மக்களின் நாவுகளிலும் சில வளவாளர்களின் நாவுகளிலும் பிரபல்யமாக இருக்கும் சில கதைகளும் அதற்கு உலமாக்களின் தீர்வுகளும்

 1. புழைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களில் ஒருவராகக் காணப்பட்டதாகவும் தனது காதலியைப் பார்க்க மதிலுக்கு ஏறிய போது ‘ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் பயப்படுவதற்கு நேரம் வரவில்லையா’ என்ற வசனத்தை செவிமடுத்து பாவமீற்சி பெற்றதாகவும் கூறும் சம்பவம். இப்னு அஸாகீர் (ரஹ்) அவர்கள் இதன் அறிவிப்பாளர் தொடரில் இட்டுக்கட்டுபவர் உள்ளதால் இதை உண்மையற்ற சம்பவம் என்று கூறியுள்ளார்.
 1. நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் வந்த போது அவர்களை வரவேற்க மதீனாவாசிகள் ‘தலஅல் பத்ரு அலைனா’ என்ற கவிதையை பாடினார்கள் என்ற செய்தி. அதனை இமாம் பைஹகி (ரஹ்) அவர்கள் அவருடைய ‘அத்தலாஇல்’ என்ற நூலிலும் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் ‘அல்பிதாயா வன்நிஹாயா’ என்ற நூலிலும் மிகப் பலவீனமான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு அறிவித்துள்ளார்கள்.
 1. உமர் (ரழி) அவர்கள் ஜாஹிலிய்யத்தில் தனது பெண் பிள்ளையை புதைத்த நிகழ்விற்கு எந்த அடிப்படையும் கிடையாது. இது பின்னால் பொய்யாகப் புனையப்பட்ட செய்தியாகும்.
 1. நாங்கள் ஜாஹிலிய்யத்தில் அஜ்வா பேரீத்தம் பழங்களிலிருந்து சிலைகளை செய்து வணங்குவோம். பின்பு அதை உண்ணுவோம். இன்னும் என்னுடைய மகளை உயிருடன் ஒரு குழியில் புதைத்துள்ளேன் என்று உமர் (ரழி) அவர்கள் கூறியதாகக் கூறப்படும் செய்திற்கு எந்த அடிப்படையும் கிடையாது.
 1. உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஒரு வாலிபனை கொலை செய்வதற்கு தீர்ப்பளிக்கப்பட்ட போது அவ்வாலிபன் வீடு சென்று திரும்பி வரும் வரை அபூதர் (ரழி) அவர்கள் பிணை நின்றார்கள் என்ற செய்தியை ‘நவாரிதுல் குலபா’ என்ற நூலில் இத்லீதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதுவும் ஆதாரமற்ற செய்தியாகும்.
 1. அல்கமா (ரழி) அவர்கள் தனது தாயிற்கு நோவினை செய்ததன் காரணமாக மரணத்தருவாயில் அவரால் கலிமா சொல்ல முடியாமல் போனது என்றும் பின் தாயார் மன்னிப்பு வழங்கிய பின் கலிமாவை மொழிய ஆற்றல் பெற்றார்கள் என்ற செய்தியை இமாம் அஹ்மத் (ரஹ்), இமாம் உகைலி (ரஹ்) ஆகியோர் அறிவித்திருந்தாலும் இருவருமே அதை பலவீனம் என்றே கூறியுள்ளார்கள்.
 1. உஹுதுப் போர்களத்தின் போது அபூ துஜானா (ரழி) அவர்கள் தலையில் சிவப்பு நிறப் பட்டியை அணிந்து கம்பீரமாக (பெருமையுடன்) நடந்தபோது நபிகளார் அவரைப் பார்த்து இது போன்ற நடையை இந்த இடம் போன்றதிலே தவிர வெறுக்கிறேன் என்று கூறிய சம்பவத்தை இமாம் தபரானி (ரஹ்) அவர்கள் அறியப்படாத அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு அறிவிப்புச் செய்துள்ளார்கள்.
 1. நபிக்கு அவருடைய வீட்டுக்கு முன் அழுக்குகளையும், முற்களையும் போட்டு நோவினை செய்து கொண்டிருந்த யஹுதிய அயலவரின் செய்தி பொய்யானது. அதற்கு எந்த அடிப்படையும் கிடையாது.
 1. நபியின் மீது ஒரு பெண் மான் ஸலாம் கூறியதாகக் கூறப்படும் செய்தியை இமாம் அபூ நுஅய்ம் (ரஹ்) அவர்களும் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள். அதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் அதை யார் நபிக்கு சேர்க்கிறாரோ அவர் நபியின் மீது பொய்யுறைத்து விட்டார் என்றும் கூறியுள்ளார்கள்.
 1. நபிகளார் ஹிஜ்ரத்தின் போது மதீனாவில் நுழைந்த போது அவருடைய ஒட்டகம் அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரழி) அவர்களின் வீட்டுக்கு முன் வந்து தரித்ததை இப்னு அதி (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதன் அறிவிப்பாளர்களில் இப்னு பர்கத் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவர் மறுக்கப்பட்டவர். எனவே அது பொய்யான செய்தியாகும்.
 1. உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்க முன் தனது சகோதரி இஸ்லாத்தை ஏற்ற செய்தி கேள்விப்பட்டு அவரின் வீட்டுக்கு சென்ற போது அங்கே ஹப்பாப் (ரழி) குர்ஆனை ஓதிக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் (ரழி) அவர்கள் தனது சகோதரிக்கும், சகோதரியின் கணவருக்கும் அடித்தார்கள். பின் ஸுரதுத் தாஹாவை செவிமடுத்து மனம் மாறியதாகக் கூறப்படும் சம்பவம் மறுக்கப்பட்ட செய்தியாகும். இதில் வரும் காஸிம் என்பவரை இமாம் புகாரி, ஸஹபி ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள்.
 1. நபியின் தூதுத்துவத்திற்கு ஒர் உடும்பு சாட்சி சொன்னதாகக் கூறப்படும் செய்தியை இமாம் தபரானி (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை இமாம் தஹபி அவர்கள் பொய்யான செய்தி என்று கூறியுள்ளார்கள்.

தமிழாக்கம் : ரிக்ஸான் இப்னு ரியாழ், தரம் : 05

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close