147

ஷரீஆப்பிரிவு பட்டதாரிகள்

More info

80

அல்ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்

More info

42

பதிவேட்டிலிருந்து

More info

27

வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள்
More info

சிறார்களோடு நம் ரமளான்

about 9 months ago


சிறார்களோடு நம் ரமளான்
அல்-உஸ்தாத் M.S.M. யுஸ்ரி(அப்பாஸி)

நோன்பு சமீபமாகிறது என்ற செய்தியைக் கேள்விப்படும் போதே உள்ளத்திலே ஒரு வித சந்தோசம் ஏற்படுகிறது. பதினொரு மாதங்களாக எதிர்பார்த்திருந்த அந்த அமல்களின் சீஸன் வந்து விட்டது என்பதை அறியும் போது உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி சொல்லிலடங்கா. பெரியவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட சிறார்களின் குதூகலிப்பு அலாதியானது.

ஸஹர் செய்ய அவர்களை எழுப்பி விடுமாறு இடும் கட்டளையை தாய்மார் மறந்து விட்டால் அந்த நாளே துக்கமான நாளாக மாறிவிடும் சிறார்களுக்கு. நான் இத்தனை நோன்பு பிடித்தேன், நான் இன்று நோன்பு, நோன்பு துறப்பதற்கு இன்று எமது வீட்டில் இப்படி இப்படியான சாமான்கள் என்று சிறுவர்களுக்கு மத்தியில் அவர்கள் சிலாகிப்பது ஓர் கொள்ளை அழகுதான். இப்படியாக மழலைப் பேச்சு மாறாத சிறுவர்களை ரமழானில் சரியான பாதையில் செல்ல வைப்பது நம்மீது கடமையாகும். 

ஒருவர் ரமழானில் பேணுதலாக நோன்பு நோற்பவராக மாற வேண்டுமாயின் சிறு வயது முதல் நோன்பு பிடிக்கப் பழக்கப்படுத்துவது அவசியமாகும். அதேபோன்று சிறுவர்கள் ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்த சில விடயங்களை அமுல்படுத்துவது சாலச் சிறந்ததாகும். 

ரமழானை ஆர்வத்துடன் எதிர்கொள்ளல்

ரமழான் மிக நெருங்கும் போது வீட்டிலுள்ளவர்கள் ரமழானுக்கு சிறப்பான முறையில் தயாராக வேண்டும், வீடுகள் குதூகலமாக இருக்கவேண்டும், மூத்தவர்கள் ரமழான் வருவதைப்பற்றிய கலகலப்புடன் இருக்க வேண்டும், ரமழான் காலத்தில் வீட்டில் வித்தியாசமான ஒரு குதூகலத்தை சிறார்கள் உணரவேண்டும்.

இவ்வாறு சிறு வயதிலே இப்படியான காட்சிகளைப் பார்த்துக் கொண்டு அவர்கள் பெரியவர்களாக மாறும் போதும் ரமழானின் பெறுமதி, அதன் பயன்கள், அதனை வீணாக்கி விடக்கூடாது போன்ற எண்ணங்கள் அவர்களது உள்ளத்தில் ஏற்பட்டு அவர்கள் வளர்ந்தவர்களாக மாறிய பின்பும் ரமழானை சிறப்பாகக் கழிப்பதற்கு உறுதுணையாக மாறும்.

நாம் இப்போது ரமழான் நெருங்கும் போது வீடுகள், தளபாடங்கள் உட்பட அனைத்தையும் நன்றாக கழுவுகின்றோம். சிறுவர்களும் அதில் பங்கு கொண்டு தம்மால் இயன்றதைச் செய்கின்றார்கள். இதைப்பார்த்தும் செய்தும் வளர்ந்த பின்னர் அவர்களும் வீடுகளைக் கழுவி ரமழானுக்கு தயாராகுவார்கள். அது போன்று ஏனைய விடயங்களின் மூலமாகவும் நாம் ரமழானை சந்தோசத்துடன் எதிர்நோக்கினால் சிறுவர்கள் ஆர்வத்துடன் ரமழானை எதிர் கொள்வார்கள். 

படிப்படியாக நோன்பு நோற்க வைத்தல்

சிறுவர்களை சிறுவதிலிருந்தே நோன்பு நோற்கப் பழக்க வேண்டும். அப்போதுதான் பெரியவர்களாகிய பின் இலகுவாக நோன்பு பிடிக்க இயலுமாகும். சிறுவயதில் பராமுகமாக இருந்தால் சிறுவர்கள் தானே நோன்பு பிடிக்காமல் இருக்கட்டும் வயது வந்த பிறகு தானாகப் பிடிப்பார்கள் என்று இருந்தோமென்றால் பெரியவர்களாக மாறியதும் திடீரென நோன்பு பிடிக்கச் சொன்னால் பசியைத் தாங்கச் சொன்னால் சக்தியற்றவர்களாக இருப்பர்.

எனவே சிறுவயதிலிருந்தே படிப்படியாக அவர்களைப் பழக்க வேண்டும். ஒரு நாளைக்கு ளுஹர் வரையும் இன்னொரு நாளைக்கு அஸர் வரையும் பிடிக்கப் பழக்கினோமென்றால் பசியைத் தாங்கக் கூடியவர்களாகவும் நோன்பை இலகுவாக நோற்கக் கூடியவர்களாகவும் சிறுவர்கள் மாறிவிடுவார்கள்;.

அதே போன்று நோன்பு விடயத்தில் சிறுவர்களுடன் மென்மையான போக்கைக் கடைபிடிக்க வேண்டும். ஸஹர் உணவு  சாப்பிட்டு விட்டார்கள் என்பதற்காக எந்தப்பாடு பட்டாலும் நோன்பை பூரணமாகப் பிடிக்க வைக்க வேண்டும் எனக் கருதக்கூடாது.

அவர்களின் சக்திக்கு ஏற்பதான் அவர்களை நோன்பு பிடிக்க வைக்க வேண்டும். பசியினால் அழுதார்களென்றால் உணவைக் கொடுத்து விடவேண்டும். இல்லையென்றால் ரமழான் நெருங்குவதைக் கேள்விப்பட்டதுமே பயந்து போய் விடுவார்கள். ரமழானைப் பற்றிய ஒரு வெறுப்பு அவர்களின் உள்ளத்தில் ஏற்பட்டுவிடும்.

மேலும் நோன்பு பிடிப்பது பசித்திருப்பதற்கும், தாகித்திருப்பதற்குமல்ல. மாறாக அல்லாஹ் நோன்பு நோற்பவர்களுக்கு பல நன்மைகளைத் தருகிறான் என்பதையும் விளங்கப்படுத்த வேண்டும். அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்பவர்களாக மாறுவதற்கு இது உதவும்.

ஹதியாக்கள் கொடுத்தல:

சிறுவர்களை ஆர்வமாக நோன்பு பிடிக்க வைக்க ஒரு முக்கியமான வழிதான் அவர்களுக்கு ஹதியாக்களை வழங்குவது. நோன்பு நோற்கக்கூடிய தினங்களில் நோன்பு திறக்கும் போதோ அல்லது ரமழான் முடியும் தருவாயிலோ அன்பளிப்புக்களை வழங்கலாம். பிள்ளைகளுக்கு மத்தியில் யார் அதிக நோன்பு பிடிக்கிறார்களோ அவருக்கு பெரிய பரிசு இருக்கிறது எனச் சொல்லலாம்.

பொதுவாக சிறுவர்கள் அன்பளிப்புகளுக்கு ஆர்வமுள்ளவர்களாக இருப்பதால் அதிக நோன்புகளை நோற்பார்கள். சிறுவயதில் அன்பளிப்புகளுக்காக நோற்றாலும் பெரியவர்களாகும் போது அல்லாஹ்விடம் நன்மையை மாத்திரம் எதிர்பார்த்தவர்களாக நோன்பு பிடிப்பவர்களாக மாறுவர்.

உள வலிமை ஏற்படல்

பெற்றோருடன் சேர்ந்து சிறுவர்களையும் நோன்பு பிடிக்க வைப்பதால் அவர்களது உள்ளத்திலே உள வலிமை ஏற்படுகிறது. ஒரு பொறுப்புணர்வையும் உள்ளத்திலே ஏற்படுத்துகிறது. 

பெரியவர்கள் செய்யக்கூடிய ஒரு விடயத்தை தன்னாலும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும் உருவாகின்றது. சுமார் பன்னிரண்டு மணித்தியாலங்கள் உண்ணாமலும் பருகாமலும் பெரியவர்கள் இருக்கும் போது தானும் அச்செயலை செய்வதன் மூலமாக மன வலிமையை சிறுவர்கள் உணர்கின்றார்கள். ஏனைய மாதங்களிலும் பெரியவர்கள் செய்யக்கூடிய அமல்களை செய்வதற்கும் ஆர்வம் ஏற்படும். தன்னாலும் முடியும் என்ற எண்ணத்துடன் அமல்களைச் செய்ய முற்படுவார்கள்.

அமல்களின் பருவகாலம்

அதே போன்று சிறுவர்களின் உள்ளத்திலே ரமழான் அதிக அமல்கள் செய்வதற்குரிய காலமென்பதை விதைத்துவிட வேண்டும். பாடசாலை விடுமுறை என்பதால் வீண்விளையாட்டுக்களில் ஈடுபடலாகாது. அதிக அமல்களில் ஈடுபடுத்த வேண்டும்.

குறிப்பாக யார் நோன்பாளி என்பது பற்றி அல்லாஹ்வுக்கு மாத்திரமே தெரியும் என்பதால் களவில் உண்ணாமல் பருகாமல் இருபப்தற்காக அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற விடயத்தைச் சொல்லவேண்டும். குர்ஆனின் மாதமாகிய ரமழாhனில் அதிகமாக குர்ஆன் ஓதுவதற்கு அவர்களை ஆர்வமூட்ட வேண்டும். குறிப்பிட்டளவு ஜுஸ்உக்களை ஓதினால் அன்பளிப்புகள் வழங்கி மேலும் ஆர்வமூட்ட வேண்டும்.

ரமழானில் சிறார்களை இலக்காக வைத்து நடாத்தப்படும் ஹிஸ்பு நிகழ்ச்சிகளுக்கு அவர்களை தவறாமல் அனுப்பவேண்டும். வீட்டிலும் அனைவருமாகச் சேர்ந்து குறிப்பிட்ட ஒரு நேரத்தில் குர்ஆனை ஓதவேணடும். 

ரமழான் மாதத்தின் பெறுமதியை அவர்களுக்கு உணர்த்தவேண்டும். கால நேரத்தை வீணாக்கக்கூடாது. அதன் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானது என்பதை புரியவைக்கவேண்டும். தொலைக்காட்சி, தொலைபேசிகளில் நேரத்தைக்கழிக்க இடம் கொடுக்கக்கூடாது.

பலவித அமல்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். மார்க்கத்தைப் படிக்க வைக்கவேண்டும். யாராவது உதவிகள் கேட்டுவந்தால் அவர்களுக்குரிய பணத்தை சிறுவர்களிடம் கொடுத்து அவர்களின் மூலமாக கொடுக்க வைக்கவேண்டும். அச் சமயம் பிறருக்கு கொடுத்து, உதவி செய்து வாழவேண்டும் என்ற எண்ணம் சிறுவர்களுக்கு ஏற்படும்.

மேலும் சிறுவர்கள் நோன்பு பிடிப்பதன் காரணமாக உணவுகளை ருசியாக சமைக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளையும் செய்ய வேண்டும். பசித்திருந்து நோன்பு துறக்கும் போது விருப்பமான உணவுகளைக் கண்டால் ஆசையோடு ஏனைய நோன்புகளையும் நோற்பார்கள். 

மொத்தத்தில் சிறுவர்கள் என்பவர்கள் நமது வாழ்வின் கண்குளிர்ச்சிக்கு காரணமானவர்கள். அதே போன்று நாம் மரணித்த பின்பும் நமக்கு பிரயோசனம் தரக்கூடியவர்கள். நாம் அவர்களை நல்ல முறையில் வளர்த்தோமென்றால் ஈருலகிலும் அவர்களின் பயன் எமக்குக் கிட்டும். அவர்களை நல் வழியில் செல்ல வைப்பதற்கு ரமழான் ஒரு பயிற்சிப் பாசறையாகக் காணப்படுகிறது. எனவே அந்தப் பயிற்சிக் காலத்தை வீணாக்கி விடாமல் நல்ல முறையில் அவர்களுக்கு வழிகாட்டி உயர்ந்த பலனை பெற முயற்சிப்போம்!
 

Write Your Comments
Your Name Your Email
Comments

ஆய்வுகள்

Visitor Count
Total Visits 54345
View Status of Application