பிறக்கும் குழந்தையின் விடயத்தில் நாம் பேண வேண்டியவை
பிறக்கும் குழந்தையின் விடயத்தில் நாம் பேண வேண்டியவை
(தொடர்-3)
அல்உஸ்தாத் B.H. பர்னாஸ் (அப்பாஸி)
ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் சூட்டுவதன் சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள் பற்றி சென்ற இதழில் அலசினோம். இந்த இதழினூடாக 'கத்னா' (விருத்தசேதம்) உடன் சம்பந்தப்படக்கூடிய ஒரு சில விடயங்களை கீழ்வரும் தலைப்புகளுக்குக் கீழே அணுக முயற்சிப்போம்.
- • கத்னா செய்வதனுடைய சட்டம்.
- • கத்னா செய்யப்பட வேண்டிய வயதெல்லை.
- • கத்னா விருந்து.
கத்னா செய்வதனுடைய சட்டம்
கத்னா எனும் விருத்தசேதத்துடன் சம்பந்தப்படக்கூடிய விடயங்களை இருவேறு பிரிவுகளின் கீழால் நோக்கலாம்.
1. ஆண்களுக்கு கத்னா செய்வது பற்றிய சட்டங்கள்
2. பெண்களுக்கு கத்னா செய்வது பற்றிய சட்டங்கள்
01. ஆண்களுக்கு கத்னா செய்வதன் சட்டங்கள்:
ஒரு முஸ்லிமான ஆண் விருத்த சேதம் செய்து கொள்வதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் பூரண அனுமதியுள்ளது என்பது தொடர்பில் நாம் அறிந்தவரை எவ்வித கருத்துவேறுபாடும் கிடையாது. எனினும் கத்னா செய்வது கட்டாயமா? அல்லது ஸுன்னத்தா? என்பதில் உலமாக்களுக்கு மத்தியில் கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.
கத்னா செய்வது சுன்னத் எனும் கருத்தை இமாம்களான அபூ ஹனீபா, மாலிக் (சிலர் மாலிக் இமாம் ஸுன்னா என இங்கே கூறியது வாஜிப் எனும் கருத்துப்படவாகும் எனக் கூறியுள்ளனர்.) (பார்க்க:تحفة المودود பக்கம்:162) மற்றும் ஷஷாபிஈ மத்ஹபைச்சேர்ந்த சில உலமாக்களும் கூறுகின்றனர். (பார்க்க :المنتقى شرح الموطأ பாகம்:7 பக்கம்:232,شرح النووي على مسلم பாகம்:3 பக்கம்:148 فتح الباري பாகம்:10 பக்கம்:341) இவர்கள் தம்பக்க கருத்தை உறுதிப்படுத்த பின்வரும் ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.
1. இயற்கை மரபுகள் 5 ஆகும். அவையாவன: விருத்த சேதனம் (கத்னா) செய்தல், மர்மஸ்தானத்தை சூழவுள்ள முடிகளை நீக்குதல், அக்குள் முடிகளை பிடுங்குதல்........ (புஹாரி : 5889)
- மேற்கூறப்பட்ட ஹதீஸில் இடம்பெறும் الفطرة எனும் அறபுப்பதம் 'ஸுன்னத்' என்பதை குறித்து நிற்கின்றது. 'ஸுன்னத்' என்பது 'வாஜிப்' எனும் (கட்டாயத்துக்கு) எதிர்ப்பதமாகும். எனவே ஆண்கள் கத்னா செய்வது 'ஸுன்னத்' ஆகும்.
- 'கத்னா' எனும் பதத்தை நபியவர்கள் ஸுன்னத்தான ஒரு சில அம்சங்களுடனே இணைத்துக் கூறியுள்ளார்கள். உதாரணமாக, நகம் வெட்டுதல், மீசையைக் கத்தரிப்பது என்பவற்றைக் குறிப்பிடலாம். எனவே இவ்விடயங்கள் எவ்வாறு ஸுன்னாவோ அதே போல கத்னாவும் சுன்னாவாகும் .(فتح الباري பாகம்:10 பக்கம்:341)
2. இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் தனது அல் அதபுல் முப்ரத் எனும் கிரந்தத்திலே இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும்; ஒரு செய்தியை இவ்வாறு பதிவு செய்கிறார். அதாவது, நபியவர்களின் காலத்தில் கருப்பர், வெள்ளையர், ரோமர்கள், ஹபஷா நாட்டவர் என்று பல இனத்தவரும் இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர். எனினும் அவர்களில் யாரையும் நபியவர்கள்; கத்னா செய்து கொண்டார்களா? என்பதை ஆராயவில்லை. (1251)
3. நபியவர்கள் கூறியதாக ஸத்தாத் பின் அவ்ஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 'கத்னா' என்பது ஆண்களுக்கு ஒரு ஸுன்னத்தான அம்சமாகும்.' (முஸ்னத் அஹ்மத் : 17567)
4. நபியவர்களிடம் வந்து தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக கூறிய ஒரு நபரைப் பார்த்து 'உன்னுடைய இறைநிராகரிப்பின் (காலத்தில் இருந்த) முடியை நீக்கி கத்னா செய்து கொள்.' என்றார்கள். (அபூ தாவூத் : 356)
ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வாராயின் அவர் தனது தலைமுடியை நீக்க வேண்டியது ஸுன்னத்தான காரியம் என்பது போல இதனுடன் இணைத்துக் கூறியுள்ள கத்னாவும் ஸுன்னத்தான ஒரு விடயமே! என்பது புலனாகிறது.
விருத்தசேதம் என்பது ஒரு கட்டாயமான விடயம் என இமாம்களான ஷாபிஈ, அஹ்மத், இப்னுதைய்மியா, உஸைமீன், அல்பானி(ரஹ்) போன்றவர்கள் கூறுகின்றனர். ஷாபிஈ மத்ஹபைச்சேர்ந்த பெரும்பான்மையான உலமாக்களும் இக்கருத்தையே கூறுகின்றனர் (பார்க்க :المنتقى شرح الموطأ பாகம்:7 பக்கம்:232,شرح النووي على مسلم பாகம்:3 பக்கம்:148 تمام المنة பக்கம் :69 الشرح الممتع பாகம்:1 பக்கம்:164 فتاوى ابن تيمية பாகம்:5 பக்கம்:302) இவர்கள் தம்பக்க ஆதாரங்களாக பின்வரும் செய்திகளை முன்வைக்கின்றனர்.
1. அல்லாஹ் தனது திருமறையிலே நபி (ஸல்) அவர்களை விழித்து பின்வருமாறு கூறுகின்றான் 'நபியே! ஏகத்துவத்தைச் சார்ந்தவரான இப்றாஹீமீன் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றுங்கள் என உமக்கு வஹீ அறிவித்தோம்.' (النحل :123)
- நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் கத்னா செய்பவர்களாக இருந்துள்ளார்கள் எனும் விடயம் புஹாரி (3356), முஸ்லிம் (2370) ஆகிய கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு விடயத்தை ஏவும் போது அதை கட்டாயம் செய்ய வேண்டும் என்பதே அடிப்படை விதியாகும். இவ்வசனத்தில் اتبع (பின்பற்றுங்கள்) எனும் சொற்றொடர் ஏவல் வாக்கியமாகும். மேலே நாம் கூறிய அடிப்படை விதிக்கமைய கத்னா வாஜிபாகும் என்பது இங்கே புலனாகிறது.
2. நாம் ஏற்கனவே குறிப்பிட்ட ஸுன்னத் எனக் கூறுபவர்கள் எடுத்துக் கொள்ளும் ஆதாரங்களில் ஒன்றான இஸ்லாத்தை ஏற்ற நபருக்கு முடியை நீக்கி கத்னா செய்யுமாறு கூறியதை இவர்களும் தம்பக்க ஆதாரமாக முன்வைக்கின்றனர். அதாவது, اختتن எனும் அறபுப்பதம் ஏவல் வாக்கியமாகும். எனவே நாம் ஏலவே குறிப்பிட்டது போன்று அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவிய ஒன்று வாஜிப் என்பதே அடிப்படை. எனவே, கத்னா விருத்தசேதம் செய்வது வாஜிப் ஆகும்.
3. நபியவர்கள் கூறியதாக இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்கள் கூறிகிறார்கள் : 'யார் இஸ்லாத்தை ஏற்கின்றாரோ அவர் கத்னா செய்து கொள்ளட்டும். அவர் பெரியவராக இருப்பினும் சரியே.' (அல் அதபுல் முப்ரத் : 1252)
4. விருத்த சேதம் என்பது உடம்பிலிருக்கும் ஆரோக்கியமான ஒரு பகுதியை துண்டிப்பதாகும். அவ்வாறு துண்டிப்பது கட்டாயமான ஒரு விடயத்துக்காகத்தான் இருக்க வேண்டும். என பகுத்தறிவு ரீதியான ஓர் அம்சத்தையும் இவர்கள் முன்வைக்கின்றனர்.
5. அதே போன்று நாம் மேலே கூறிய இயற்கை மரபுகள்; பற்றிய ஹதீஸையும் இவர்களும் தம்பக்க ஆதாரமாகக் கொள்கின்றனர். ஏனெனில் الفطرة எனும் பதம் 'ஸுன்னத்' என்ற பொருள்பட இங்கே பாவிக்கப்பட்டிருக்கின்றமையானது, 'செய்தால் நன்மை கிடைக்கும் விட்டால் குற்றம் இல்லை.' எனும் கருத்துக்கமையவல்ல. மாறாக, அவ்விடயங்கள் இயற்கையாகவே அவ்வாறு தான் அமைய வேண்டும் எனும் கருத்துப்படவாகும்.
மறுப்புகளும் பதில்களும்
வாஜிப் என வாதிடுவோர் ஸுன்னா எனக் கூறுபவர்களுக்கு இவ்வாறு பதில் அளிக்கின்றனர்:
1:வாதம் : 'கத்னா' எனும் பதத்தை நபியவர்கள் ஸுன்னத்தான ஒரு சில......
பதில் :ஒரே வசனத்தில் வாஜிபான, ஸுன்னத்தான விடயங்கள் ஒன்று சேர உள்ளடங்கலாம் என்பதை பின்வரும் ஆதாரங்கள் பறைசாற்றுகின்றன. அல்லாஹ் தனது திருமறையிலே, كُلُوا مِنْ ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ 'அவை பழம்; தந்தால் அவற்றின் கனியிலிருந்து உண்ணுங்கள். மேலும் அதனுடைய பாகத்தையும் (ஸகாத்தை) நீங்கள் அறுவடை செய்யும் காலங்களில் கொடுத்து விடுங்கள்.' (ஸுரத்துல் அன்ஆம் : 141) என ஒரு நீண்ட வசனத்திலே குறிப்பிடுகின்றான். இங்கு ஸகாத் கொடுப்பது கட்டாயமானது. எனினும், உண்பது கட்டாயம் கிடையாது. அதே போன்று தான் خمس من الفطرة எனும் நபிமொழியில் உள்ளடங்கும் விடயங்களில் சில ஸுன்னத்தாகும்; மற்றும் சிலது கட்டாயமானதாகும் (தாடி வளர்த்தல், கத்னா செய்தல் போன்றவை).(فتح الباري பாகம்:10 பக்கம்:341) எனவே 'ஸுன்னத்தான அம்சங்களுடன் வாஜிபான அம்சங்கள் ஒன்று சேர முடியாது' என்ற வாதம் இங்கே வலுவிழக்கின்றது.
2:வாதம் :இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்களின் செய்தி:
பதில் :இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் 'இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்கள் கத்னா செய்யப்பட்டவர்களா இல்லையா என்று தேடிப்பார்ப்பதற்கான ஒரு தேவை அங்கு ஏற்பட்டிருக்கவில்லை. ஏனெனில், இஸ்லாத்தை ஏற்கும் போதே ' முஸ்லிம்கள் கத்னா செய்வார்கள், அது அவர்களின் மார்க்கத்தின் சின்னம் எனும் விடயத்தை' விளங்கி உடனே கத்னா செய்வதற்கு அவர்கள் முயற்சித்திருப்பார்கள்.' (تحفة المودود பக்கம் :160) இதை வலுவூட்டும் விதமாக நபியவர்களைப் பார்த்து கைஸர் மன்னன் 'கத்னா செய்யப்படுபவர்களின் அரசன்' என்று கூறியமையும் (புஹாரி : 07) காபிர்களிடம் கூட முஸ்லிம்கள் கத்னா செய்பவர்கள் எனும் விடயம் அறியப்பட்டிருந்தமை புலனாகின்றது.
3: வாதம்: ஷத்தாத் (ரழி) அவர்களுடைய ஹதீஸ் :
பதில் : இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். ஏனெனில், இந்த அறிவிப்பில் ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத் எனும் நபர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என அறியப்பட்டவராவார்.(பார்க்க:تهذيب التهذيب பாகம் :2 பக்கம் 188)அத்தோடு السنة எனும் சொல் வாஜிப் மற்றும் விரும்பத்தக்கது எனும் இரு கருத்துகளுக்கும் பாவிக்கப்பட்டுள்ளது. .(فتح الباري பாகம்:10 பக்கம்:341) ஒரு நபிமொழியில் அச்சொல் இடம்பெறுமிடத்து அது இரு கருத்துக்களையும் குறிப்பதற்கான வாய்ப்புள்ளது. எனவே, ஒரு சொல் இரு கருத்துகளுடன் வருமிடத்து அச்சொல்லை ஒரு கருத்துக்கு மாத்திரம்; கூறுவதாயின் அதற்கான பக்க ஆதாரமொன்று தேவைப்படும்.
4:வாதம் : இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக கூறிய ஒரு நபரைப் பார்த்து 'உன்னுடைய இறைநிராகரிப்பின்...
பதில் : இஸ்லாத்தை எற்றவருக்கு நபியவர்கள் அவரின் முடியை அகற்றுமாறு ஏவியது அந்த முடி இஸ்லாத்துக்கு முரணான முறையில் வைக்கப்பட்டிருந்ததாலே எனும் ஒரு காரணத்தையும் கூறலாம். அது மாத்திரமன்றி ஸுன்னத்தான மற்றும் கட்டாயமான விடயங்களை ஒரே இடத்தில் இணைத்துச் சொல்வதில் பிரச்சினை கிடையாது என்பது பற்றி ஏற்கனவே ஆராய்ந்தோம். எனவே முடியை நீக்குவதுடன் கத்னாவை ஒப்பிடுவது (இரண்டும் சுன்னா எனும் கருத்தில்) எவ்வகையிலும் பொருத்தமற்ற ஒன்றாகும் என்பதை இங்கு எமக்குப் புரியலாம்.
சுன்னா என வாதிடுவோர் வாஜிப் எனக் கூறுபவர்களுக்கு பதில் அளிக்கையில்:
1. இப்றாஹீம் (அலை) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. எனினும், அவர் செய்த அனைத்து விடயங்களையும் செய்வது கட்டாயமாகுமா? என்பதே இங்கே கேள்வியாகும். ஏனெனில் ஒரு செயல் வாஜிபை காட்டாது என்ற பொதுவிதியுமுள்ளது. அவ்வாறு வாஜிப் என வாதிடுவதற்கு நபி இப்றாஹீமுக்கு அல்லாஹ் (கட்டாயம் எனும் கருத்தில); ஏவியதாக ஓர் அறிவிப்பை முன்வைத்தல் வேண்டும். அவ்வாறு எவ்வறிவிப்பையும் நாம் காணவில்லை. எனவே நாம் கூறிய பொதுவிதிக்கமைய கத்னா கட்டாயமில்லை என்பதே மிகத்தெளிவான விடயமாகும். (تحفة المودود பக்கம் :160)
இவர்களின் .இந்த வாதத்திற்குப் பின்வருமாறு பதில் கூறலாம்.
இப்றாஹீம் (அலை) அவர்கள் தனக்கு 80 வயது கடந்த பின்னரும் கத்னா செய்தார்கள் என்பது அல்லாஹ்வின் ஏவலாகத்தான் இருப்பதற்கு வாய்ப்பு மிகவும் அதிகம். அதுவும் தனது ஆரோக்கியமான ஒரு உறுப்பின் ஒரு பகுதியை வெட்டி அகற்றினார்கள் என்பது அல்லாஹ்வின் ஏவலையே பறைசாற்றுகின்றது. .(பார்க்க : فتح الباري பாகம்:10 பக்கம்:342) –அல்லாஹ்வே மிக அறிந்தவன்-
கத்னா செய்யுமாறு இப்றாஹீம் நபிக்கு அல்லாஹ்வே ஏவியிருக்கிறான் என்பதற்கு இந்த உம்மத்தின் பண்டிதர் தர்ஜுமானுல் குர்ஆன் எனப் போற்றப்படும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கூற்றை முன்வைக்கலாம். அவர் ஜالبقرة: 124ஸ 'وإذابتلى إبراهيم ربه بكلمات فأتمهن' 'இன்னும் இப்றாஹீமை அவருடைய இரட்சகன் பல கட்டளைகளைக்கொண்டு சோதித்த சமயத்தில் அவற்றை அவர் நிறைவு செய்தார்' (என்பதையும் நபியே நீங்கள் நினைவு கூறுங்கள்) எனும் இறைவசனத்தில் 'பல கட்டளைகள்' எனும் பதத்தினுள் கத்னாவும் உள்ளடங்குகிறது என்று விளக்கம் கூறுகிறார். (பார்க்க. السنن الكبرى :685)
எனவே இவ்விடயங்களை நோக்குமிடத்து இறைவனின் ஏவல் பிரகாரமே இப்றாஹீம் நபி கத்னா செய்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.
வலுவான கூற்று
இரு தரப்பினரதும் வாதப் பிரதிவாதங்களை அலசிப்பார்க்கும் போது ஒரு முடிவுக்கு வருவது என்பது மிகவும் கடினமாகும்.எனவே தான் இம் மஸ்அலாவை ஆழமாக அலசிய இமாம்களான இப்னு ஹஜர் மற்றும் இப்னுல் கையிம் அவர்களும் ஒரு முடிவையும் கூறாமலேயே சென்றிருப்பார்கள் எனத் தோன்றுகின்றது.(பார்க்க : فتح الباري பாகம்:10 பக்கம்:342 تحفة المودود பக்கம் :95-106 الشرح الممتع பாகம்:1 பக்கம்:164 ) எனினும் பின்வரும் காரணங்களினால் கத்னா செய்வது வலியுறுத்தப்பட்ட அம்சம் எனத் தெளிவாகிறது:
- • கத்னா என்பது முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளமாகும். அது மாத்திரமன்றி ஸஹாபாக்கள்; எவரும் நாம் அறிந்த வரையில் கத்னா செய்யாமல் இருக்கவில்லை மாற்றமாக அவர்கள் ஆர்வமாகச் செய்த ஒரு அமலாகவே அது காணப்பட்டமை.
- • விருத்த சேதம் என்பது உடம்பிலிருக்கும் ஆரோக்கியமான ஒரு பகுதியை துண்டிப்பதாகும். அவ்வாறு துண்டிப்பது கட்டாயமான ஒரு விடயத்துக்காகத்தான் இருக்க வேண்டும்.
- • خصال الفطرة எனப்படும் இயற்கையாகவே ஒரு மனித உடலில் செய்யப்பட வேண்டிய கருமங்கள் அடிப்படையில் வாஜிபைத்தான் குறித்து நிற்கின்றன என சில உலமாக்கள் கூறியிருக்கின்றமை (பார்க்க:الجامع للخطيب :864) القبس في شرح الموطأ பக்கம் :1108 )அவர்கள் இதற்கு பின்வரும் இரு ஆதாரங்களையும் முன்வைககின்றனர்.
'யார் தனது மீசையை எடுக்கவில்லையோ (கத்தரிக்கவில்லையோ) அவர் எம்மைச் சார்ந்தவர் அல்ல. (திர்மிதீ : 2761)
'மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது , அக்குள் முடிகளை பிடுங்குவது, மர்மஸ்தானத்தை சூழவுள்ள முடிகளை மழிப்பது ஆகியவற்றில் 40 நாட்களுக்கு மேல் விட்டு வைக்கக்கூடாதன எங்களுக்கு கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது.' (முஸ்லிம் : 258)
எனவே خصال الفطرة எனப்படும் அம்சங்கள் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் அவை ஸுன்னா மாத்திரமே என வாதிடுபவர்கள் தம்பக்க தகுந்த வலுவான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். எனவே, இதன் மூலமாக ஆண்கள் கத்னா எனும் அமலை செய்வதற்கு வலியுறுத்தப்பட வேண்டும் எனும் விடயம் தெளிவாகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
குறிப்பு : இங்கே கத்னா ஸுன்னா எனக்கூறியவர்களும், வாஜிப் எனக்கூறியவர்களும் ஆதாரமாக முன்வைத்த 'நீர் காபிராக இருந்த போது வளர்த்த முடிகளை நீக்கி.........' என்ற ஹதீஸ் பலவீனமானதாகும் என பல உலமாக்கள் கூறியிருக்கின்றார்கள். (التلخيص الحبير பாகம்:4 பக்கம் :233)
இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் வேறு ஹதீஸ்களின் மூலம் இந்த ஹதீஸ் ஹஸன் என்பதாகக் கூறுகின்றார். (பார்க்க: سلسلة الأحاديث الصحيحة 2977) ஆயினும் அவ்விரண்டு ஹதீஸிலும் ஒரு அறிவிப்பில் கத்னா என்ற சொல் இடம்பெறவில்லை. மற்றைய ஹதீஸில் யார் என்று அறியப்படாத சில அறிவிப்பாளர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் என இமாம் அல்பானி அவர்களே குறிப்பிட்டிருக்கிறார்கள் . (பார்க்க: سلسلة الأحاديث الصحيحة 2977)
ஆயினும் அவை அனைத்திலும் கட்டாயம் கத்னா செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு போதுமான ஆதாரமாக அமையவில்லை என்பதே இங்கே குறிப்பிடத்தக்கது.