உரிமைகள் மறுக்கப்பட்டு கஷ்டத்தில் திணரும் எத்தியோபிய பெரும்பான்மை இனமாகிய ‘ஒரோமோ’ மக்கள்

தமிழாக்கம் : மாணவன் அர்சத் இஸ்மாஈல் தரம் : 05

‘ஒரோமோ’ என்பது எத்தியோபிய இனங்களில் பெரிய இனமாகும். இதில் முஸ்லிம்களே பெரும்பான்மையினராக காணப்படுகின்றனர். இவ்வினத்தினர் தமது உரிமைகள் துவசம் செய்யப்படுவதினாலும், சமூக, பொருளாதார ரீதியில் தாம் பாகுபாடு காட்டப்படுவதினாலும் தமக்கெதிராகச் செயற்படும் அரசை பல தசாப்தங்களாகக் கண்டித்து வருகின்றனர். பல அமைப்புக்களினூடாக தம் நீதிக்குப் போராடுகின்றனர். அவ்வமைப்புக்களில் சில ஆயுதமேந்திய குழுக்களாகும்.

பிரதான தகவல்கள்

எதியோப்பிய நாடானது 9 மாநிலங்களையும், 10 பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்பிராந்தியங்களில் பிரபல்யமானவை தலைநகர் ‘அடிஸ் அபாபா’ அமைந்துள்ள ‘சுவா’ பிராந்தியமும் பல நூற்றாண்டு நெடுகிலும் இஸ்லாமிய பேரரசாகத் திகழ்ந்த ‘ஹரர்’ எனும் பிராந்தியமுமாகும். ‘ஒரோமோ’ இன மக்கள் வாழும் பிரதேசமானது எத்தியோப்பிய நாட்டின் பெரிய மாநிலமாகவும், மத்திய எத்தியோப்பியாவின் பெரும்பான்மை பகுதியை தன்னகத்தே கொண்டதாகவும் காணப்படுகின்றது.

‘ஒரோமோ’ இன மக்கள் வாழும் பிரதேசமானது 0.6 மில்லியன் (6 லட்சம்) சதுர கிலோ மீற்றர் பரப்பளவு கொண்டது. இது தனது எல்லைகளாக கிழக்கில் ‘ஓக்டன்’ பாலைவனத்தையும் மேற்கில் சூடான் நாட்டையும் வடக்கில் எரித்திரியாவையும் தெற்கில் கென்யாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

நாட்டின் 94 மில்லியன் சனத் தொகையில் 40 மில்லியன் மக்களைக் கொண்ட ‘ஒரோமோ’ மக்கள் பெரும்பான்மையினராக காணப்பட்ட போதிலும் 27% காணப்படக்கூடிய ‘அம்ஹரியா’ இனத்தவர்களே நாட்டின் நிர்வாகத்தை ஆக்கிரமித்து தன்னகத்தே வைத்துள்ளனர்.

கணிப்புகளின் பிரகாரம் ‘ஒரோமோ’ இனத்தவர்களில் 50% க்கும் 80% இடைப்பட்டோர் முஸ்லிம்களாகக் காணப்படுகின்றனர். எஞ்சிய சனத்தொகையினரில் கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களும் உள்நாட்டு ஆபிரிக்க மதத்தவர்களும் காணப்படுகின்றனர். இவர்களின் பொருளாதாரம் விவசாயத்திலும், மந்தை மேய்ப்பதிலும் தங்கியிருக்கின்றது. ஏனெனில் இவர்கள் தாவரங்கள் செழித்து வளரும் ஆபிரிக்க மேட்டு நிலங்களிலே குடியமரந்;துள்ளனர்.

வரலாறும் அரசியலும்

இன்றைக்கு 7000 வருடங்களுக்கு முன் ஆபிரிக்க பிரதேசங்களிலே குடியமர்ந்த பழங்குடி மக்களுள் ‘ஒரோமோ’ இனத்தவர்களும் அடங்குவர். இவர்கள் வரலாறு நெடுகிலும் பல நாடுகளுக்கும், பேரரசுகளுக்கும் கட்டுப்பட்டே இருந்துள்ளனர். இவற்றில் கடைசியாகத் திகழ்ந்த பேரரசு இஸ்லாமியப் பேரரசாகும். இஸ்லாம் இந்நாட்டினுள் நுளைந்தன் பிற்பாடு பல நூற்றாண்டாக இஸ்லாமிய பேரரசே இதை ஆண்டது.

தற்காலத்தில் எத்தியோப்பிய நாட்டின் வரலாறு கி.பி. 19ம் நூற்றாண்டின் அரைவாசிப் பகுதியிலிருந்து ஆரம்பிக்கின்றது. இவ்வரலாறு இஸ்லாமிய அயல் பிராந்தியங்களில் எத்தியோப்பிய பேரரசர்களின் அரசியல் பரவலாக்கம் படிந்ததன் பின்னே ஆரம்பிக்கின்றது. ‘அம்ஹரியா’ மற்றும் ‘தைய்கரிய்யா’ இனத்தவர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் பல இனத்தவர்கள் உள்ளடக்கலாக எத்தியோப்பிய எனும் இந்நாடு உருவானது. இவ்விரண்டினத்தவர்களும் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்களாவர்.

‘ஒரோமோ’ மக்கள் எத்தியோப்பிய நாட்டை வரலாறு, மொழி, கலாச்சார ரீதியில் தனித்துவமிழந்த நிலையற்ற நாடாகவே கருதுகின்றனர். ஏனெனில் ‘இஸ்லாமிய கடற்பரப்பில் மிளிரும் கிறிஸ்துவ தீபகற்பம்’ எனும் கற்பனையில் ஐரோப்பியர்களின் உதவியுடன் எத்தியோப்பிய போராளிகள் மேற்கொண்ட யுத்தங்களினூடாக இந்நாடு உருவாகியது.

1960 – 1970 காலப் பகுதிகளில், ‘ஒரோமோ’ மக்கள் தமக்கு மறுக்கப்பட்ட குடியுரிமையை மீட்டிப் பெறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அவர்களிடையே காணப்பட்ட பிளவுகள் அவர்களது நோக்கங்களை அடைய விடாது, அவர்களது உரிமைகளை பெற விடாது அவர்களிடையே பலவீனத்தை ஏற்படுத்தின.

இவர்கள் தம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள பல அமைப்புக்களை நிறுவினர். ‘ஒரோமோ சுதந்திரத்திற்கான இஸ்லாமிய நல்லியக்கம்’ ‘ஒரோமோ மக்களுக்கான சர்வதேச ஒன்றியம்’ ‘ஒரோமோ வாலிபர் பேரணி’ ‘ஒரோமோ பெண்கள் அமைப்பு’ ஆகியன அவற்றுள் அடங்கும். இவ்வமைப்புக்களில் ‘ஒரோமோ சுதந்திரத்திற்கான இஸ்லாமிய நல்லியக்கம்’ தான் பெரியதும் பிரபல்யமானதுமாகும். இவ்வமைப்பு 1973ம் ஆண்டு உருவாக்கப்பட்டு ‘ஒரோமோ’ இனத்தவர்கள் வாழும் பிரதேசங்களில் தனக்கென மக்கள் ஆதரவை சுவீகரித்துக் கொண்டது.

ரஷ்ய தொழிலாளர் சபையின் உதவியுடன் 1974ம் ஆண்டு ‘மென்கிஸ்ட் ஹெய்ல் மர்யம்’ ‘ஒரோமோ’ மாநில ஆட்சியைக் கைப்பற்றினார். 1991ம் ஆண்டு அவரது ஆட்சி வீழ்த்தப்பட்டதன் பின் ‘ஒரோமோ சுதந்திரத்திற்கான நல்லியக்கம்’ எத்தியோப்பிய மக்கள் புரட்சி ஜனநாயக முன்னணியுடன் இடைக்கால அரசொன்றை உருவாக்க கூட்டுச்சேர்ந்தது. எனினும் ‘ஒரோமோ’ இனத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்கள் தொடர்பாக குரல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இவ்வமைப்பு 1992ம் ஆண்டு தேர்தலின் பின் கூட்டரசாங்கத்திலிருந்து வெளியேறியது. 1993ம் ஆண்டு ஆரம்பத்தில் ‘அம்ஹரிய்யா’ இனத்தினர் ஆட்சி செய்யும் எத்தியோப்பிய ஆட்சிக்கெதிராக ஆயுதம் தரித்து தாக்குதல் நடாத்தியது. அன்று முதல் இவ்வமைப்பு அரசியலில் பங்கேற்காது சமஷ்டி ஆட்சி, அல்லது தனி நாடு கோரிய வண்ணமே உள்ளது.

எத்தியோப்பிய அரசு தமக்கு கொலை, சித்திரவதை, கண்மூடித்தனமாக கைது, பெண்கள் கற்பழிப்பு, பலவந்தமாய் நாடுகடத்தல், திட்டமிட்ட அந்நிய குடியமர்த்தல், இன ஒழிப்பு, தமது கலாசாரத்திற்கு எதிராகச் செயற்படல் போன்றவற்றைக் குறிக்கோலாகக் கொண்டு அரசியல் நடத்துவது மட்டுமல்லாது தாம் வாழும் பிரதேசங்களில் வறுமை, மடமை, பொருளாதாரப் பின்னடைவு போன்றவைகளை உருவாக்கும் விதத்தில் ஆட்சி நடத்துவதாக ‘ஒரோமோ’ இனத்தவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நிவாரணம், அபிவிருத்தி, மடமை ஒழிப்பு ஆகிய பெயர்களில் நடாத்தப்படும் மத்தியரசின் திட்டங்கள் அவர்களின் அநியாயத்தை உலக மக்கள் கண்டு கொள்ளாதிருக்க மேற்கொள்ளப்படும் நாடகமும், சூழ்ச்சியுமாகும். பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களுக்கு ‘அம்ஹரிய்யா’ மொழித் திறமை இருக்க வேண்டுமென நிபந்தனையிட்டு தமது பிள்ளைகளை தாய் மொழியில் கல்வி கற்க விடாது தடுக்கின்றனர். நாம் ‘அம்ஹரிய்ய’ மொழியை காலணித்துவ மொழியாகவே கருதுகின்றோம். அரசாங்கத்தின் இச்செயற்பாடானது தம் பிள்ளைகளில் 80% மடமை தலைதூக்க வழிவகுத்துள்ளது என தமது உளக்குமுறல்களை வெளியிடுகின்றனர்.

கருத்துச் சுதந்திரம், நடத்தைச் சுதந்திரம், வியாபாரச் சுதந்திரம், கட்சிகள், அமைப்புக்கள் உருவாக்கும் சுதந்திரம் போன்ற அடிப்படைச் சுதந்திரங்களைக் கூட இழந்து பெரும்பான்மையினமாகக் காணப்படும் ‘ஒரோமோ’ மக்கள் கஷ்டப்படுகின்றனர். வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளில் கல்வி, சுகாதாரம் கூட மறுக்கப்படும் ‘ஒரோமோ’ சிறுவர்களின் எதிர்காலம் அறியப்படாத எதிர்காலமாகவே இருக்கின்றது.

‘அடிஸ் அபாபா’வை தலைநகரமாகக் கொண்டு இயங்கும் மத்திய அரசின் இச்செயற்பாடுகளின் விளைவாக 1992ம் ஆண்டு முதல் ‘ஒரோமோ’ மக்களில் வளர்ந்து வரும் இளைஞர்களில் 75% நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அகதிகளாக வெளியேறியவர்களில் 45சூடான், யமன், எரித்திரியா, சோமாலியா, கென்யா, உகண்டா, எகிப்து, தென் ஆபிரிக்க, மற்றும் வளை குடா நாடகளுக்கு சென்றுள்ளனர். அவர்களுள் சிலர் ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்திரேலிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

எத்தியோப்பிய அரசு இவர்களைக் குறிவைத்து செயற்படுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன:

1)   ‘ஒரோமோ’ இனத்தவர்களின் சனத் தொகை. ஏனெனில் நாட்டு சனத் தொகையில் இவர்களே பெரும்பான்மையினர்.

2)   இவர்களில் 80% சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம்கள்.

3)   இவர்கள் சமஷ்டி ஆட்சியை அல்லது எத்தியோப்பிய அரசை விட்டும் சுதந்திரத்தை கோர ஆரம்பித்தது.

2001ம் ஆண்டு தாம் சந்திக்கும் நிலைமைகளையும், மத்திய அரசை கண்டித்தும் பல நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொண்டனர். இவற்றுள் 2014ம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் மற்றும் 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடாத்திய ஆர்ப்பாட்டங்களின் காரணமாக 130 நகரங்களில் குழப்ப நிலைகள் உருவாகின. 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ‘சர்வதேச மன்னிப்புச் சபை’ மற்றும் ‘சர்வதேச மனித உரிமை ஆணையகம்’ ‘ஒரோமோ’ மக்களுக்கு எத்தியோப்பிய அரசு இழைக்கும் அநியாங்கள் தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கடும் கண்டனங்களை வெளியிட்டன. அத்தோடு ‘சர்வதேச மனித உரிமை ஆணையகம்’ இவர்களுக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களை உறுதிப்படுத்தும் விதமாக 1992ம் ஆண்டு முதல் வருடாந்தம் அறிக்கைகளை வெளியிட்ட வண்ணமே உள்ளது.

2014 மே மாதம் 19ம் திகதி ‘அச்சுறுத்தப்படும் மக்கள் பாதுகாப்பிற்கான ஜேர்மனிய இயக்கம்’ பாடசாலை, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் ஒழுங்கு செய்து நடாத்தும்  கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொள்ளும் அநியாயங்கள் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்ள தனி குழுவொன்றை அனுப்புமாறு ஐ.நா. சபையின் மனித உரிமைக்கான உயர் ஆணையகத்திடம் வேண்டுகோள் விடுத்தது. அரசாங்கத்தின் நகர எல்லைகளை மாற்றும் நடவடிக்கைகளைக் கண்டித்து 9 நகரங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டங்களின் போது குறைந்தது 80 மாணவர்களை இராணுவம் சுட்டுக் கொன்றது என இவ்வியக்கம் கூறியது. ‘ஒரோமோ’ மாநிலத்திலுள்ள 120 கிலோ மீட்டர் சதுரப் பரப்பளவைக் கொண்ட விவசாய பூமியை பிரித்தெடுத்து தலைநகர் ‘அடிஸ் அபாபா’ வின் எல்லையுடன் இணைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தையும் இவ்வமைப்பு உறுதி செய்துள்ளது. அரசின் இத்திட்டம் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நாட்டைத் துறக்குமளவு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஏனெனில் இவ்விடங்களில் குடியிருப்புக் கட்டிடங்களை அமைப்பதற்கும், முதலீட்டு வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கும் அரசு உறுதி பூண்டுள்ளது. இம்முதலீட்டுத் திட்டங்களில் இந்நிலப்பரப்பில் ரோஜா பூக்களைப் பயிரிட்டு ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் திட்டமும் ஒன்றாகும்.

2016 ஜுன் 18 அன்று எத்தியோப்பிய அரசியல் கட்சிகளுக்கான அவை (இவ்வவையில் 58 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இக்கட்சிகளுள் அரசாங்கக் கூட்டணியும் உள்ளடங்கும்) தலை நகர் எல்லை விரிவாக்கல் திட்டத்தைக் கண்டித்து ‘அம்ஹரா’ மற்றும் ‘ஒரோமோ’ பிராந்தியங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட கொலைகள் தொடர்பில் விசாரிக்க நடுநிலைமையான குழுவொன்றை உருவாக்குமாறு வேண்டிக் கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close