உம்மு ஸலமா(ரலி) அவர்கள் - முன்மதிரி இறை நம்பிக்கையாளர்களின் தாய்
முன்மதிரி இறை நம்பிக்கையாளர்களின் தாய்
உம்மு ஸலமா(رضي الله عنها) அவர்கள்
அல்-உஸ்தாத் எம்.டப்ளியூ.எம். உமர் (பஹ்ஜி)
அறிமுகம்:
உம்மு ஸலமா நாயகி அவர்களின் இயற் பெயர் ஹிந்த் பின்த் உமையா பின் முகீரா என்பதாகும். அல்லாஹ்வின் வாள் எனப் போற்றப்படும் இஸ்லாமிய உலகின் மாபெரும் வீரரும் தளபதியுமான காலித் பின் வலீத்(ரலி) அவர்களின் சாச்சாவின் மகள் ஆவார். இவரது தாயார் பெயர் ஆதிகா பின்த் ஆமிர் பின் ரபீஆ பின் மாலிக் ஆகும். இவரது தந்தை பெயர் உமையா பின் அப்தில்லாஹ் பின் அம்ர் பின் மக்ஸும் என்பதாகும். இவர் பொதுநல சேவைகளிலும் தானதர்மங்களிலும் அரபுலகில் மிகவும் பேசப்படக் கூடிய ஒருவர் ஆவார். இவருடன் பயணங்கள் செய்பவர்கள் தங்களது பயணத்திற்காக செலவுகளையும், பொருட்களையும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையில்லை. தன்னுடன் வரக்கூடிய அனைத்துப் பயணிகளதும் எல்லா வேலைகளையும் இவரே பொறுப்பேற்று அவற்றுக்காக செலவு செய்யும் ஒரு பெரும் கொடை வல்லளாகத் திகழ்ந்தார்.
எனவே, தந்தையைப் போலவே மகள் உம்மு ஸலமாவும் தானதர்மங்களில் அதிகம் ஈடுபடக் கூடியவராகவும், எளியோர்களுக்கு இரக்கம் காட்டி உதவி செய்பவராகவும் இருந்தார்கள். மேலும் உம்மு ஸலமா(ரலி) அவர்கள் சிறந்த வம்சாவழி உடையவர்களாகவும் இயற்கையிலே புத்திக்கூர்மையுடையவர்களாகவும் கல்வி, நேர்மை போன்ற குணங்கள் உள்ள பெண்மனியாகவும் திகழ்ந்தார்கள்.
முதல் திருமணம்
உம்மு ஸலமா(ரலி) அவர்களின் முதற் கணவர் அபூ ஸலமா என அழைக்கப்படக்கூடிய அப்துல்லாஹ் பின் அப்துல் அசத் மக்தூமி(ரலி) என்பவராவார். இவர் நபி (ஸல்) அவர்களின் தந்தை வழி மாமியான பர்ரா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவார். இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்ப தோழர்களில் ஒருவர் என்ற சிறப்பைப் பெற்றுக் கொண்டவர். மேலும் நபி(ஸல்) அவர்களின் பால் குடி சகோதரரும் ஆவார். உம்மு ஸலமாவின் கோத்திரத்தைப் போன்றே அபூ ஸலமா அவர்களும் அன்றைய மக்காவில் பிரசித்தி பெற்ற செல்வந்த கோத்திரங்களில் ஒன்றான மக்தூமி கோத்திரத்தைச் சேர்ந்தவர்.
முதல் ஹிஜ்ரத்
திருமணத்திற்குப் பின் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பம், புனித சத்திய மார்க்கத்தை ஏற்றதிலிருந்து கடும் சோதனைகளுக்கும், வேதணைகளுக்கும் உட்படளாகினர். குறைஷியர்களின் கொடுமைகள், தாங்க முடியாது என்றளவுக்கு எல்லை மீறிச்செல்லவே நபி(ஸல்) அவர்கள் நபித் தோழர்களை அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்யும்படி ஏவினார்கள். அதற்கேற்ப நபித் தோழர்களில் பண்ணிரண்டு ஆண்கள், நான்கு பெண்கள் உள்ளடங்கிய இஸ்லாத்தின் முதல் ஹிஜ்ரத் குழு நாடு துரந்து சென்றனர்.இதனூடே முதன்முதல் இஸ்லாத்திற்காக ஹிஜ்ரத் செய்த பாக்கியம் அபூ ஸலமா தம்பதியினருக்குக் கிடைத்தது.
மதீனாவை நோக்கிய இரண்டாவது ஹிஜ்ரத்
அபூ ஸலமா குடும்பத்தினர் அபீஸீனியாவை நோக்கி முதல் ஹிஜ்ரத் செய்து அங்கு மன நிம்மதியுடன் இஸ்லாத்தை பூரணமாக, சுதந்திரமாக பின்பற்றி வருகிறார்கள். பிறந்தகமான மக்காவில் தற்சமயம் குறைஷியர்களின் கெடுபடிகள் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்தது முதல் குறைந்து விட்டதாக ஒரு வதந்தி பரவுகிறது. சுதந்திரமாக தன் மார்க்கத்தை கடைபிடித்து வந்த உம்மு ஸலமா தம்பதியினர் அபீஸீனியாவை விட்டும் பிரப்பிடம் வந்தடைகிறார்கள். ஆனால் நிலமை தலை கீழாக தென்படுகிறது. பிறந்த மண்னான மக்காவில் வாழ்வது தாம் பின்பற்றும் சத்திய மார்கத்திற்கும் தம் உயிரிக்;கும் ஆபத்து என்பதை உணர்கிறார்கள்;. எனவே நபியவர்களின் உத்தரவுக்கிணங்க மதீனாவை நோக்கிய இரண்டாவது ஹிஜ்ரத்தை ஆரம்பிக்க முற்படுகிறார்கள்.
மதீனா நகரை நோக்கிய ஹிஜ்ரா என்பது ரோஜா மலர்கள் தூவப்பட்ட பாதையில் செல்வது போன்றதல்ல. தான் பிறந்து வழர்ந்து சம்பாதித்து உழைத்து வந்த தாயகத்தை, தன் உறவுகளை பிறிந்து செல்லும் ஒரு கரடுமுரடான பயணமே. பயணத்தின் முன் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலமை ஏற்படலாம். செல்லும் வழியில் பல சோதனைகளும் வேதனைகளும் ஏற்படலாம்;. பாலைவன பூமியில் வழி நெடுக உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்து ஏற்படலாம். பகலின் கடும் சூட்டிலும் இரவின் கடும் குளிரிலும் அவதிப்பட்டு அல்லல்பட்டு உயிர் பலி போகும் நிலமை வரலாம். செல்லுமிடம் எப்படி அமையுமோ,எதிர் காலம் எவ்வாறு இறுக்குமோ துன்பங்கள் நிறைந்த ஆபத்துக்கள் நிறைந்த இடமாக அமையுமோ என எதுவும் தெரியாத நிலையில் மேற்கொள்ளப்படும் பயணமே ஹிஜ்ரா பயணம் என்பது. அபூ ஸலமா (ரழி) அவர்கள், தம் மனைவி பிள்ளைகள் சகிதம் மதீனாவை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க முற்படுகிறார் எனும் செய்தி உம்மு ஸலமாவின் குடும்பத்தினருக்குக் கேள்விப்படுகின்றது. உடனே அபூ ஸலமா (ரழி) அவர்களின் ஒட்டகத்தை மறித்து ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு 'அபூ ஸலமாவே! நீர் எங்கே போக விரும்புகிறீரோ அங்கே போகலாம். அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், உன் மனைவி உம்மு ஸலமா அவள் எம் குடும்பத்தைச் சேர்ந்தவள். நீர் போகின்ற இடமெல்லாம் அவளையும் இழுத்துச் செல்ல நாம் இடமளியோம்' எனக் கூறி உம்மு ஸலமாவையும் அவரின் பிள்ளையையும் அவரிடமிருந்து பறித்தெடுத்தனர். இதை அவதானித்த அபூ ஸலமாவின் குடும்பத்தினர் ' நீங்கள் எம் குடும்பத்தாரிடமிருந்து உங்கள் பெண்ணைப் பிரித்தெடுத்தீர்கள். அவருடன் எமது குழந்தையை விட்டு வைக்க முடியாது. அது அபூ ஸலமாவின் குழந்தை' என்று கூறி உம்மு ஸலமாவிடமிருந்து அவரது பிள்ளையை பறித்து எடுத்து விட்டனர்.
சற்று முன் ஒட்டுமொத்த குடும்பமாக மதீனாவை நோக்கி பயணிக்க இருந்த குடும்பம், தற்போது துண்டாடப்பட்டு மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விட்டது. அபூ ஸலமா தன்னந்தனியாக மதீனா போக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. உம்மு ஸலமாவை அவர்கள் குடும்பத்தினரும்,அவர் பிள்ளையை அபூ ஸலமா குடும்பத்தினரும் அழைத்துச் சென்று விட்டனர்.
அபூ ஸலமா மனைவியையும் குழந்தையையும் இழந்த நிலையில் தன்னந்தனியாக மதீனாவை நோக்கி பயணமானார்.
தன் அன்பிற்;கினிய மனைவியையும் பாச மகனையும் கண் கொள்ளா தூரத்துக்கு விட்டுச் செல்வது சாதாரண காரியமல்ல. சத்திய மார்க்கமா? கட்டிய மனைவி மக்களா? எனும் போராட்டத்துக்குரிய தருணம். மனைவியினதும் பிள்ளையினதும் எதிர்காலம் என்னவாகுமோ எனும் கவலை மனதை ஆட்கொள்ளும் ஒரு கட்டம். ஆனால், நபிகளாரின் அருமையான வழிகாட்டல்களின் கீழ் பயிற்சி பெற்றவரல்லவா அபூ ஸலமா? சத்திய மார்க்கத்தைப் பாதுகாக்க வேண்டுமெனும் வேட்கை உள்ளத்தில் பீறிடவே மனைவி மக்கள் பெரிதாகப்படவில்லை. தெளிந்த மனதுடன் பயணத்தைத் தொடங்கினார்.
இங்கே உம்மு ஸலமாவின் நிலையோ பரிதாபத்துக்குரிதாய் மாறிவிட்டது. தன்னை விட்டுவிட்டு கணவன் சென்றிட குழந்தையையும் பறி கொடுத்து விட அவரின் மனம் வேதனையால் வெந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் 'அப்தஹ்' எனுமிடம் வந்து தன் கணவரினதும் பிள்ளையினதும் பிரிவுத்துயரால் மாலை வரை அழுது கொண்டே இருப்பார்கள். இவ்வாறு சுமார் ஒரு வருடத்தை அழுதே கழித்து விட்டார். பின்பு அவர்களது குடும்பத்தவருக்கு அவர் மேல் பரிதாபம் உண்டாகவே, 'நீர் உனது கணவருடன் போய் சேர்ந்து கொள்' என்று கூறினர். அபூ ஸலமாவின் குடும்பத்தினரிடமிருந்து பிள்ளையை எடுத்து உம்மு ஸலமாவிடம் கொடுத்தனர்.
மதீனாவுக்குச் செல்ல அனுமதியும் கிடைத்து விட்டது. பிள்ளையும் கிடைத்து விட்டது.ஆனால் எவ்வாறு மதீனாவுக்குச் செல்வது? அவரைக் கணவரிடம் ஒப்படைக்க யாருமே முன் வரவில்லை. இறுதியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்ட உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தன்னந்தனியாக பிள்ளையுடன் ஒட்டகத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்தார். அல்லாஹ்வின் பாதுகாப்பைத் தவிர வேறு எவரின் பாதுகாப்பும் அங்கே அவருக்குக் கிடைக்கவில்லை. பயணம் செய்து 'தன்ஈம்' எனும் இடத்தை வந்தடைந்த போது உஸ்மான் பின் தல்ஹா பின் அபூ தல்ஹா என்பவர் அவரை சந்திக்கிறார். (அந்நேரம் அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.) 'அபூ உமையாவின் மகளே! எங்கே செல்கிறீர்? ' என்று கேட்கிறார். 'மதீனாவிலிருக்கும் கணவரிடம் போய் சேர்வதற்காக' என பதில் கூறுகிறார். 'இந்த நீண்ட தூரப் பயணத்தில் உங்களுக்குத் துணையாக யாரைக் கூட்டிக்கொண்டு வந்தீர்கள்? ' என்று மீண்டும் கேட்கிறார். 'என்னைப் படைத்த அல்லாஹ்வின் துணையைத் தவிர வேறு யாருமே இல்லை' எனப் பதிலளிக்கிறார். அவரது நிலை கண்டு இரக்கம் கொண்ட உஸ்மான் பின் தல்ஹா ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார்.
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் உஸ்மான் பின் தல்ஹா தமக்குச் செய்த பேருதவியை பின்னாளில் இவ்வாறு நினைவு கூர்ந்தார். 'அந்த அறியாமைக் காலத்திலும் இப்படி ஒரு மனிதரா! இவரைப் போன்ற ஒரு நல்ல மனிதரை நான் பார்த்ததேயில்லை. அவர் எனக்கு எவ்விதக் கெடுதலையும் நினைக்கவில்லை, எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. எப்பொழுதெல்லாம் நான் ஓய்வெடுக்க ஒட்டகத்தை நிறுத்தினாலும் ஒட்டகத்தை கட்டிப்போட்டு விட்டு அவர் தூரப் போய்விடுவார். பின்பு பயணத்தை துவங்கும் போது நானும் எனது பிள்ளையும் ஒட்டகத்தில் ஏறி உட்காரும் வரை ஒதுங்கி நின்றுக் கொண்டு ஏறி முடிந்ததும் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிடுவார்.
சில நாட்கள் கழித்து மதீனாவின் வெளிப்புறப்பகுதியில் அமைந்துள்ள 'குபா' எனும் இடத்தை அடைந்ததும் 'இதோ இந்த ஊரில் தான் உங்கள் கணவர் இருக்க வேண்டும்.நீங்கள் அவருடன் போய் சேர்ந்து கொள்ளுங்கள்.' என்று கூறிவிட்டு உஸ்மான் பின் தல்ஹா அவர்கள் மக்கா திரும்பி சென்றுவிட்டார்.பின் உம்மு ஸலமா கனவரைத்தேடிக் கண்டுபிடித்து அவருடன் சேர்ந்து கொணடார்கள்.
மக்கா,மதீனா இடைப்பட்ட தூரம் 500 கி.மீ ஆகும்.இத்தூரத்தை இந்நவீன காலத்தில் நெடுஞ்சாலையினூடாக (ர்iபாறயல) அதிசொகுசு வாகனத்தில் கடப்பதாயின் சுமார் 5 அல்லது 6 மணித்தியாலங்கள் செலவிட வேண்டி ஏற்படும்.எந்த வசதிகளுமற்ற அன்றைய காலத்தில் பாலைவனப்பாதையில் காடுகளையும்,மலைகளையும்,குன்றுகளையும் கடந்து இரவு பகலாக ஒட்டகத்தில் செல்வதாயின் சுமார் 12 நாட்கள் தேவைப்படுகின்றன. ஒரு பெண் தம் கணவன் துணையுமின்றி பேச்சுக்கு ஒரு துணையுமின்றி 12 நாட்கள் இரவு பகலாக கடும் சூட்டிலும்,கடும் இருலிலும் பயணம் செய்வதாயின் எத்தனை தியாகங்களையும்,சோதனைகளையும் தாங்கியிருப்பார் என்பதை நாம் சற்று சிந்திக்க வேண்டும். எந்த தைரியமான ஒருபெண்ணாக இருந்தாலும் பின்வாகுங்கும் இப் பயணத்தை அல்லாஹ்வின் உதவியாலும் உறுதியான இறை நம்பிக்கையாலும் உம்மு ஸலமா (ரழி) கடந்து சென்றமையானது, வரலாறு நெடுகிலும் பாரிய தாக்கத்தை செலுத்தக்கூடிய மனதை நெகிழச்செய்யும் ஒரு நிகழ்வே!
அபூ ஸலமா (ரழி) அவர்களின் மரணம்
பத்ருப்போரில் கலந்து சிறப்புப் பெற்ற அபூ ஸலமா (ரழி) அவர்கள் உஹதுப் போரிலும் கலந்து கொண்ட சிறப்புக்குரியவர்.உஹதுப்போரில் கடும் காயத்துக்குள்ளாக்கப்பட்டார்.தோள் புயத்தில் ஆழமான காயம் ஏற்பட்டது. மாதக்கணக்கில் சிகிச்சை அளித்தும் அது பயனளிக்கவில்லை. மேற்புறம் ஆறியது போன்று தோன்றினாலும் உட்பகுதியில் சீல் வைத்து அதிக ரணத்தை தந்து கொண்டிருந்தது. உம்மு ஸலமா (ரழி) அவர்கள் தன் கணவனுக்காக அனைத்து சிகிச்சைகளையும் அளித்துக்கொண்டிருந்தார்.எனினும் அபூ ஸலமாவின் நிலை கவலைக்கிடமாக மாறியது.
அபூ ஸலமா(ரழி) அவர்களுக்கு மரணம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்த நபி(ஸல்) அவர்கள், அவரின் வீட்டிற்கு வந்து தம்; கையை அவர் மேனியில் வைத்து அவருக்கு ஆறுதல் வார்தை கூறி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அபூ ஸலமா அவர்களும் இறைவனிடம் 'யா அல்லாஹ்! என்னைப் போன்றே என் குடும்பத்தைக் கவனிக்கின்ற ஒருவரை என் மனைவிக்கு துணைவராக ஆக்கி வைப்பாயாக! மேலும் உம்மு ஸலமாவுக்கு கவலையையும் கடின வாழ்வையும் தராத ஒருவரை அவருக்கு துணைவராக ஆக்கி வைப்பாயாக! என தன் மனைவிக்காக பிரார்தித்தார்.இந்தப் பிராரத்;தனைக்குப் பின் அபூ ஸலமா (ரழி) அவர்களை மரணம் வந்தடைந்தது.நபி (ஸல்) அவர்கள் தமது கரங்களால் அபூ ஸலமா (ரழி) அவர்களின் இரு கண்களையும் மூடிவிடுகின்றார்கள்.
அபூ ஸலமா (ரழி) தனக்காக பிரார்தித்ததை அறிந்த உம்மு ஸலமா (ரழி) அவர்கள் 'அபூ ஸலமாவை விட ஒரு சிறந்த கணவர் வேறு யார் இருக்கப் போகிறார்கள்' எனக்கூறி ஆச்சரியப்பட்டார்கள்.
அதன்பின் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் நபியவர்களிடம் 'நான் எனக்காக இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்' எனக்கேட்டார்கள். 'நீங்கள் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் பாவமன்னிப்புக்காக பிரார்த்தனை புரியுங்கள் மேலும் தனக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தித்தருமாறு பிரார்தனை புரியுமாறு' கற்றுக்கொடுத்தார்கள்.
நபியவர்களுடன் திருமணம்
அபூ ஸலமா (ரழி) அவர்கள் மரணித்த பின் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் இத்தா எனும் காத்திருப்புக்காலம் முடிவடையவே அபூ பக்ர் (ரழி) அவர்கள் அவரைத் திருமணமுடிக்க அனுமதி கேட்கிறார்கள். அதை அவர்கள் மறுத்து விடுகிறார்கள். பின் உமர் (ரழி) அவர்கள் விருப்பம் கேட்கவே அதையும் மறுத்துவிடுகிறார்கள். அதன் பின் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தாம் மணமுடிக்கவிரும்புவதாக செய்தி அனுப்பினார்கள். அதற்கு உம்மு ஸலமா (ரழி) அவர்கள், 'நான் ரோசமுடையவளாக இருக்கிறேன். மேலும் வயது முதிர்ந்த பிள்ளை குட்டிகள் நிறைந்த ஒரு பெண்மணியாக இருக்கின்றேன்' என பதிலனுப்பினார். அதற்கு நபியவர்கள் உம்மைவிட நான் வயது முதிர்ந்தவனாக இருக்கிறேன் உனது ரோசத்தை அல்லாஹ் போக்கிவிடுவான், உமது பிள்ளைகளை அல்லாஹவும் அவனது ரஸுலும் பொறுப்பாக்கிக் கொள்வார்கள். நபியவர்களின் பதிலைக்கேட்டு தன் கணவனுடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதை உணர்ந்து தனது விருப்பை நபியவர்களிடம் தெரிவித்தார். எனவே,ஹிஜ்ரி நான்காமாண்டு ஷவ்வால் மாதம் இருதிப் பகுதியில் நபியவர்களுக்கும் உம்மு ஸலமா நாயகி அவர்களுக்குமிடையே திருமணம் நடைபெற்றது.
சிறப்புக்கள்.
- நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலான நேரங்களில் அவர் அஸர் தொழுகையின் பின் தம் மனைவிமார்களிடம் போய் அவர்களின் நலன் மற்றும் தேவைகள் பற்றி விசாரித்துவிட்டு வருபவர்களாக இருந்தார்கள்.மனைவிமார்களில்; வயதில் மூத்த உம்மு ஸலமா நாயகியின் வீட்டுக்கே முதலாவதாக செல்வார்கள். வயது குறைந்த ஆயிஷா நாயகியிடமே இறுதியாக செல்வார்கள்.
- அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அழகு,கல்வி மற்றும் நாணத்தின் காரணமாக நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்களில் சிறப்புக்குறிய ஒருவராக திகழ்ந்தார்கள் .
- உம்மு ஸலமா(ரலி) அவர்கள் மிகவும் புத்திக் கூர்மை நிறைந்தவராக இருந்தார்கள். அவர்களின் புத்திக் கூர்மைக்கு பின்வரும் நிகழ்வு சான்று பகர்கின்றது.
- ஹுதைபியா உடன்படிக்கையின் பின் தங்கள் குர்பானிகளை அறுத்துப் பலியிட்டு தலைமுடிகளை சிரைத்துக் கொள்ள நபியவர்கள் தன்னருமை தோழர்களுக்கு கட்டளை பிறப்பிக்கின்றார்கள். ஆனால், நபியவர்களின் கட்டளையை செயற்படுத்துவதில் சற்று ஆர்வம் குன்றிய நிலையில் யாரும் குர்பானிப் பிராணிகளை பலியிடாது தாமதிக்கிறார்கள்.
- நிலமையைப் புரிந்துகொண்ட நபியவர்கள் தன் மனைவி உம்மு ஸலமாவிடம் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பதென ஆலோசனை கேட்கிறார்கள். அதற்கு அன்னை அவர்கள் மிகவும் புத்திசாதுர்யமாக ஒரு யோசனையை முன்வைக்கிறார்கள். அதாவது, 'நீங்கள் யாரிடமும் ஒன்றும் பேசாது உங்கள் குர்பானியை முதலில் பலியிடுங்கள்.பின் முடிசிரைப்பவரை அழைத்து முடியை சிரைத்துக் கொள்ளுங்கள்.அப்போது உங்கள் தோழர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு அவர்களும் குர்பானி கொடுத்து முடிகளை சிரைத்துக்கொள்வார்கள்' என்றார்கள்.
- அதன்படியே நடந்துகொண்ட நபி(ஸல்) அவர்கள்,உம்மு ஸலமாவின் ஆலோசனை நன்கு வேலை செய்வதைப் பார்த்தார்கள்.தனது தோழர்களும் இப்போது தம் பலிப் பிராணிகளை அறுத்துப் பலியிட்டு முடியை சிரைத்துக் கொண்டார்கள்.
- அன்னை உம்மு ஸலமா(ரலி) அவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற இரு பெரும் ஹிஜ்ரத்துகளில் கலந்து கொண்ட பாக்கியம் பெற்றவர்கள். பெண்களில் முதன்முதலாக மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவருமாவார். நபியவர்களின் மனைவிமார்களில் இறுதியாக மரணித்தவரும் இவரே!
- இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு அருள்மறை வேதம் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களது வீட்டிலிருக்கும்போது தான் அதிகமான வேலைகளில் இறங்கியது.அதை வைத்து அவர்கள் பெருமை படக் கூடியவராக இருந்தார்கள். அன்னை உம்மு ஸலமா(ரலி) அவர்களை திருமணம் முடித்தபின் அவரது வீட்டிலும் குர்ஆன் இறங்கலாயிற்று!
- அன்னை உம்மு ஸலமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பல போர்களுக்கும் சென்றுள்ளார்கள். பனீமுஸ்தலக்,தாயிப்,கைபர்,ஹுனைன் மற்றும் மக்கா வெற்றியின் போதும் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுதைபியா உடன்படிக்கையின் போதும் நபியவர்களுடன் இருந்து அவருக்கு சிறந்த ஆலோசனைகளையும் கூறினார்.
- மேலும் இவர் 378 ஹதீஸ்களையும் அறிவித்துள்ளார்.
மரணம்
அன்னை உம்மு ஸலமா(ரலி) அவர்கள் கலீபா யஸீதுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 61அல்லது62 இல் மரணமடைகிறார்கள்.அவர்களின் ஜனாஸா தொழுகை மிக முக்கிய நபித் தோழர்களில் ஒருவராகிய அபூ ஹுரைரா(ரலி) அவர்களால் நடாத்தப்பட்டு மதீனாவில் பகீஇல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆக இஸ்லாத்துக்காக அரும்பெரும் தியாகங்கள் செய்த இறை நம்பிக்கையாளர்களின் அன்னையவர்களின் வாழ்வி;லிருந்து நாமும் குறிப்பாக எமது பெண்கள் சமூகமும் படிப்பினை பெறுவோமாக!