147

ஷரீஆப்பிரிவு பட்டதாரிகள்

More info

80

அல்ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்

More info

42

பதிவேட்டிலிருந்து

More info

18

வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள்
More info

கலீபாக்களின் வரலாற்றில் இவை உண்மை தானா ?

about 6 months ago


கலீபாக்களின் வரலாற்றில் இவை உண்மை தானா?

கல்லூரி மாணவர்களின் ஆய்வுகளின் தமிழாக்கத் தொடர்: 

மூலம்: சராப் அஹ்மத் (2015)
தமிழாக்கம் : A.C.M.  சாகிர்
ஆண்டு : 5 (சரீஆப் பிரிவு)

தூய இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தின் எதிரிகள் ஏற்படுத்திய கலங்கம் பற்றிய விடயங்களை நாம் பார்த்து வருகின்றோம். கடந்த இதழில் அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு பைஅத் செய்யப்பட்ட ஸகீபா பனீ ஸாஇதா எனும் இடத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் அங்கு அலி(ரழி) அவர்கள் பைஅத் செய்த விடயத்தில் கூறப்பட்ட ஒரு சில செய்திகளையும் நாம் அறிந்தோம். அலி(ரழி) அவர்கள் பைஅத் செய்த விடயத்திலே பனூ ஹாஷிம்களின் நிலை பற்றி ஏற்கனவே பார்த்திருந்தோம். அதற்கடுத்து அலி(ரழி) பைஅத் விடயத்தில் அச்சுறுத்தல்களுக்கும் வற்புறுத்தல்களுக்கும் முகங்கொடுத்தாரா? என்பது பற்றி சற்று நோக்க முயற்சிப்போம். 

    அலி(ரழி) அவர்கள் அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு பைஅத் செய்யப்படுவதாக கேள்விப்பட்ட உடனேயே தான் அணிந்திருந்த மேலாடையுடன் சால்வையையும் விட்டுவிட்டு வேட்டியும் அணியாமல் அவசர அவசரமாகச் சென்று அவருக்கு பைஅத் செய்துவிட்டு அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார். பின்பு அவரது ஏனைய ஆடைகளை எடுத்துவர ஆளனுப்பினார். (தாரீக் தபரி 2:236) 

    அபூபக்கர்(ரழி) அவர்கள் மக்களிடம் பைஅத் வாங்குவதற்காக உட்கார்ந்த வேளையில் அலி(ரழி) அவர்களைக் காணாத போது அவரைப் பற்றி விசாரித்தார்கள். அப்போது அன்ஸாரிகள் சிலர் சென்று அவரை அழைத்து வந்தனர். அப்போது அபூபக்கர்(ரழி) அவர்கள் அவரிடம்: 'ரஸூலுல்லாவின் சாச்சாவின் மகனே! நீ முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்க நாடுகிறீரா?' என்றார். அதற்கு அலி (ரழி) அவர்கள்: 'ரஸூலுல்லாவின் கலீபாவே! எந்தவொரு நிந்தனையும் இல்லை' என்று கூறிவிட்டு அவருக்கு பைஅத் செய்தார்.

அதே போல ஸூபைர் இப்னு அவ்வாம் (ரழி) அவர்களும் அங்கு இல்லாதிருக்கவே அவரைப்பற்றிக் கேட்டார்கள். அவரையும் அழைத்து வரப்பட்டது. அப்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் அவரிடமும், 'ரஸூலுல்லாவின் மாமியின் மகனே! நீ முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைக்க நாடுகிறீரா?' என்றார். அதற்கு அவர் 'ரஸூலுல்லாவின் கலீபாவே! எந்தவொரு நிந்தனையும் இல்லை' என்று கூறிவிட்டு அவருக்கு பைஅத் செய்தார். (ஹாகிம் 8:153) (அல் பிதாயா வந்நிஹாயா 5:261).

    இமாம் தபரி உடைய மற்றுமொரு அறிவிப்பில் பொதுவாகவே அலி(ரழி),பனூ ஹாஷிம்கள் உட்பட முஹாஜிர்களில் எவரும் அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு பைஅத் செய்வதைவிட்டும் பின்வாங்கவில்லை. மாறாக அவர்ளை அழைக்காமலே அவர்கள் பைஅத் செய்வதற்கு முன்வந்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது. (தாரீக் தபரி 2:235)

அலி(ரழி) அவர்கள் பைஅத் செய்வதை விட்டும் ஆறு மாதங்கள் பின்வாங்கினாரா? 

    முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகள் ஒரு சிலர் அலி (ரழி) அவர்களின் வீட்டிலே ஒன்று கூடியிருப்பதாக அபூபக்கர்,உமர்(ரழி) ஆகியோருக்கு கேள்விப்பட்டபோது ஒரு சில ஸஹாபாக்களையும் அழைத்துக்கொண்டு அங்கு விரைந்து அங்கிருந்தவர்களை தாக்கினார்கள். அப்போது தனது வாளை உருவியவராக வெளியே வந்த அலி(ரழி) அவர்களை உமர்(ரழி) அவர்கள் இடைமறித்து அவரது வாளை உடைத்தார்கள். அத்தோடு வீட்டினுள் நுழைந்தார்கள். அவ்வேளை அவர்களிடம் வந்த பாத்திமா நாயகி அவர்கள்: 'இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லாவிடில் எனது முடியை நான் நீக்கிவிடுவேன். இன்னும் இறைவனிடம் பிரார்த்திப்பேன்' என்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். ஒரு சில நாட்களாக அங்கிருந்தவர்கள் பைஅத் செய்யாதிருந்து பின்பு தனித்தனியாக பைஅத் செய்தனர். எனினும் அலி (ரழி) அவர்கள் ஆறு மாதங்கள் கடந்த பின்னரே பைஅத் செய்தார். (தாரீக் அல் யஃகூபி 2:126)

இந்த அறிவிப்பு அறிவிப்பாளர் வரிசையின்றி இருப்பதுடன் அலி(ரழி) அவர்கள் எந்த ஒரு வற்புருத்தல்களுமின்றி பைஅத் செய்தார்கள் என்ற ஸஹீஹாக பதியப்பட்டுள்ள அறிவிப்புக்கு முரண்படுகிறது. 

ஸகீபா பனீ ஸாஇதாவிலே அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு மக்கள் பைஅத் செய்ததன் பிற்பாடு மீண்டும் புதிதாக பைஅத் செய்யப்பட்ட வேளை பொதுவான பைஅத்திலே அவருக்கு பைஅத்செய்வதற்காக மக்கள் முன்வந்தார்கள். அப்போது அவ்விடம் விரைந்த அலி(ரழி) அவர்கள்: 'எமது விடயங்களை நீர் எம்மீது மோசமானதாக ஆக்கிவிட்டீரா? நீர் எம்மிடம் ஆலோசனை செய்யவுமில்லை. எமது உரிமைகளை கவனிக்கவுமில்லை' என அபூபக்கர்(ரழி) அவர்களைப் பார்த்துக்கடிந்து கொண்டார். அப்போது அவருக்கு பதிலளித்த அபூபக்கர்(ரழி)அவர்கள், 'அவ்வாறல்ல. மாறாக நான் 'பித்னா' அதாவது குழப்பம் ஏற்படுவதைப் பயந்தேன். அதனாலேயே பைஅத் எடுத்தக்கொண்டேன்' என்றார். (முரூஜீ:- அஸ்ஸஹபி 2:126) 

வரலாற்றாசிரியரான மஸ்ஊதி என்பவர் இச்செய்தியை அறிவிப்பாளர் வரிசையின்றி அறிவிப்புச் செய்துள்ளார்.

அதேபோன்று நாம் ஏலவே குறிப்பிட்டது போன்று அலி(ரழி) அவர்கள் எவ்வித வற்புறுத்தலுமின்றி அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு பைஅத் செய்தார் எனும் விடயம் ஸஹீஹாக பதியப்பட்டுள்ளது.

    நபி(ஸல்) அவர்கள் மரணித்த வேளை பாத்திமா நாயகி தனக்கு தந்தையிடமிருந்து வரவேண்டிய அனந்தரச்சொத்தை வழங்குமாறு கோரி அபூபக்கர் (ரழி) அவர்களிடம் ஆளனுப்பினார்கள். அதற்கு அபூபக்ர்(ரழி) அவர்கள்: 'நாம் (நபிமார்கள்) யாருக்கும் அனந்தரம் விட்டுவிட்டுப் போக மாட்டோம். நாம் விட்டுவிட்டுச் செல்வது ஸதகாவாகும்' என்ற நபிகளாரின் பொன்மொழியைக் கூறி அவருக்கு சொத்தை வழங்க மறுத்ததோடு அவர் ரஸூலுல்லாஹ்வின் வழிமுறையை பின்பற்றுவதாகவும் கூறினார். அவருடன் கோபமுற்ற பாத்திமா நாயகி அவரைப் புறக்கணித்தது மாத்திரமன்றி தான் மரணிக்கும் வரை(நபியின் மரணத்திற்குப் பின் பாத்திமா நாயகி ஆறு மாங்கள் உயிர் வாழ்தார்கள்) அவருடன் கதைக்கவில்லை. அவரின் மரணத்தின் பின் அலி(ரழி) அவர்கள் அபூபக்கர் (ரழி) அவர்களுடன் ஒன்று சேர்ந்து அவருக்கு பைஅத் செய்தார்கள். 

பாத்திமா நாயகியின் மரணம் வரை அந்த ஒரு சில மாதங்களாக பைஅத் செய்யாதிருந்த அலி(ரழி) அவர்களுக்கு மக்கள் செல்வாக்கொன்று காணப்பட்டது. எனினும் தனது மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து மக்கள் செல்வாக்கைப் புறக்கணித்த அலி(ரழி) அவர்கள் அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு பைஅத் செய்ய எண்ணி அவரை தனது வீட்டுக்கு வரவழைத்தார். வீட்டுக்கு வந்த கலீபாவை கௌரவமாக வரவேற்று: 'அல்லாஹ் உமக்குத்தந்த நலவைப் பார்த்து நான் உம்மீது பொறாமைப்படவில்லை. என்கிலும் நீர் சர்வாதிகாரமாகச் செயற்பட்டு விட்டீர். நாமோ ரஸூலுல்லாஹ்வுடன் எமக்கிருக்கும் நெருக்கத்தினால் எமக்கொர பங்கை எதிர்பார்திருந்தோம்' என்றார். அப்போது அவரைப்பார்த்து அபூபக்கர் (ரழி) அவர்கள்: 'ரஸூலுல்லாஹ்வுடைய உறவினர்கள் எனது உறவினர்களை விட எனக்கு மிக விருப்பமானவர்கள். இந்த சொத்துக்கள் விடயத்திலே எனக்கும் உமக்;கும் மத்தியிலே நடந்ததிலே நலவை விடுத்து நான் குறை செய்யமாட்டேன். அத்தோடு ரஸூல{ல்லாஹ் எந்த விடயத்தை செய்யக் கண்டாலும் அதை நான் செய்யாது விடமாட்டேன்' என்றார்.

பின்பு அலி(ரழி) அவர்கள் அவருடன் கதைத்த அதே நாள் ளுஹர் தொழுகையின் பின் மஸ்ஜிதிலே பைஅத் செய்வதாக வாக்களித்தார். நேரம் நெருங்கவே மக்கள்மன்றிலே எழுந்த அபூபக்கர்(ரழி) அவர்கள் அலி(ரழி) அவர்களுடைய விடயத்தைத் தெரிவித்ததோடு அவர் பைஅத்திலிருந்து பின்வாங்கியமைக்கான காரணத்தையும் தெளிவுபடுத்தினார். பின்பு எழுந்த அலி(ரழி) அவர்கள் அங்கிருந்த மக்களை நோக்கி அபூபக்கர்(ரழி) அவர்களிடம் கூறிய விடயங்களைக் கூறியதுடன் அவர்கள் முன்னிலையில் பைஅத்தும் செய்தார். இதைப்பார்த்து மக்கள் சந்தோசப்பட்டதுடன் அவரது செயலையும் சிறந்ததாகக் கருதினார்கள். (புகாரி:4240,4241)
புகாரி,முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசை ரீதியாக ஸஹீஹாகக் காணப்பட்டாலும் இதன் உள்ளடக்கம் நாம் ஏற்கனவே கூறியிருந்த அதாவது அலி(ரழி) அவர்கள் எவ்வித வற்புறுத்தலுமின்றி பைஅத் செய்தார் என வரக்கூடிய(ஹாகிம்-8:189) ஸஹீஹான அறிவிப்புக்கு முரண்படுகிறது. எனவே இவ்விரண்டு ஹதீஸ்களையும் ஒன்று சேர்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிலை இங்கு ஏற்படுகிறது. ஹாகிமிலே இடம்பெற்றிருக்கும் செய்திக்கு வலு சேர்க்கும் ஒருசில அறிவிப்புகள் வேறு இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.   

    உக்பத்துப்னு ஆமிர்(ரழி) அவர்கள் வாயிலாக ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு அறிவிப்பிலே, ஒரு முறை அஸர் தொழுகைக்குப்பின்னால் அபூபக்கர்(ரழி) அவர்கள் வெளியில் சென்றவேளை விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் ஹுஸைன்(ரழி) அவர்களை கண்டு அவரை தூக்கி கொஞ்சிக் குலாவளானார்.இதனைப் பார்த்துக் கொண்டிருந்த அலி(ரழி)அவர்கள் புன்முறுவலித்தார்.(புகாரி:3542) என்று இடம்பெற்றுள்ளது.

    அதேபோன்று இமாம் அஸ்ஸூயூதி(ரஹ்) அவர்களுடைய 'தாரீகுல் குலபா' எனும் நூலின் 75ஆம் பக்கத்திலே இடம்பெற்றுள்ள இன்னுமொரு செய்தியாவது,நபிகளார் இறையடி சேர்ந்து இரு மாதங்களும் ஒரு சில நாட்களும்  கடந்த நிலையில் மதம்மாறிய முர்தத்களுக்கு எதிராகப் போராட அபூபக்கர்(ரழி) அவர்கள் தன் வாளை உருவியவராக வெளியிறங்கிச் செல்லவே ஒரு சில ஸஹாபாக்கள் நடுவே குறுக்கிட்டு அவரைத்தடுத்தார்கள். அப்போது அங்கிருந்த அலி(ரழி) அவர்கள்: 'ரஸூலுல்லாஹ்வின் கலீபாவே! எங்கே போகிறீர்கள்? உஹதுடைய நாளிலே நபி(ஸல்) அவர்கள் சொன்னதையே நானும் உங்களுக்குக் கூறுகிறேன். உமது வாளை உறையினிலிடுங்கள். மதீனாவுக்குத் திரும்பி விடுங்கள் நீர் மரணித்தால் இஸ்லாத்திற்கு ஒரு போதும் ஒரு சிறந்த ஆட்சி இராது'. என்றார் அதைக் கேட்ட அபூபக்கர்(ரழி) அவர்கள் மதீனா திரும்பினார். 

மேலே குறிப்பிடப்பட்ட இரு அறிவிப்புகளையும் நோக்குமிடத்தில் அலி(ரழி) அவர்கள் மற்றும் அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு மத்தியில் ஒரு சுமுகமான நெருங்கிய உறவுகாணப்பட்டமை தெளிவான்கிறது. அத்துடன் அலி(ரழி) அவர்கள் பைஅத்திலிருந்து பின்வாங்கியமை மற்றும் அபூபக்கர்(ரழி)அவர்களை புறக்கணித்தமை ஆகியவற்றை இங்கே ஏற்றுக்கொள்வது தூரமான விடயமாகவும் காணப்படுகிறது. மாறாக அபூபக்கர்(ரழி)அவர்களுக்கு நெருங்கிய ஒருவராகவும் அவருக்கு ஆலோசனை வழங்கக் கூடியவர்களாகவும் அலி(ரழி)அவர்கள் திகழ்ந்தார்கள் என்பதே யதார்த்;தமாகும். 

புகாரி,முஸ்லிமுடைய 'ஆறுமாதங்கள் கழித்தே பைஅத் செய்தார்' எனும் அறிவிப்பு அறிவிப்பாளர் தொடர் மூலமாக 'ஸஹீஹ்' என்ற நிலையை அடைந்தாலும் அந்த ஹதீஸிலே மேற்கூறிய ஹதீஸுக்கு முரண்படக்கூடிய பகுதி ஹதீஸுடைய வசனங்களில் ஒன்றாக அல்லாது அதன் அறிவிப்பாளர் வரிசையிலே இடம்பெறக் கூடிய இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி(ரஹ்) அவர்களின் கூற்றாகவே காணப்படுகிறது. ஏனெனில் தாரீக் அத்தபரியிலே இமாம் தபரி அதேபான்று அபூ அவானா என்பவர் அவருடைய முஸ்னதிலேயும் இமாம் அப்துர்ரஸ்ஸாக் அவருடைய முஸன்னபிலேயும் இந்த ஹதீஸ் பற்றிய ஒரு கூற்றை இவ்வாறு பதிவுசெய்துள்ளார்கள் . இமாம் ஸுஹ்ரி அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்துக்கொண்டிருந்த வேளை ஒருமனிதர் அவரிடம்: 'அலி(ரழி) அவர்கள் ஆறு மாதங்களின் பினனர் தான் பைஅத் செய்தாரா?' எனக்கேட்டபோது, 'ஆம். அலி(ரழி) அவர்கள் அபூபக்கர்(ரழி)க்கு  பைஅத் செய்யும் வரை பனூஹாஷிம்கள் எவரும் அவருக்கு பைஅத் செய்யவில்லை'என்றார்(தாரீக் அத்தபரி-2:852)

இந்த மேலதிகமான செய்தி அறிவிப்பாளர் வரிசையின்றி இடம்பெற்றுள்ளது. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும் போது அந்த மேலதிக அறிவிப்பை தவிர்த்தமை அதன் பலவீனத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது. (பழாஇல் அஸ்ஸஹாபா-1:37) அத்தோடு அல்ஹாபிழ் பைஹகியும் அதைப் பலவீனப்படுத்தியுள்ளார். (பத்ஹுல் பாரி-7:494,495). எனவே, அந்த மேலதிக அறிவிப்பு ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றே!

இவை ஒரு புறமிருக்க இந்த விடயங்களை ஹதீஸிலிருந்து அகற்றிவிட்டுப் பார்த்தால் இரு ஹதீஸ்களையும் தெளிவாக விளங்கலாம். அலி(ரழி) அவர்களுக்கும் அபூபக்கர்(ரழி) அவர்களுக்கும் மத்தியிலே நபிகளாருடைய அனந்தரச் சொத்தில் பிரச்சினை காணப்பட்டதே தவிர கிலாபத்தில் எதுவித மனக்கசப்புகளும் காணப்படவில்லை என்பது இதனூடாகத் தெளிவாகிறது. அதுமாத்திரமின்றி அலி(ரழி), அபூபக்கர்(ரழி)அவர்களுக்கு கூறிய பதிலிளும் சொத்து பற்றி விடயமே சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே அலி(ரழி) அவர்கள் அபூபக்கர்(ரழி) அவர்களுக்கு எவ்வித வற்புறுத்தலுமின்றி ஆரம்ப கட்டத்திலேயே பைஅத் செய்ததுடன் அவருக்குப்பின்னால் நின்று தொழுததோடு மதம்மாறிய முர்தத்களுக்கு எதிரான யுத்தத்திலும் கலந்து அவருடைய ஆட்சியைப்பலப்படுத்தினார்கள் என்பதே யதார்த்தம். அத்தோடு பாத்திமா(ரழி) அவர்களின் அனந்தரக்கோரிக்கையில் ஒரு சில சிறு மனக்கசப்புகள் ஏற்பட்டதனால் அவரின்; வபாத்தைத் தொடர்ந்து அலி(ரழி) அவர்கள் தனது பைஅத்தை மீண்டும் புதுப்பித்தார்கள் போன்ற செய்திகள்   இவற்றினூடே புலனாகின்றன. அத்தோடு அலி(ரழி) அவர்கள் தானே ரஸூலுல்லாவுக்குப் பிறகு இமாம் என்றோ பனூ ஹாஷிம்களுக்கே கிலாபத் சொந்தமானதென்றோ நம்பியிருக்கவில்லை என்றும் புலனாகிறது.

அபூபக்கர்(ரழி) அவர்களுடைய பைஅத்துடன் சம்பந்தப்படக்கூடிய வரலாற்று நூல்களில் இடம்பெற்ற பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை நோக்கினோம். உண்மையிலே இஸ்லாமிய வரலாற்றில் இவ்வாறான பல செய்திகளும் அதன் தூய்மையில் சேறுபூசின என்பது மாத்திரமன்றி பல முஸலிம்களாலும் உண்மையென நம்பப்படும் விடயங்களாக மாறிவிட்டன.

ஸஃத் பின் உபாதா(ரழி) அவர்களை ஜின் கொன்றதா?

மெற்குறிப்பிட்டவை போன்றே கலீபாக்களின் வரலாற்றினுள் பரவலாகப்பேசப்படும் ஒரு செய்தியே 'ஸஃத் பின் உபாதா(ரழி) அவர்களை ஜின்கள் கொன்றன' எனும் செய்தியாகும். உண்மையிலேயே இவ்வாறான ஒரு செய்தி இடம்பெற்றதா? அப்படி இடம்பெற்றிரா விட்டால் இச்சம்பவம் இஸ்லாமிய வரலாற்றினுள் நுழைந்ததற்கான காரணம் யாது? போன்ற பல விடயங்களையும் நாம் அறிய கடப்பாடு கெண்டுள்ளோம்.

ஒரு முறை சிறுநீர் கழித்து விட்டு வந்த ஸஃத் பின் உபாதா(ரழி) அவர்கள்: 'எனது முதுகுப்பகுதியிலே நான் ஏதோ ஒன்றை உணர்கிறேன்' என்றார். பின்பு இறையடியெய்தும் வரை அவ்வாறே இருந்தார்.அவரது மரணவேளை ஜின்கள் ஒப்பாரி வைத்து, 'நாம் கஸ்ரஜ் கோத்திரத் தலைவர் ஸஃத் பின் உபாதாவை கொன்று விட்டோம். மேலும் நாம் இரு ஈட்டிகளை அவருக்கு வீசி அவரது நெஞ்சை குறி தவறாமல் தாக்கிவிட்டோம்'என்றன.(முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்-3ஃ594)  

இந்த அறிவிப்பு தபரானி,ஹாகிம் மற்றும் இன்னும் ஒரு சில கிரந்தங்களில் இடம்பெற்றிருப்பினும் அவை அனைத்தும் பலவீனமானவைகளாகவே காணப்படுகின்றன. மூன்று வௌ;வேறு அறிவிப்பாளர் வரிசைகளைக் கொண்ட இந்த அறிவிப்பு மூன்றிலேயும் பலவீனமான தரத்தையே கொண்டுள்ளது. எனவே,இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.

இஸ்லாமிய உம்மத்தின் முதல் கலீபா அபூபக்கர் (ரழி) அவர்களின் ஆட்சிக் கெடுவுடன் சம்பந்தப்பட்ட ஒரு சில தரிபடாத செய்திகள் பற்றி இது வரை அறிந்தோம். இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழிலே 'அமீருல் முஃமினீன்' உமர் பின் கத்தாப் (ரழி) அவர்களுடன் சம்பந்தப்பட்டக்கூடிய விடயங்களை ஆராய முயற்சிப்போம்.... 

Write Your Comments
Your Name Your Email
Comments

ஆய்வுகள்

Visitor Count
Total Visits 45522
View Status of Application