147

ஷரீஆப்பிரிவு பட்டதாரிகள்

More info

80

அல்ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்

More info

42

பதிவேட்டிலிருந்து

More info

27

வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள்
More info

நாமும், நபிகளார் கற்றுத் தந்த ரமழானும்

about 9 months ago


நாமும், நபிகளார் கற்றுத் தந்த ரமழானும்
அல்உஸ்தாத் M.S.M. முஆஸ் (பஹ்ஜி)

ரமழான் மாதம் வரப்போகிறது என்றால் எந்தொரு முஃமினும் சந்தோசப்படாமல் இருக்க மாட்டான். காரணம் அம்மாதத்தின் உதயத்துக்காக அல்லாஹ் அவனது அடியானுக்கென்று ஏனைய காலங்களுக்கு இல்லாத பிரத்தியேக ஏற்பாடுகளைச் செய்கின்றான். 

சுவனத்தின் கதவுகள் திறந்தே வைக்கப்படும் புன்னிய மாதமே அது. நரகின் கதவுகள் அடைத்தே வைக்கப்படும் கன்னியமிகு மாதமும் அதுவே. இறையருளை சுமந்து வந்து, பாவக் கறைகளைக் கழுவி, அடியானுக்கு நரக விடுதலை அளிக்கும் இனிய மாதமும் அது தான். வார்த்தைகளில் சிறந்த, உண்மையான வார்த்தையாகிய அல்லாஹ்வின் வேத வாக்கான அல்குர்ஆன் இறங்கிய பெருமையும் அந்தப் புன்னிய மாதத்துக்கே சொந்தம். மறுமையில் நோன்பாளிக்கென்றே சுவனத்தின் ஒரு வாசல் இருப்பதாகவும், நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் துர்வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட நறுமனமானது எனவும் பகர்ந்தது நபிகளார் (ஸல்) அவர்கள். 

அம்மாதத்தில் ஓரிரவு, அவ்விரவை அல்லாஹ்வைக் கட்டுப்பட்டு வணக்கங்களில் ஈடுபடுபவர் தம் வாழ்நாள் முழுதும் அல்லாஹ்வை வணங்கியதைப் போன்ற நன்மை வழங்கப்படுவதும், வானவர்களுக்கெல்லாம் தலைவரும், இறைத் தூதர்களுக்கு வஹியைச் சுமந்து வந்து ஒப்படைத்தவருமான ஜிப்ரீல் (அலை) அவர்களும் அவ்விரவில் பூமிக்கு வருகை தருகின்றமையும் அம்மாதத்தின் சிறப்பை மேலும் வலுப்படுத்துகிறது எனலாம்.

அட்டூழியம் புரியும் சைத்தான்கள் விலங்கிடப்படும் மாதமும், ஒவ்வோர் இரவிலும் வானவர் ஒருவர் மூலம் 'நன்மையைத்  தேடுபவனே! முன்னோக்கி வருவீராக, தீமை புரிபவனே! உமது தீமையைக் குறைத்து விட்டுவிடுவாயாக' என்ற இறைச் செய்தி விடுக்கப்படும் மாதமும் இதே ரமழான் தான்.

சரி, ரமழான் தான் வாழையடி வாழையாக எம்மிடம் வந்து செல்கின்றதே. அந்த ரமழான் எம்மை மாற்றுகிறதா? எமது சீர்கேடுகளைக் கலைந்து சீர்செய்கிறதா? எம்மில் பிரகாசிக்கும் இறையச்சம், இறை பக்தியின் தரத்தைக் கூட்டுகிறதா? போன்ற வினாக்களுக்கு நாம் விடை தேட வேண்டும். 

ஏதோ சடங்கு சம்பிரதாயத்தைப் போன்று அந்த ரமழானை கழிப்போமென்றால், அந்த ரமழானின் மூலம் இறைவன் வாரி வழங்கும் விசாலமான நன்மைகளை இழக்க நேரிடும் என்பதில் இரு கருத்துக் கிடையாது. 

நாம் அதனை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்துவதாயின் நபிகளார் (ஸல்) அவர்கள் அதன் புன்னியத்தை எவ்வாறு கருதினார்கள்? அம்மாதத்தில் எவ்வாறான (இபாதத்கள்) வணக்கங்களை, எவ்விதத்தில் மேற்கொண்டார்கள், எவற்றில் கூடுதலாக ஈடுபட்டார்கள் என்பதைப் பற்றி முதலில் நாம் படிக்க வேண்டும். 

இன்று எமது சமூகத்தல் அதிகமானோர் 'இபாதத்' எனப்படும் வணக்க வழிபாடுகளை அதிகமாகச் செய்து அதிக நன்மை பெற வேண்டும் என்ற அவாவுடன் காணப்படுகின்றனரே தவிர, 'இபாதத்' என்றால் என்ன? அவற்றை நபியவர்கள் எந்த முறையில், எந்த விதத்தில் மேற்கொண்டார்கள்? நபித்தோழர்களுக்கு எவ்வாறு கற்றுக்கொடுத்தார்கள்? நபித்தோழர்கள் அவற்றை எவ்வாறு விளங்கி நடைமுறைப்படுத்தினார்கள்? நாம் வணக்கம், வழிபாடு என்று எதைச் செய்தாலும் அவற்றை இறைவன் அங்கீகரித்துவிடுவானா? போன்றவை பற்றி சிந்திக்கத் தவறிவிடுகின்றனர். ரமழானிலோ ரமழான் அல்லாத காலத்திலோ நாம் மேற்கொள்ளும் எந்த வணக்கமாயினும் அதன் அடிப்படையை அறிந்து செயலாற்றுவது அவசியமாகும்.

  • முதலில் 'இபாதத்' என்றால் என்ன? என்பதை விளங்குவோம். 

'இபாதத் என்பது, அல்லாஹ் பொருந்தக் கூடிய, விரும்பக்கூடிய வார்த்தைகள் மற்றும் உள்ரங்க, வெளிரங்க செயல்கள் அனைத்தையும் உள்ளடக்கும் பொதுவான பதமாகும்' என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் வரைவிலக்கனம் கூறியுள்ளார்கள்.

அவ்வகையில் ஒரு முஸ்லிம் தம் வாழ்வில் மேற்கொள்ளும் ஒவ்வொரு நற்கருமங்களும் இபாதத்தாகவே கருதப்படும். எனினும், நற்கருமம் என்பது எது? அது அங்கீகரிக்கப்படுவதற்கான நிபந்தனைகள் யாவை? என்பவற்றை அறிந்து செயலாற்றுவது அவசியமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போதுமே உலகப் பற்றற்று, இறைத் திருப்தியையே நோக்காகக் கொண்டு வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் வழமை கொண்டவர்களாக இருந்தபோதும், ரமழான் வந்து விட்டால்; வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதில் கடும் பிரயத்தனம் செய்வார்கள். 

  • 'கியாமுல் லைல்' இரா வணக்கமும், எமது நிலையும்.

'கியாமுல் லைல்' என்பது இரவில் மேற்கொள்ளப்படும்; சகல வணக்கங்களையும் உள்ளடக்கும். அவற்றில் தொழுகை முதன்மை பெறுகிறது. இரா வணக்கத்தைப் பொருத்தளவில் அது ரமழானில் மாத்திரம் செய்யுமாறு தூண்டப்பட்ட ஒரு வணக்கமன்றி எல்லாக் காலத்திலும் நிறைவேற்றுவது புகழ்ந்துரைக்கப்பட்ட, நபியவர்கள் மிக விருப்பத்தோடு நடைமுறைப்படுத்திய ஒரு வணக்கமாகும். நபியவர்கள் ரமழானில் இரவுத் தொழுகையின் நிலை, ருகூஉ, ஸுஜுத் ஆகியவற்றை மிக நீட்டி அழகாகத் தொழுவார்கள் என அன்னை ஆயிசா (ரழி) அவர்கள் சான்று பகர்கின்ற அத்தொழுகை இன்று நம் மத்தியில் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது என்பதை ஒரு கனம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தராவீஹ் தொழுகை என்பது அதி வேகமாகத் தொழப்படும் ஒரு தொழுகையாகவும், அது 20 ரக்அத்களாகவே நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகையாகவும் இன்று காணப்படுகிறது.

சிலர் இரவில் தொழப்படும் (தராவீஹ் போன்ற) தொழுகைகளை மாத்திரம்; இரா வணக்கம் என நினைக்கின்றனர். இவை இரா வணக்கங்களாக இருப்பதுடன் மேலும் பல வணக்கங்களும் இதனுள் அடங்கும் என்பதைப் புரிய வேண்டும். அல்குர்ஆனை ஓதுவது, (இஸ்திஃபார், தௌபா) பாவ மன்னிப்புக் கோருவது, நபி (ஸல்) மீது ஸலவாத் கூறுவது, பிரார்த்தனை புரிவது, (ஆண்கள், பெண்கள் யாராக இருப்பினும்) பள்ளிவாசலில் இஃதிகாப் இருப்பது, அல்லாஹ்வை திக்ர் செய்வது, நன்மையை ஏவுவது, தீமையைத் தடுப்பது, நற்பணிகளுக்காகவோ, ஏழை, எளியோருக்கோ தர்மம் செய்வது, அநாதைகள், விதவைகள், அநாதரவானோரின் தேவைகளை இனங்கண்டு உதவி செய்வது போன்றவையும் இவ்விரா வணக்கத்தைச் சார்ந்தவையே. 

இரவு என்பது மஃறிப் முதல் ஸுபஹ் வரையுள்ள நேரமாகும். நாம் அந்நேரத்தைப் பயன்படுத்தி வழமையாக, தொடராக வணக்கங்களில் ஈடுபட வேண்டும். ஒரே வணக்கத்தில் நீண்ட நேரத்தைக் கழிக்கும்போது ஏற்படும் சடைவைத் தவிர்க்க வணக்கங்களைப் பங்கீடு செய்து பல விதமான வணக்கங்களிலும் மாறி மாறி ஈடுபடுவது சாலச் சிறந்தது. 

மாற்று மதத்தினர் எமது ரமழானைப் பற்றி தவறாகப் புரியுமளவுக்கு சில இடங்களில் இரவு நேரங்களில் விழித்திருந்து வாலிபர்களும், சிறுவர்களும் வீணான பிரச்சினைககு;கு அத்திவாரமிடுகின்றனர். பாதைகளை மறித்து விளையாடுகின்றனர், தூங்குவோருக்கு இடைஞ்சல் ஏற்படும் விதமாக உயர் சப்தங்களில் வானொலிகளை இயக்குகின்றனர். பெற்றோரும் இது விடயத்தில் கவனயீனமாக இருக்கின்றனர்.

  • அல்குர்ஆன் விடயத்தில் நாம்.

அல்குர்ஆன் இறக்கப்பட்ட புனித ரமழானில் அதிகமாக அல் குர்ஆனை ஓதுவதில் நாம் ஈடுபட வேண்டும். தினமும் எம்முடைய சக்திக்கேற்ப எந்தளவு ஓத முடியுமோ அவ்வாறான ஓர் அளவைத் தெரிவு செய்து, திட்டமிட்டு ஓதி வர வேண்டும். மாற்றமாக, ஆரம்ப நாட்களில் கூடுதலாக ஓதிவிட்டு நாட்கள் கழியக் கழிய ஒட்டு மொத்தமாக ஓதாமல் விட்டுவிடுவது தவறான நடைமுறையாகும். 

  • குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தினமும் 

மேலும், அல்குர்ஆனை ஓதுவதில் மட்டும் அக்கறை செலுத்துவதே இன்று எம்மில் பெரும்பாலானோரின் நிலை. அதனை ஓதுவது வணக்கம் என்பது போன்றே அதனை விளங்குவதும், அது கூறும் போதனைகளுக் கேற்ப எமது வாழ்வை அமைத்துக் கொள்வதும் கடமை என்பதை நாம் உணர்வதில்லை. தினமும் ஒரு பத்து நிமிடமாவது அதன் மொழிபெயர்ப்பை வாசித்து சிறிதளவேனும் விளங்க முயற்சி செய்ய வேண்டும். ரமழான் காலம் அதற்கு மிகப் பொருத்தமான காலமாகும் என்றால் மிகையாகாது. எனவே நாம் ஸுரதுல் பாத்திஹா, ஸுரதுல் பகரா, ஆலு இம்ரான், அந்நிஸாஃ என முறையே ஒவ்வொரு ஸுரா ஸுராவாக வாசித்து முதலில் பொருளை விளங்க முயற்சிக்க வேண்டும்.
60 – 70 வருடங்கள் வாழ்ந்துவிட்டு மரணிக்கும் எம்மில் எத்தனை பேர் இந்தக் குர்ஆன் கூறும் போதனைகளை ஒரு முறையாவது தம் வாழ்நாளில் வாசிக்கத் தவறிவிடுகின்றனர்.

  • ரமழானில் ரஸுலுள்ளாஹ்வின் தர்மம்.

'நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாகக் கொடை வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழானில் தங்களைச் சந்திக்க வரும் வேளையில் மென்மேலும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருப்பார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழானின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பவர்களாக இருந்தார்கள். அப்போது (அது வரை அருளப்பட்ட) குர்ஆனை அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பார்கள். அவ்வமயம் தொடராக வீசும் காற்றை விட வேகமாக நபி (ஸல்) அவர்கள் நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்'. (புகாரி)

இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள 'நல்லதை வாரி வழங்குதல்' என்பதற்கு அறிஞர்கள் 'யாருக்கு எது அவசியமோ அதனை வழங்குதல்' என்பதாக விளக்கமளித்துள்ளனர். ஆகவே, பணத்தையோ, பொருளையோ தர்மம் செய்தல் மாத்திரமே தர்மம் என நினைக்கக் கூடாது. நன்மையை ஏவுவதல், தீமையைத் தடுத்தல், நல்லுபதேசம் செய்தல், சச்சரவுகளைத் தீர்த்தல் போன்ற பிறருக்கு செய்யப்படும் சகல விதமான நல்லறங்களும் தர்மத்தில்; அடங்கும்.

  • ஸுன்னத்தான தொழுகைகள்.

தராவீஹ், வித்ர் தொழுகைளோடு மாத்திரம் நிறுத்திக் கொள்ளாமல் ஏனைய ஸுன்னத்தான தொழுகைகளிலும் நாம் கவனம் செலுத்துவது முக்கியமாகும். 
ளுஹாத் தொழுகை நபியவர்கள் தினமும் தொழுது வருமாறு பணித்த முக்கியமான தொழுகையாகும். 

பிந்திய இரவில் தொழப்படும் தஹஜ்ஜுத் தொழுகை. அது நல்லடியார்களின் பிரத்தியேகத் தொழுகை. எந்தச் சிரமமுமின்றி ரமழானில் இதனைத் தொழ முடிந்தும் பலர் இதனை விட்டுவிடுகின்றனர். ஸஹ்ர் செய்வதற்காக தூங்கி எழுந்;ததும் உடனடியாக ஸஹர் உணவை மேற்கொள்ளாது, இரண்டு ரக்அத்களாவது (தஹஜ்ஜுத்) தொழும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். இஷாவிற்குப் பின்பு வித்ர் தொழாதோர் அந்த நேரத்தில் அதனைத் தொழுதால் தஹஜ்ஜுத் தொழுத நன்மையும் கிடைத்துவிடும்.
 
அல்லாஹ் அல்குர்ஆனில் இந்நேரத்தில் தொழும் நல்லடியார்கள் பற்றி பின்வருமாறு புகழ்ந்துரைத்துள்ளான். 'அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் (தொழுது) பிரார்த்தனை செய்வார்கள்;, மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தான தர்மங்களில்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.' 

அதே போன்று, ஐங்கால முன் பின் ஸுன்னத் தொழுகைள் 12 ரக்அத்கள் பிரதானமானவையாகும். 'இரவிலும், பகலிலுமாக யார் 12 ரக்அத்கள் (ஸுன்னத்) தொழுது வருவாறோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை கட்டப்படும்' என நபியவர்கள் பகன்றுள்ளார்கள். (முஸ்லிம்).

ரமழானில் இவ்வாறான தொழுகைகளை நிறைவேற்றுவதில் ஆண்களும், பெண்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். எந்த வணக்கத்தையும் குறைவாக இருப்பினும் வழமையாக நிறைவேற்றுவதையே அல்லாஹ் விரும்புகின்றான்.

  • பிரார்த்தனை புரிதல்.

ஸுரதுல் பகராவில் ரமழான் சம்பந்தப்பட்ட தொடரான பல வசனங்களை அருளியுள்ள இறைவன் அவற்றின் இடையே அவனிடம் பிரார்த்தனை புரிவது பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளான். '(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக. எனவே பிரார்த்தனை ஒரு வணக்கமாக இருப்பினும் அது ரமழானில் பிரதான இடத்தை வகிக்கின்றது எனலாம்.

பிரார்த்தனை அல்லாஹ்விடம் மாத்திரமே கேட்கப்பட வேண்டும். அதன் ஒழுங்குகளைப் பேணி நேரடியாக அவனிடமே கேட்க வேண்டும். ரஸுலுள்ளாஹ்வின் பொருட்டாலோ, வேறு யாரின் பொருட்டாலோ கேட்பதற்கு இஸ்லாம் அங்கீகாரம் வழங்கவில்லை. மண்ணறைகளில் அடக்கப்பட்டிருக்கும் எந்த மகானிடமும் சென்று பிரார்த்திக்கும் உரிமையை இஸ்லாம் எவருக்கும் வழங்கவில்லை.
 
நோன்பு காலங்களில் பிரார்த்திப்பதற்கு மிகப் பொருத்தமான நேரம் நோன்பு திறக்கும் நேரமும், இரவின் கடைசி நேரமுமாகும்.  

  • இப்தார், ஸஹர் உணவுகள்.

நபி (ஸல்) அவர்கள் (இப்தார்) நோன்பு திறப்பதை மிக எளிமையான முறையிலேயே மேற்கொண்டார்கள். 'நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்கு முன்பு சில கனிந்த ஈத்தப் பழங்களைக் கொண்டே நோன்பு திறப்பார்கள். அதனைப் பெற்றுக்கொள்ளாத போது காய்ந்த ஈத்தம் பழங்களைக் கொண்டும், அதுவுமில்லாத வேளையில் தண்ணீரைக் கொண்டும் நோன்பு திறப்பார்கள்' என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 

இன்று இந்த நிலை எம்மிடம் காணப்படுவதில்லை. வயிறு முட்ட விதம் விதமான உணவுகளை உண்டு, குடித்து விட்டு கடைசியில் பெரும் சுமையுடன் தொழுகைக்கு நிற்கின்றோம். இது தவிர்க்கப்பட வேண்டும். 

பெண்களில் சிலர் காலை முதலே, வேறு சிலர் அஸர் முதலே இப்தாருக்காக விதம் விதமான உணவுகளைத் தயார் செய்வதில் ஈடுபடுகின்றனர். இதனால் உயிரோட்டத்துடன் மேற்கொள்ளப் படவேண்டிய எத்தனையோ வணக்கங்கள் பெயரளவில் நிறைவேற்றப்படும் அவல நிலையும், அதிக சடைவின் காரணமாக நிறைய வணக்கங்களை மேற்கொள்ள முடியாது கைவிடவேண்டிய பரிதாப நிலையும் ஏற்படுகிறது. ரமழான் ஏனைய காலங்களை விட உண்டு களிப்பதற்குரிய பருவ காலமாக மாறிவிடுகின்றது. துஆ அங்கீகரிக்கப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் அல்லாஹ்விடம் கையேந்திப் பிரார்த்திக்கும் பெண்களை மிக அறிதாகவே காணலாம். கணவன்மார் மற்றும் பெற்றோர் இவ்விடயத்தில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

அவ்வாறே, ஸஹர் உணவைத் தயார் செய்வதிலும்; பெண்கள் கூடுதலான நேரங்களை செலவிடுகின்றனர். இரவில் மனத்திருப்தியோடு நின்று வணங்கவோ, பிந்திய இரவில் எழுந்து அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவோ முடியாத நிலை ஏற்படுகின்றது. 
 
சிலர் ஸஹர் நேரத்தில் எழும்புவதை சிரமம் எனக் கருதி இரவிலேயே உண்டுவிட்டு தூங்கிவிடுகின்றனர். பஜ்ருக்காக அதான் சொல்லப்பட்ட பின் தொழுவதற்காக எழும்புகின்றனர். இது நபியவர்களின் வழிமுறைக்கு மாற்றமானது என்பதை விளங்க வேண்டும். 'நீங்கள் ஸஹர் உணவை உட்கொள்ளுங்கள். ஏனெனில், ஸஹர் உணவில் பரகத் உள்ளது' என நபி (ஸல்) பகன்றார்கள்.

  • பிந்திய பத்தில் நபி (ஸல்) அவர்கள்.

நபி (ஸல்) அவர்கள் பிந்திய பத்தில் வணக்க வழிபாடுகளுக்கென்றே தம்மை அர்ப்பணிப்பார்கள். தாம் மாத்திரமின்றி மனைவிமார்களையும், நபித்தோழர்களையும் அதற்கு ஆர்வப்படுத்துவார்கள். 'பிந்திய பத்து நுழைந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் வேட்டியை இறுகக் கட்டிக்கொள்வார்கள், இரவில் நின்று வணங்குவார்கள், மனைவியரை எழுப்பிவிடுவார்கள்' (புகாரி).

இன்று ரமழானின் பிந்திய பத்து நாட்களில் நிறைய பள்ளிவாசல்களில் 'கியாமுல் லைல்' தொழுகையை நிறைவேற்றுவதுடன் மாத்திரம் நின்றுவிடுகின்றனர். அதனை மட்டும் நிறைவேற்றிவிட்டு எஞ்சிய நேரங்களை வீணாகக் கழிக்கின்றனர். 

எமது துரதிஷ்ட நிலை, ரமழானின் ஆரம்ப இரவுகளில் பள்ளி வாசல்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் நாட்கள் கழியக் கழிய பள்ளி வாசல்களைக் கைவிட்டு விடுகின்றனர். இதை விடவும் அவலம் யாதெனில், புனித மிக்க லைலதுல் கத்ர் எனும் 1000 மாதங்களை விடச் சிறந்த இரவை சுமந்து வரும் பிந்திய இரவுகளோ குடும்ப சகிதம் பெருநாள் ஆடைத் தெரிவுக்காக கடை கடையாக ஏறி இறங்குவதற்கென்றே ஒதுக்கப்படுவதே. நபி (ஸல்) அவர்களோ லைலதுல் கத்ர் இரவை அடைந்து கொள்வதற்காக பிந்திய பத்தில் காட்டிய ஆர்வம் பற்றி இங்கு குறிப்பிடும் அவசியம் கிடையாது.  

தீமைகளைத் தவிர்த்தல்.

நன்மைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டுவது போன்றே தீமைகளைத் தவிர்ப்பதிலும், இச்சைகளை அடக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும். மனிதனை தவறான வழிகளுக்கு இட்டுச் செல்லும் ஏராளமான சாதனங்களோடு பின்னிப் பினைந்து வாழும் நாம் அல்லாஹ்வின் அச்சத்தையும், மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கையும் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து வாழ வேண்டும். இன்டர்நெட் வசதியுடன் கூடிய தொடர்ப்பு சாதனங்களால் எமது ரமழான் பாழாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. இன்றைய வாலிபர்கள், யுவதிகள், சிறுவர்கள் என பலரும் நோன்பைக் கழிப்பதற்காக புயஅள கள் உள்ள ஆழடிடைந போன்களை கூடுதலான நேரங்கள் பயன்படுத்துகின்றனர். சிலர் இரவு நேரங்களை ஸஹர் வரை விளையாட்டுகளிலேயே கழிப்பதைப் பொழுதுபோக்காகக் கருதுகின்றனர். சூதாட்டம் என்று தெரியாமலேயே சூதாட்ட விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். வு.ஏ. ஏனைநழஇ ஆரளiஉ போன்றவற்றிலேயே பொழுதைக் கழிக்கின்றனர். இவை ரமழானின் தனித்துவத்தையும் கன்னியத்தையும் மாசுபடுத்தக் கூடியவை என்பதை மறந்து விடுகின்றனர்.

'ஈமான் கொண்டோர்களே! நீங்கள் இறையச்சமுடையோராக ஆகுவதற்காக உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டதைப் போன்று உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (02:183)

புனித மிக்க ரமழானை புன்னியமாகக் கழித்து புன்னியவானாக மாற வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் துணை புரிவானாக. 

Write Your Comments
Your Name Your Email
Comments

ஆய்வுகள்

Visitor Count
Total Visits 54311
View Status of Application