147

ஷரீஆப்பிரிவு பட்டதாரிகள்

More info

80

அல்ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்

More info

42

பதிவேட்டிலிருந்து

More info

18

வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள்
More info

மறைவான மையித்திற்கான ஜனாஸாத் தொழுகை

about 6 months ago


மறைவான மையித்திற்கான ஜனாஸாத் தொழுகை
 - ஓர் அலசல்

அல்உஸ்தாத் பீ. எச். பர்னாஸ் (அப்பாஸி)
        

ஒரு மரணம் சம்பவிக்கும் போது அந்த மரணித்த நபருக்காக உயிருடன் இருப்பவர்கள் நிறைவேற்ற வேண்டிய சில கடமைகள் உள்ளன. அக்கடமைகளில் ஒன்றாக அந்த ஜனாஸாவுக்காக தொழுகை நடத்துவது திகழ்கின்றது. ஜனாஸா இருக்கும் இடத்தில் வசிப்பவர்களும் தூர இடங்களிலிருந்து அவ்விடத்துக்கு வந்து சேர்பவர்களும் ஜனாஸாவை தமக்கு முன்னால் வைத்து தொழுகையை நிறைவேற்றுவார்கள். இது அங்கீகரிக்கப்பட்ட முறை என்பதில் இரு கருத்துக்கிடையாது. 

ஒருவர் மரணிக்கும் போது தூர இடங்களில் இருப்பவர்கள் ஜனாஸா இருக்கும் பிரதேசத்துக்கு வராமல் தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே சில சந்தர்ப்பங்களில் அத்தொழுகையை  நிறைவேற்றி விடுகின்றனர். 'மறைவான ஜனாஸாத் தொழுகை'(காயிபான ஜனாஸாத் தொழுகை) என இஸ்லாமிய சட்டத்துறையில் இதற்கு பெயர் வழங்கப்படுகின்றது. 

இது எமது சன்மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை காணப்படுகின்றது. இது பற்றிய தெளிவை வாசகர்களுக்கு வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

மறைவான(காயிப்) ஜனாஸா என்றால் என்ன?

ஒருவர் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் வெளி நாடுகளில் அல்லது வெளியூhகளில் இருப்பவர்கள் தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே தனியாகவோ அல்லது ஜமாஅத்தாகவோ தொழுவதையே இது குறிக்கின்றது. 

மறைவான ஜனாஸா தொழுகைக்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா?

இவ்விடயத்தில் சன்மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் மூன்று கருத்துக்கள் காணப்படுகின்றன. 

1. பொதுவாக தொழலாம்: 

அதாவது ஒரு ஜனாஸாவிற்கு அவர் மரணித்த ஊரில் தொழுகை நடத்தப்பட்டிருப்பினும் அல்லது நடாத்தப்படாமல் இருப்பினும் ஏனைய ஊர்களில் உள்ளவர்கள் தாராளமாக காயிப் ஜனாஸாத் தொழுகை நடத்தலாம்.

ஷhபி மத்ஹபைச் சார்ந்த உலமாக்களும்  மற்றும் இமாம் இப்னு ஹஸ்ம் அள்ளாஹிரி உட்பட பல ஸலபு உலமாக்களும் இக் கருத்தைக் கூறியுள்ளார்கள். ஹன்பலி மத்ஹபின் பிரதான கருத்தாகவும் இது காணப்படுகிறது.

2. தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை

எச்சந்தர்ப்பத்திலும் இவ்வாறான ஒரு தொழுகையைத் தொழ மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஹனபி மத்ஹப் மற்றும் மாலிக் மத்ஹபைச் சார்ந்தவர்கள் இக் கருத்தையே சார்ந்து நிற்கின்றனர்.

3. சில சந்தர்ப்பங்களில் தொழலாம்

இக்கருத்தை உடையவர்கள் இரு வகையினராக  பிரிகின்றனர். சிலர் ஒரு முஸ்லிம் மரணத்தை எய்தும் தருவாயில் அவரது ஊரில் அவருக்கு தொழுகை நடாத்தப்படாத பட்சத்தில் ஏனைய ஊர்களில் வாழும் முஸ்லிம்கள் அந்த ஜனாஸாவுக்காக தொழுகை நடாத்தலாம் . மாறாக அவர் மரணித்த  பிரதேசத்தில் அவருடைய ஜனாஸாவிற்கான தொழுகை நடாத்தப்பட்டிருப்பின் வெளியூர் வாசிகள் அவருக்காக தொழுகை நடாத்துவதற்கு அனுமதி இல்லை எனக் கூறுகின்றனர். இக்கருத்தை இமாம்களான அபூ தாவூத், கத்தாபி, இப்னு தைமியா, இமாம் இப்னுல் கய்யிம், அஷ;iஷக் அல்பானி, அஷ;iஷக் அல் உஸைமீன் போன்றோர் கூறுகின்றனர். ஷhபி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்களுள் ஒருவராகிய இமாம் அர்ரூயானியும் இக் கருத்தையே சரிகாண்கிறார்.) பார்க்க بحر المذهب  பாகம் :2 பக்கம் 583(

இன்னும் சிலர் மார்க்கத்திற்காக சேவை செய்தவர் என்ற அடிப்படையில் தொழுவிக்க முடியும் வேறுகாரணங்களுக்காக  தொழ முடியாது என்றும் கூறுகின்றனர்.

எக்கட்டத்திலும் எந்தொருவருக்கும்  பொதுவாக மறைவான  ஜனாஸாத் தொழுகை நடாத்தலாம் எனக் கூறும் முதற் பிரிவினர் பின்வரும் செய்திகளை தமது கருத்துக்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர்:

1-    நஜ்ஜாஸி மன்னன் ஹபஷhவில் மரணித்த பொழுது நபியவர்கள் அவருக்காக (மதீனாவில்) தொழுகை நடாத்தினார்கள் (புஹாரி :1317)

2-    நபியவர்கள் அடக்கம் செய்யப்பட்ட ஒரு கப்ருக்கு முன் சென்று (ஜனாஸாவிற்காக) தொழுதார்கள். (முஸ்லிம்:955)  ஒரு ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டுவிட்டால் அது மறைவான ஜனாஸாவாகும். எனவே கப்ருக்கு முன் நபியவர்கள் தொழுவித்தது காயிபான ஜனாஸாவை தொழுவித்தது போன்றதாகும். 

3-    ஒரு ஜனாஸாவுக்காக தொழுவிப்பதென்பது அவருக்காக இறைவனிடத்தில் பிரார்த்திப்பதாகும். எனவே முன்னிலையிலுள்ள ஜனாஸாவிற்குப் பிரார்த்திப்பது போன்றே மறைவில் உள்ள ஜனாஸாவிற்கும் தொழுகைiயின் மூலம் பிரார்த்திக்க முடியும். இக்கருத்தையே இமாம் ஷhபியவர்கள் தனது அல் உம்மு என்ற கிரந்தத்தில் பதிவு செய்கின்றார்கள் (பாகம் : 7 பக்கம் :222)

இவ்வாறான ஒரு தொழுகையைத் தொழுவது எச்சந்தர்ப்பத்திலும் அனுமதிக்கப்படமாட்டாகு எனக் கூறுபவர்கள் பின்வரும் செய்திகளை தமது கருத்துக்கு ஆதாரமாக முன்வைக்கின்றனர்:

1- நபியவர்கள் நஜ்ஜாஸி மன்னனுக்கு தொழுவித்தது அவர்களுக்கு மாத்திரம் சொந்தமான ஒன்றாகும்.; மரணித்தவருக்காக தான் தொழுவிப்பது அவருக்கு ரஹ்மத்தாக அமையும் (ஆதாரம் இப்னு மாஜஹ் 1528) எனக் கூறிய நபியவர்கள் வேறு இடங்களில் மரணித்த ஸஹாபாக்களின் ஜனாஸாக்களுக்காக தொழுகை நடாத்தியதாக எந்த ஒரு ஆதாரபூர்வமான செய்திகளையும் நாம் காணவில்லை. குறிப்பாக நபியவர்களுக்கு மிகக் கவலையை ஏற்படுத்திய பிஃரு மஊனாவில் கொல்லப்பட்ட ஸஹாபாக்களுக் கூட நபியவர்கள் மறைவான ஜனாஸா தொழுகை நடாத்தவில்லை.  (الدر المختار பாகம் : 2 பக்கம் :209)

2- நபியவர்களுக்குப் பின் ஸஹாபாக்கள் எந்தவொரு ஜனாஸாவுக்காகவும் காயிப் ஜனாஸாத் தொழுகை நடாத்தியதாக நாம் அறியவில்லை.

3-  ஜனாஸாத் தொழுகையை ஜனாஸாவுக்கு முன் தொழுவது ஜனாஸாத் தொழுகையின் நிபந்தனையாகும். எவ்வாறு ஜனாஸா இருக்கும் ஊரில் இருக்கும் ஒருவர் ஜனாஸாத் தொழுகையை தனது வீட்டில் இருந்து தொழ முடியாதோ அவ்வாறே வெளியூரில் இருக்கும் ஒருவரும் முன்னிலையில் ஜனாஸா இன்றி தொழமுடியாது. (المغني பாகம் :2 பக்கம்:382)

சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் தொழலாம் எனக் கூறுபவர்கள்

நஜ்ஜாஸி மன்னனுக்காக எவரும் தொழுதிருக்கவில்லை. அதாவது அப்பகுதியில் அவர் மாத்திரம் முஸ்லிமாக இருந்திருப்பார் அல்லது ஜனாஸா தொழுகை எவ்வாறு தொழவேண்டும் என்ற அறிவில்லாத முஸ்லிம்களே அவர் மரணித்த வேலையில் அங்கு இருந்திருப்பார்கள் என்பதை முக்கிய ஆதாரமாக முன்வைக்கின்றனர்.(معالم السنن பாகம்:1 பக்கம்:310)

தெளிவுகள்: 

பொதுவாக எல்லா ஜனாஸாக்களுக்கும் காயிபான ஜனாஸா தொழுகையை நடத்தலாம் எனும் கருத்தைக் கொண்டவர்களுக்கு ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்களும், மாலிக் மத்ஹபைச் சார்ந்தவர்களும் பின்வரும் பதில்களை முன்வைக்கின்றனர்.

1- நபியவர்கள் நஜ்ஜாஸி மன்னனுக்கு தொழுவித்தமையானது நபிகளாருக்கு மாத்திரம் குறிப்பானதாகும். இதை நஜ்ஜாஸி மன்னனின் ஜனாஸா தொழுகை விடயத்தில் வரும் ஹதீஸ்கள் பறைசாற்றுகின்றன. அவையாவன:

•    நஜ்ஜாஸி மன்னனுடைய ஜனாஸாவை அல்லாஹ் நபியவர்களுக்கு எடுத்துக்காட்டினான். எனவே நபியவர்கள் ஒரு ஜனாஸாவுக்கு முன்னாலே தொழுவித்த சட்டத்தையே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். மஃமூம்களுக்கு ஜனாஸா விளங்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது (الدر المختار பாகம் : 2 பக்கம் :209)

இக்கருத்தை வலுவூட்டும் விதமாக இப்னு ஹிப்பான் எனும் ஹதீஸ் கிரந்தத்தில்  பதிவாகியுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றனர். 
இம்ரான் இப்னு ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் ரஸுலு;லாஹி صلى الله عليه وسلم அவர்கள் ' உங்களுடைய சகோதரர் நஜ்ஜாஸி மன்னர் மரணித்து விட்டார், அவருக்காக எழுந்து தொழுகை நடாத்துங்கள்' என எங்களுக்குக் கூறினார்கள். பிறகு நபியவர்கள் தொழுவிப்பதற்காக எழுந்தார்கள் . ஸஹாபாக்களும் நபியவர்களுக்குப் பின்னால் தொழ எழுந்தார்கள்............இந்த ஹதீஸின் இறுதிப்பகுதியில் ஸஹாபாக்கள் நஜ்ஜாஸி மன்னனின் ஜனாஸாவிற்கு முன்னே நாம் தொழுகின்றோம் என்றே நினைத்தார்கள் (இப்னு ஹிப்பான் 3102)
திர்மிதியின் ஓர் அறிவிப்பில் ஒரு ஜனாஸாவிற்கு முன்னால் தொழுவதைப் போன்றே நாம் தொழுதோம் என பதிவு செய்யப்பட்டுள்ளது (1039)

•    நஜ்ஜாஸி மன்னருக்கு தொழுவிப்பதற்கு ஹபஷhவிலே முஃமின்கள் எவரும் இருக்கவில்லை எனவே தான் நபியவர்கள் அவருக்கு தொழுகை நடாத்தினார்கள் (نصب الراية பாகம்:2 பக்கம்:283)

இவற்றிற்கான மறுப்புக்கள்:

1- நபியவர்கள்  ஒரு விடயத்தைச் செய்தால் அது நபியவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமானது எனக் கூறுவதற்கான தகுந்த ஆதாரங்கள் தேவை. மேலும் நபியவர்களுக்கு நஜ்ஜாஸி மன்னனின் மரணித்த இடம் எடுத்துக்காட்டப்பட்டது எனக் கூறப்படும் செய்தி ஆதாரபூர்வமனதல்ல (عون المعبود  பாகம்: 9 பக்கம்:9 )

2-நபியவர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமானதென்றால் நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு தொழுமாறு ஏவியிருக்க மாட்டார்கள். (عون المعبود  பாகம் :9 பக்கம்:9 )

3- நஜ்ஜாசி மன்னருக்கு தொழுவிப்பதற்கு  எவரும் இருக்கவில்லை என்பது ஒரு தூரமான செய்தியாகும். ஏனெனில் ஒருமன்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் ஆகக்குறைந்தது அவரின் குடும்பமாவது இஸ்லாத்தை ஏற்றிறுக்க வேண்டும். முஸ்லிம்களுக்காக தனது நாட்டில் அடைக்கலம் கொடுத்த அவர் இஸ்லாத்தை உள்ளத்தில் மறைத்துக் கொண்டிருந்தார் என்று கூறுவது அதற்கான தகுந்த சான்றொன்று கிடைக்கும் வரை பொருத்தமாகமாட்டாது. எப்படி அவருடைய ஊரில் அவருக்காக தொழுகை நடத்தினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடையாதோ அதேபோன்று அவர்கள் தொழுகை நடத்தவில்லை என்பதற்கும் நாம் அறிந்தளவுக்கு சான்றுகள் கிடையாது. இவ்விரு விடயங்களையும் நோக்கமிடுமிடத்து தொழுகை நடத்தப்பட்டிருக்கலாம் எனும் ஊகமே வலுப்பெறுகிறது.

4- ஸஹாபாக்கள் தாம் ஒரு மைய்யித்திற்கு முன்னால் தொழுவதைப் போன்றே நினைத்தோம் என்ற விடயம் நபியவர்களுக்கு நஜ்ஜாஸி மன்னருடைய ஜனாஸா எடுத்துக்காட்டப்பட்டது என்று கூறுவதற்கு ஆதாரமாக அமையப்பெறாது. ஸஹாபாக்கள் இங்கே குறிப்பிட வருவது காயிப் ஜனாஸா தொழுகைக்கும் முன்னிலையில் உள்ள ஜனாஸாவிற்கு தொழுவதில் வித்தியாசம் கிடையாது என்பதே .   

5-  ஒரு ஸுன்னாவை நிறுவுவதற்கு ஓர் ஆதாரமே போதுமானது. பல ஆதாரங்களின் மூலம் தான் ஒரு ஸுன்னா நிறுவப்பட வேண்டுமாயின் எத்தனையோ இபாதத்களை நாம் புறந்தள்ள நேரிடும்.

6- ஒரு ஜனாஸாவுக்காகத் தொழுவிப்பது அவருக்கு பாவமன்னிப்புக்கோருவதாகும் அதை (பாவமன்னிப்புக்கோருவதை) நபியவர்கள் மூன்று விதத்தில் செய்துள்ளார்கள்.
      1- ஒரு மையத்திற்கு முன்னிலையில் தொழுவது அவருக்காக பிரார்திப்பது
      2- கப்ருக்கு முன்னால் தொழுவது
      3- வேறோர் ஊரில் மரணித்தவர்களுக்காக தொழுவிப்பது 
இரண்டாம் மூன்றாம் வகைகள் ஜனாஸாவுக்கு உபரியாகச் செய்யும் வணக்கமாகும். மாறாக முதலாவது வகை பர்ளு கிபாயாவாகும் ( عون المعبود  பாகம் :9 பக்கம்:9 )

இக்கருத்துக்களில் காயிபான ஜனாஸாத் தொழுகை சில சந்தர்பங்களில் (அந்த ஜனாஸாவுக்கான தொழுகை நடைபெறவில்லை என அறியும் சந்தர்ப்பத்தில்) மாத்திரம் தொழ முடியும் என்ற கருத்தே மிக வலுவான கருத்தாகும்.  (அல்லாஹ் மிக அறிந்தவன்)

அதற்கு ஆதாரமாக பின்வரும் விடயங்களை முன்வைக்கலாம்:

1-நபியவர்கள் நஜ்ஜாஸி மன்னருக்கு தொழுவித்த விடயம் ஸஹீஹாக பதிவுசெய்யப்பட்டுள்ளமை.

2- தொழ முடியாது என்பவர்கள் அதற்கான தெளிவான அல்லது ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் தம் தமது கருத்தை நிறுவாமை.

3-மார்கத்துக்காக சேவை செய்தவர்களுக்கு தொழுவிக்கலாம் என்பது நபியவர்கள் தொழுவித்ததற்கான நேரடிக் காரணம் கிடையாது. அதுவும் ஒரு காரணம் என்ற சொல்லலாமே தவிர அதுதான் காரணம் என்று கூறுவதும் அதை ஆதாரம் பிடிப்பதும் பெருத்தமானதன்று.

4-;நபியவர்கள் தமது காலத்தில் எல்லா ஜனாஸாக்களுக்கும் காயிப் ஜனாஸா தொழுவித்தார்கள் என்றோ அல்லது நான்கு கலீபாக்களும் மரணித்த சமயம் அவர்களுக்காக வெளியூர்களில் ஜனாஸா தொழுவிக்கப்பட்டதென்றோ அறிவிப்புக்கள் இடம் பெறாததால் - அல்லாஹ் மிக அறிந்தவன்- பொதுவாக தொழ முடியும் என்ற கருத்து வலுவிலக்கின்றது . இக்கருத்தை பல உலமாக்களும் கூறியிருப்பதை முன்னால் நாம் பார்த்தோம்

5- ஒரு முறை நபியவர்கள் செய்தாலும்; அது மார்க்கமாகும் என்ற விடயத்தை நாம் பொதுவாக எடுத்துவிடக் கூடாது. உதாரணத்திற்கு நபியவர்கள் ஊரில் இருக்கும் பொழுது மழை, பயம் போன்ற காரணங்கள் ஏதுமின்றி சில தொழுகைகளை ஒன்று சேர்த்து தொழுதுள்ளார்கள் (முஸ்லிம் :705) இதை ஆதாரமாக வைத்து பொதுவாக தொழுகைகளை ஒன்று சேர்த்து தொழ முடியும் எனக் கூற முடியாது. ஏனெனில் நபிகளார் ஊரில் இருக்கும் பொழுது தொழுகையை உரிய நேரத்தில் தொழுவதே வழக்கமாய் இருந்தது. இதே போன்று நபியவர்கள் பல ஸஹாபாக்கள் மரணித்தும் அவர்களுக்கு தொழுகை நடத்தாமல் நஜ்ஜாஸி மன்னனுக்கு மாத்திரமே காயிபான ஜனாஸா தொழுதுள்ளார்கள் . நபியவர்களின் பொதுவான வழமை முன்னிலையில் உள்ள ஜனாஸா அல்லது கப்ரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜனாஸாவிற்கு முன் தொழுவதே . அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

குறிப்பு: நபியவர்கள் இன்னும் சில ஜனாஸாக்களுக்கு காயிபான தொழுகை நிறைவேற்றியுள்ளார்கள் என்று வரும் செய்திகள் அனைத்துமே பலவீனமானவை என ஹதீஸ்களை உலமாக்கள் குறிப்பிடுகின்றனர். (عون المعبود பாகம்: 9 பக்கம்:5)

5- முறையான ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்பட்ட கருத்துவேற்றுமை என்பதனால் பொதுவாக காயிபான ஜனாஸாவை தொழும் ஒருவரைப்பார்த்து பித்அத் செய்துவிட்டதாகக் கூறுமுடியாது.

 

Write Your Comments
Your Name Your Email
Comments

ஆய்வுகள்

Visitor Count
Total Visits 45566
View Status of Application