திருமறை குர்ஆன் திரட்டப்பட்ட வரலாறு
குர்ஆனியக் கலைகள் - தொடர்:4
திருமறை குர்ஆன் திரட்டப்பட்ட வரலாறு
அல்-உஸ்தாத் எம். எஸ். எம். யுஸ்ரி(அப்பாஸி)
புனித அல்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு 23 வருட கால இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கியருளப்பட்டது. இவ்வாறு இறக்கியருளப்பட்ட அல்குர்ஆன் வசனங்கள் பாதுகாக்கப்பட்டன. ஜம்உல் குர்ஆன் என்கின்ற போது இரண்டு விடயங்களை அது குறிக்கின்றது.
குர்ஆன் பாதுகாக்கப்படல் :
இந்த அர்தத்தை குறிக்கக்கூடிய விதத்தில் குர்ஆன் வசனங்களும் அருளப்பட்டிருக்கின்றன. ஜிப்ரீல் (அலை) வஹி கொண்டு வந்த ஆரம்ப காலப் பகுதியில் ஜிப்ரீல் (அலை) குர்ஆனை ஓதும் போதே நபியவர்களும் அவசரமாக அதை மனனமிட ஓதுபவராக இருந்தார்கள்.
அந்த சமயத்தில் சூறா கியாமாவின் 16 – 19 வசனங்களை அல்லாஹ் இறக்கினான். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். குர்ஆன் அருளப்படுகின்ற சமயங்களில் நபியவர்கள் கஷ்டத்தை உணரக்கூடியவராக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) ஓதக்கூடிய வசனங்களை மனனமிட முடியாது தப்பிவிடுமோ என பயந்து தமது நாவை அசைத்து ஓதக்கூடியவராக இருந்தார்கள். அந்த நேரத்திலே அல்லாஹ்
لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ (سورة القيامة – 16 – 19)
என்ற வசனங்களை இறக்கினான்.
அதாவது உமது உள்ளத்தில் அதைப் பாதுகாத்து ஒன்று சேர்ப்பது எமது பொறுப்பாகும். ஜிப்ரீல் (அலை) ஓதிக்காட்டினால் அதை செவிமடுங்கள். அதன் பிறகு ஜிப்ரீல் (அலை) வந்தால் நபியவர்கள் செவிமடுப்பார்கள். அவர் சென்று விட்டால் அல்லாஹ் வாக்களித்தது போன்று ஓதுவார்கள். (புகாரி)
குர்அன் எழுதப்படல் :
குர்அன் வசனங்கள், சூறாக்கள் வரிசையாக எழுதப்படல். ஏடுகளில் ஒரு வரையறைப் பேணி எழுதப்படல். இந்த அர்தத்தில் தான் நாம் இங்கு பார்க்கப்போகின்றோம்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் எழுதப்படல் :
நபி (ஸல்) அவர்கள் வஹியை எழுதுவதற்காக மிகச் சிறந்த ஸஹாபாக்களில் சிலரை தேர்ந்தெடுத்திருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்களாக அலி (ரழி), முஆவியா (ரழி), உபை இப்னு கஃப் (ரழி), ஸைத் இப்னு ஸாபித் (ரழி) போன்ற ஸஹாபாக்களை குறிப்பிடாலம். அல்குர்ஆன் வசனங்கள் அரளப்படுகின்ற நேரத்தில் அவற்றை எழுதுமாறு நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு ஏவுவார்கள். அந்த வசனங்களை எந்த சூறாவில் எந்த இடத்தில் இணைக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுப்பார்கள். இன்னும் சில ஸஹாபாக்கள் நபியவர்கள் ஏவாமலேயே தாமாக முன்வந்து எழுதக்கூடியவர்களாக இருந்தார்கள். ஈச்சம் மட்டைகளிலும் கற்களின் மேற்பரப்புகளிலும், தோல்களிலும், எழும்புகளிலும் எழுதிப் பாதுகாகக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். எழுதுவதற்குறிய உபகரணங்கள் இலகுவாக கிடைக்காத சந்தர்பங்களிலும் ஸஹாபாக்கள் குர்ஆனை எழுதுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்தார்கள்.
ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓவ்வொரு வருடமும் ரமழான் மாதத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அதுவரை அருளப்பட்ட குர்ஆனை ஓதிக்காட்டக்கூடியவராக இருந்தார்கள். அதேபோன்று ஸஹாபாக்களும் தம்மிடமிருந்த குர்ஆன் வசனங்களை மனனமாகவும், எழுத்து வடிவிலும் நபி (ஸல்) அவர்களிடம் ஒப்புவிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
நபியவர்களுடைய காலத்தில் முழுக் குர்ஆனும் ஒரு ஏட்டில் ஒன்று சேர எழுதப்பட்டிருக்கவில்லை. ஒருவரிடம் உள்ள வசனங்கள் இன்னொருவரிடம் இல்லை. அவரிடம் இல்லாதது இவரிடம் உண்டு. இது போன்ற நிலை ஸஹாபாக்களிடம் காணப்பட்டது. அலி (ரழி), முஆத் இப்னு ஜபல் (ரழி) உபை இப்னு கஃப் (ரழி), ஸைத் இப்னு ஸாபித் (ரழி), அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் போன்றவர்கள் நபியவர்களுடைய காலத்திலேயே முழுக்குர்ஆனையும் ஒன்று சேர்த்திருந்தனர் என சில அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்களில் ஸைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் நபியவர்களிடம் இறுதியாக ஒப்புவித்தவர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
நபியவர்கள் மரணிக்கும் போது உள்ளங்களிலே குர்ஆன் மனனமாக்கப்பட்டும், ஏடுகளில் எழுதப்பட்டும் இருந்தன. அனைத்துமே ஒரு ஏட்டில் எழுதப்பட்டிருக்கவில்லை. ஏனென்றால் குர்அன் வசனங்கள் இடைக்கிடை இறங்கும் நேரத்திலே காரிகள் என அறியப்பட்டவர்கள் அவற்றை மனனமிடுவார்கள். வஹி எழுதுபவர்கள் அவற்றை எழுதுவார்கள். அனைத்தையும் ஒரே ஏட்டில் எழுத வேண்டிய தேவை இருக்கவில்லை. சில வசனங்களின் சட்டங்களை மாற்றக்கூடிய வசனங்களும் உண்டு. அதேபோன்று குர்ஆனை எழுதுவது அருளப்படும் ஒழுங்குமுறைக்கே எழுதப்படுவதில்லை. மாறாக அந்த வசனங்கள் இறங்கியதன் பின்பு நபியவர்கள் எந்த வசனங்களை எந்த சூறாவில் எந்த ஆயத்தகளுக்கு இடையில் எழுத வேண்டுமென்று சுட்டிக்காட்டியதன் பின்பே பதியப்படும். முழுக் குர்ஆனும் ஒரு ஏட்டிலேயே எழுதப்பட்டிருந்தால் வஹி இறங்குகின்ற ஓவ்வொரு நேரத்திலும் அதை மாற்றி மாற்றி எழுத வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
இமாம் ஸர்கஷி அவர்கள் கூறும் போது நபி (ஸல்) அவர்களின் காலத்திலே அனைத்து குர்ஆன் வசனங்களும் ஓரே ஏட்டில் எழுதப்படாமைக்கான காரணம் அவ்வாறு எழுதப்பட்டிருந்தால் பல சந்தர்பங்களில் அதிலே மாற்றம் செய்ய வேண்டி வந்திருக்கும். எனவே தான் நபியவர்களின் மரணத்தோடு குர்ஆன் அருளப்படுவது முழுமையாகும் வரை அனைத்தையும் ஓரே ஏட்டில் எழுதப்படுவது தாமதமானது.
இமாம் கத்தாபி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். சில சட்டங்களை மாற்றக்கூடிய குர்ஆன் வசனங்கள் அருளப்படும் என்பதால் தான் நபியவர்கள் முழுக்குர்ஆனையும் ஒரே ஏட்டில் ஒன்று சேர்க்கவில்லை. நபியவர்கள் மரணித்த பின் கலீபாக்களின் உள்ளத்திலே குர்ஆனை ஒன்று சேர்க்க வேண்டிய ஆசையை அல்லாஹ் உதிக்கச் செய்தான். அதன் ஆரம்பமாக உமர் (ரழி) அவர்களின் ஆலோசனைக்கேற்ப அபூபக்கர் (ரழி) அவர்கள் ஒன்று சேர்த்தார்கள்.
அபூபக்கர் (ரழி) அவர்களின் காலத்தில் குர்ஆன் ஒன்று சேர்க்கப்படல் :
அபூபக்கர் (ரழி) அவர்களுடைய காலத்தில் நடந்த யமாமா யுத்தத்தில் அல்குர்ஆனை மனனமிட்ட ஸஹாபாக்களில் சுமார் 70 நபர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள். அப்போது இவ்வாறு கர்ஆனை மனனமிட்டவர்கள் ஷஹீதாக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த உமர் (ரழி) அவர்கள் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்களிடத்தில் சென்று குர்ஆன் ஒன்று சேர்க்கப்படுவதன் அவசியத்தை உணர்த்தினார்கள். இவ்வாறு யுத்தங்களில் குர்ராக்கள் ஷஹீதாக்கப்பட்டுக் கொண்டு சென்றால் குர்ஆன் மறந்து அழிந்துவிடுமோ என்ற தனது பயத்தை வெளிப்படுத்தி தெளிவுபடுத்தினார்கள்.
அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் நபியவர்கள் செய்யாத ஒரு விடயத்தை நாம் எவ்வாறு துணிந்து செய்வது என்று பின்வாங்கினார்கள். என்றாலும் உமர் (ரழி) அவர்கள் தொடர்ந்தும் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு ஒன்று சேர்க்கப்படுவதன் அவசியத்தை எடுத்துறைக்க அவர்களுடைய உள்ளத்திலே அதற்குரிய ஆசையை அல்லாஹ் உதிக்கச் செய்தான். பின்பு வஹியை எழுதியவர்களில் ஒருவரும், குர்ராக்களில் ஒருவருமான நல்ல விவேகமுள்ள ஸைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்களை வரவழைத்து அவரிடம் விசயத்தை கூற அபூபக்கர் (ரழி) அவர்கள் பின்வாங்கியதைப் போன்று அவரும் பின்வாங்கினார். அவரும் மனதார ஏற்றுக்கொள்ளும் வரை அபூபக்கர் (ரழி) அவர்களும், உமர் (ரழி) அவர்களும் அவருக்கு குர்ஆன் ஒன்று சேர்க்கப்படுவதன் அவசியத்தையும், முக்கியத்தவத்தையும் தெளிவுபடுத்தினார்கள். பின்பு ஸைத் இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் மிகவும் பொறுப்பான இந்தப் பணியை ஆரம்பித்தார்கள்.
ஸஹாபாக்களுடைய உள்ளங்களிலே மனனமிடப்பட்டிருந்தவற்றையும், வஹி எழுதுபவர்களிடத்தில் இருந்த எழுதப்பட்டவைகளையும் எடுத்து ஒன்று சேர்த்தார்கள். இதைப் பற்றி ஸைத் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் அல்லாஹ்வின் மீது அனையாக ஒரு மலையை நகர்த்துமாரு என்னை ஏவியிருந்தாலும் அது குர்ஆனை ஒன்று சேர்க்குமாறு ஏவியதை விட கடினமானதாக இருந்திருக்காது.... நான் குர்ஆனை மிகவும் ஆழமாக ஆராய்ந்து தேடி, எழுதி ஒன்றுசேர்த்தேன். பேரீத்தம் மட்டைகள், கற்கள் அதேபோன்று ஸஹாபாக்கள் மனனமிட்டிருந்தவைகள் போன்றவற்றிலிருந்து ஒன்றுசேர்த்தேன். சூறத்துத் தௌபாவுடைய இறுதி வசனங்களான
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ فَإِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
என்ற வசனங்களை அபூஹுதைமா அல்அன்ஸாரி என்ற நபித் தோழரிடம் இருந்து தான் பெற்றேன். வேறு எந்த நபித்தோழரிடமும் அந்த வசனம் எழுதப்பட்ட நிலையில் இருக்கவில்லை.
இந்த ஒன்று சேர்க்கப்பட்ட முஸ்ஹப் அபூபக்கர் (ரழி) அவர்கள் மரணிக்கும் வரை அவரிடம் இருந்தது. அதன் பிறகு உமர் (ரழி) அவர்களிடம் இருந்தது. அவர்களுக்கு பிறகு ஹப்ஸா நாயகியிடம் இருந்தது.
குர்ஆனை ஒன்று சேர்க்கின்ற விடயத்திலே ஸைத் (ரழி) அவர்கள் மிகவும் நுனுக்கமாக ஆராய்ந்து உறுதியாக ஊர்ஜிதமானதன் பின்னரே பதியக்கூயவராக இருந்தார்கள். எழுத்து வடிவில் இல்லாமல் மனனமாக மாத்திரம் இருந்தாலும் அதை எடுக்கமாட்டார்கள்.
அபூதாவுதிலே பதிவாகியுள்ள ஹதீஸிலே உமர் (ரழி) அவர்கள் வந்து யாரெல்லாம் நபிகளாரிடம் இருந்து குர்ஆன் வசனங்களைப் பெற்றிருக்கிறாரோ அவர்கள் அதை கொண்டுவரட்டும் என்று கூறினார்கள். மக்கள் பலகைகளிலும், ஏடுகளிலும் எழுதப்பட்டிருந்தவற்றை கொண்டு வந்தார்கள். 2 பேர் ஒன்றுக்கு சாட்சி கூறியதன் பின்னரே அவைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன. இவற்றின் மூலமாக ஸைத் (ரழி) அவர்கள் எந்தளவு நுனுக்கத்துடன் பேணிப்புடன் குர்ஆனை ஒன்று சேர்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
நபியவர்களுடைய காலத்திலே குர்ஆன் எழதப்பட்டதாக இருந்தாலும் அவைகள் ஓவ்வொன்றும் தோல்களிலேயும், ஈத்த மட்டைகளிலேயும் ஆங்காங்கே தான் எழதப்பட்டிருந்தன. நூல் வடிவில் எழுதப்பட்டிருக்கவில்லை. அபூபக்கர் (ரழி) அவர்கள் தான் முதலாவதாக குர்ஆனை நூல் வடிவில் ஒன்று சேர்த்தவர். தனிப்பட்ட சில ஸஹாபாக்களிடம் முழுக்குர்ஆனும் எழுதப்பட்டு ஏடுகளில் இருந்தாலும் அபூபக்கர் (ரழி) அவர்கள் ஒன்று சேர்த்து நூலுருப்படுத்தியதிலிருந்த ஒழுங்கமைப்போ, நுனுக்கமோ காணப்படவில்லை. சில அறிஞர்களின் கருத்துப்படி அபூபக்கர் (ரழி) அவர்களுடைய காலத்தில் குர்ஆன் ஒன்று சேர்க்கப்பட்டு நூலுருப்படுத்தியன் பின்பு தான் குர்ஆனுக்கு முஸ்ஹப் என்று சொல்லும் வழமை உருவானது. அலி (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். குர்ஆனை நுலுருப்படுத்துகின்ற விடயத்திலே மனிதர்களிலே அதிக நன்மைக்குரியவர் அபூபக்கர் (ரழி) ஆவார். அல்லாஹ்வுடைய ரஹ்மத் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு கிடைக்கட்டும். அவர் தான் முதலாவதாக அல்லாஹ்வுடைய வேதத்தை ஒன்று சேர்த்தவர்.