறையின் மூலமாக  அல்லது சில வரலாற்று நிகழ்வுகளின் மூலமாக அல்லது தனிச்சிறப்பியல்புகள் மூலமாக இஸ்லாமிய உலகில் தடம்பதித்து விட்டனர். அந்நிகழ்வுகள் அவர்களின் மரணத்தின் பின்பும் அவர்களை மறக்கடிக்கப்படாமல் உலகம் நிலைத்திருக்கும் வரை பேசு பொருளாக மாற்றிவிட்டன.

நபிகளாரின் நேசத்திற்குரிய முதல் மனைவி அன்னை கதீஜா (ரழி) அவர்கள் நபிகளாரின் மனைவிமார்களில் மிக உயரிய அந்தஸ்தைப் பெற்றுக் கொள்கின்றார். மேலும் உலகிலுள்ள அனைத்துப் பெண்களையும் விட மிகச் சிறந்தவர்,முதன்மையானவர் எனும் சிறப்பையும் சேர்த்தே பெருகிறார். 

அதே போன்றுதான் அன்னை உம்மு ஹபீபா (ரழி) அவர்களும் வாழ்வில்; மறக்கமுடியாத ஒரு நிகழ்வை நிகழ்த்தி இஸ்லாமிய வரலாற்றில் தடம்பதித்துவிட்டார். ஆம்! குறைசிகளின் பெரும் தலைவர் குறைசிகளால் மிகவும் மதிக்கப்படும் ஒரு நபரான தன் அருமைத் தந்தை, தன் வீடு நோக்கி வந்து நபிகளாரின் விரிப்பில் உட்கார முற்பட்ட வேலை 'சடக்' என்று விரிப்பை சுருட்டி எடுத்து உட்கார முடியாமல் தடுத்து விடுகிறார். ஒரு பெரும் தலைவர், ஏன் தன்னைப் பெற்று,பராமரித்த தந்தையேயாயினும் இஸ்லாத்தை ஏற்காத ஒரே காரணத்தினால் முச்ரிக்காக, அசுத்தமானவராக, நபிகளாரின் விரிப்புக்கு தகுதியற்றவராக இருப்பதால் தன் அருமைத் தந்தையென்றும் பாராது தடுத்து விட்டார். தந்தைப் பாசத்தை மீறி வரலாற்றில் தடம்பதிய வைத்த இத்துணிகர நிகழ்வானது, இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் பேசுபொருளாக மாறி அன்னையை உயர்வடையச் செய்து விட்டது.

அறிமுகம் : 

அன்னை உம்மு ஹபீபா அவர்களின் இயற் பெயர் ரம்ழா பின்த் அபூ ஸுப்யான். இவர் நபித்துவத்திற்கு 17 வருடங்களுக்கு முன் கி.பி 594 இல் மக்கா நகரில் ஹிஜ்ரிக்கு முன் 30 இல் பிறக்கிறார்கள்.

இவர் தந்தை அபூ ஸுப்யான் சக்ர் பின் ஹர்ப் பின் உமைய்யா ஆவார். இவரின் தந்தை அபூ ஸுப்யான் மக்கமா நகரின் குறைசிக் குலத்தவரின் தலைவராவார். இஸ்லாத்தை அதன் ஆரம்பப் பகுதியில் கடுமையாக எதிர்ப்பதில் முதன்மை பெற்றவர். முஸ்லிம்களுக்குக் கடும் தொல்லைகளும், கடும் தொந்தரவுகளும் கொடுப்பதற்கு தலைமை தாங்கியவர். முஸ்லிம்களுக்கெதிராக பல போர்களுக்கு தலைமை தாங்கி வழி நடாத்தியவர். பின்பு மக்கா வெற்றியின் போது ஹிஜ்ரி 8 இல் இஸ்லாத்தை ஏற்றார்.

இவரின் தாயார் ஸபிய்யா பின்த் அபுல் ஆஸ் பின் உமைய்யா ஆவார். இவர் நபிகளாரின் சாச்சாவின் மகள்மார்களில் ஒருவராவார்.

இவரின் சகோதரர் புகழ் பெற்ற நபித் தோழர் இஸ்லாமிய கிலாபத்தைப் பொறுப்பேற்று ஆட்சிபுரிந்த அமீருல் முஃமினீன் முஆவியா (ரழி) ஆவார். மற்றைய சகோதரர் ஷாமின் கவர்னராக இருந்த யஸீத் (ரழி) ஆவார். 

முதற் கணவர் :

உம்மு ஹபீபா (ரழி) அவர்களின் முதற் கணவர் உபைதுல்லாஹ் பின்; ஜஹ்ஷ். இவர் 'உம்மஹாதுல் முஃமினீன்' எனும் இறை நம்பிக்கையாளர்களின் தாய்மார்களில் ஒருவரான ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களின் சகோதரர். இஸ்லாம் அறிமுகமாக முன் ஆரம்ப காலத்திலேயே சிலை வணக்கத்தை வெறுத்து வந்தார். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் துவங்கிய ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறிக் கொண்டார்.

அதன் பின் அவரது மனைவி உம்மு ஹபீபாவும் இஸ்லாத்தைத் தழுவி இஸ்லாமிய குடும்பத்தில் ஒருவராக தம்மை இணைத்துக் கொண்டார். இஸ்லாம் எனும் தென்றல் காற்றை தந்தை நுகர முன்பே நுகரும் பாக்கியம் பெற்றவரே ரம்ழா பின்த் அபூ ஸுப்யான். 

அல்லாஹ் ஒருவருக்கு சத்தியத்தை,நேர்வழியை கொடுக்க நாடிவிட்டால் அதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. இஸ்லாத்தின் கடும் விரோதியாக இருந்த அபூ ஸுப்யானால் கூட தன் மகள் இஸ்லாத்தில் நுழைவதைத் தடுக்க முடியாமல் போனது இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். 

அபீஸீனியாவை (எதியோப்பியா) நோக்கி:

மக்காவில் குறைசியர்களின் கொடுமைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகவே அபீஸீனியாவை நோக்கிய ஹிஜ்ரத் (தியாகப் பயணம்) சென்ற இரண்;டாம் குழுவில் உபைதுல்லாஹ் தம்பதியினரும் இணைந்து கொண்டனர். அங்கே தான் இத் தம்பதி;யினருக்கு ஹபீபா எனும் பெண் குழந்தை பிறந்தது. அன்று முதல் அவர்கள் உம்மு ஹபீபா எனும் புனைப் பெயர்; கொண்டு அழைக்கப்பட்டார்கள்.

அபீஸீனியாவில்; மன்னர் நஜ்ஜாசியின் ஆட்சியில் எவ்வித நெருக்கடியோ அச்சவுணர்வோ இன்றி மிகச் சுதந்திரமாக இஸ்லாத்தைப் பின்பற்றி வாழக்கூடிய சூழ்நிலையைப் பெற்றுக் கொள்கிறார்கள். அபீஸீனியாவிலே அவர்களது வாழ்க்கைச் சக்கரம்,பெற்றெடுத்த அன்புக் குழந்தையுடன் இறைவழிபாட்டில் மிக மகிழ்ச்சிகரமாக கழிந்து கொண்டிருந்தது.

மனித வாழ்வு என்பது இன்ப,துன்பத்துக்கு மத்தியிலே சுழன்று கொண்டிருப்பது யதார்த்தமே. இன்பமாக,சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது திடீரென துன்பங்களும், சோகங்களும் அவனைச் சூழ்ந்து கொள்ளும். அதில் அவன் திக்குமுக்காடிப் போவான். அதே போல் துன்பத்தில், துயரத்தில் சுழன்று வாழக்;கை சோகத்தில் சென்று கொண்டிருக்கும் வேளை திடீரென ஒளிக்கீற்றுகள் தென்படத் துவங்கும். அவன் பட்ட கவலைகள்,துன்பங்கள் சூரியனைக் கண்ட பனித்துளி போல் மறைந்து இன்பகரமான,சந்தோசமான சூழல் உருவாகும். இதுவே மனித வாழ்வின் நியதியாகும்.

இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்தினால் பெற்ற தந்தையின் வெறுப்பைச் சம்பாதித்து, குறைசியர்களின் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பின் அபீஸீனியாவுக்கு வந்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட அன்னையவர்களுக்கு மீண்டும் ஒரு பெரும் சோதனைக்கு முகங்கொடுக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது.     

மதம் மாறிய கணவர் : 

ஒரு நாள் இரவு வழமைபோல் தூங்கச் செல்கிறார்கள். வழமைக்கு மாறாக ஒரு கெட்ட கனவு அவருக்கு தென்படுகிறது. தன் கணவனின் முகம் மோசமான நிலைக்கு மாற்றப்பட்டிருப்பதைக் காண்கிறார்கள். காலை எழுந்ததும் தன் கணவர் அரும்பெரும் பொக்கிஷமாகக் கிடைத்த புனித இஸ்லாம் மார்க்கத்தைத் துறந்து கிறிஸ்தவராக மாறியிருப்பதைக் காண்கிறார்கள்.

மிகவும் உயர்ந்த நிலையிலிருந்து மிகத் தாழ்ந்த நிலைக்கு கணவர் போயிருப்பதைத் தன் கனவின் மூலம் இறைவன் காட்டியுள்ளான் என்பதை உணர்கிறார்கள். உபைதுல்லாஹ் மக்காவில் இஸ்லாம் அறிமுகமாக முன்பே சிலை வணக்கத்தைப் புறக்கணித்து வாழ்ந்தவர். குறைசிகளின் வணக்க வழிபாடுகளை வெறுத்து ஒதுங்கியவர். புனித இஸ்லாத்தை ஆரம்ப காலத்திலேயே ஏற்றுக் கொண்ட ஒருவர்.

எனினும் அபீஸீனியாவிற்குச் சென்ற பின் அவர் நிலைமைகளில் மாற்றம் ஏற்படுகின்றது. கெட்ட சகவாசத்திற்கு அடிமையாகி கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்கிறார். அன்னையவர்கள் மிகவும் கவலை கொள்கிறார்கள். தன் கணவனுக்கு, தான் கண்ட கனவைக் கூறி இறைவன் பால் திரும்பும் படி பலமுறை உபதேசம் செய்கிறார். அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகவே மாறிவிடுகின்றன. போதாக்குறைக்கு மதுவுக்கு அடிமையாகி அதன்மூலம் நோய்வாய்ப்பட்டு மரணித்தும் விடுகிறார். 

உபைதுல்லாஹ் இஸ்லாம் அறிமுகமாக முன்பே சிலை வணக்கத்தை வெறுத்து ஒதுங்கியவர். குறைசிகளின் சிலை வணக்கங்களைக் கண்டு கவலை கொண்டு அதைத் தடுக்க வழிதேடியவர். ஈற்றில் எதை வெறுத்து ஒதுங்;கினாரோ,அதன் பால் தஞ்சமடைந்து,இறை நிராகரிப்பாளர்களில்; ஒருவராக மாறிவிட்டார். 

இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை யாதெனில்,அல்லாஹ் யாருக்கு நேர்வழியை நாடுகிறானோ அவர்களுக்குத் தான் நேர்வழியைக் கொடுக்கிறான். 'நபியே! அவர்களை நேர்வழியின் பால் இட்டுச் செல்வது உம் பொறுப்பல்ல. மாறாக அல்லாஹ் நாடியவர்களையே அவன் நேர்வழியில் செலுத்துகின்றான்.' (2:272)

ஆக,எமது எதிர்காலம்,எமது கடைசி முடிவு எப்படி அமையும் என்பது நமக்குத் தெரியாது. நாம் எந்நேரமும் எம்மை நேர்வழியின் பால் இட்டுச் செல்ல அதிகமதிகம் பிரார்த்திக்க வேண்டும். எம்மின் மூலம் பாவங்கள் ஏற்படுவதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

பெற்றோர்களையும்,தன் தாய் நாட்டையும் துறந்து அந்நிய நாட்டில் கணவருடன் வாழ்ந்த அன்னை உம்மு ஹபீபா (ரழி) அவர்களுக்கு இறுதியில் தன் அன்புக் கணவரையும் பறி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

ஒரு பக்கம் இஸ்லாத்தை மூர்கத்தனமாக எதிர்க்கும் தந்தை,மறுபக்கம் அபீஸீனியாவுக்கு அகதியாக வந்த இடத்தில் தன்னை நிர்க்கதியாக விட்டுவிட்டு மதம் மாறிய கணவர். இருவருக்குமிடையில் தான் கொண்ட கொள்கையில் மனம் தளராமல் இருந்தார்கள் அன்னை உம்மு ஹபீபா.

தனக்கு ஏற்பட்ட இப்பாரிய சோதனையிலிருந்து மீட்சிபெற இறைவனிடமே முறையிட்டவர்களாக உறுதியான ஈமானுடன் இறைத்தியானத்தை அதிகரித்தார்கள். தன்னைப் படைத்த இறைவன் தன்னை விட்டுவிட மாட்டான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வாழ முற்பட்டார்கள். கணவனை விட்டுப் பிரிந்து தனிமையில் வாழும் அன்னையவர்களுக்கு மக்காவிலிருந்து வந்து அங்கு குடியமர்ந்தவர்கள் உறுதுணையாகவும்,ஒத்தாசையாகவும்; இருந்தார்கள். 

மக்காவில் நிலைமைகள் சீரடையவே தம் சொந்த நாட்டை நோக்கிப் பயணிக்க மக்கள் ஆரம்பிக்கிறார்கள். அன்னையவர்களையும் தம்முடன் நாடுதிரும்ப அழைக்கவே,அதற்கவர்கள் மறுக்கிறார்கள். கணவன் இறந்து விட்ட நிலையில்,தான் மக்கா நோக்கிப் பயணித்தால்,இஸ்லாத்தை மூர்க்கத்தனமாக எதிர்க்கும் தன் தந்தை,தன்னை மதம் மாற்றி விடுவார் என அச்சம் கொள்கிறார்கள். எத்தகைய சவால்களையும் இஸ்லாத்திற்காக தாங்கிக் கொள்ளத் தயாராகிறார்கள். 

நனவாகிய கனவு :

ஒரு நாள் உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயம் கனவில் யாரோ ஒருவர் இவரை 'இறை நம்பிக்கையாளர்களின் தாயே!' என அழைப்பதைக் கேட்கிறார்கள். உடனே விழித்துக் கொண்ட அன்னையவர்கள் தனக்கு நற்செய்தி ஒன்று ஏற்படப்போகிறது என்பதை ஊகித்துக் கொண்டார்கள். சூரியனைக் கண்ட தாமரைபோல் தம் துன்பங்களுக்கும்,துயரங்களுக்கும் விடிவு கிடைக்கப்போகிறது என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். 

அதே சமயம் மக்காவில் நபி (ஸல்) அவர்களிடம் அபீஸீனியாவில் அகதிகளாக வாழும் முஸ்லிம்களைப் பற்றியும்,அன்னை உம்மு ஹபீபாவினது நிலைமையைப் பற்றியும், கணவன் மதம் மாறி இறந்த செய்தியும்;,அன்னையவர்கள் தனிமையில் அங்கே காலம் கழிப்பது பற்றியும் பேசப்பட்டன.

இதை செவியுற்ற நபி (ஸல்) அவர்கள் கவலை அடைகிறார்கள். மக்கத்து குறைசியரின் மிகப் பெரும் தலைவரின் மகள் இஸ்லாத்தை ஏற்றதால் அவருக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி மனம் வருந்துகிறார்கள்.

அன்னை உம்மு ஹபீபா சம்மதித்தால், தான் அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும் படியும் அபீஸீனியா மன்னன் நஜ்ஜாசிக்கு விளக்கமாக கடிதம் எழுதி அனுப்புகிறார்கள். 

அரண்மனையில் மண ஒப்பந்தம் :

மன்னர் நஜ்ஜாசி இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய செய்தியைப் படித்தவுடன் தன் அடிமைப் பெண் அப்ரஹாவை உம்மு ஹபீபா(ரழி) அவர்களிடம் அனுப்பி நபியவர்களை திருமணம் முடிப்பதற்கான சம்மதத்தைக் கேட்கிறார்கள்.

இச்சுப செய்தியைக் கேட்ட உம்மு ஹபீபா ஆனந்த மேலீட்டால் செய்தி கொண்டு வந்த அப்ரஹா என்ற அடிமைப் பெண்ணுக்கு தான் அணிந்திருந்த வெள்ளி நகைகள் அனைத்தையும் பரிசாகக் கொடுத்து விடுகிறார்.

திருமணத்திற்கு சாட்சியாக ஒருவரை நியமிக்கும் படி மன்னர் வேண்டவே தனது உறவினரான காலித் பின் ஸய்யித் பின் ஆஸ் (ரழி) யை தன்னுடைய சாட்சியாளராக அன்னை அவர்கள் நியமிக்கிறார்கள். 

அன்றைய தினம் மாலை நேரத்தில் மன்னர் நஜ்ஜாஷி தன் அரண்மனையில் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையின் மகன் ஜஃபர் இப்னு அபீதாலிப் (ரழி), காலித் பின் யஸீத் (ரழி) அவர்கள் முன்னிலையில் 400 தீனார்கள் மணக்கொடையளித்து திருமண ஒப்பந்தத்தை நிறைவேற்றி முடிக்கிறார். திருமண ஒப்பந்தம் நடந்து முடிந்ததும் மன்னர் வந்திருந்த முஸ்லிம்கள் அனைவருக்கும் திருமண விருந்தளித்து கௌரவிக்கிறார். 

அல்லாஹ் தன்னை கைவிடாமல் தனக்களித்த மாபெரும் அருட்கொடையை நினைத்தும்,தன்னை இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களில் ஒருவராக ஆக்கியதை நினைத்தும் அன்னை உம்மு ஹபீபா(ரழி) அவர்கள் இறைவனுக்கு நன்றிப் பெறுக்கோடு அதிகமதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள். இச்சுபசெய்தியைக் கொண்டு வந்த அடிமை அப்ரஹாவுக்கு மேலும் 50 தீனார்களைப் பரிசாகக் கொடுக்கிறார்கள்.

நஜ்ஜாசி மன்னரின் மனைவி,அன்னை உம்மு ஹபீபாவுக்கு திருமணப் பரிசாக ஒரு பை நிறைய பெறுமதி வாய்ந்த வாசனைத் திரவியங்களை அடிமை அப்ரஹா மூலம் அனுப்பி வைத்தார்.

மேலும் அப்ரஹா,உம்மு ஹபீபா தமக்குத் தந்த நகைகளை மீண்டும் கொண்டு வந்து அன்னையிடம் கொடுத்து இதைத் தமது பரிசாக வைத்துக் கொள்ளும்படியும் இதைத் தவிர வேறு ஒன்றும் தன்னிடம் இல்லை எனக்கூறி தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு வேண்டினார். மேலும் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விடயத்தை நபியவர்களிடம் கூறி,தமது ஸலாத்தை எத்திவைக்கும் படியும் இதுவே தமக்கு செய்யும் பேருபகாரம் எனவும் கூறினார். 

மன்னர் நஜ்ஜாசி,நபி(ஸல்)அவர்கள் தமக்களித்த பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றிய திருப்தியுடன் புது மணப்பெண்னை போதிய பாதுகாப்புகளுடன் மதீனா நகர் நோக்கி அனுப்பி வைக்கிறார்.

இஸ்லாத்தின் கடும் விரோதியாக இருந்த அபூஸுப்யான்,தன் மகள் இறைத்தூதரைத் திருமணம் செய்து கொண்டார் எனக் கேள்விப்பட்டதும் கடுங்கோபம் கொள்வார் என எதிர் பார்க்கப்பட்ட போதும் அதற்குப் புறம்பாக தம் மகளை சங்கை பொருந்திய, தன் தகைமைக்குத் தகுதியான ஒருவரே கரம்பற்றியுள்ளார் என சந்தோசப்பட்டார்.

நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹபீபாவைத் திருமணம் முடித்ததன் மூலம் இஸ்லாத்துக்குப் பெரும் சவாலாக இருந்த குறைசித் தலைவர்களான அபூஸுப்யான், முஆவியா, யஸீத் போன்றவர்களின் இஸ்லாத்திற் கெதிரான கடும்போக்கில் தளர்வு ஏற்படவும், இஸ்லாத்தைப் பற்றி புரிந்துகொள்ளவும் வழி பிறந்தது. பின் அப்பெரும் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்று நபியவர்களின் உற்ற தோழர்களாக மாறினர்.

இச் சந்தர்ப்பத்தில் தான் அல்லாஹ் கீழ் காணும் வசனத்தை இறக்கினான். 'உங்களுக்கும் நீங்கள் விரோதித் திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையில் அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும். மேலும் அல்லாஹ் பேராற்றளுடையவன். மிக்க மன்னிப்பவன். மிகக் கிருபையுடையவன்.'(60:7)

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள்; : 'மேற்கண்ட இவ்வசனம் உம்மு ஹபீபா (ரழி) அவர்களின் திருமணத்தின் காரணமாக இறக்கியருளப்பட்டது.' எனக் கூறுகின்றார்கள்.

துணிகர நிகழ்வு :

ஹுதைபிய்யா உடன்படிக்கையை குறைசியர்கள் முறித்த போது அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் நோக்கில் அபூஸுப்யான் மதீனா நோக்கி இறைத்தூதரைச் சந்திக்க வருகிறார். அப்போது தன் மகளைச் சந்திக்க நாடி அவர் இல்லம் நுழைகிறார்.

அங்கு நபிகளாரின் விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. அபூஸுப்யான் அவ்விரிப்பில் உட்கார முற்படவே வெடுக்கென்று விரிப்பை எடுத்துக்கொண்டார் உம்மு ஹபீபா (ரழி). திடுக்கிட்டுப்போன அபூஸுப்யான், 'மகளே! இவ்விரிப்பு எனக்குத் தகுதியற்றதா? அல்லது விரிப்புக்கு நான் தகுதியற்றவனா?' எனக் கேட்டார்.

அதற்கு மகள் தந்தையைப் பார்த்து 'இது மிகப்பரிசுத்தமான,இறைத்தூதர்; அமரும் விரிப்பாகும். மாறாக,உங்களைப் போன்ற அசுத்தமானவர்கள்,சிலைகளை வணங்கி இறை நிராகரிப்பில் ஈடுபடுபவர்கள் அமரும் விரிப்பல்ல. ஆதலால் தான் அதை எடுத்துவிட்டேன்'என தைரியமாகக் கூறினார்கள்.

மகளே! 'என்னை விட்டுப் பிரிந்து சென்றதிலிருந்து நீ கெட்டு விட்டாய்' என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

இந்நிகழ்வானது சாதாரண ஒரு தந்தைக்கும் மகளுக்குமிடையில் நடைபெற்ற மறந்து விடக்கூடிய நிகழ்வல்ல.ஒரு பெருங்கூட்டத்தின் தலைவர்,அனைவரின் மரியாதைக்கும் உரியவர். ஏன் ஒரு நாட்டின் தலைவரைப் போன்றவர்.அவரைப் பார்த்து நீர் அசுத்தமானவர்,தகுதியற்றவர் என தான் பெற்ற மகளே கூறுவதாக இருந்தால்,அதைக் கூறுவதற்கான தைரியம்,அதிலும் பெற்ற தந்தையை பார்த்தே கூறுவதற்குள்ள துணிச்சல் எங்கிருந்து வந்தது?

ஆம்! அது தான் புனித இஸ்லாம் கொடுத்த அற்புதமான பயிற்சி, நபியவர்கள் மீது கொண்ட அபரிமிதமான அன்பு. அது மாத்திரமல்ல இஸ்லாம் என்று வருமிடத்து அதன் வரையரையை விட்டும் வெளியேறிய காபிர்கள், முச்ரிக்கள் எவராயிருந்தாலும் அவர் ஒரு முஸ்லிமை விட எப்போதும் தரத்தில் குறைந்தவரே! அவர் நம்மைப் பெற்று வளர்த்த தந்தையாயினும் சரியே!          

ஹதீஸ் துறையில் :

அன்னை உம்மு ஹபீபா(ரழி) அவர்கள் ஹதீஸ் துறையிலும் தமது பங்களிப்பைச் செய்துள்ளார்.அவர் நபியவர்களின் வாயிலாக சுமார் 65 நபிமொழிகளை அறிவித்துள்ளார்.

ஸுன்னாவை பின்பற்றுவதில் :

அன்னையவர்கள் நபியவர்களின் ஸுன்னாக்களைப் பின்பற்றுவதில் மிகக் கரிசனை செலுத்தி வந்தார்கள்.தன் தந்தையின் மரணச் செய்தி கேள்விப்பட்டு மூன்று நாட்கள் கழிந்த பின் வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொண்டார்.

அப்போது, இன்றைய நாளில் வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்வதில் எனக்கு எவ்விதத் தேவையுமில்லை. எனினும்,நபி(ஸல்) அவர்கள் கணவன் இறந்த மனைவியைத் தவிர யாரும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்கள்.ஆதலால் நபியின் ஸுன்னாவைக் கடைபிடிக்கவே இவ்வாறு செய்தேன் எனக் கூறினார்கள்.

அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை :

உஸ்மான் (ரழி) அவர்களின் வீட்டை கொலையாளிகள் முற்றுகையிட்டு பின் அவரை கொலை செய்ததைக் கேள்வியுற்ற அன்னை உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் கடும் கவலை கொள்கிறார்கள். அப்பொழுது,

'இறைவா! இக்கொலையாளிகளின் கைகளைத் துண்டித்து பொதுமக்களின் முன் கேவலப்படுத்தி விடுவாயாக!' எனப் பிரார்தித்தார்கள்.

அல்லாஹ் அவரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு கொலையாளிகளின் கைகளைத் துண்டித்து பொதுமக்களின் முன்னிலையில் தெரு ஓரத்தில் வீழ்ந்துகிடக்க வைத்து கேவலப்படுத்தினான்.

இறுதித் தருணத்தில் :

அன்னை ஆயிசா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :- உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் மரணத்தருவாயில் என்னையும்,உம்முஸலமாவையும் அழைத்து, 'எனக்கும் உங்களுக்கும் மத்தியில் சக்களத்தி என்ற அடிப்படையில் ஏதாவது தவறு ஏற்பட்டிருப்பின் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். எனது பாவங்களை மன்னிக்க இறைவனிடம் பிரார்தியுங்கள்' என்றார்கள். நான் 'அல்லாஹ் அனைத்தையும் மன்னிப்பானாக!' எனப் பிறார்தித்தேன்.

இதைச் செவியுற்ற உம்மு ஹபீபா (ரழி), 'என்னை நீர் மகிழ்ச்சியடையச் செய்தீர்,அல்லாஹ் உம்மையும் மகிழ்ச்சியடையச் செய்வானாக!' எனக் கூறினார்கள். அதே போன்றே உம்மு ஸலமா (ரழி) அவர்களிடமும் வேண்டிக் கொண்டார்.

மரணம்:

உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் தன் சகோதரன் முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சியில் 74ஆவது வயதில் ஹிஜ்ரி 44இல் (கி.பி 668இல்) மதீனா நகரில் மரணமடைகிறார். ' பகீ ' மையவாடியில் அடக்கம் செய்யப்படுகிறார்.