159

ஷரீஆப்பிரிவு பட்டதாரிகள்

More info

86

அல்ஹாபிழ் பட்டம் பெற்றவர்கள்

More info

42

பதிவேட்டிலிருந்து

More info

27

வெளிநாட்டு பல்கலைகழக மாணவர்கள்
More info

கண்திருஷ்டி! ஓர் இஸ்லாமிய நோக்கு

about 2 years ago


  கண்திருஷ்டி! ஓர் இஸ்லாமிய நோக்கு
 

அல் உஸ்தாத் முஹம்மது ளபர் டீ.யு. மதீனா


இன்றைய நவீன உலகில் கண்திருஷ்டி என்ற ஒரு விடயம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி அறிஞர்கள் பலவகையான கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர். யாரெல்லாம் பகுத்தறிவை ஆதாரமாகக் கொள்கின்றார்களோ, அவர்கள் அனைவரும் கண்திருஷ்டி போன்றவற்றை வராலாறு நெடுகிலும் மறுத்தே வந்துள்ளனர். ஆனால் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கண்திருஷ்டி உண்டா? அவ்வாறு இருக்கின்றதென்றால் அதனை விட்டும் பாதுகாப்புப் பெறுவதற்கான வழிகள் என்ன? இதனை மறுக்கக் கூடியவர்களுக்கு எவ்வாறான பதில்கள் கூறலாம் என்பதை குர்ஆன், ஸுன்னாவின் நிழலில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். எனவே கண்திருஷ்டி என்பதன் வரைவிலக்கணம் யாது? அதற்கான ஆதாரங்கள் யாவை? அதுபற்றி அறிஞர்களின் கூற்றுக்கள் யாவை? கண்திருஷ்டியின் ஆபத்துக்கள், அடையாளங்கள் யாவை? கண்திருஷ்டிக்கும் பொறாமைக்கும் இடையிலான வித்தியாசம் என்ன? கண்திருஷ்டியின் வகைகள், கண்திருஷ்டிக்கான சிகிச்சை முறைகள் போன்றவற்றை இன்ஷா அல்லாஹ் நாம் இக்கட்டுரையின் மூலம் ஆராய்வோம்.
 

கண்திருஷ்டிக்கான வரைவிலக்கணம்:- 
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கண்திருஷ்டிக்கான விளக்கத்தைக் கூறும் போது தீய உணர்வகள் கொண்ட ஒருவர்  ஒரு நல்லவிடயத்தைப் பொறாமை உணர்வோடு அது நீங்கவேண்டும் என்ற எண்ணத்தோடு உற்று நோக்குவதே கண்திருஷ்டியாகும். 
    அரபுப் பாஷையில் கண்திருஷ்டி 'அய்ன்' , 'நழ்ரத்' போன்ற பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றன. 'நழ்ரத்'  என்பதன் அர்த்தம் பார்வை என்பதாகும்.  'அய்ன்' என்பது கண்திருஷ்டியாகும்.
அடுத்து நாம் கண்திருஷ்டி உண்டு என்பதை நிரூபிக்கும் அல் குர்ஆன் அஸ்ஸுன்னாவின் ஆதாரங்களை நோக்குவோம். 
கண்திருஷ்டி உண்டு என்பதற்கான குர்ஆனிய ஆதாரங்கள் :
(1)     ومن شر حاسد إذا حسد  'பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது அவனின் தீங்கைவிட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.' (ஸுரதுல் பலக் 113ஃ5) இவ்வாறு அல்லாஹ் பாதுகாப்புக் கேட்குமாறு பணித்துள்ளான்.
இப்னு கய்யிம் (ரஹ்) அவர்கள்: 'கண்திருஷ்டி படக்கூடியவர்கள் அனைவரும் பொறாமைக்காரர்களாகும், ஆனால் பொறமைக்காரர்கள் அனைவரும் கண்திருஷ்டி படக்கூடியவர்களல்லர்' எனக் கூறுகிறார்கள். (தாதுல் மஆத் 4ஃ167)
(2)    யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தமது பிள்ளைகளுக்கு உபதேசம் செய்யும் போது,
وقال يابني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة  وما أغني عنكم من الله من شيئ إن الحكم إلا لله عليه توكلت وعليه  فليتوكل المتوكلون  (سورة يوسف 67) 
'எனது அருமை மக்களே!  நீங்கள்  )எகிப்தின்) ஒரே வழியால் நுழையவேண்டாம். பலதரப்பட்ட வழிகளால் நுழையுங்கள், அல்லாஹ்விலிருந்து (ஏற்படவிருக்கும்) எந்த ஒன்றை விட்டும் உங்களை நான் தடுத்துவிடவும் முடியாது, அதிகாரம் அல்லாஹ்வுக்கேயன்றி வேறெவருக்கும் இல்லை. அவன் மீதே நம்பிக்கை வைத்துவிட்டேன். ஆகவே (முழுமையாக) நம்பிக்கை வைக்கிறவர்கள் அவன் மீதே நம்பிக்கை வைக்கவும்.' என உபதேசம் செய்தார்கள்.  ( ஸுரது யூஸுப் 67)
இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:  யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புத்திரர்கள் வெளியே செல்ல முனைந்த போது அவர்கள் மீது கண்திருஷ்டி தாக்கிவிடுமோ என யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பயந்தார்கள். எனவே ஒரே வழியில் மிஸ்ருக்குள் நுழைய வேண்டாம் எனப் பணித்தார்கள். அப்போது மிஸ்ருக்கு நான்கு நுழைவாயில்கள் காணப்பட்டன.  அவர்கள் அழகும் உடல்கட்டும் உள்ள மிக அழகானவர்களாகவும் எண்ணிக்கையில் பதினொரு பேர்களாகவும் இருந்ததனால் அவர்களுக்கு கண் பட்டுவிடுமோ என யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்  பயந்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி), கதாதா, ழஹ்ஹாக் (றஹ்)  போன்றோர் கூறியுள்ளனர். (தப்ஸீர் குர்துபீ 9ஃ91)
(3) இமாம்  ஸஃலபீ (றஹ்)   கூறுகிறார்: காபிர்கள் ரஸுலுல்லாஹ்வை கண்திருஷ்டி மூலம் நோவினை செய்ய விரும்பினர். அப்போது அல்லாஹு தஆலா 
وإن يكادوا الذين كفروا ليزلقونك بإبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون  
 '(நபியே) நிராகரிப்போர் (குர்ஆனுடைய) உபதேசத்தைக் கேட்கும் பொழுது அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்திவிட நெருங்குகின்றனர்.   (ஸுரதுல் கலம்: 51) என்ற வசனத்தை இறக்கினான்.  


கண்திருஷ்டி உண்டு என்பதை நிரூபிக்கும் ஹதீஸ் ஆதாரங்கள் :


1,    கண்திருஷ்டி உண்மையாகும். விதியை முந்தக் கூடிய ஒரு விடயம் இருக்குமாயின் கண்திருஷ்டி முந்திவிடும். (சிகிச்சைக்காக) உங்களது (உடம்பை) கழுவித் தருமாறு  வேண்டப்பட்டால் நீங்கள் கழுவிக் கொடுங்கள். (ஆதாரம் : முஸ்லிம் 2188 )
இமாம் ஷன்கீதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : யாரின் கண் படுகின்றதோ அவனின் ஏக்கத்தை அல்லாஹ் பாதிக்கப்படக்கூடியவனில் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணியாக ஆக்கியுள்ளான். (அழ்வாஉல் பயான் 4ஃ42)
2,    ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'கண்திருஷ்டிக்கு ஓதிப்பார்க்குமாறு நபிகளார் எனக்கு ஏவினார்கள். (புஹாரி, முஸ்லிம்? )
இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறும் போது ஹதீஸ் அறிவோ, சுய அறிவோ இல்லாத சிலர் கண்திருஷ்டியை மறுக்கின்றனர். அது வெறுமனே ஊகங்களே தவிர அதற்கு யதார்த்தம் கிடையாது எனக் கூறுகின்றனர்.  இவர்கள் வஹியைப் பற்றிய அறிவற்றவர்கள். சுய புத்தியும் அற்றவர்கள். உலக மக்களில் பகுத்தறிவு உள்ளவர்கள் அவர்களது மார்க்கங்களும், போக்குகளும் வித்தியாசமாக இருப்பினும் கண்திருஷ்டியை மறுத்தது கிடையாது. அது எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்ற விடயத்தில் அவர்கள் முரண்பட்டாலும் சரியே. (தாதுல் மஆத் 4ஃ165) 
3,    அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களிடத்தில் நபியவர்கள் எனது சகோதரரின் (ஜஃபர் (ரலி)அவர்கள்) பிள்ளைகளின் உடல்கள் மெலிவாக இருப்பதற்கான காரணம் யாது? அவர்களுக்கு தேவைகள் இருக்கின்றனவா? எனக் கேட்டபோது இல்லை அவர்களுக்கு அவசரமாக கண்திருஷ்டி தாக்கிவிடுகின்றது என அவர்கள் கூற அவர்களுக்கு ஒதிப்பார்ப்பீராக என நபிகளார் பணித்தார்கள். (ஆதாரம் முஸ்லிம் 2198) 

4,    ஆமிர் இப்னு ரபீஆ என்பவர் ஸஹ்ல்; இப்னு ஹனீப் குளிப்பதைக் கண்டபோது இன்று கண்டது போன்று அழகிய ஒரு உடம்பை நான் கண்டதில்லை என்றார். உடனே ஸஹ்ல் மயக்கமுற்று விழுந்தார். பின்பு அவரை நபிகளாரிடத்தில் கொண்டுவரப்பட்டது. யாரையும் சந்தேகிக்கின்றீரா? என நபியவர்கள் கேட்டார்கள். ஆமிர் இப்னு ரபீஆவை சந்தேகிக்கின்றோம் என்றனர். பின்பு ஆமிரிப்னு ரபீஆவை நபிகளார் அழைத்;தார்கள். ஏன் உங்களில் ஒருவர் மற்ற சகோதரனைக் கொலை செய்கின்றீர்கள். நீங்கள் அவர்களுக்கு அபிவிருத்தி கொண்டு துஆக் கேட்டிருக்கக் கூடாதா? அவரிடத்தில் தனது உறுப்புக்களை கழுவுமாறு வேண்டப்பட்டது. அப்போது ஆமிர் தனது முகத்தையும், கையையும் முழங்கை, முழங்கால், இரு கால்களின் ஓரங்களையும், தனது ஆடையின் உட்புறங்களையும் ஒருபாத்திரத்தில் கழுவ அதை ஸஹ்லின் உடம்பில் ஊற்றப்பட்டது. பின்பு எந்நோயுமற்றவராக ஸஹ்ல் மக்களோடு எழும்பிச் சென்றார். முவத்தாமாலிக் 3460 , முஸ்னத் அஹ்மத் 3ஃ486, இப்னு  மாஜா 3609)

கண்திருஷ்டி உண்டு என்பதை உறுதிப்படுத்தும் உலமாக்களின் கூற்றுக்கள்:
இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்)அவர்கள்  கூறுகின்றார்கள் :      கண்திருஷ்டியின் தாக்கம் என்பது உண்மையான ஒருவிடயமாகும். அது உறுதியான விடயங்களில் உள்ளதாகும்.  -(பத்ஹுல்பாரீ  5408)
இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள்  கூறுகின்றாhகள்; :   


وإن يكادوا الذين كفروا ليزلقونك بإبصارهم  ...
     என்;ற இத்திருவசனத்தில் கண்திருஷ்டி ஏற்படுவதும் அது தாக்கம் செலுத்தும் என்பதும் உண்மையான அம்சமாகும் என்பதற்கு ஆதாரம் உண்டு. (இப்னு கஸீர் 4ஃ410) 

     இமாம் குர்துபீ(றஹ்)அவர்கள்  கூறுகிறார்கள்: பித்அத்வாதிகளில் ஒரு கூட்டம் கண்திருஷ்டியை மறுக்கின்றனர். அவர்கள் ஸுன்னாவின் மூலமும், இஜ்மாவின் மூலமும், மற்றும் யதார்த்தத்தின் மூலமும் தோற்கடிக்கப்பட்டவர்களாவர். எத்தனையோ மனிதர்களை கண்திருஷ்டி கப்ரில் நுழைய வைத்தவிட்டது. மேலும் கண்திருஷ்டி எத்தனையோ அழகான ஒட்டகங்களை பானைக்குள்  அமிழ்த்தி விட்டது. இது அனைத்தம் அல்லாஹ்வின் நாட்டம் மூலமேயாகும்.(தப்ஸீர் குர்துபீ 9 ஃ191 )
அல்லாஹ் கூறுகிறான் :
وما هم بضارين به من أحد إلا بإذن الله (سورة البقرة 102) 
'அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின்றி அதைக் கொண்டு யாருக்கும் தீங்கிழைக்கக் கூடியவர்களாக இல்லை.' (ஸுரதுல் பகரா - 102) 
இமாம் இராக்கி (றஹ்) அவர்கள்  கூறுகிறார்: கண்திருஷ்டியினால் தாக்கப்படுவது உண்மையாகும். அது இருக்கக் கூடிய அம்சமாகும். (தர்ஹுத் தஸ்ரீப் 8ஃ188)
இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;: கண்திருஷ்டி விடயத்தில் மக்கள் இரு கூறாகப் பிரிந்து காணப்படுகின்றனர். ஒருசாரார் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆதனை மனநோயாகக் கருதுகின்றனர். இவர்கள் யதார்த்தத்தை மறுக்கக் கூடியவர்கள். இன்னுமொரு சாரார் எதற்கும் கண்திருஷ்டி எனக்காரணம் கூறுவர். மரணம் ஏற்பட்டாலும், நோய்கள் ஏற்பட்டாலும், துன்பங்கள் நிகழ்ந்தாலும் அனைத்தும் கண்திருஷ்டியினால் ஏற்பட்டதாக நினைப்பர். இவர்கள் கண்திருஷ்டி விடயத்தில் எல்லை மீறியோர். இரண்டையும் தவிர்த்து நடுநிலை எடுப்பதே புகழப்பட்ட விடயமாகும். (தாதுல் மஆத் 4ஃ107) 


கண்திருஷ்டிக்கான அடையாளங்கள்


கண்திருஷ்டி பீடித்ததற்கான சில அடையாளங்களை சில ஹதீஸ்களின் மூலமும் மற்றும் சில அடையாளங்களை அனுபவத்தின் மூலமும் உலமாக்கள் கூறியுள்ளனர். அவற்றைப் பற்றி சற்று அலசுவோம்.
1. முகத்தில் ஏற்படும் மாற்றங்கள்: முகம் மஞ்சளித்தல், கருமையடைதல் கண்திருஷ்டிக்கான அடையாளமாக இருக்கலாம். நாம் ஏலவே கூறிய ஹதீஸில் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்காக நபிகளார் ஓதிப் பார்க்குமாறு வேண்டினார்கள். 
2. திடீர் மாற்றங்கள் : மயக்கம் ஏற்படல் - ஸஹ்ல் பின் ஹனீபின் ஹதீஸில் அவருக்குக் கண்திருஷ்டி ஏற்பட்ட  போது அவர் மயக்கமுற்ற அம்சத்தைப் பார்த்தோம். 
3. மேனியில் பலவீனம் : மெலிவு, ஜஃபர் (ரலி) அவர்களின் பிள்ளைகளைப் பற்றி அஸ்மா (ரலி) கூறிய செய்தியை ஏலவே பார்த்தோம்.
4. சோம்பேறித்தனம் : களைப்பு - அதிககோபம், ஞாபகமறதி, தூக்கமின்மை, இச்சைக் குறைவு, இல்லற உறவில் ஆசையின்மை, குர்ஆன் திலாவத் செய்யும் போது தூக்கம், வைத்தியம் கண்டுபிடிக்காத இன்னும் பலநோய்கள் இதுபோன்ற அடையாளங்கள் கண்திருஷ்டியின் மூலம் ஏற்படலாம். மாறாக வேறு காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

கண்திருஷ்டியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓதிப்பார்கும் போது சில அடையாளங்களை அவதானிக்கலாம்.


1. ஓதிப் பார்க்கும் போது நோ நீங்குதல்
2. உள்ளத்தில் ஓர் நிம்மதி ஏற்படல்
3. அதிகமாக கொட்டாவி விடுதல், கண் அயர்தல்
4. இலேசான மயக்கம் ஏற்படுதல்
5. சிலவேளை அழுதல்
6. முதுகுப்பகுதி சூடேறுதல்
7. இதயத்துடிப்பு அதிகரித்தல்
8. வியர்த்தல்
9. கண்ணில் எரிவு ஏற்படல்

இவை சில அனுபவசாலிகள் கூறிய விடயங்கள். இவைகளும் சில அடையாளங்களாக இருக்கலாம்.
கண்திருஷ்டியை விட்டும் பாதுகாப்புப் பெற நபிகளாரின் பாதுகாப்பு யாது என சிந்தித்தால் அதனை பலவகையாக அணுகலாம்.
கண்திருஷ்டி தாக்கிவிட்டது என கண்திருஷ்டிக்குக் காரணியாக இருந்தவர் விளங்கும் போது அவருக்காக துஆக் கேட்பது. விசேடமாக அல்லாஹ் அவர் விடயத்தில் பரக்கத்து செய்ய வேண்டுமென துஆக் கேடபது. 
بارك الله لك  அல்லது بارك الله فيك அல்லது   اللهم بارك فيه  போன்ற துஆக்களைக் கேட்டுக் கொள்ளலாம். 
'உங்களில் ஒருவர் ஆச்சரியமான ஓர் விடயத்தைக் கண்டால் அவருக்கு பரகத்தைக் கொண்டு துஆக் கேட்கவும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (இப்னு மாஜா 3509 ) 
ஆனால் இன்று அதிகமானவர்கள் ஆச்சரியமான விடயங்களைக் காணும் போதும் தனது கண் தாக்கக் கூடாது என்பதற்காகவும்       ما شاء الله    எனக் கூறுகின்றனர். மேலும் ஒருவர் கண்திருஷ்டி தாக்கிவிடக் கூடாது என்பதற்காக ما شاء الله சொல்லுங்கள் என்று வேண்டுவதையும் பார்க்கின்றோம். ஆனால் ஹதீஸ்களில் இவ்வாறான துஆ  இடம்பெற்றதாக காணவில்லை. எனினும் நாம் முன்கூறியது போன்ற துஆக்களே ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன.
இனி கண்திருஷ்டி, பொறாமை போன்றவைகளின் கெடுதிகளைவிட்டும் பாதுகாப்புப் பெற மேலும் நபிகளாரின் வழி காட்டல்கள் இருக்கின்றனவா? எனச் சிந்திக்கின்றபோது பொதுவாகவே நபிகளார் (ஸல்) நோய்களுக்காக ஓதிப் பார்த்தார்கள், இணை கற்பிக்காத முறையில்  ஒதிப் பார்க்குமாறு ஏவியுள்ளார்கள். அதனை அங்கீகரித்துமுள்ளார்கள்.  அடிமைப் பெண்ணின் முகத்தில் கண்ட மாற்றத்திற்காக ஓதிப்பார்க்குமாறு வேண்டியுமுள்ளார்கள்.


மேலும் கண்திருஷ்டியிலிருந்து பாதுகாப்புப் பெற நபிகளார் காட்டிய துஆக்களை ஓதலாம்.
 

அவற்றில் சில:
1.    أعوذ بكلمات الله التامة من كل شيطان وهامة ، ومن كل عين لامة  
அல்லாஹ்வின் பரிபூரண வார்த்தைகளைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தான், விச ஜந்துக்கள், பலிக்கும் ஒவ்வொரு கண்ணின் கெடுதிகளை விட்டும் பாதுகாப்பத் தேடுகிறேன். (புஹாரி 3371) 
2.    நபிகளார் (ஸல்) ஹஸன், ஹுஸைன் (ரலி) அவர்களுக்காக பாதுகாப்பத் தேடி பின்வரும் துஆவைஓதினார்கள்.
أعيذكما بكلمات الله التامة من كل شيطان وهامة ، ومن كل عين لامة 
'உங்கள் இருவருக்கும் அல்லாஹ்வின் பரிபூரண வார்த்தைகளைக் கொண்டு ஒவ்வொரு சைத்தான்,விசஜந்துக்கள்,பலிக்கும் ஒவ்வொருகண்ணின் கெடுதிகளைவிட்டும் பாதுகாப்பத் தேடுகிறேன்.  (புஹாரி 3371) என்ற துஆவை ஓதிவிட்டு உங்கள் தந்தை (இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம்) இஸ்மாயில், இஸ்ஹாக் (அலை) ஆகியோருக்கு இந்த துஆவைக் கொண்டு பாதுகாப்புத் தேடக் கூடியவர்களாக இருந்தார்கள்  எனக் கூறுவார்கள். (புஹாரி)
3.    பொதுவாகவே அல்லாஹ்வின் கலாமாகிய குர்அனில் அல்லாஹ் அனைத்து நோய்களுக்கும் நிவாரணியை வைத்துள்ளான்.
'குர்ஆனிலிருந்து முஃமீன்களுக்கு நோய் நிவாரணியையும், அருளையும் நாம் இறக்கியுள்ளோம்'; (ஸுரதுல் இஸ்ரா 82) என அல்லாஹ் கூறுகிறான். 
4.    குர்ஆனை நோயாளிக்கு ஓதிப்பார்ப்பதன் மூலமாக விஷேடமாக ஆயதுல் குர்ஸி, பகராவின் கடைசி 2 வசனங்கள். குல் ஸுராக்களாகிய  قل أعوذ برب الفلق ، قل أعوذ برب الناس போன்ற ஸுராக்களையும் ஓதிப்பார்ப்பதன் மூலமாகவும்  சிகிச்சை பெறலாம்.  

5,    மேலும் நோயாளிக்கு பின்வரும் துஆக்களை ஓதுவதன் மூலமாகவும் நிவாரணம் தேடலாம். 
أذهب البأس رب الناس ، اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك ، شفاء لا يغادر سقما ، 
بسم الله أرقيك والله يشفيك  من كل ما يؤذيك ، 
أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك   
நோய்க்காக ஓதிப் பார்க்கும் போது நோயாளிக்கு முடியுமாயின் அவரே ஓதிக் கொள்ளலாம். அல்லது வேறொருவர் அவருக்காக ஓதலாம். அதே போன்று ஓதிப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் நோயாளிகளின் உடம்பில் ஊதி விடுவதும் அனுமதிக்கப்பட்டதாகும். ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் யாரும் நோய்வாய்ப்பட்டால் (நோய், கண்திருஷ்டி போன்றவற்றை விட்டும்) பாதுகாக்கும் வசனங்களை ஓதி ஊதிவிடுவார்கள். அவர்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்த அவர்களின் நோயின் போது நான் அவற்றை ஓதி அவர்களுடைய கையில் ஊதி அவர்களுடைய கையினால் அவர்களுடைய உடம்பைத் தடவி விடுவேன்,(முஸ்லிம்: 2192 ) புகாரியின் ஓர் அறிவிப்பில் அவர்கள் நோயுற்ற போது அவர்களே ஓதி ஊதிக் கொள்வார்கள். அவாகளுக்கு நோய கடுமையான போது நான் அவர்களின் கையில் ஊதி அவர்களுடைய கையால் அவர்களின் மேனியைத் தடவி விடுவேன். ஏனெனில் அவர்களுடைய கை என்னுடைய கையை விட பரக்கத் அதிகமானதாகும். இதே போன்று தண்ணீர் போன்றவற்றில் ஓதி நோயாளிகளுக்கு வழங்குவதும் ஸலபுகளிடத்தில அறியப்பட்ட விடயமாகும். ஆயிஷா (ரலி) அவர்கள் தண்ணீரில் மந்திரித்து நோயாளிகளுக்கு வழங்குவதில் எந்த குற்றத்தையும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்ற செய்தி முஸன்னப் இப்னு அபீ ஷைபாவில் 23975 பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இது ஒரு புறமிருக்க முஸ்லிம்களில் சிலர் கண்திருஷ்டி போன்றவைகளுக்காக பாதுகாப்பு தேடும் விதத்தில் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத சிர்க்குகள் நிறைந்த சில வார்த்தைகளைக் கொண்டும் இன்னும் சிலர் அந்நியர்களிடத்தில் சென்று மந்திரங்களைச் செய்யுமாறு வேண்டுவதையும் பார்க்கமுடிகின்றது. இது முற்றிலும் தவறானதும் அல்லாஹ்வின் கோபத்தை ஈட்டித் தரக்; கூடியதுமாகும். எனவே, நமக்கு வரக்கூடிய நோய்களுக்கு சரீஆ அனுமதித்த முறையில் நிவாரணம் தேடி அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ள அல்லாஹ் நமக்குத் துணை புரிவானாக!   

Write Your Comments
Your Name Your Email
Comments

ஆய்வுகள்

Visitor Count
Total Visits 59250
View Status of Application