ஹைஅதுல் உலமாஇஸ் ஸலபிய்யீன் பில் ஜனூப்

بسم الله الرحمن الرحيم

சர்வ புகழும் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது. ஸலாத்தும் ஸலாமும் உயிரினும் மேலான நபியவர்கள் மீதும் அவர்களைப் பின்பற்றி வாழும் அனைவர் மீதும் உண்டாவதாக.

இலங்கையின் தென்மாகாணத்தைச் சேர்ந்த தூய்மையான அகீதாவையொட்டி வாழும் தௌஹீத் ஆலிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்த ஓர் அமைப்பை தோற்றுவிப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 26.07.2018 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் காலி இப்னு அப்பாஸ் அரபிக் கல்லூரியில் அமையப்பெற்றுள்ள மஸ்ஜிதுல் ஹுஸ்னாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.

இதனை முன்னிட்டு அரபு மத்ரஸாக்களில் ஷரீஆ கற்கையை பூர்த்தி செய்து வெளியேறிய தென்னிலங்கையைச் சேர்ந்த சுமார் எழுபது ஆலிம்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. குறுகிய கால அழைப்பை ஏற்று ஆர்வத்துடன் சமுகமளித்த ஆலிம் பெருமக்களை வரவேற்று இப்படியான ஓர் அமைப்பின் அவசியப்பாட்டை உணர்த்தி அஷ்ஷய்க் டப்ளியூ .தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்கள் கூட்டத்தை ஆரம்பித்து வைத்ததார்.

அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்திற்கு தலைமைவகித்த தென்னிலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரான அஷ்ஷய்க் எம். ஓ. பத்ஹூர்றஹ்மான் (பஹ்ஜி) அவர்கள் விஷேட உரையொன்றை நிகழ்த்தினார். ஸூபிஸத்தில் நன்றாக மூழ்கி எல்லா விதமான தரீக்காக்களும் காலூன்றி இருந்த தென் மாகாணத்தில் தூய்மையான கொள்கைத் தோன்றி எழுச்சி பெற்ற வரலாற்றையும் முகம் கொடுத்த சவால்களையும் அதன் முன்னோடிகளில் ஒருவர் என்ற அடிப்படையில் இரத்தினச் சுருக்கமாக ஞாபகமூட்டினார். மேலும் இப்படியான திருப்பு முனைக்கு பக்கச்சார்போ பிடிவாதமோ இன்றி நடுநிலையாக சிந்தித்து செயல்படுவதற்கான அஸ்திவாரங்களையிட்ட தமது மதிப்புக்குரிய உஸ்தாத்மார்ளையும் நன்றி பாராட்டினார். மேலும் அண்மைய கால தஃவா களம் வரையான சாதக பாதக விளைவுகள், நிலவரங்களைப் பற்றி விழிப்புணர்வூட்டியதோடு ஆலிம்களை மாத்திரம் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு குழு செயற்பட வேண்டியதன் தேவைப்பாட்டையும் எடுத்துக் காட்டி பெறுமதிமிக்க பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஓர் முன் மாதிரி அமைப்பின் அனுபவப் பகிர்வு என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண தௌஹீத் உலமாக்களின் ஒன்றியமான ‘றாபிதது அஹ்லிஸ்ஸுன்னா ‘ வின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ஷய்க் டாக்டர் றஈஸுத்தீன்; அவர்கள் றாபிதாவின் ஸ்தாபகம் தொடக்கம் அது அடைந்து வரும் வெற்றிகள், எதிர்கால இலக்குகள் வரையான தமது தரவுகளை சுருக்கமாக வடிகட்டி ஒப்புவித்தார். பல வேலைப்பளுகளுக்கு மத்தியில் குறுகிய கால அழைப்பை மனப்பூர்வமாக ஏற்று சமுகமளித்து நாம் கால்பதிக்கப் போகும் அம்சத்திற்கு ஊக்கமளித்த சிறப்பு விருந்தினரான அஷ்ஷய்க் றஈஸுத்தீன் அவர்களுக்கு எமது நன்றிகள்.

இதையடுத்து வருகை தந்திருந்த ஆலிம்கள் தமது ஆலோசனைகள், அபிப்பிராயங்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இப்படி ஒன்றிணைந்த ஓர் மார்க்க அறிஞர்களின் அணி தோற்றம் பெற வேண்டும் என்பது பலரினதும் ஆசையாக இருந்திருக்கிறது என்பதை இதன் போது தெளிவாக அறியமுடிந்தது. இஹ்லாஸுடனும் புரிந்துணர்வுடனும் இப்பயணத்தில் நிலைத்திருத்தல், மற்றும் அமைப்பின் எல்லையை வரையறுத்தல், அடுத்த கட்ட நகர்வுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் என்பவற்றில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள், நாட்டின் தலைசிறந்த புத்தி ஜீவிகள் இவ்வமைப்பில் உள்ளடங்கியிருப்பதை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தம்மை மென்மேலும் வளர்த்துக் கொள்ளல், தமது மையக் கருக்களான தஃவா துறை மற்றும் பத்வா துறைகளில் நிதானத்துடன் ஒருவரையொருவர் மதித்து செயற்படல், கொள்கை எழுச்சிக்கான புதிய அத்தியாயம் என்றடிப்படையில் இதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வழிவகைகள் மேற்கொள்ளல் என பலரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

குறித்த இவ்வமர்விலேயே அமைப்பை அடையாளப்படுத்துவதற்கான பெயரும் நிர்வாகக் குழுவும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு அமைவாக ‘ஹைஅதுல் உலமாஇஸ் ஸலபிய்யீன் பில் ஜனூப்’ ” هيئة العلماء السلفيين بالجنوب “ என இவ்வமைப்பின் பெயர் தீர்மானிக்கப்பட்டது. தென்னிலங்கை ஸலபி உலமாக்கள் அமைப்பு எனும் பொருள்கொண்ட இப்பெயர் ‘ஹைஆ’ என சுருக்கமாகப் பாவிக்கப்படும்.

பின்வருவோர் பதவிசார் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்படட்டனர் :
தலைவர்: அஷ்ஷய்க் எம்.ஓ. பத்ஹுர்றஹ்மான் (பஹ்ஜி)
உப தலைவர்கள் :
1. அஷ்ஷய்க் ஏ. டப்ளியு. எம். ஸறூக் (ஹஸனி)
2. அஷ்ஷய்க் எம்.ஏ.எம். ளபர் (மதனி)
செயலாளர்: அஷ்ஷய்க் எம். ஏ. யூஸுப் ஹுஸைன் (அப்பாஸி)
உப செயலாளர்: அஷ்ஷய்க் எம். எஸ். எம். பாஇஸ் (இஹ்ஸானி)
பொருளாளர் : அஷ்ஷய்க் எம்.இஸட்.எம். ரிப்கான் (அப்பாஸி)
உப பொருளாளர்: அஷ்ஷய்க் ஏ.ஜே.எம். யாஸிர் (பயானி)
மேலும் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக:
1. அஷ்ஷய்க் டப்ளியு தீனுல் ஹஸன் (பஹ்ஜி)
2. அஷ்ஷய்க் எம்.இஸட்.எம். மஸீர் (அப்பாஸி)
3. அஷ்ஷய்க் எம். ஏ.எம். அக்ரம் (ஹிழ்ரி)
4. அஷ்ஷய்க் எம்.ஜே.எம். அதாஉல்லாஹ் (பஹ்ஜி)
5. அஷ்ஷய்க் எம்.ஓ. பவ்ஸுர்றஹ்மான் (பஹ்ஜி)
6. அஷ்ஷய்க் எம். எஸ். முஹம்மத் (அப்பாஸி)
7. அஷ்ஷய்க் எம்.எஸ்.எம். அலவி (பஹ்ஜி)
8. அஷ்ஷய்க் எம்.எஸ்.எம். முஆத் (பஹ்ஜி)
9. அஷ்ஷய்க் டி.ஐ.எஸ். நகீப் (அப்பாஸி)
ஆகியோர் கலந்து கொண்டோர் முன்மொழிய ஒவ்வொருவருக்காகவும் ஒருவர் பிரேரனை செய்ய இன்னொருவர் ஆமோதித்தனர். காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு இவர்கள் நியமிக்கப்பட்டனர். அனுபவத்திலும் ஆற்றலிலும் மிகவும் கூடிய சில ஆலிம்கள் அளவுக்கதிகமான வேலைப்பளு போன்ற தகுந்த காரணங்களை முன்வைத்து பொறுப்புகள் வகிப்பதற்கு பின்வாங்கினர் என்பதும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும்.

அமைப்பின் கொள்கை விபரம், தஃவா அனுகுமுறை மற்றும் அமைப்பின் யாப்பு ஆகிவற்றை வரைவதற்கான மாதிரிகள் புதிய நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டு அதனை பரிசீலனை செய்து தீர்மானங்களை எடுப்பதற்கான பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான ஓர் அமர்வாக இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணியளவில் நிர்வாகக் குழுவின் கன்னிக் கூட்டம் வெலிகம அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் காரியாலயத்தில் நடைபெறும் என்பதாகவும், அதில் எடுக்கப்படும் முடிவுகளை ஏனைய அங்கத்தினர்களுக்கு சமர்ப்பித்தல், உப குழுக்களை நியமித்தல், அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிடல் என்பவற்றுக்கான ஒரு பொதுக்கூட்டத்தை இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை அல்-பயான் அரபுக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடாத்துவதாகவும் முடிவுசெய்யப்பட்டது .

‘ ஹைஆ’ வின் அங்குரார்ப்பணக் கூட்ட நிகழ்வுகள் அஷ்ஷய்க் தீனுல் ஹஸன் (பஹ்ஜி) அவர்களின் நன்றிவார்த்தைகளோடு சுமார் பி.ப. 01:00 மணியளவில் கப்பாரதுல் மஜ்லிஸுடன் நிறைவு பெற்றன.
அல்ஹம்து லில்லாஹ்

இப்படிக்கு,
செயலாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *