ஆசிரியர் மாணவருக்கு அடிப்பதற்கான வரையறைகளும் பருவமடைந்த பிள்ளைக்கு பெற்றோர் அடிப்பதன் சட்டமும்

கேள்வி : அலி (ரழி) அவர்கள் தனது பிள்ளைகளான ஹஸன், ஹுஸைன் (ரழி) ஆகியோருக்கு அவர்கள் அரபு இலக்கணத்தில் தவறுகள் விடும் போது அடிக்கும் வழமையுடையவர்களாக காணப்பட்டார்கள் எனவும் பிள்ளைகள் 12 வயதை அடைந்தும் தொழுகையை நிறைவேற்றாவிடின் அவர்களுக்கு அடிக்கலாம் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன். சில வேளை பிள்ளைகள் தமது பொறுப்பாளர்களினால் முறைகேடாக நடத்தப்படுகின்றனர். பிள்ளைகள் அரபு இலக்கணத்தில் விடும் தவறுகளுக்காகவோ அல்லது 12 வயதையடைந்தும் அல்லது பருவமெய்தியும் தொழாவிடினோ அடிக்கலாம் எனும் கருத்து சரியானதா என்பதை விளக்க முடியுமா? 

பதில் : (12 வயதையடைந்தும் தொழவில்லையாயின்) பிள்ளைகளை தொழுகைக்காக அழைத்தல், ஏழு வயதை அடைந்தால் தொழுமாறு ஏவல் 10 வயதை அடைந்தும் தொழாவிடின் அடித்தல் தொடர்பில் நபிகளாரின் ஏவல் வந்துள்ளது. உங்கள் பிள்ளைகளுக்கு ஏழு வயதில் தொழுமாறு ஏவுங்கள் 10 வயதில் (தொழாவிடின்) அதற்காக அவர்களுக்கு அடியுங்கள். படுக்கையில் அவர்களை பிரித்துவிடுங்கள் என நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் அபூதாவூத், இமாம் அல்பானி ரஹ் அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் கூறியுள்ளார்கள்.) இந்நபிமொழி பிள்ளைகள் பருவமடையாவிடினும் 12 வயதை அடைந்தும் தொழவில்லையானால் அடிப்பது ஆகும் என்பதை உணர்த்துகின்றது.

பருவயதை அடைந்தும் தொழாவிடின் தொழாததற்காகவோ வேறு சில காரணங்களுக்காகவோ ஒழுக்கமூட்டும் நோக்கில் பொறுப்பாளிகளுக்கு அடிக்க முடியுமா? எனும் விடயத்தில் பிக்ஹ் துறை (இஸ்லாமிய சட்டத்துறை) அறிஞர்கள் கருத்து வேற்றுமை கொண்டுள்ளனர். சில அறிஞர்கள் அடிக்கலாம் எனக் கருதுகின்ற அதே வேளை இன்னும் சிலர் அடிக்க முடியாது எனும் கருத்தைக் கொண்டுள்ளனர்.

ஆயிஷா (ரழி) அவர்கள் தனது மாலையைத் தொலைத்துவிட்ட, தயம்மும் சட்டமாக்கப்பட்ட சம்பவத்திலே பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள் : மக்கள் அபூபக்கர் (ரழி) அவர்களிடம் வந்து ஆயிஷா செய்த வேலையை நீர் பார்த்தீரா? நபிகளாரையும் மக்களையும் தண்ணீர் இல்லாத (இடத்தில்) தங்க வைத்துவிட்டார். அவர்களிடமும் தண்ணீர் இல்லை எனக் கூறினர். நபிகளார் எனது தொடையில் தலையை வைத்து உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அபூபக்கர் வந்து நபிகளாரையும் மக்களையும் தண்ணீர் இல்லாத இடத்தில் தடுத்துவிட்டாய். அவர்களிடமும் தண்ணீர் இல்லை எனக் கூறி என்னைக் கண்டித்து சொல்ல நினைத்ததையெல்லாம் சொன்னார். பின்பு தனது கையினால் எனது இடிப்பில் குத்தினார். நபிகளார் எனது தொடையில் இருந்ததே என்னை அசைவதைவிட்டும் தடுத்தது. (ஆதாரம் : புகாரி : 334)

இந்த நபிமொழியிலே ஒருவர் தனது பெண் பிள்ளை அவள் பெரியவளாகி திருமணம் முடித்தவளாக இருந்தாலும் ஒழுக்கமூட்டலாம் என்ற செய்தியை தெளிவுபடுத்துகின்றது. (பத்ஹுல் பாரி : 1 : 432)
இப்னு உமர் (ரழி) அவர்கள் ‘அல்லாஹ்வின் பள்ளிகளுக்கு அவனது அடிமைகளான பெண்கள் வருவதை தடுக்காதீர்கள்’ எனக் கூறிய போது அவரது மகன் பிலால் : ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக நான் அவர்களை தடுப்பேன்’ என்றார். அப்போது இப்னு உமர் (ரழி) அவர்கள் அவருக்கு கடுமையாக ஏசி அவரின் நெஞ்சில் அடித்தார்’ (இப்னு முப்லிஹ் (ரஹ்) அல்புரூஃ : 9 : 328)

இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறும் போது பிள்ளையை வழிநடத்தல் மென்மை, ஒழுக்கமூட்டல், கற்பித்தல் போன்றவற்றின் மூலம் அமைய வேண்டும். அடிக்க வேண்டிய தேவை ஏற்படின் அடிப்பார். பிள்ளைக்கு அழகிய குணங்களின் பால் தூண்டி மோசமான பண்புகளை விட்டும் தூரமாக்குவார். (அஸ்ஸிர்ருல் மஸுன்)

பருவ வயதை அடைந்தோருக்கு அடிப்பது ஆகுமென கருதாதவர்களுள் ஷாபி மத்ஹபைச் சார்ந்தவர்களும் அடங்குவர்.

தந்தைக்கும் பாட்டனாருக்கும் கற்பித்தலின் போதும், மோசமான குணங்களை வெளிக்காட்டும் போதும் தமது சிறு பிள்ளையையோ, பைத்தியம் பிடித்த அல்லது மடத்தனமுள்ள பிள்ளையையோ ஒழுக்கமூட்டுவது கடமையாகும். அவ்விருவருக்கும் பருவமடைந்த பிள்ளைக்கு அவர் அறிவீனராக (கொடுக்கல் வாங்கல் செய்தால் கவனக்குறைவாக நடந்துகொள்பவர்கள்) இருந்தாலும் அடிக்க முடியாது. (துஹ்பதுல் முஹ்தாஜ் : 9 : 179)

அரபு இலக்கணத் தவறுக்காக அலி (ரழி) அவர்கள் தனது பிள்ளைகளுக்கு அடித்தார்கள் என்பது பலமானவையல்ல. இச்செய்தி ஸஹீஹ் என வைத்துக் கொண்டாலும் ஒரு வேளை தவறை உணர்த்த இலேசாக அடித்திருப்பார்கள். உதாரணமாக மணிக்கட்டின் மேற்புறத்தில் உள்ளங்கையால் அடித்தல்.

ஒருவருக்கு மூன்று அடிகளுக்கு மேல் தாண்ட முடியாது. அவ்வாறு ஒரு ஆசிரியர் மூன்று அடிகளைத் தாண்டாமல் இருப்பது விரும்பத்தக்கதாகும் என சிலர் கூறுகின்றனர். (நிலமைக்கேற்ப) காயம் ஏற்படாதவாறு மூன்று அடிகளைக் காண அதிகமாக அடிக்கலாம் என்பது எற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கூற்றாகும். (ஹாசியதுஷ் ஷர்வானி : 1 : 450)

ஆசிரியர்கள் தன்னிடம் கற்கும் மாணவர்களுக்கு ஒழுக்கமூட்டுவதற்காக அடிக்கலாம் என்பது பற்றி அறிஞர்களின் வாசகங்களை ஆழ்ந்து ஆராயுமிடத்து தன்னிடம் கற்கும் மாணவருக்கு ஆசிரியர் அடிப்பதில் வரையறைகள் இட்டிருப்பது தெளிவாகின்றது.

அவ்வரையறைகளுள் சில :

1- கற்பித்தலின் போது அடிப்பதை வழமையாக எடுத்துக் கொள்ளாதிருப்பதோடு பிரம்பாலின்றி கையினால் அடித்தல், அதன் போது மூன்று அடிகளை தாண்டாதிருத்தல்.

2- பொறுப்பாளிகளின் உத்தரவின்றி அடிக்காதிருத்தல். ஏனெனில் கற்பிக்கும் சந்தர்ப்பத்தில் அடிப்பது அறிமுகமற்ற விடயமாகும். அடிப்பதெல்லாம் துர்நடத்தையின் போதேயாகும். பொறுப்புதாரி தமது பிள்ளையை ஆசிரியரிடம் ஒப்படைப்பது கற்றுக் கொடுப்பதற்கேயாகும். எனினும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த சிலர் பொறுப்புதாரியின் அனுமதியின்றி அடிக்கலாம் என்ற விடயத்தில் செயல் சார்ந்த இஜ்மா இருக்கின்றது என கூறுகின்றனர். 

3- (சிறுவருக்கு அடிப்பதாயின்) அச்சிறுவர் ஒழுக்கமூட்டுவதை விளங்கும் புத்தியுடையவராக இருத்தல் வேண்டும். இமாம் அஹ்மத் (ரஹி;) அவர்களிடம் சிறுபிள்ளைகளுக்கு ஆசிரியர் அடிப்பது பற்றி வினவப்பட்ட போது அவர்களுடைய குற்றத்திற்கேற்ப அடிக்கலாம். ஆசிரியர் தன்னாலான முயற்சிகளைக் கொண்டு அடிப்பதைத் தவிர்ப்பார் என்றார். 

ஆசிரியர் பிள்ளைகளை பலிவாங்குவதற்கோ, கோபத்தை தீர்ப்பதற்காகவோ காயங்கள் ஏற்படும் வண்ணமோ அடிக்க முடியாது. குறிப்பாக முகம், தலை, மர்ம உறுப்புக்களுக்கு அடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நபிகளார் முகத்தில் அடிப்பதை தடை செய்துள்ள ஹதீஸ் ஆதாரபூர்வமாக தரிபட்டுள்ளது. ஓரே இடத்தில் தொடர்ச்சியாக அடிப்பதும் தவறான முறையாகும். அடிகள் காரணமாக  மாணவர்கள் கல்வியை விட்டும் தூரமாகும் நிலையை ஆசிரியர்கள் ஏற்படுத்தாமல் இருப்பது அவசியமாகும்.

தமிழாக்கம் : அர்ஷத் இஸ்மாஈல் (தரம் : 6)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close