147

ஷரீஆப்பிரிவு பட்டதாரிகள்

More info

80

அல்ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்

More info

42

பதிவேட்டிலிருந்து

More info

18

வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள்
More info

நவ முஸ்லிம்களும் நாம் அறிய வேண்டியவையும் - தொடர்: 3

about 5 months ago


நவ முஸ்லிம்களும் நாம் அறிய வேண்டியவையும் - தொடர்: 3
அல்உஸ்தாத் று. தீனுல் ஹஸன் (பஹ்ஜி)

  • ஒரு நவ முஸ்லிம் ஸகாத் கொடுப்பதும், எடுப்பதும்:

   ஒருவர் இஸ்லாத்தைத் தழுவும் போது வசதியுள்ளவராக இருப்பின் அவரது வியாபாரம் பணம் போன்ற விடயங்களின் கடந்துபோன காலத்திற்காக அவர் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை. வருடம் கணிக்கப்படும் ஸகாத் பொருட்களின் வருடத்தை அவர் இஸ்லாத்தை தழுவிய நாளிலிருந்தே ஆரம்பித்து  கணிக்க வேண்டும். எனவே ஒரு வியாபாரி இஸ்லாத்தை தழுவும் போது அவர் இஸ்லாத்தை தழுவிய நாளிலிருந்து பிறை வருடக் கணிப்பின்படி ஒரு வருடம் பூரணமாகும் பொழுதே அவருக்கு அதில் ஸகாத் விதியாகும். 

   புதிதாக இஸ்லாத்தைத்  தழுவிய ஒருவர் ஸகாத் எடுப்பதைப் பொறுத்தமட்டில் அவர் இயல்பாகவே கடனாளி அல்லது ஏழை போன்ற ஸகாத் பெறுவதற்கு தகுதியானவராக இருப்பின் அதனடிப்படையில் அவருக்கு ஸகாத் கொடுக்கலாம் என்பது பொதுவானது. அது போக புதிதாக கொள்கையை ஏற்ற அவருக்கு ஸகாத் நிதியை கொடுப்பதன் மூலம் அவரை அக்கொள்கையில் ஸ்திரப்படுத்தவும் அதன் மீதான பற்றை உறுதிப்படுத்தவும் தேவையுள்ளது எனக் கருதும் பட்சத்தில் அவருக்கு ஸகாத்தை வழங்கலாம். அடிப்படையான தேவை இல்லாத பட்சத்தில், அல்லது காலப்போக்கில் கொள்கையில் உறுதியுள்ளவராக மாறிவிட்டால் அவருக்கு நவ முஸ்லிம் என்ற அடிப்படையில் ஸகாத் வழங்க முடியாது.

   இன்று எமது சமூகத்தில் 'மவ்லா இஸ்லாம் பங்கு' என்று ஸகாத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி இத்தேவை இல்லாத இஸ்லாத்தை ஏற்று பல வருடங்கள் கழிந்தவருக்கும், சிலபோது அவருடைய அடுத்த சந்ததிக்கும் அதனை வழங்கி வருவது ஒரு பிழையான நடைமுறையாகும். 

  • இஸ்லாத்தைத் தழுவிய ஒரு பெண் திருமணம் செய்வது:

   ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்க 'வலீ' எனும் பொறுப்பாளர் அவசியமாகும். அவர் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பது அவருக்கான நிபந்தனைகளில் முக்கிய ஒன்றாகும். எனவே இஸ்லாத்தைத் தழுவிய ஒரு பெண்ணிண் உறவுக்காரர்களில் வலீயாக இருப்பதற்கு தகுதியானவர்களின் வரிசையில் எவரேனும் முஸ்லிமாக இருப்பின் அவரே அப்பெண்ணை திருமணம் செய்து வைக்க தகுதியான பொறுப்பாளர் ஆவார். 

   அவ்வாறு யாரேனும் இல்லாத பட்சத்தில் சட்டரீதியான இஸ்லாமிய ஆட்சியாளர் அல்லது அவரினால் நியமிக்கப்பட்ட காழீ போன்ற அவரது பிரதிநிதிகள் அப்பெண்ணின் வலீயாக செயற்படுவர். எமது நாட்டைப் பொறுத்தவரையில் இதுபோன்ற முழுமையான ஷரீஆச் சட்ட நியமனங்கள் இல்லாது இருப்பினும் ;அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக நியமனம்பெறும் முஸ்லிகளுக்கான ' காழீ' மார் அப்பெண்ணின் திருமணத்தை நடாத்திவைக்கத் தகுதியான பொறுப்பாளர்களாகவே உள்ளனர்,

   எனவே, அப்பெண் தனது பிராந்தியத்திற்கான 'காழீ' யை அணுகி தனது திருமணத்தை நடாத்திக் கொள்ளலாம். திருமண ஒப்பந்தத்தை உத்தியயோகபூர்வமாகப் பதிவுசெய்து அத்தாட்சிப்படுத்தி ஆவணப்படுத்திக் கொள்வதன் மூலம் பிற்காலத்தில் அதில் பிரச்சினைகள் ஏற்படின் பல அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ள இதுNவு மிகவும் பொருத்தமான வழியாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நவமுஸ்லிமாகிய அப்பெண்ணின் உள்ளத்தில் இஸ்லாத்தின் இலகுத் தன்மையைப்பற்றிய நல்லெண்ணத்தை வளர்ப்பதையும் கருத்திற்கொண்டு தேவையற்ற காலதாமதங்களைத் தவிர்த்து கூடிய கதியில் அத்திருமணத்தை நடாத்திவைப்பது 'காழீ' மார்களின் பொறுப்பாகும்.

   இந்நிலையில் எமது நாட்டைப் பொறுத்தமட்டில் 'காழீ ' யை அணுகாமல் அப்பெண் நன்நடத்தையுள்ள ஒரு முஸ்லிமை தனது திருமணத்தை நடாத்திவைக்கப் பொறுப்பாளராக நியமித்து அவர் மூலம் அவளின் திருமணம் நடாத்திக் கொள்ளவும் முடியும். அத்திருமணம் செல்லுபடியானதாகவே இஸ்லாத்தின் பார்வையில் கருதப்படும், எனினும், அப்படிச்செய்யும் பட்சத்தில் தாமதிக்காது அதனை சட்டரீதியாக எழுத்து வடிவில் பதிந்து கொள்வது பிற்காலத்தில் ஏற்படவாய்ப்பபுள்ள சில சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு பெரிதும் உதவும்.

  • நவ முஸ்லிமின் வாரிசுரிமை: 

பொதுவாக ஒரு  முஸ்லிம் முஸ்லிமல்லாதவரின் சொத்திலிருந்தும், முஸ்லிமல்லாதவர் ஒரு முஸ்லிமின் சொத்திலிருந்தும் வாரிசுஉரிமைப் பெற முடியாது. ஆகையால் இஸ்லாத்தைத் தழுவிய ஒருவரது தந்தை, சகோதரன் போன்ற உறவுக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் மரணித்து விட்டால் அவர்களது சொத்திலிருந்து இந்த நவமுஸ்லிமுக்கு அனந்தரம் பெற முடியாது. அது போன்றே இஸ்லாத்தைத் தழுவியதன் பின் இவர் இறக்கும் பட்சத்தில் முஸ்லிமல்லாத அவரது உறவுக்காரர்களுக்கு இவரது சொத்தில் எவ்வித வாரிசுரிமையும் இல்லை.

   உறவினர்களுக்கிடையிலான வாரிசுரிமையைப் பொறுத்தமட்டில் மரணம் நிகழும் போது சொத்தின் உரிமையாளரும் வாரிசுக்காரரும் இருந்த நிலையே கவனத்தில் கொள்ளப்படும். எனவே பரம்பரை முஸ்லிமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறி, அந்நிலையில் மரணித்தால் அவரது சொத்திலிருந்து அவரது முஸ்லிமான குடும்ப அங்கத்தவர்களுக்கு வாரிசுரிமைப் பெறமுடியாது. எனினும், ஒரு முஸ்லிமல்லாத குடும்பத்தில் தந்தை மரணமடைந்து சில நாட்கள் கழிந்த பின் அவரது பிள்ளைகளில் ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினால் தந்தையின் சொத்திலிருந்து அவருக்கு வாரிசுரிமைக் கோரலாம். இது போன்றே இஸ்லாத்தை ஏற்ற ஒருவர் மரணமடைந்த பின் அவரது வாரிசுக்காரர்களில் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அவரது சொத்திலிருந்து  இவருக்கு அனந்தரம் பெற முடியாது.

  • இஸ்லாத்தைத் தழுவ முன் நிகழ்ந்த பாவங்களின் நிலை என்ன?

   '(நபியே) நிராகரிப்போருக்கு நீர் கூறுவீராக! அவர்கள் (இறைநிராகரிப்பு செய்யாது) விலகிக் கொண்டால் திட்டமாக சென்று விட்ட (முந்திய) குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும்' (ஸூரதுல் அன்பால் 08 : 38) என்ற இறை வசனத்தினதும், 'இஸ்லாம் அதற்கு முந்திய பாவங்களை இடித்து அழித்து விடும '; என்ற அர்த்தமுடைய நபி மொழியினதும் (ஸஹீஹூ முஸ்லிம் : 921) அடிப்படையில் நோக்குமிடத்து இஸ்லாத்தைத் தழுவிய ஒருவர் அவரது கழிந்து போன காலங்களில் இறை நிராகரிப்பு உட்பட எந்தவொரு பாவத்தை செய்திருப்பினும் அவர் இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் அவை மன்னிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாத்தை ஏற்பதே அவரது பாவங்களுக்கு பிராயச்சித்தமாகவும், தௌபாவாகவும் அமைந்து விடும். பிரத்தியேகமாக அவர் அவற்றுக்காக தௌபா செய்ய வேண்டியதில்லை.

   இதனடிப்படையில் ஒரு நவ முஸ்லிம் ஏற்கனவே விபச்சாரம், களவு, கொலை போன்ற பாவங்களில் ஈடுபட்டு இருந்தாலும் அவருக்கு இஸ்லாத்தைத் தழுவதன் மூலம் மன்னிப்புக் கிடைத்து விடுகின்றது. அவற்றிற்காக இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள தண்டனைகள் அவருக்கு நிறைவேற்றப்பட வேண்டியதில்லை. நபிகளாரது காலத்தில் ஏற்கனவே முஸ்லிம்களில் சிலரையே கொலைசெய்த பின் இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு அதற்கான தண்டனையை நபியவர்கள் நிறைவேற்றவில்லை என்பது நாமறிந்ததே .

இதனடிப்படையில் வட்டி போன்ற இஸ்லாத்தின் பார்வையில் பாவமான வழிகளில் முன்பு அவர் கொடுக்கல், வாங்கல் செய்து, பணத்தையும் கைப்பற்றி முடிந்திருப்பின் அப்பணத்தை அவர் தொடர்ந்தும் வைத்திருப்பதில் தவறில்லை. எனினும் இஸ்லாத்தின் பார்வையில் தடுக்கப்பட்ட முறையில் வியாபார ஒப்பந்தங்கள் போன்றவற்றை செய்து அதற்கான பணத்தை கையேற்காத நிலையில் அவர் இஸ்லாத்தைத் தழுவினால் அதனைக் கையேற்பது அவருக்கு கூடாது என்பதே அறிஞர்களின் தீர்ப்பாகும்.

   ஆனால் யாருக்காவது அவர் கடன்பட்டிருந்தால் அல்லது யாருடையாவது பொருளை அநியாயமாக அபகரித்து இருந்தால் அல்லது யாருடையாவது பொருளை சேதப்படுத்தி நஷ்டம் வழங்க வேண்டி இருந்தால் அவற்றை அவர் உரியவர்களுக்கு ஒப்படைத்து விட வேண்டும். அந்தப் பொறுப்புக்கள் இஸ்லாத்தைத் தழுவுவதன் மூலம் நீங்கி விட மாட்டாது.

   இஸ்லாத்தை ஏற்பதற்கு முந்திய காலங்களில் இஸ்லாம் அங்கீகரித்த பொதுவான நற்காரியங்களை ஒருவர் செய்திருப்பின் அவை அவர் இஸ்லாத்துக்கு வருவதுடன் வீணாகி விடமாட்டாது. மாறாக அதற்கான நன்மைகள் இறைவனிடம் அவருக்கு கிடைக்கும் என்பதை ஹதீஸ்கள் மூலம் விளங்க முடியுமாகவுள்ளது. ஹகீம் பின் ஹிஷாம் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் ' அல்லாஹ்வின் தூதரே! நான் (ஜாஹிலிய்யா) அறியாமைக் காலத்தில் தான தர்மம், அடிமைகளை விடுதலை செய்தல், உறவைப் பேணுதல் ஆகிய நல்லறங்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) நற்பலன் ஏதும் உண்டா?, கூறுங்கள்' எனக் கேட்டேன். அதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'நீர் முன்னர் செய்த நற்செயல்களுக்கான பிரதிபலன்களுடன் தான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்.' என பதிலளித்தார்கள். (முஸ்லிம் : 195) 

  • நவ முஸ்லிம் தனது முஸ்லிமல்லாத உறவினர்களுடன் எப்படி நடந்து கொள்வது?:

   ஒருவர் இஸ்லாத்தைத் தழுவுவதனால் அவரது சொந்த பந்தங்கள் உடனான உறவுமுறை இல்லாமல் போய்விட மாட்டாது. (கணவன், மனைவியிடையிலான உறவுமுறை என்னவாகும் என்பது பற்றி முன்னைய இதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.) எனவே அவர்களுடனான உறவை இவர் தொடர்ந்தும் பேணலாம். அத்துடன் உறவினர் என்ற அடிப்படையில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒரு நவ முஸ்லிம் இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்டு நிறைவேற்ற வேண்டும்.

   பெற்றோர், பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என பல உறவினர்களுக்கு செய்ய வேண்டிய பொதுவான பல கடமைகள் இருப்பது யாவரும் அறிந்ததே. நுபிகளாரின் பெரிய தந்தையாகிய அபூ தாலிப் இஸ்லாத்தை ஏற்காத நிலையில் மரணமடைந்த போது நபிகளார் அவரது மகனான அலி (ரழி) அவர்களிடம்  'நீர் போய் உனது தந்தையை அடக்கம் செய்து விட்டு வாரும்.' ஏன்று கூறியதும், அஸ்மா நாயகி (ரழி) முஸ்லிமல்லாத தனது தாய் தன்னிடம் உறவைப் பேண வந்த பொழுது அவர்கள் நபிகளாரிடம்' அவர்களுடனான உறவை பேணி நடக்கட்டுமா?'என வினவிய போது 'உனது தாயுடன் நீர் உறவைப் பேணி நடந்த கொள்.'என நபிகளார் கூறியதும் மேற்சொன்ன விடயத்துக்கு ஆதாரங்களாகும்.

   எனினும் ஒரு புதிய முஸ்லிம் தனது முஸ்லிமல்லாத உறவுகளை பேணும் பொழுது இஸ்லாத்துக்கு புறம்பான விடயங்களை செய்வதை அவசியம் தவிர்ந்து கொள்ள வேண்டும். அந்நிய மார்க்கத்தின் அனுஷ்டானங்கள், அவற்றுக்கே உரிய அடையாளங்களான கலாச்சார விடயங்களை அவர் எந்தக் கட்டத்திலும் செய்துவிட முடியாது. பெற்றோர் போன்றவர்களது வற்புறுத்தல்களினால் அவர்கள் மீதிருக்கும் அன்பின் காரணமாக அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என இஸ்லாத்திற்கு புறம்பான விடயங்களை செய்ய முனையக் கூடாது.

அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான் ' நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் அன்பு கொண்டு அரவணைத்துக் கொள்வது) பற்றி நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனம் அடைந்தவளாக அவனைச் சுமந்தாள். இன்னும் (அவனுக்குப் பால்குடி மறக்கடித்து) அவன் பிரிவது 2 வருடங்களிலாகும். (ஆகவே மனிதனே!)' நீ எனக்கும், உன்னுடைய பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக. (முடிவில்) என்னிடமே (உன்) மீளுதல் இருக்கின்றது.' எது பற்றி உனக்கு அறிவு (ஆதாரம்) இல்லையோ, அதை எனக்கு நீ இணையாக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் (அவ்விடயத்தில்) நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம். ஆயினும், இவ்வுலகத்தில் நன்மையான காரியத்தில் நீ அவ்விருவருடனும் (அன்புடன் ஒத்து) உடனிருப்பாயாக. இன்னும், (வழிபாட்டில்) என்பால் திரும்பியவரின் வழியை நீ பின்பற்றுவாயாக. பின்னர் நீங்கள் (யாவரும்) என்னிடமே திரும்பி வந்து சேர வேண்டியிருக்கின்றது. அப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன்' (ஸுரதுல் லுக்மான் 31 : 14,15) 

   முன்னைய உறவினர்களுடன் சேர்நது நடக்கும் பொழுது அவர்களது வற்புறுத்தல்களுக்கு பணிந்து அல்லது பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாந்து தனது சத்தியக் கொள்கையில் தளர்ந்து விடாதிருக்க ஒரு நவ முஸ்லிம் உறுதியான ஈமானுடன் இருந்து கொள்ள வேண்டும். மேலும் அவர்களுடன் இருக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நளினமாகவும், புத்திசாதூர்யத்துடனும், அவர்களை தூய இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்காக அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

   ஒருவர் இஸ்லாத்தைத் தழுவிய பின் அவரது பழைய உறவுகளுடன் தொடர்பு வைக்கக்கூடாது என்றும், அந்தச்சூழலில் வாழக்கூடாது என்றும் எம்மில் சிலர் எண்ணிக்கொண்டிருப்பது தவறாகும். மாறாக, அவருக்கு அவர்களுடன் தொடர்புவைக்க அச்சூழலில் வாழ அனுமதியுண்டு. ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் தனது சத்தியக் கொள்கைக்கு பங்கம் வராமல் பாதுகாத்துக் கொள்வதற்கான மனவுறுதி அவரிடம் அவசியம் இருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அவர் அவர்களையும், அச்சூழலையும் விட்டு தூரமாகியிருப்பதே அவருக்கு சிறந்ததாகும். 

   ஒரு நவ முஸ்லிம் இஸ்லாத்தைத் தழுவ முன் பாவித்த பொருட்களையும், உடைகளையும் பாவிக்கக் கூடாது என்று எம்மில் சிலர் தவறாக எண்ணியுள்ளனர். அவற்றை அவர் பாவிப்பதற்கு அனுதியுண்டு. ஆனால் அந்த உடை போன்றவை உறுதியாகவே அசுத்தமாக இருப்பின் அதனை முறையாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும் அவரது பழைய உடமைகள் ஷிர்க் உடைய அடையாளங்களை கொண்டதாக அல்லது அந்நிய மதத்துக்கென்றே அடையாளமாக அறியப்பட்டவைகளாக இருப்பின் அவற்றை அவர் அவசியம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

Write Your Comments
Your Name Your Email
Comments

ஆய்வுகள்

Visitor Count
Total Visits 45565
View Status of Application