உள்ளங்கள் கல்லாய் மாறுவதேன்

இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு ஆத்மாவும் கள்ளங்கபடமற்ற சீரிய உள்ளத்துடனே பிறக்கின்றது. இதனாலே கள்ளங்கபடமின்றி வாழ்பவரைக்கூட குழந்தை உள்ளம் கொண்டவர் என வர்ணிக்கின்றோம். இவ்வாறு தூய்மையாய் கிடந்த உள்ளம் நாளடைவில் பல மாற்றங்களைக் காண ஆரம்பித்துவிடுகின்றது. மட்டுமன்றி தன் எஜமானையே தன் வளையில் சிக்கி ஆட்டம் காணச்செய்கின்றது. இவ்வனைத்துக்கும் காரணம் உள்ளம் எனும் தூய்மையான நறுமனம் கமழும் பொய்கையிலே உளநோய்கள் எனும் கிருமிகள் நீராட வந்ததுவே.

இந்நச்சுக்கிருமிகள் பல. அவற்றுள் முதன்மையானது உள்ளம் கல்லாய் மாறுவதாகும்.எமது உடல் உறுப்புக்கள் நோய் வாய்ப்படுவது போன்று எமது உள்ளங்களும் நோய்வாய்ப்படுகின்றன. ஆயினும் அந்நோய்க்கு நாமே காரணம் என்பதை நம்மால் மறக்கலாகாது. எனவே ‘கஸ்வதுல் குலூப்’ (கல் நெஞ்சம்) எனும் நோயின் கோரத்தன்மை யாது? இதன் அறிகுறிகள் என்ன? இவற்றுக்கான நிவாரணம் யாது? இது போன்ற உபதலைப்புக்களுடன் இக்கட்டுரையை அலசலாம் என நினைக்கின்றேன்.

இதோ கல்நெஞ்சத்தின் கோரத்தன்மையை குர்ஆன் சொல்கின்றது கற்போம் !!!

 கல்லை விட கடினமான பயங்கர நோய். அல்லாஹ் கூறுகின்றான் ‘அப்பால் உங்களுடைய இதயங்கள் இதற்குப் பின்னும் கல் நெஞ்சாகி கடினமாகிவிட்டன அவை கற்பாறையைப் போல் அல்லது இறுக்கத்தால் (அதைவிட) மிகக்கடினமாகி இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறையிலும் அதிலிருந்து தானாக ஆறுகள் வெடித்துப் பாய்ந்தோடிக்கொண்டிருப்பவைகளும் நிச்சயமாக அதில் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து தண்ணீர் வெளிப்படக்கூடியதும் உண்டு. நிச்சயமாக அதில் அல்லாஹ்வின் பயத்தால் (உருண்டு) கீழே விழக்கூடியதும் உண்டு. மேலும் அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி பராமுகமானவனல்லன். ‘ (அல் பகரா : 74)

 இறை சாபத்தை ஏற்படுத்த வல்லது.‘அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டும் (விலகி) எவர்களின் இதயங்கள் (இறுகி) கடினமாகிவிட்டனவோ அவர்களுக்குக் கேடுதான்’ (ஸுமர் : 27) மேலும் இது சம்பந்தமாக ஸூரா அன்ஆம் : 43ம் வசனம் இ ஸூரா ஹூத் 16ம் வசனம் போன்றவைகளிலும் பார்க்கலாம்.

உள்ளம் கல்லாய் மாறியிருப்பதின் அடையாளங்கள்

1. இறைவனுக்கு வழிப்படுவதிலும் நல்ல காரியங்களில் ஈடுபடுவதிலும் சோம்பறியாய் காணப்படல்.

2. குர்ஆனிய வசனங்களும் நல்லுபதேசங்களும் எவ்விதத்தாக்கத்தையும் ஏற்படுத்தாமை.

3. மரணம் போன்ற நிகழ்வுகள் எவ்விதத்தாக்கத்தையும் ஏற்படுத்தாமை.

4. மறுமையை மறந்து உலக இன்பத்தில் மூழ்குதலும் இவ்வின்பத்தை அடைய மார்க்க வரம்புகளை அற்பமாய் மதித்தலும்.

5. இறையச்சமும் இறைகண்ணியமும் பலவீனப்படுதல். இதன் விளைவாய் ரோஷமும், வெட்கமும் அற்றுப்போகும். பாவம் அற்பமாய் கருதப்படும்.

6. உள நெருக்கடி பய உணர்வு ஆகியவற்றினால் ஆட்கொள்ளப்படல்.

உள்ளம் கல்லாய் மாறுவதற்கான காரணிகள்

உள்ளம் கல்லாய் மாறுவதற்கான காரணிகள் பல :இக்காரணிகள் பெருகும் போது உள்ளத்தின் கடினத்தன்மையும் பெருகத்தான் செய்கின்றது. இக்காரணிகளிலிருந்து முக்கிய சிலதை இங்கு நோக்கலாம்.

1. உள்ளம் உலகக் கற்பனையில் மூழ்குதலும் மறுமையை மறத்தலும்.

2. மார்க்க விடயங்களில் பராமுகமாய் இருத்தல்.

3. கெட்ட நண்பர்களுடனான தோழமை.

4. செய்யும் பாவங்கள் உள்ளத்தில் துருவாய் படிதல்.

5. மரணம், ஸகராதுல் மவ்த், கப்ரை நோக்கிய நமது பயணம் அதன் இன்பங்கள், சோதனைகள், மேலும் மறுமையில் நடக்கும் விசாரனை, ஸிராத் எனும் பாலத்தைத் தாண்டுதல், நரகம் இது போன்ற நிகழ்வுகளை மறந்து வாழ்வதும் எமது உள்ளத்தைக் கல்லாய் மாறச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

6. அதிகமாய் சிரித்தல்.உள்ளங்களை வழிகெடுத்து மாற்றும் வீண் வேலைகளில் ஈடுபடுதல்.இமாம் இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் உள்ளத்தை வழிகெடுக்கும் ஐந்து விடயங்களைக் கூறியுள்ளார். அவையாவன :.

i அல்லாஹ் அல்லாதவருக்கு வழிப்படல்.

ii. கற்பனைக் கடலில் மிதத்தல்.

iii. அதிக உணவு.

iv. அதிக தூக்கம்.

v. அளவுக்கதிமாக மக்களுடன் பழகுதல்

இந்நோய்க்கான தீர்வுகள்இந்நோய்க்கான தீர்வை சுருங்கக் கூறின் இவ்வாறு கூறலாம். மேற்கோடிட்டுக் காட்டிய காரணிகளை அகற்றுவதே இதற்கான தீர்வாகும். தற்போது சில விடயங்களை சுருக்கமாய் கவனிப்போம்.

1. அல்லாஹ்வின் வல்லமையை அறிதல்.

2. மவ்த்தையும் அதற்குப் பின் உள்ள அனைத்து நிலைகளையும் நினைவு கூறுதல்.

3. கப்ருகளை ஸியாரத் செய்தல்.

4. குர்ஆன் ஆயத்துக்களின் கருத்துக்களை வாசித்து சிந்தித்தல்.

5. அதிகமாய் இஸ்திஃபார் செய்தல்.

6. அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுதல்.

7. நல்லவர்களுடன் தோழமை கொள்ளுதல், அவர்களுடன் தொடர்புடன் இருத்தல்.

8. பாவங்களைத் தவிர்ப்பதிலும், நன்மைகளைச் செய்வதிலும் உள்ளத்துடன் போராடுதல்.

9. தூங்கு முன் சுய பரிசோதனை செய்து கொள்ளல்.

10. குர்ஆன் ஓதுதல்.11. இறைவனிடம் பிரார்தித்தல்.

ஆக்கம் : அர்சத் இஸ்மாஈல் (தரம் : 06)

Share This:

Leave a Reply