பத்வா பிரபல்யத்திற்கான குறுகிய வழி

அம்ர் இப்னு ழர்ப் அல் உத்வானி என்பவர் ஜாஹிலிய்யாக்கால அரேபிய முக்கியஸ்தர்களுள் ஒருவராவார். நுட்பத்திற்கும் பிணக்குகளைத்தீர்ப்பதற்கும் பெயர் பெற்று பிரபல்யமானவர். மக்கள் தமது தீர்க்க முடியாத பாரிய பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவைப்பெற இவரது மஜ்லிஸை நாடிச்செல்வர். அவருடைய ஜாஹிலிய்யாக்கால பிரபல்யமான நுட்பங்களும் பத்வாக்களும் உள்ளடங்கும் விடயங்களில் பின்வரும் சம்பவமும் ஒன்றாகும். சில கோத்திரத்தினர் அவரிடம் வந்து தம்மால் விடை காண இயலாத ஒரு பிரச்சினைக்குத் தீர்ப்புக் கேட்டனர். அலியிக்கு எவ்வாறு சொத்துப் பங்கீடு வைப்பது? என்பதே அப்பிரச்சினையாகும். புத்திக்கூர்மை, விவேகம், அவசரமாகப் புரியும் ஆற்றல், தீர்ப்பளிப்பதிலே நீண்டகால அனுபவம் போன்றன அம்ரிடம் இருந்தும் அவரால் விடை காண முடிவில்லை. ஆகையால் விடைகாண தனக்கு கால அவகாசம் தருமாறு கேட்டதோடு விடைகாணும் வரை தனது விருந்தினராகவே இருக்குமாறும் அவர்களிடம் வேண்டினார்.

இவ்வாறு விடை காண முடியாது 40 நாட்கள் கழிந்தன. அம்ருக்கு ஸுஹைலா எனும் பெயருடைய அடிமைப்பெண் ஒருத்தியிருந்தாள். அவள் இவரது ஆடுகளை மேயவிட்டுக் கண்காணிப்பாள். ஆமிர் தனது விருந்தினர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஓர் ஆட்டை அறுத்து விருந்தளித்தார். அவ்வடிமைப் பெண் ஆமிரிடம் ‘எஜமானே! இவர்களது தேவைதான் என்ன? இவர்கள் தொடர்ந்திருப்பார்களாயின் ஆட்டு மந்தையில் உங்களுக்கு ஏதும் எஞ்சாது.’ என்றாள். ‘உனக்கும் அவர்களுக்குமிடையே என்ன பிரச்சினை? நீர் போய் ஆடுகளை மேய்’ என ஆமிர் பதிலளித்தார். அவள் மீண்டும் அலட்டிக் கேட்ட போது, இவ்வாட்டு மந்தை விருந்தினர்களுக்கு உணவாக மாறி அழிந்து போவதை விட பெரிய சோதனை எனக்கு வந்துள்ளது என விடயத்தைக் கூறினார். அதற்கு ஸுஹைலா, ஆமிரே! நீர் எங்கு இருக்கின்றீர்? எவ்விடத்தால் சிறுநீர் கழிக்கின்றானோ அதன் சட்டத்தைக் கொடுக்க வேண்டியது தானே? ஆணுறுப்பால் சிறுநீர் கழிப்பாராயின் ஆணின் சட்டம். பெண்ணுறுப்பால் சிறுநீர் கழிப்பாராயின் பெண்ணின் சட்டம்.’ எனக்கூறினாள். பின்பு ஆமிர், ‘ஸுஹைலாவே! என்னை விட்டும் அச்சோதனையை நீக்கி விட்டாய்’ என்றார்.

இமாம் அவ்ஸாஈ (ரஹ்) அவர்கள் இச்சம்பவத்தைக் கூறிவிட்டு தொடர்ந்து கூறும் போது, ‘இது அல்லாஹ்வை வணங்காத சுவர்க்கத்தை ஆதரவு வைக்காத நரகத்தைப் பயப்படாத முஷ;ரிக்கான ஒரு மனிதனின் நிலை. பத்வா கொடுக்க 40 நாட்கள் காத்திருக்கின்றார். அவ்வாறெனில், சுவர்க்கத்தை ஆதரவு வைத்து நரகத்தைப் பயப்படும் ஒருவர் பத்வா எனும் பணிக்கு அமர்த்தப்படுவாராயின் ஆழமாகத் தேடுவது எவ்வளவு அவசியமாகும்’ என்று கூறுகின்றார். இமாம் இப்னு இஸ்ஹாக் அல் அத்ரஈ (ரஹ்) அவர்கள் கூறும் போது, ‘இச்சம்பவத்திலே பத்வாக்கொடுப்போரிலிருக்கும் அறிவிலிகளுக்கு படிப்பினையும் இருக்கின்றன. ஏனெனில், முஷ;ரிக்கான ஒரு மனிதரே தீர்ப்புச் செய்ய 40 நாட்கள் காத்திருக்கின்றார்’ என்று குறிப்பிடுகிறார்.
எவ்வித தகைமையோ, அடிப்படை அறிவோயின்றி பத்வாக்கொடுக்க முற்படுவதானது, மார்க்கம் எச்சரித்த பாரிய அழிவுகளை விதைக்கும் ஒன்றாகும். ஏனெனில், பத்வாக்கொடுப்பவர் மார்க்க விடயத்தில் அல்லாஹ்வின் சார்பாக கையொப்பமிடுகின்றார். அவன் சார்பில் கருத்து வெளியிடுகின்றார். இதனாலேயே அன்றும் இன்றும் தலை சிறந்த பண்டிதர்கள் பத்வாக்கொடுத்தல் எனும் அபாயகரமான போர்களத்தில் நுழைவதற்கு பின்வாங்கினர். இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுமிடத்து, ‘ஏதேனும் ஒரு மார்க்க விடயத்தில் பதிலளிப்பவர், பதிலளிக்க முன்னர் தன் மனதுக்கு சுவர்க்கத்தையும் நரகத்தையும் எடுத்துக் காட்டி தனது விமோசனம் எவ்வாறிருக்கும் (என சிந்தித்து) பின்னர் விடையளிக்கட்டும்’ என்றார். இமாம் ஸுப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறும் போது, ‘பத்வாக் கொடுக்க அதிகம் துணிபவர் உலமாக்களின் கருத்து வேறுபாடுகள் பற்றி குறைவான அறிவுடையவராவார்’ என்றார்.

இவ்விடயம் பாரிய விடயம் என்பதனாலேயே தனித்துவமிக்க உலமாக்கள் இவ்விடயத்தை ஒருவருக்கொருவராக பிறரிடம் ஒப்படைக்க முற்பட்டனர். தான் அன்றி பிறருடனே இவ்விடயம் முடிய வேண்டும் என விரும்பினர். அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா எனும் தாபிஈ கூறும் போது, ‘அன்ஸாரி ஸஹாபாக்களுள் 120 பேர்களை அடைந்திருக்கின்றேன். அவர்களுள் ஒருவரிடம் ஒரு தீர்ப்பு கேட்கப்பட்டால் அவ்விடயத்தை மற்றவருக்கு திருப்பி விடுவார். அவர் இன்னொருவரிடம் திருப்பி விடுவார். இறுதியில் ஆரம்பத்தில் கேட்கப்பட்டவரிடமே அவ்விடயம் வந்து சேரும். அவர்களுள் யாரேனும் ஒருவர் ஏதேனும் ஹதீஸை சொல்வாராயின் அல்லது ஏதேனும் விடயம் கேட்கப்படுமாயின் தனது (மற்றைய இஸ்லாமிய) சகோதரருடன் அவ்விடயம் முற்றுப்பெற வேண்டும் என்றே விரும்பினர். ஆகையால், பத்வாவிற்கு அமர்த்தப்படும் இப்பணியை உலமாக்கள் தமக்குக் கிடைக்கப் பெறும் சுவண்டியாகவோ, பரிசாகவோ கருதவில்லை. மாறாக, எச்சரிக்கையுடன் தூர விலகியிருக்க வேண்டிய சோதனையாகவே கருதினர். இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறும் போது, யார் தன்னை பத்வாக்கொடுப்பதற்கு உள்ளாக்கிக் கொள்கின்றாரோ திடனாக அவர் தன்னை பாரிய விடயமொன்றிலே உள்ளாக்கிக் கொண்டுள்ளார். எனினும் சில வேளை பத்வா கொடுக்க நிர்ப்பந்தமான நிலைகள் அவருக்கு ஏற்படும்’ என்றார். (அப்போது) அவரிடம் ‘பேசுவது மற்றும் மௌனித்திருத்தல் இவ்விரண்டில் எது சிறந்தது’ என வினவப்பட ‘மௌனித்திருப்பதே எனக்கு மிகவும் விருப்பமானது’ என்றார். நிர்ப்பந்த நிலையாக அது இருந்தால்!! என அவரிடம் வினவப்பட ‘நிர்ப்பந்தமாக இருப்பினும் மௌனமே மிக ஈடேற்றமானது’ என்றார்.

நாளாந்த வாழ்க்கை விடயங்கள் மற்றும் மறுமை விடயங்கள் பற்றிய அறிவு, சம்பந்தமான பத்வாக்களில் மனிதனின் தேவையானது, உணவு, குடிபானங்களில் காணப்படும் அவனின் தேவையை மிகைத்து விடுகின்றது. ஏனெனில் மனிதன் தனது உடம்பு சீராகுவதை விட ஆத்மா சீராகுவதனாலேயே மகத்துவம் பெறுகின்றான். மேலும் வஹியின் அடிப்படையில் மனித ஆத்மாவை ஒழுக்கமூட்டி நேர்த்திப்படுத்துவதற்காகவே குர்ஆனில் பல இடங்களில் கேள்வி கேட்டோரின் கேள்விகளுக்கு அல்லாஹ் பதிலளித்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : ‘(நபியே) உம்மிடம் அவர்கள், பெண்கள் பற்றிய மார்க்கத் தீர்ப்பைக் கேட்கின்றார்கள். அவர்கள் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்புக்கூறுவான் என்று நீர் கூறுவீராக!’ (அந்நிஸா: 127) மேலும் அல்லாஹ் கூறுகின்றான் : ‘கலாலா பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) கலாலா பற்றி அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகின்றான் என்று (நபியே) நீர் கூறுவீராக. (அந்நிஸா: 176)

இஸ்லாத்தில் முதலில் பத்வா கொடுப்பதற்கு நபிகளார் மாத்திரமே இருந்தனர். ஏனெனில் அல்லாஹ்வின் தூதுத்துவத்தை மக்களுக்கு எத்திவைத்தவர் அவரேயாவார். நபிகளார் உயிருடன் இருக்கும் காலத்திலே (பத்வா விடயத்தில்;) ஸஹாபாக்களின் பார்வைகள் நபிகளாரை நோக்கியே இருந்தன. ஸஹாபாக்கள் பிக்ஹ் அறிவுடையவர்களாக இருந்தும் அவர்களுள் யாரும் நபிகளாரை சொல்லிலோ செயலிலோ முந்த முற்படவில்லை. அவர்களிடம் தேர்ந்தெடுக்கப்பட்ட அடையாளமாக ‘அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக அறிந்தவர்கள்’ என்ற வாசகமே காணப்பட்டது.

வஹி இறங்கும் காலப்பகுதியிலே பத்வா கொடுப்பதில் ஸஹாபாக்களின் வழிமுறையை தெளிவுபடுத்தும் பல விடயங்களை ஹதீஸ் கிரந்தங்கள் தன்னகத்தே பொதிந்துள்ளன. அவற்றுள் பின்வரும் ஹதீஸை உதாரணமாகக் கூறலாம். அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபிகளாருடன் நாம் பள்ளியில் அமர்ந்திருக்கும் போது ஒட்டகத்தில் (ஏறிய வண்ணம்) ஒரு மனிதர் நுழைந்து ஒட்டகத்தை படுக்க வைத்து கட்டிவிட்டார். பின்பு தங்களிடம் ‘உங்களில் யார் முஹம்மத்’ என வினவினார். நபிகளார் எங்கள் முன் சாய்ந்த நிலையில் இருந்தார். ‘சாய்ந்திருக்கும் வெள்ளை மனிதரே அவர்’ என பதிலளித்தோம். அம்மனிதர் நபிகளாரை அப்துல் முத்தலிபின் மகனே! என அழைத்ததும் நபிகளார் ‘நான் உமக்கு விடையளித்து விட்டேன்’ எனக்கூற அம்மனிதன் நபிகளாரிடம் ‘நான் உங்களிடம் கேள்வி கேட்கிறேன். கடுமையாகவே கேட்கப்போகிறேன். என் மீது மனதால் நீர் கோபப்படாதே!’ எனக்கூறினார். அதற்கு நபிகளார் ‘உமக்குத் தோன்றியதைக் கேள்’ எனக்கூற அம் மனிதர் ‘உங்களது மற்றும் உங்கள் முன்னோரின் இரட்சகனைக் கொண்டு கேட்கிறேன். உங்களை முழு மனித சமூகத்திற்கும் தூதராக அனுப்பியவன் அல்லாஹ்வா?’ என்று கேட்க, நபிகளார் ‘ஆம்,நிச்சயமாக (அவனே)’ என்றார். அல்லாஹ்வைக் கொண்டு உங்களிடம் கேட்கிறேன்: ‘ஒரு நாளையிலே ஐவேளை தொழுகைகளைத் தொழுமாறு ஏவியவன் அல்லாஹ்வா?’ என (அம்மனிதர்) வினவ, ‘ஆம், நிச்சயமாக (அவனே)’ என நபிகளார் கூறினார். அல்லாஹ்வைக் கொண்டு உம்மிடம் வேண்டுகிறேன். வருடத்தில் (ரமழான் எனும்) மாதத்தில் நோன்பு நோற்க ஏவியவன் அல்லாஹ்வா? என வினவ, ஆம், நிச்சயமாக அல்லாஹ்வே என நபிகளார் கூறினார். அல்லாஹ்வைக் கொண்டு வேண்டுகிறேன்: எங்களில் பணக்காரரிடமிருந்து ஸக்காத்தை எடுத்து எங்களுள் இருக்கும் ஏழைகளுக்கு பங்கிடுமாறு உமக்கு ஏவியவன் அல்லாஹ்வா? என வினவ ‘ஆம், நிச்சயமாக (அல்லாஹ்வே)’ என நபிகளார் கூறினார். (அப்போது) அம்மனிதர் ‘நீர் எடுத்து வந்தவற்றை நான் ஈமான் கொண்டு விட்டேன். என் கூட்டத்தாருள் சிலர் என் பின்னால் இருக்கின்றனர். நான் அவர்களின் தூதராக உம்மிடம் வந்துள்ளேன். நான் ஸஃத் இப்னு பக்ர் கிளையைச் சேர்ந்த ழிமாம் இப்னு ஸஃலபா ஆவேன்.’ என்றார்.

பத்வா என்பது ஏதேனும் ஒரு விடயத்தில் அல்லாஹ்வின் சட்டத்தை அறிவிப்பதாகும். இதனாலேயே (பத்வாக்கள் எனும்) இம் முட்கம்பிகளைக் கடக்க விரும்புவோருக்கு பூரண அறிவிருப்பதை நிபந்தனையிடப்படுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்: ‘நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்’ (அந்நஹ்ல் : 43) அவ்வாறு இல்லையென்றிருந்தால், அறிவின்றி அல்லாஹ்வின் மீது (இட்டுக்கட்ட) துணிந்து விடுவார்கள். (ஏனெனில்) அல்லாஹ் கூறுகின்றான் : ‘நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுவதையும் (இறைவன் தடுத்திருக்கின்றான்)’ (அல் அஃராப் : 33)

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறும் போது, பத்வா மற்றும் தீர்ப்பளிப்பதிலே அறிவின்றி அல்லாஹ்வின் மீது புனைந்து கூறுவதை அல்லாஹ் ஹராம் ஆக்கியுள்ளான். ஹராமாக்கப்பட்டவைகளுள் (பாவத்தால்) கூடிய தரத்திலே அதனை வைத்துள்ளான். ஏனெனில் அல்லாஹ் ‘நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுவதையும் (இறைவன் தடுத்திருக்கின்றான்)’ (அல் அஃராப் : 33) என்று கூறுகின்றான்.

ஹராம் ஆக்கப்பட்;டவைகளை 4 படித்தரங்களாக அல்லாஹ் தரப்படுத்துகிறான். அவற்றுள் மிக இலகுவானதைக் கொண்டு ஆரம்பிக்கின்றான். அவை மானக்கேடான விடயங்களாகும். பின்பு அதை விட கடுமையாக தடை செய்யப்ட்டவைகளை இரண்டாவதாகக் கூறுகின்றான். அவை அநியாயம் மற்றும் (இதர) பாவங்களாகும். பின்பு தடை செய்யப்பட்டவைகளுள் அவற்றை விட கடுமையானதை மூன்றாவதாகக் கூறுகின்றான். அது அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் எனும் விடயமாகும். பின்பு அதை விட கடுமையான ஒன்றை நான்காவதாகத் தரப்படுத்துகின்றான். அது அறிவின்றி அல்லாஹ்வின் மீது புனைந்து கூறுவதாகும். அறிவின்றி அல்லாஹ்வின் மீது புனைந்து கூறுவதானது, அவனது பெயர்கள், பண்புகள், செயல்கள் மற்றும் அவனது ஷரீஆ ஆகியவைகளிலே புனைந்து கூறுவதை உள்ளடக்கிக் கொள்ளும். அறிவின்றி அல்லாஹ்வின் மீது புனைந்து கூறுவது மிகப் பெரும் பாவங்களுள் ஒன்றென்பதை எடுத்தியம்பும் ஆதாரங்களுள் பின்வரும் குர்ஆனிய வசனமும் ஒன்றாகும். ‘அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்வதற்காக உங்கள் நாவுகள் பொய்யாக வர்ணிப்பதை இது (ஹலால்) ஆகும், இது (ஹராம்) ஆகாது என்று கூறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கிறார்களே அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (இத்தகையோருக்கு இவ்வுலகில்) குறைந்த இன்பம் தான் (மறுமையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.(அந்நஹ்ல் : 116,117)

அல்லாஹ்வின் சட்டங்களிலே அவன் மீது பொய்யுரைப்பதையும், அவன் ஹலால் ஆக்காததை ஹலால் என்றும் அவன் ஹராம் ஆக்காததை ஹராம் என்றும் கூறுவதையும் அல்லாஹ் எச்சரிக்கின்றான். ஓர் அடியான் இது ஹராமானது, இது ஹலாலானது என அல்லாஹ் ஹலால் ஆக்கியவற்றையும் ஹராம் ஆக்கியவற்றையும் அறிந்தாலேயன்றி கூற முடியாது என்பதும் மேற் கூறிய வசனத்தினூடாக அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்  மதீனத்து ஏழு பிக்ஹ் அறிஞர்கள் எனப் பெயர்பெற்றவர்களுள் ஒருவரான இமாம் காஸிம் இப்னு முஹம்மது (ரஹ்) அவர்கள் ‘ஒரு மனிதன் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் மீது தான் அறியாதவற்றைக் கூறுவதை விட தன் மீது விதியாக்கப்பட்ட கடமைகளை அறியாது வாழ்வது அவனுக்கு சிறந்ததாகும்’ எனக் கூறக்கூடியவராக இருந்துள்ளார்.

அறிவிலிகளும்,வழிகேடும் தோன்றும் காலம் பற்றி தூய ஸுன்னா எச்சரித்து விழிப்பூட்டியுள்ளது. ‘அல்லாஹ், அடியார்களிடமிருந்து அறிவை (ஒரே நிமித்தத்தில்) கைப்பற்றி விடமாட்டான். மாறாக பூமியில் ஒரு மார்க்க அறிஞரேனும் எஞ்சாத வரை மார்க்க அறிஞர்களை (கொஞ்சம் கொஞ்சமாக) கைப்பற்றுவதினூடாக அறிவைக் கைப்பற்றுவான்.மக்கள் அறிவிலிகளை தங்கள் தலைவர்களாக எடுத்துக் கொள்வர். பின்பு அவர்களிடம் (கேள்விகள்) கேட்கப்படுமிடத்து, அறிவின்றி தீர்ப்பளித்து தாங்களும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுப்பர்.’

நபிகளாரின் இம்முன்னறிவிப்பு நடைபெற அதிக காலம் எடுக்கவில்லை. மாறாக இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பத்திலே அதாவது தாபிஈன்கள் காலத்திலே இம்முன்னறிவிப்பு துளிர் விட ஆரம்பித்தது. இமாம் இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் தனது நூலிலே ‘ஒரு மனிதர் ரபீஅதுர் ரஃஇ (ரஹ்) அவர்களிடம் வந்த போது அவர் அழுவதைக் காண்கிறார். அவர்களின் அழுகையைப் பார்த்து நடுங்கிய வண்ணம், ஏன் அழுகிறீர்கள்? ஏதேனும் சோதனை (உங்களுக்கு) ஏற்பட்டு விட்டதா? எனக் கேட்க, இல்லை, மாறாக அறிவிலிகளிடம் பத்வா கேட்கப்படுகின்றதே! (பயப்படத்தக்க) பாரிய விடயம் இஸ்லாத்தில் தோன்றிவிட்டது என ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு, இங்கு (அறிவின்றி) பத்வா கொடுக்கும் சில முப்திகளே கள்வர்களை விட சிறைபிடிக்கப்பட மிகவும் தகுதியுடையவர்கள் எனக் கூறினார்.’ எனும் விடயத்தை பதிவு செய்துள்ளார்.

நிறைய உலமாக்கள் இருக்கின்றனர். பிக்ஹ் துறையில் அவர்கள் பெரும் அறிவுடையோர். இமாம்கள் என அழைக்கப்பட தகுதியுடையோர் என மக்களே ஏகோபித்துள்ளனர். (எனினும்) அவர்கள் பற்றி மக்களின் நல்லெண்ணம், புகழ் என்பவற்றால் கவரப்படவில்லை. மாறாக, பத்வாக் கேட்போரின் கேள்விகளுக்கு (விடை தெரியாத போது) பதிலளிக்க மறுத்து விட்டனர். இதோ மதீனத்து ஏழு பிக்ஹ் அறிஞர்களுள் ஒருவரான இமாம் காஸிம் இப்னு முஹம்மத் இப்னு அபீ பக்ர் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ஏதோவொரு விடயம் பற்றிக் கேட்க, இமாம் அவர்கள் அது பற்றி; எனக்கு சரியாகத் தெரியாது எனக் கூறுகின்றார். (அறிவிடையோராக) உங்களைத் தவிர வேறு யாரையும் எமக்குத் தெரியாது என்பதினாலேயே உங்களிடம் கேட்டேன் என அம்மனிதர் கூற ஆரம்பிக்க, இமாம் அவர்கள் : ‘எனது நீண்ட தாடியையும் என்னைச் சூழ மக்கள் அதிகமுள்ளனர் என்பதையும் நீர் பார்க்காதே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, எனக்கு சரியான பதில் தெரியாது எனக் கூறிவிட்டு, அல்லாஹ்வின் மீது ஆணையாக, எனக்கறிவில்லா விடயம் பற்றிக் கதைப்பதை விட என் நாக்கு துண்டிக்கப்படுவது எனக்கு விருப்பமாகும்’ எனக் கூறினார்.

இவ்விடயத்தில் உலமாக்களின் கூற்றுக்களும், அவர்களது பேணிப்பும் மட்டிட முடியா அளவு அதிகமாக இருக்கின்றன. இதோ இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : ‘அல்லாஹ்வைத் தொட்டும் எத்தி வைக்கும் விடயமானது, எத்தி வைக்கும் விடயம் பற்றிய அறிவு, உண்மை வாய்ந்ததாகக் காணப்படல் ஆகியவற்றிலேயே தங்கியிருக்கின்றது. பத்வா மற்றும் ரிவாயத் செய்தல் என்பவற்றினூடாக எத்தி வைக்கும் பணியானது, அறிவு மற்றும் வாய்மையுடையோருக்கே உரித்தாகும். ஆகவே (அப்பணியை மேற்கொள்பவர்) அறிவு மற்றும் வாய்மையுடையவராக இருப்பதுடன் வழிமுறை நல்லவராகவும் திருப்திகரமான சரித்திரமுடையவராகவும் சொல்லிலும் செயலிலும் நீதமுடையவராகவும் உள்ளும், புறமும் அனைத்து நிலைகளிலும் இரகசியமும் பரகசியமும் ஒன்று போல் காணப்படக்கூடியவராகவும் இருக்க வேண்டும். மன்னர்களுக்குப் பகரமாக கையொப்பமிடப்படும் பதவியானது, சிறப்பும் மதிப்பும் பொருந்திய உயர்ந்த சம்பிரதாய அந்தஸ்துடைய தளமாக இருப்பின் வானங்களினதும் பூமியினதும் ரப்புக்குப் பகரமாக கையொப்பமிடும் பதவியில் (அமர்பவர்) எவ்வாறிருக்க வேண்டும்.
பத்வா கொடுக்கும் பதவியை கண்ணியமாகக் கருதி ஆசைவைப்பருக்கு அது கைசேதத்தையே வழங்கும் என்பது அனுபவத்தில் அறியப்பட்ட விடயமாகும். இமாம் கதீப் பக்தாதி (ரஹ்) அவர்கள் கூறும் போது பத்வா கொடுக்கும் பணியில் மோகம் கொண்டு அதன் பால் விரைந்து தொடர்ந்திருக்க விரும்புவோரில் அதிகமானோர் குறைவான அருளே பெருவதோடு தமது காரியத்தில் தடுமாற்றத்தில் இருக்கின்றனர். அப்பதவியை சுய விருப்பத்துடன் தேர்வு செய்யாது அதனை பிறருக்கு மாற்றிட வேண்டும் என முயற்சி செய்தும் விட்டு விட வழியின்றி விருப்பமில்லாமல் அப்பதவி அவருக்குக் கிடைக்கப் பெறுமானால் அல்லாஹ்வின் உதவி அவருக்கு அதிகமாகக் கிடைக்கப்பெற்று அவரது பத்வாக்களில் அதிகமானவை சரியாகவே காணப்படும்.

இன்று பத்வா களம் பாரியளவில் சோதனைக்கு உள்ளாகியிருக்கின்றது. எவ்வாறெனில் தகுதியற்றவர்கள் அக்களத்தில் நுழைந்துள்ளனர். மறுபுறத்தில் சமூக வலைத்தளங்களும் அலைவரிசைகளும் பரந்து காணப்படுகின்றன. மார்க்கப்பற்று பலவீனமுற்று பிரபல்ய மோகம் தலை தூக்கியுள்ளது. பத்வா கொடுப்போரின் ஒழுக்க நிலைகளை விழித்திருந்து கவனிக்க உத்தியோகபூர்வக் குழுவோ அல்லது மக்கள் குழுவோ கிடையாது. ஆகவே கண்டது கடியது அனைத்துக்கும் (அறிவின்றி) விடையளிப்போர் இஸ்லாமிய வளாகத்தில் தோன்றியுள்ளனர். மக்களிடம் தமக்குள்ள கௌரவமும் பிரபல்யமும் வீழ்ந்திடாதிருக்க ‘தனக்குத் தெரியாது’ என்று சொல்ல வெட்கப்படுகின்றனர். ஏனெனில் இன்று மார்க்கம், பேணிப்பு என்பவற்றை விட மக்கள் திருப்தி, மக்கள் மனம் கவர்தல் போன்றனவே முற்படுத்தப்படுகின்றன. இதில் அல்லாஹ் அருள் செய்தவர்கள் விதிவிலக்கானவர்கள் ஆவர்.

இன்று பாரிய விடயங்கள் பற்றி பத்வாக்களும் கருத்துக்களும் பறிமாறப்பட வேண்டிய தேவையுடன் இருக்கின்றோம். உயிர், சொத்து, மற்றும் மானம் தொடர்புடைய விடயங்கள், காபிர், பித்அத்வாதி, பாவி என தீர்மானிக்கப்படத்தக்க பாரிய பிரச்சினைகள், கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய மக்களின் மார்க்க மற்றும் உலக விடயங்களுடன் தொடர்புபட்ட விவகாரங்கள், அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் உம்மத்துக்கு பூரண நலவுகளுடன் கூடிய விடயங்கள், நல்லிணக்கம் மற்றும் யுத்த சந்தர்ப்பங்களின் போது பிற சமூகங்களுடன் உறவைப் பேணும் முறை, பெரும் நலவுகளைப் பேணிக்காத்து கெடுதிகளைக் குறைப்பதற்கும் ஒழிப்பதற்குமான வழிமுறைகள் என எண்ண முடியா பாரிய விவகாரங்கள் இருக்கின்றன. தனி நபரோ குறித்த ஒரு பிரிவினரோ எவ்வளவுதான் அறிவிருந்தாலும் இவ்விடயத்தில் தனித்து பத்வாக்களை மேற்கொள்ளக் கூடாது. மாறாக இப்பிரச்சினைகளும் பத்வாக்களும் கூட்டு பத்வாக்களையே வேண்டி நிற்கின்றன. இப்பாரிய விடயங்களில் பத்வா கொடுக்கும் போது மார்க்க அறிஞர்களுக்கு உலகறிவில் விஷேட நிபுணத்துவம், அனுபவம் வாய்ந்தவர்களின் உதவிகள் சில போது தேவைப்படுகின்றன. ஏனெனில் சரியான பத்வாவைப் பெற குறித்த விவகாரத்தின் தன்மையையும் அமைப்பையும் பூரணமாக விளங்கிக் கொள்ள அவர்களின் உதவி அவசியமானதாகும். ஒரு விடயத்திற்கான தீர்வு, குறித்த விடயத்தின் காட்சி தன்மை என்பவற்றை சரியாக விளங்கியதின் வெளிப்பாடாகவே அமைகின்றது. மேற் கூறிய விடயங்களில் பத்வா கொடுப்பதின் நிபந்தனைகளும் ஒழுக்கங்களும் பேணப்படாது பொது மக்களிடம் பத்வாக்கள் வெளியிடப்படுகின்றன. அறிவு எனும் மைதானத்தில் ஒருபோதும் கால் பதிக்காத அடிப்படை அறிவுகளை பெற்றிறாத கல்விச் சாதனங்களை கையாளத் தெரியாதவர்களும் சில வேளை பத்வாக்களை வெளியிடுகின்றனர். அர்தந்தர்ப்பத்தில் இவ்விடயங்களில் பத்வாக்களை வெளியிட உதவிக்காக மொழி பெயர்ப்புக்களையே நம்பியிருக்கின்றனர். மூல நூற்களுடன் மொழி பெயர்ப்புகளை ஒப்பிடும் போது மொழி பெயர்ப்புகள் மிக மிகக் குறைவாகவே இருக்கின்றன என்பதை மறக்கலாகாது.

இறுதியாக, உலமாக்களின் இருப்பிற்கும் பத்வா நிலையத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மார்க்க விடயத்தில் அசட்டுதத்தனமான துணிவின் பால் பொது மக்களைத் தூண்டும் இப்பழக்கத்திற்கு எதிராக நிற்பது உலமாக்களிமனதும் இஸ்லாமிய ஆட்சியாளர்களினதும் கடமையாகும். பின்வரும் கூற்றைக் கூறிய இமாம் கதீப் பக்தாதி (ரஹ்) அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! ‘பத்வா கொடுப்போரின் நிலைகளை இஸ்லாமிய ஆட்சியாளர்கள் கவனிப்பது அவசியமாகும். பத்வா கொடுப்பதற்கு தகுதியுடையவராகக் காணப்படின் அங்கீகாரம் வழங்குவார். இல்லையெனில் அவரைத் தடுப்பதோடு அப்பணியில் உள் நுழையாமலிருக்குமாறு கட்டளையிடுவதோடு தவிர்ந்து கொள்ளாவிடின் தண்டிப்பதாகவும் எச்சரிப்பார்.

இஸ்லாத்தையும் அறிவையும் உலமாக்களையும் அல்லாஹ் என்றென்றும் பாதுகாப்பானாக!
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுமிடத்து, ‘ஏதேனும் ஒரு மார்க்க விடயத்தில் பதிலளிப்பவர், பதிலளிக்க முன்னர் தன் மனதுக்கு சுவர்க்கத்தையும் நரகத்தையும் எடுத்துக் காட்டி தனது விமோசனம் எவ்வாறிருக்கும் (என சிந்தித்து) பின்னர் விடையளிக்கட்டும்’ என்றகிறார்.
இமாம் காஸிம் இப்னு முஹம்மத் இப்னு அபீ பக்ர் (ரஹ்) அவர்கள்;: ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக, எனக்கறிவில்லா விடயம் பற்றிக் கதைப்பதை விட என் நாக்கு துண்டிக்கப்படுவது எனக்கு விருப்பமாகும்’ எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *